பாபர் மசூதி வழக்கும் அத்வானியின் பேச்சும்!

ஏப்ரல் 16-30

டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதாக் கட்சியின் 33 ஆம் ஆண்டு நிறுவன தினத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் லால் கிஷன் அத்வானி, அயோத்தியா விவகாரத்தில் நமது கட்சி வருத்தப்படத் தேவையில்லை.  இந்த விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு பெருமைக்குரிய விசயமாகும். தயக்கம் கொள்ளாதீர்கள்.  தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.

 

அயோத்தியா குறித்து நாம் நம்பிக்கை கொண்டிருந்தால் _ அதன் சிறப்புக்காக நாம் முயற்சிகள் மேற்கொண்டிருந்தால் மன்னிப்புக் கோர வேண்டியதில்லை.  அந்த நிகழ்வுக்காக நாம் பெருமைப்பட வேண்டும். என்று பேசியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்தான் உச்ச நீதிமன்றம் அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட 21 பேர்களின் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய தாமதம் ஏற்பட்டது ஏன்? என்று கேட்டு மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞரை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறது.

உ.பி மாநிலத்தின் அயோத்தியில்  கரசேவை நடத்தி கடந்த 1992ஆ-ம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சம்பவத்தின்போது, ராம்கத குஞ்ச் மேடையில் இருந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ (இரு வகுப்பினரிடையே பகைமை ஏற்படுத்துதல்), 153 (பி) (நாட்டின் ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் ஏற்படுத்துதல்), 505 (பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிற வகையில் தவறான கருத்துகள் வெளியிடுதல், வதந்திகளைப் பரப்புதல்) ஆகியவற்றின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இதே பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் மீது குற்றச்சதி செய்ததாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120-பி யும் வழக்கில் சேர்க்கப்பட்டது. சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி, வினய் கட்டியார், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீதான வழக்கில், அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக சேர்க்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120-பியின் கீழான குற்றச்சாட்டினை தனி நீதிமன்றம் ரத்து செய்து 2001ஆ-ம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சி.பி.அய். மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2010ஆ-ம் ஆண்டு, மே மாதம் 21-ஆம் தேதி தனிக்கோர்ட்டு உத்தரவினை உறுதி செய்தது. அதே நேரத்தில் பிற பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

167 நாட்கள் தாமதத்துக்குப் பின்னர் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.அய். மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எச்.எல். டட்டு தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் உத்தரவிட்டபடி வழக்கு விவரங்களை சி.பி.அய். ஏப்ரல் 1 அன்று தாக்கல் செய்தது. இதன் மீதான விசாரணையில், சொலிசிட்டர் ஜெனரல் (மத்திய அரசின் கூடுதல் தலைமை வக்கீல்) தரப்பால் மேல்முறையீடு தாக்கல் செய்ததில் தாமதம் ஆகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபரின் பிரமாணப் பத்திரம், தாமதம் ஏன் என்பது பற்றி நாங்கள் அறிந்துகொள்ள உதவும். இந்தப் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தால் அது உங்களுக்கு நல்லதாக அமையும். எனவே, இரண்டு வாரங்களுக்குள் அந்தப் பிரமாணப் பத்திரத்தைத் (சொலிசிட்டர் ஜெனரல்) தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இத்தகைய சூழலில்தான் அத்வானி இப்படிப் பேசியுள்ளார்.

1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதியை இந்துத்துவக் கும்பல் இடித்தபோது, உணர்ச்சி வசப்பட்ட தொண்டர்கள் இடித்துவிட்டார்கள் என்று நழுவியவர்கள் இப்போது இப்படிப் பேசுவதற்கு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதே  காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தனது பிரதமர் கனவைக் கலைக்க நரேந்திர மோடியை கட்சியின் தற்போதைய தலைவர் ராஜ்நாத் சிங்  போன்றோர் முன்னிறுத்தும் வேளையில் தன்னைத் தீவிர இந்துத்துவாவாகக் காட்டிக்கொள்ள அத்வானி இப்படிப் பேசலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. மேலும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அவர்களுக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லாததால் கட்சி பலவீனப்பட்டிருக்கும் நிலையில் தனது பழைய ஆயுதத்தையே பா.ஜ.க. எடுக்க வேண்டிய  நிலைக்குத் தள்ளப்பட்டு தனது இந்து ஓட்டு வங்கியைக் காப்பாற்றிக்கொள்ள அத்வானி இப்படிப் பேசியிருக்கிறார் என்றும் டெல்லி அரசியல் வட்டாரம் கூறுகிறது.

இந்த அரசியல் காரணங்களெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு மதச்சார்பற்ற நாட்டின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர், இன்னொரு மத வழிபாட்டுத் தலத்தை இடிக்கக் காரணமாக இருந்து விட்டு, அந்த வழக்கு இன்னும் முடிவடையாத நிலையில் அதனை நியாயப்படுத்தும் வகையில் பேசுகிறார்.

அதனை இந்த நாடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால், இங்கே மனிதம் வாழுமா? மதச் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் இந்தப் பேச்சை எப்படி நாடு அனுமதிக்கிறது என்ற கேள்வியை மதங்களைக் கடந்த மனிதநேயர்கள் கேட்கிறார்கள். 1992 ஆம் ஆண்டில் போடப்பட்ட வழக்கை 21 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டு போகலாமா? கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு இதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?அத்வானியின் இந்தப் பேச்சை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா? சுதந்திர இந்தியாவில் அதுவரை நீடித்த மத நல்லிணக்கம் சீர் குலைந்து, மனிதர்களுக்குள் மத உணர்வுகள் தலைதூக்க 1992 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு ஒரு முக்கியக் காரணம் அல்லவா? எங்கே போகிறது இந்தியா?

– அன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *