ஆச்சாரியார் – சாஸ்திரி வாக்குவாதம்
இன்று காலை 6..15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்த பெங்களூர் மெயிலில் முதல் மந்திரி இராஜகோபாலாச்சாரியார் வந்திறங்கினார். அதே வண்டியில் நேற்று வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த இந்தி எதிர்ப்புத் தொண்டர்களான தோழர் என்.என். சாஸ்திரி உள்ளிட்ட சுமார் 10 தொண்டர்களும் வந்திறங்கினர். இத்தொண்டர்கள் மந்திரி ஆச்சாரியாரைக் கண்டதும், இந்தி ஒழிக, தமிழ் வாழ்க எனக் கோஷம் செய்தனர். தொண்டர்களை வரவேற்க வந்திருந்து வெளியில் நின்றிருந்த தோழர்களும் பேரொலி செய்தனர். வண்டியிலிருந்து இறங்கி வேகமாக வந்த ஆச்சாரியார் கேட்டண்டை வந்து நின்று திரும்பி, தொண்டர்களை அழைத்து, நீங்கள் இப்பொழுதுதான் விடுதலையடைந்து வருகின்றீர்களா? என்று கேட்டார். உடனே என்.என். சாஸ்திரி முன்வந்து அடேயப்பா, பாவம்! ஒன்றும் அறியாதவர் போல் கேட்கின்றீரே? என்று கூறினார்.
இதற்குள் பக்கத்தில் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு முதியவர் இனியாவது கட்டாய இந்தியை எடுத்து விடுங்கள் என்று ஆச்சாரியார் காலில் விழப் போனார். உடனே என்.என். சாஸ்திரி இடைமறித்துத் தடுத்து, ஏனப்பா ஒரு கல்லின் மீது விழுந்தாலும் ஏதாவது நடக்கும். இவர் காலில் ஏன் விழுகின்றீர்? என முதியவரை நோக்கிக் கூறவே, ஆச்சாரியார், பொறு! மீண்டும் சிறை செல்ல விரும்புகிறாயா? என்றார். உடனே சாஸ்திரி, ஆச்சாரியாரை நோக்கி, சரி, திரும்பவும் என்னைச் சிறைக்கு அனுப்ப விருப்பமானால் அனுப்பு; அதற்காக நான் பயப்படவில்லை எனத் துணிச்சலாகக் கூறினார்.
ஏராளமான கூட்டம் சேர்ந்துவிட்டது. ஆச்சாரியார் போலீசுக்கு சைகை காட்டிவிட்டு விர்ரென்று காரில் ஏறி வீடு சென்றுவிட்டார். பின்னர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தோழர் சாஸ்திரியை அழைத்துக் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் வைத்துவிட்டு, நீண்ட நேரம் டெலிபோனில் ஆச்சாரியாருடன் பேசிக் கொண்டிருந்தாராம். நீண்ட நேரத்திற்குப் பிறகு இனி பிளாட்பாரத்தில் இதுபோலச் சத்தமிடக் கூடாது; அது ரயில்வே சட்டப்படி (டிரஸ்பாஸ் குற்றம்) குற்றமாகும் எனக் கூறி சுமார் 10 மணிக்கு தோழர் சாஸ்திரியை அனுப்பிவிட்டார் எனத் தெரிகிறது.
குடிஅரசு -பெட்டிச்செய்தி
11.6.1939