அதிரடிப் பக்கம்

ஏப்ரல்-01-15

பழங்குடிகளின் சாமிகள்

முதலில் வந்து பூஜை செய்து ஏசு வருவார் என்றாய்…

அப்புறம் அவர்கள் வந்தார்கள்.

பூதிக்காடு மாரியைத் திருடிக்கொண்டு,

கரட்டியம்மனையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு

ரங்கநாதனே தெய்வம் என்று கூறி

பூஜை செய்தார்கள்.

உங்கள் ஏசுவும்,

அவர்களின் ரங்கநாதனும் எங்களுக்கு அந்நியர்கள்.

மணியரசி, பூமிவீரன்,

பூதிக்காடு மாரி, கூரய்யன்

போன்றவர்களே எங்கள் சாமிகள்.

அருங்காட்சியகத்தில் இருப்பதெல்லாம்

எங்கள் சாமிகள் அல்ல… – இது பழங்குடி இருளர் மக்களின் பாடல்களில் ஒன்று. ஆதிக்க மதங்கள் அண்டிப் பார்த்து அவர்களைத் தம் மதத்துக்கு மாற்ற முடியாத யதார்த்தத்தை இக்கவிதை உணர்த்துகிறது. தம்மோடு வாழ்ந்து, வாழ்வுக்காகவும் உரிமைக்காகவும் போராடி மடிந்தவர்களையே மண்ணின் சாமிகளாக அம்மக்கள் வழிபடுகிறார்கள். பழங்குடி மக்களின் வாழ்க்கையை அவர்களோடே கழித்து அவர்களின் மொழியைக் கற்று கவிதையாக எழுதியிருக்கிறார் கோவை வழக்குரைஞர் லட்சுமணன். `ஓடியன் என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் பழங்குடி இருளர்களின் வாழ்வைக்  கூறுகிறது. இன்னும் அவர்கள் நாகரிக உலகத்துக்கு வந்துவிடாமல், இயற்கை வாழ்வையே தொடர்வதை எடுத்துக் காட்டுகிறது. எழுத்து வடிவமில்லாத இம்மக்களின் மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்கிறார் லட்சுமணன். தமிழ், கன்னடம், மலையாள மொழிகளின் கலவையாக இம்மொழி இருக்கிறது என்று கூறும் இவர், பழங்குடிகளின் மீது சமூகத்தின் பார்வையை ஈர்க்கும் விதமாக இம்முயற்சியைச் செய்திருப்பதைப் பாராட்ட வேண்டும்.

லட்டா? துட்டா?

கோவிலுக்கு மொட்டை போட்டவனைப் பார்த்து `உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுத்தியா என்று கிராமங்களில் கேட்பார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை போட கட்டணம் வசூலித்த காலம் இருந்தது. என்.டி.ராமராவ் ஆட்சியின் போது இலவசமாக்கப்பட்டது. ஏனென்றால், பக்தர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மயிர் விற்கப்பட்டது. மயிர் மூலம் பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

அந்தப் பணமே போதும் என்பதால், கட்டணத்தை விலக்கினார்கள். திருப்பதி மொட்டை மூலம் கிடைக்கும் மயிரை விற்பதால் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி கிடைக்கிறதாம். இந்த வருமானம் போதாதென்று புதிய அறிவிப்பை தேவஸ்தானம் அண்மையில் அறிவித்துள்ளது. நீண்ட கூந்தல் முடியைக் காணிக்கை அளிக்கும் பக்தர்களுக்கு 5 லட்டுகள் இலவசமாக அளிக்கப்படுமாம். இந்த லட்டு தானம் ஏன் தெரியுமா? நீண்ட முடியை அய்ரோப்பிய நாடுகள் `டோப்பா (ஷ்வீரீ)அதாவது தோற்றப் பொலிவிற்காக வைத்துக் கொள்ளும் பொய் முடி)  செய்வதற்காக நல்ல விலை கொடுத்து வாங்குகின்றன. இந்த வியாபாரிகளைப் பிடித்துவிட்ட திருப்பதி தேவஸ்தானம் பரிதாபத்திற்குரிய பக்தர்களின் மயிரைப் பிடுங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக லட்டு கொடுத்து ஏமாற்றும் வேலையைத் தொடங்கிவிட்டது.

தாலியாம் தாலியே…

தமிழ் சினிமாவின் பல செண்டிமெண்டுகளில் தாலி செண்டிமெண்ட்தான் நம்பர் ஒன். தாலியில் கை வைத்தால் அவ்வளவுதான் அப்படியே அதிரும் அளவுக்குப் பின்னணி இசையும், இடி, மழை, மின்னலும் ஒரு சேர மிரட்டும். இந்தக் காட்சிகளைப் பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்ணுரிமையைப் பறிக்கும் கருவியாக, பெண்ணடிமையைத் தொடரும் அடிமைச் சின்னமாகத்தான் தாலி இம்மண்ணில் உருவாக்கப்பட்டது. அதனைத் தூக்கி எறி என்று குரல் கொடுத்தவர் பெரியார். தம் கருத்தை ஏற்பவர் தாலி கட்டக்கூடாது என்று வலியுறுத்தினார்.

அதன்படி தாலி கட்டாத இலட்சோப  இலட்சம் தொண்டர்களை உருவாக்கினார். தாலி அணியாத பெரியார் தொண்டர்களான வீராங்கனைகளை வித்தியாசமாகப் பார்த்த தமிழகம், ஏளனமாக கேலி பேசியதும் உண்டு. சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் பெரும்பாலோர் திருமணம் செய்துகொண்டுவிட்டால் மீண்டும் நடிக்க வரமாட்டார்கள். அதன் முக்கியக் காரணங்களில் தாலியும் ஒன்று. காட்சிக்கு ஏற்றாற் போல ஒப்பனை செய்துகொள்ளும் போது தாலியைக் கழற்ற வேண்டியிருக்கலாம். அப்படிக் கழற்ற மனமில்லாதவர்கள் மீண்டும் நடிக்க வரவில்லை. சிலர் கதாநாயகி வேடத்தைத் தவிர்த்து, அக்காளாக, குடும்பப் பெண்ணாக, டாக்டராக, வயதான மாமியாராக நடித்தார்கள். இப்படி நடிக்கும் போது தாலி ஒரு பிரச்சினை இல்லை அல்லவா?

இந்தக் காலமெல்லாம் கடந்து சின்னத்திரை வலுப்பெற்று வந்த சூழலில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய பெண்களே துணிச்சலாக முதன் முதலில் தாலியைக் கழற்றிவைத்து விட்டு செய்தி வாசித்து, பின் மீண்டும் அணிந்து கொண்டார்கள். இந்த வகையில் முதன் முதலில் தாலிக்கான புனிதத்தை உடைத்ததற்காக இவர்களைப் பாராட்டலாம்.

ஆனாலும், தாலிக்கு சினிமா கொடுத்த செண்டிமெண்ட்டை சின்னத்திரைத் தொடர்களும் தொடர்ந்தன. தாலியை மட்டுமே வைத்துக்கூட பல கதைகள் புனையப்பட்டன. கணவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவன் கட்டிய தாலியை அவன் இறந்தாலொழிய கழற்றுவதில்லை என்றே சின்னத்திரைக் குடும்பப் பெண் கதாபாத்திரங்கள் திகழ்ந்தன. காலமாற்றம் இப்போது மெதுவாக இந்தப் போக்கினை மாற்றி வருகிறது. பெண்கள் பொருளீட்டி, தம் வாழ்வைத் தாமே தீர்மானிக்கும் சக்தியாக உருவாகிவரும் சூழலில் சின்னத்திரை செண்டிமெண்ட்டுகளும் உடைகின்றன போலும்!

கடந்த மார்ச் மாத இடை வாரத்தில் சன் தொலைக்காட்சியில் நிறைவடைந்த `திருமதி செல்வம் தொடரிலும், இன்னொரு தொடரான நாதஸ்வரம் தொடரிலும் இந்த மாற்றத்தைப் பார்க்க முடிந்தது.

திருமணம் செய்த நாளில் இருந்தே துன்பத்தில் உழன்று, உழைப்பால் உயரும் ஒரு தம்பதியைப் பற்றிய கதை திருமதி. செல்வம். ஒரு கட்டத்தில் மனைவியை விலக்கிவைத்து விட்டு முன்னாள் காதலியுடன் சேர்ந்து மனைவிக்குத் தொல்லை கொடுக்கிறான் செல்வம். ஆனால், காதலியின் சூழ்ச்சி அறிந்து அவளால் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு சிறைக்கும் சென்றுவிட்டு மீண்டும் மனைவியிடமே வருகிறான். தன்னை மன்னித்து ஏற்க வேண்டும் என்று மன்றாடுகிறான். ஆனால், மனைவி அர்ச்சனா வழக்கமான பழைய பத்தாம்பசலிப் பெண்ணாக இல்லாமல், “இதேபோல நான் கெட்டழிந்து மீண்டும் உன்னிடம் வந்து என்னை  ஏற்றுக்கொள் என்று கேட்டிருந்தால் நீ ஏற்றுக்கொள்வாயா? என்று அதிரடியாய்க் கேட்கிறாள்.

திகைக்கும் கணவனை நோக்கி அடுத்த குண்டை வீசுகிறாள் மனைவி. அது அவன் கட்டிய தாலி. “நீ கட்டிய இந்தத்  தாலி அர்த்தமில்லாமல் என் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறியபடியே தாலியைக் கழற்றிக் கணவனின் முகத்தில் வீசுகிறாள். சுற்றி இருக்கும் உறவினர்கள் அவளது செயலை ஏற்றுக்கொள்வதோடு, இன்னொரு திருமணமும் செய்துகொள்ளச் சொல்கிறார்கள் என்பதோடு அந்தத் தொடரை முடித்தார்கள்.

இதேபோல நாதஸ்வரம் தொடரிலும் ஒரு காட்சி. திருமணமாகி சில நாட்களே ஆன தம்பதியரின் கதையில் அக்காட்சி. கணவனின் நயவஞ்சகத்தை, துரோகத்தை அறிந்து அவனைத் தூக்கி எறிந்துவிட்டு வாழப் புறப்படுகிறாள் அந்த இளம்பெண். வெளியேறும்போது அவன் கட்டிய தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு வருகிறாள்.

காலமாற்றத்தையும், பெண்ணுரிமையின் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் சூழலையும் உள்வாங்கியே இக்காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாம். பெண்ணுரிமைப் போரின்  வீச்சு இன்னும் அதிகமாகும்போது தாலி தேவையா என்ற காட்சிகளும் வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *