டுனீசியாவில் பெண்ணுரிமைக் குரல்

ஏப்ரல்-01-15

’என் (பெண்) உடல் என் (பெண்)னுடையது மட்டுமே’

பெண்ணுடல் மீதான உரிமை அவளையன்றி கிட்டத்தட்ட மற்ற அனைவருக்கும் உரியதாகக் கருதப்படுகிறது. மதம், ஜாதி, குடும்பம், சமூகம் என்று பலவும் அவள் உடல் மீது உரிமை கொண்டாடுகின்றன. அது மேற்கண்டோரின் கவுரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தன்னுடல் சார்ந்த தன் உரிமையை உரத்துப் பேச வேண்டிய தேவை பெண்ணுக்கு எழுகிறது.

உலகளவில் எங்கெல்லாம் அடக்குமுறை ஏவப்படுகிறதோ, அங்கெல்லாம் அதற்கான எதிர்க்குரல் கிளம்புகிறது. 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் உருவான பெண்ணுரிமைக்கான அமைப்பு ஃபெமன். இதன் போராட்டங்களில் ஒரு வகை, திறந்த மார்புடன் போராடுவது. அப்படி என் உடல் என்னுடையது மட்டுமே; இது யாருடைய கவுரவத்திற்கும் மூலம் அல்ல (My body belongs to me, and is not the source of anyone’s honour) என்று தனது திறந்த மார்பில் அரபியில் எழுதப்பட்ட வாசகத்துடன் முகநூலில் படம் வெளியிட்டுள்ளார் டுனீசியாவைச் சேர்ந்த அமினா என்ற 19 வயதுப் பெண். இதற்காக அவருக்கு பத்வா அறிவித்திருக்கிறார் அடெல் அல்மி என்ற ஓர் இஸ்லாமிய மதவாதி. ஆனால் மரண தண்டனையே நடப்பில் இல்லாத டுனீசியாவில் சாகும் வரை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று நீதிபதி அல்லாத அல்மி கொடுத்துள்ள பத்வா தவறானது என்று எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதனை எதிர்த்தும், அமினாவின் உயிரைக் காக்க வேண்டியும் உலகளாவிய கையெழுத்து இயக்கமும் நடத்தப்படுகிறது. தற்போது அவருக்கு ஆதரவாக டுனீசியாவைச் சேர்ந்த மெரியம் என்ற பெண்ணும் தன் உடலில் எங்கள் வாழ்க்கை மற்றும் இறப்பின் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று அரபியில் எழுதி தன் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். பெண்ணுடல் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்தால் அதை உடைக்கும் நடவடிக்கைகளும் தொடரவே செய்யும்.

– சமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *