பள்ளிக்குச் செல்ல முடியாத தனது அனுபவங்களை 11 வயதில் பிபிசி இணையத்தில் எழுதியவர் மலாலா. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். 2011ஆம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற டெஸ்மாண்ட் டூட்டு, உலக அமைதிக்கான குழந்தைகள் பரிசுக்கு மலாலாவின் பெயரினைப் பரிந்துரை செய்தார். அதே ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானின் தேசிய இளைஞர் அமைதிப் பரிசு மலாலாவுக்கு அறிவிக்கப்பட்டது.
2012 அக்டோபர் 9 அன்று தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மலாலா தலிபான்களால் சுடப்பட்டார். பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மலாலாவின் குரலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உலகெங்கும் உள்ள மாணவிகள் நான் மலாலா என்ற பதாகையினைத் தாங்கி ஆதரவு தெரிவித்தனர்.
பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய மலாலாவுக்கு உயர்தர சிகிச்சை இங்கிலாந்து அரசால் வழங்கப்பட்டது. லண்டனில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் பலமுறை அறுவைசிகிச்சை செய்தனர். லண்டனில் தங்க வசதியாக அவரது தந்தைக்கு லண்டனில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் வேலை கொடுக்கப்பட்டது.
அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களுள் மலாலாவும் ஒருவர். அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறிய மலாலா மார்ச் 19 பிர்மிங்காமில் உள்ள எங்க் பாஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் படிப்பைத் தொடர்ந்துள்ளார். மீண்டும் பள்ளிக்குச் செல்லும் எனது கனவு இன்று நிறைவேறியது. இந்த அடிப்படை வாய்ப்பை உலகில் உள்ள எல்லாப் பெண்களும் பெற வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் மலாலா.