வரலாறு என்பது எல்லைகளோ, முடிவுகளோ இல்லாத நிகழ்வுகளின் பதிவேடு. சில சமயங்களில் வரலாற்றின் கண்கள் குருடாவ-துண்டு, பல சமயங்களில் குருடாக்கப்-படுவதுண்டு. குறிப்பாக, நமது இந்திய வரலாறானது தன் பக்கங்களிலே பல உன்னதங்களைப் பதிவு செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் சமூகநீதிக் களங்களில் ஜாதி ஒழிப்பு, வருண ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற சமூகக் களையெடுப்புப் பணி-களில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டோரின் கொள்கைகளை, வாழ்வியலை (அல்லது, குறைந்தபட்சம் அவர்களின் பெயரைக்கூட) பதிவு செய்யத் தவறிவிட்டது. அல்லது திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒருமுறை, தந்தை பெரியார் அவர்கள், புத்தரைத் தவிர, வள்ளுவரைத் தவிர ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னவனையே காணவில்லையே? இல்லாமலா இருந்திருப்-பான்? எனக்கும் சந்தேகம்தான். இருந்திருப்-பான்; அவன் பெயர் வெளிவராதபடி ஒழித்துக் கட்டிவிட்டான்! ஜாதி இருக்க வேண்டும் என்று சொன்னவனைப் பெரிய ஆளாக்கி வைத்திருக்கிறான் என்று சமூகநீதிக் களங்களில் தம்மை அர்ப்பணித்தோரை வரலாற்றில் எங்ஙனம் சிலர் திட்டமிட்டுப் புறக்கணித்திருக்-கிறார்கள் என்பதைப் பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்துகிறார்.
குறிப்பாக, நம் இந்திய சமூகத்தில் புரையோடிக்கிடந்த (இன்றும் கிடக்கிற) ஜாதிய வேறுபாடுகளை, தீண்டாமையை ஒழித்து சமத்துவ சமுதாயம் மலரப் பாடுபட்டோர் எண்ணற்-றோர். அவர்களில் பலரின் வரலாறுகள், இன்று நமக்குத் தெரியாது; அவர்களின் பெயர்கள் வரலாற்றிலிருந்தே திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. கடவுளை மறுத்த மகாவீரரையும், புத்தரையும் இன்று கடவுள்களாக்கி வரலாற்றில் திரிபுவாதம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அந்தவகையில் சமூகநீதிப் போராட்டங்களில் தம்மை அர்ப்-பணித்துக் கொண்டோர் எண்ணற்றோர்; எனினும், அதில் கணிசமான வெற்றிகளை ஈட்டியோர் தென்னகத்தில் தந்தை பெரியாரும், வடபுலத்தில் அண்ணல் அம்பேத்கருமே ஆவர். அந்தவகையில், அம்பேத்கர் தோன்றிய அதே மகாராட்டிரத்தில் அம்பேத்கர், பெரியார் போன்ற 20ஆம் நூற்றாண்டு சமூகப் புரட்சியாளர்-களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே.
ஜோதிராவ் பூலே அவர்கள் 1827 ஆம் ஆண்டில் மகாராட்டிரத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் உள்ள லால்கன் என்னும் கிராமத்தில் பிறந்தவர். மகாராட்டிரத்தின் ஒடுக்கப்பட்ட ஜாதிப் பிரிவுகளில் ஒன்றான மாலி என்ற பிரிவைச் சேர்ந்தவர். இளமைப் பருவம்தொட்டே சீர்திருத்த எண்ணங்கள் முளைவிடத் தொடங்கியது; அதற்குக் காரணம், சிறுபிராயமாக அவர் இருந்தபோது ஆதிக்க ஜாதியினரின் ஒடுக்குமுறைகளால் அவர் குடும்பமும், அவரும்பட்ட இன்னல்கள் பின்னாளில் அவரை ஓர் சமூகப் புரட்சியாளராக மாற்றியது.
பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் எனப்பட்டோர் கல்வி பெறுவதன் மூலமே சமூகத்தில் உயர்நிலை எய்த முடியும் என உறுதியாக நம்பினார். எனவே, மிகவும் தாழ்த்தப்-பட்ட ஜாதியினரின் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை 1848 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலாகத் தொடங்கினார். அப்பள்ளியில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மகார், மாங் போன்ற பிரிவுப் பெண்களுக்கு முன்னுரிமை தந்தார். எனினும், உயர்ஜாதியினரின் மிரட்டல்களால் அப்பள்ளிக்கு ஆசிரியர்கள் கிடைக்-காதநிலை ஏற்பட்டபோது தன் மனைவி சாவித்திரிக்குக் கல்வி புகட்டி அவரை அப்பள்ளி-யின் ஆசிரியராக்கினார். அதுமட்டுமின்றி, தன்வீட்டுக் குடிநீர்க் கிணற்றை, தாழ்த்தப்-பட்ட மக்களுக்காகத் திறந்துவிட்டார். இன்றும்-கூட இச்செயல் அசாதாரணமான, தீரமான ஒன்றாகும்.
பெண் கல்வியை ஆதரித்த பூலே அவர்கள் 1851ஆம் ஆண்டில் அனைத்து ஜாதிப் பெண்களுக்கு-மான பள்ளியைத் தொடங்கினார்; 1855 இல் மாலை நேரப் பள்ளி ஒன்றையும் தொடங்கினார். பெண் விடுதலை என்று குறிப்பிடாத பூலே ஆண் – பெண் இருவருக்குமான சமமான மனித உரிமைகள் வேண்டுமென்று வலியுறுத்தினார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்த பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்க்கவும் தயங்கவில்லை. பூலேவின் செயல்பாடுகளும், புரட்சிகர நடவடிக்கைகளும் உயர்ஜாதியினர் எனப்பட்டோருக்கு ஆத்திரத்தைக் கிளப்பவே, பூலேயின் தலைக்கு விலை பேசப்பட்டது; 1856இல் அவரைக் கொலை செய்ய நடந்த முயற்சி மத வெறியின் உச்சம் என்பதைத் தவிர வேறென்ன?….
ஒருவகையில், பூலே அவர்கள் தந்தை பெரியாருக்கும் முன்னோடியாகவும் திகழ்ந்தார் எனக் கூறமுடியும். ஏனெனில், பெரியார் அவர்-களின் கண்ணோட்டத்தில் திருமணம் என்பது புனிதத் தன்மை வாய்ந்த சடங்கு அல்ல; மனம் ஒத்த ஆண், பெண் இருவரிடையேயான ஓர் ஒப்பந்தம் மட்டுமே. பூலே இளம் பெண்கள், திருமணம் செய்து போகும் குடும்பத்தின் ஒப்பந்த ஊழியராகச் செல்கின்றனர் என்ற கருத்தினை நோக்கி தனது வாதத்தைக் கொண்டு சென்றார். (தமிழாலயம், நவம்பர் – டிசம்பர், ப13.) அதேபோன்று, திருமணச் சடங்கு முறைகளை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பூலேயைப் பின்பற்றி பல சமூகச் சீர்திருத்தவாதிகளும் திருமணச் சடங்குகளைப்பற்றியே சிந்தித்துச் செயல்பட்டனர் என்று கெய்ல் ஓம்வெல்ட் என்ற அறிஞர் கூறுகிறார்.
பெண்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் நலன் காக்கவும், அவர்களின் நிலை உயரவும் பள்ளிகளைத் தொடங்கி அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பூலே 1873ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதியன்று சத்ய சோதக் சமாஜ் (உண்மை தேடுவோர் சங்கம்) என்னும் சங்கத்தைத் தொடங்கினார். இச்சங்கம் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, கல்வியைப் பரப்பல், விதவைத் திருமணத்தை ஊக்குவித்தல், புரோகித ஒழிப்புத் திருமணங்களை நடத்தல், சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கல், உழவுத் தொழிலை மேம்படுத்தல் ஆகிய சமூகப் பொருளியல் காரணங்களுக்காகப் பாடுபட்ட இவ்வமைப்பே இந்திய மண்ணில் சமூக நீதிக்கான போராட்டத்தைத் தொடங்கி முன்னெடுத்துச் சென்றது. (க. நெடுஞ்செழியன், சமூகநீதி, ப.154-155).
அதோடன்றி, 1888ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் நாளில் பூனேயில் நடந்த பொதுக்கூட்டத்தில், பூலேயின் கொள்கைச் செயல்-பாட்டையும், சீர்திருத்த நடவடிக்கை-களையும் பாராட்டி அவருக்கு, மகாத்மா என்ற பட்டம் சூட்டப்பட்டது. அன்றுமுதல் மகாத்மா ஜோதிராவ் பூலே என்றே மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். அண்ணல் காந்தியடி-கள் மகாத்மா என்று அழைக்கப்பட்டது, பின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டிய மண்ணில் கொள்கை முழக்கம் செய்தும், அறிவுபுகட்டியும் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட மகாத்மா பூலே 1890ஆம் ஆண்டு மறைந்தார். அதற்கு அடுத்த ஆண்டான 1891இல் அண்ணல் அம்பேத்கர் பிறந்தார். பூலேயை வழிகாட்டியாய்க் கொண்டு கொள்கை முழக்கம் செய்த கோமேதகம்தான் அம்பேத்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறு பல சமயங்களில் உன்னதப் பதிவுகளைத் தவறவிட்டிருப்பதற்கு மகாத்மா ஜோதிராவ் பூலே ஒரு சிறந்த உதாரணம். பூலே அவர்களின் பெயர்கூட இன்று நம்மில் பலருக்குத் தெரியாது என்பதை வேதனையுடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் பூலே போன்ற சமூக நீதிப் போராளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பூலே போன்ற சமூக நீதிப் போராளிகளையும், அவர்தம் கொள்கைகளையும், வளரும் இளைய சமூகத்திற்குத் தெரியப்படுத்தாமல் சமூக நீதியை வென்றெடுக்க முடியாது. சமூக ஏற்றத் தாழ்வுகளற்ற சமுதாயம் அமைய, அந்த ஏற்றத் தாழ்வுகள் நீங்கப் போராடியவர்களின் வரலாற்றை நாம் முதலில் அறிந்திருக்க வேண்டும். அல்லாமல், சமூக ஒருமைப்பாடு, சமத்துவ சமுதாயம் என்பவைகளெல்லாம் வெறும் பகற்கனவாகவே!
– க. சக்திவேல் எம்.ஏ.பி.எட்