நூல் திறனாய்வு

ஏப்ரல்-01-15

அசைக்க முடியாத கருத்தியல்

– வெளிச்சம்

நூல்: திராவிடர் இயக்கம் -நோக்கம், தாக்கம், தேக்கம்

நூலாசிரியர்: கோவி லெனின்
நக்கீரன் வெளியீடு

105, ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை-_600 014.

தொடர்புக்கு: 044-43993029

பக்கங்கள் 328

விலை ரூபாய் 175.

மனிதகுல வரலாற்றில் சென்ற  நூற்றாண்டு அதிமுக்கியமானது. பதிவு செய்யப்பட்டுள்ள மனித வரலாற்றில் சென்ற நூற்றாண்டு எல்லா வகையிலும் சீரும் சிறப்பும் மிக்கது. அறிவியல், மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம், கணினி, தொலைத்தொடர்பு, மரபணு  என எல்லாத் துறைகளிலும் வெகுவான வளர்ச்சி பெற்ற நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டு. மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்தது சென்ற நூற்றாண்டில்தான்.

பல பெரிய நாடுகள் சிதறுண்டுபோய் சிறு சிறு நாடுகள் ஆனதும் சென்ற நூற்றாண்டில் நாம் கண்ட ஒன்று. பல பெரிய நிறுவனங்கள், இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் உருவானது இருபதாம் நூற்றாண்டில்தான். ஆனால், அவையெல்லாம் பாதி நூற்றாண்டுகள்கூட தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போய்விட்ட வேளையில் தென்னிந்தியாவில் ஒரு மாபெரும் சமூகப் புரட்சி ஏற்பட்டது. நூறு ஆண்டுகள் கடந்தும் பொலிவு குறையாது மிடுக்குடன் தனது இரண்டாவது நூற்றாண்டுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இயக்கம், திராவிடர் இயக்கம்.

திராவிடர் இயக்கத்தின் நெடிய வரலாற்றில் அது வெற்றிகரமாகச் சுழல்வதற்கு அச்சாணியாக பெரியார் இருந்தார்.

1937இல் நீதிக்கட்சி தேர்தலில் தோல்வியுற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபொழுது சத்தியமூர்த்தி நீதிக்கட்சி 500 அடி ஆழமான பள்ளத்தில் புதைக்கப்பட்டது என்று கொக்கரித்தார். 1967ல் அண்ணா  ஆட்சிக்கு வந்தபொழுது, அன்று நீதிக் கட்சி புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் கழக ஆட்சி என்றார். மற்ற இயக்கங்கள், அமைப்புகள் போல திராவிடர் இயக்கத்திற்கும் பல்வேறு சோதனைகளும்  வேதனைகளும், இழப்புகளும் இந்த நூற்றாண்டுப் பயணத்தில் ஏற்பட்டாலும், அதையெல்லாம் தாங்கி மீண்டு எழுந்து வீறு நடை கண்டது என்றால் அதற்கு மூன்று காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, காலத்திற்கேற்ப மாற்றங்களை உள்வாங்கி ஏற்றுக் கொண்டது. இரண்டு, சரியான தலைமை, மற்றும் மூன்றாவதாக, அசைக்க முடியாத அடிப்படைக் கொள்கைகள்.
திராவிடர் கருத்தியல் என்பது மிக ஆழமானது. அது ஒரு இனத்திற்கு மட்டும் பொருந்தக்கூடிய ஒன்றல்ல. ஒட்டு மொத்த மனித குலத்திற்கு, மனித மேம்பாட்டிற்கு ஏற்ற ஒன்று. ஆகையினால்தான் திராவிடர் கருத்தியலில் கை வைக்க முடியாத போழ்து தனி மனிதத் தாக்குதலுக்கு இன எதிரிகள் இறங்கி விடுகிறார்கள். நீதிக்கட்சியை அரசியலில் வீழ்த்திய பொழுதும் நீதிக் கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட ஆடம்பர வாழ்க்கைதான் விமர்சிக்கப்பட்டது. கொள்கை அல்ல.

திராவிடர் இயக்கத்திற்கு எல்லாக்  கால  கட்டத்திலும் மூன்று விதமான எதிரிகள் உண்டு. கருத்தியலை மோதும் ஸிஷிஷி மற்றும் இந்துத்துவ அமைப்புகள், அரசியலில் மோதும், காங்கிரஸ், பி.ஜே.பி., அ.தி.மு.க. கட்சிகள், இதைத் தவிர மூன்றாவதாக தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் பார்ப்பனக் கைக்கூலிகளாய் உள்ள அமைப்புகள். இம்மூன்று வகை எதிரிகள், காலந்தோறும் முயற்சித்து வந்தாலும் துளியளவுகூட வெற்றிபெற்றது இல்லை. நீதிக்கட்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியானாலும், 1977க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. ஆனாலும் அரசியலில்தான் வெற்றி பெற முடிந்ததே தவிர, திராவிடர் கருத்தியலைத் தொட முடியவில்லை. இன்றைக்கும் தமிழகத்தில் திராவிடத்தையும், பெரியாரையும் ஒதுக்கிவிட்டு அரசியல் நடத்த முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. விஜயகாந்த் கட்சியில் திராவிட என்று இருப்பதும், கம்யூனிஸ்ட்கள் காலம் கடந்து பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இன எதிரிகளாலும் மற்றும் நம் இனத் துரோகிகளாலும்  எந்த வகையிலும் திராவிடர் கருத்தியலை முறியடிக்க முடியவில்லை. இன்று மட்டுமல்ல, என்றும் அழிக்க முடியாது என்பதுதான் உண்மை. ஆனாலும், திராவிடர் இயக்கத்திற்குப்  புதியதாக  ஒரு சோதனை  சமீப காலமாக ஏற்பட்டுள்ளது. யார் யார் எல்லாம் இந்த இயக்கத்தினால் உயர்வு பெற்றார்களோ, பின்  அவர்களைத் தொடர்ந்து பயன் பெற்று வரும் அவர்தம்  சந்ததியினர் அடிப்படை அறிவு கூட இன்றி  திராவிடர் இயக்கம் என்ன சாதித்துவிட்டது? என்று கேட்பதுதான் வேதனையான  விந்தை.

ஆகவே,  திராவிடர் இயக்கம் இன்னும் பொலிவோடும் வலுவோடும் முன்னோக்கிச் செல்ல நமது புதிய தலைமுறையினரைத் தயார் செய்ய வேண்டும். அவர்களுக்கு இவ்வியக்கத்தின் வரலாறு, தொன்மை, மேன்மை இவையினை விளக்கிக் கூற வேண்டும். புதிய புதிய நூல்கள் ஆக்கப்பட வேண்டும். கணினி, இணையம், வலைப்பக்கங்கள், சமூக வலைத்தளங்கள் என எதனையும் விட்டுவிடாமல் நாம் இந்த இயக்கத்தின் மாண்பினைச் சொல்ல  வேண்டும். சொல்லப்படும் செய்தி ஒன்றானாலும் சொல்லுகின்ற பாணி வெவ்வேறாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில்தான் எனக்குத் தோழர் கோவி லெனின் எழுதிய திராவிடர் இயக்கம் -நோக்கம், தாக்கம், தேக்கம் என்கிற நூல் கிடைத்தது. நூறாண்டு வரலாற்றை ஒன்றுவிடாமல் முந்நூறு பக்கங்களுக்குள் தொகுப்பது என்பது ஒரு பெரிய சாதனைதான். அதைவிட முக்கியமானது செய்திகளைச் சுவை குன்றாமல் தொகுத்து அளிப்பது. இந்நூலின் ஆசிரியர் லெனின், திராவிடர் இயக்க வரலாற்றை தாத்தா பெயரன் இடையிலான உரையாடலாகக்  கொண்டு சென்றிருப்பது சிறப்பானது.

தாத்தாக்கள் திராவிடர் இயக்கத்தின் நோக்கத்தை அறிந்தவர்கள். அதன் தாக்கத்தை நேரில் கண்டவர்கள். கத்திப்பாரா மேம்பாலம் கட்டுவதற்கு முன் வாகன நெரிசல் எப்படி இருந்தது, அதை எத்தனை சிரமத்தோடு கட்டி முடித்தார்கள் என்பதைக் கண்டவர்களும் அனுபவித்தவர்களும்தான், இன்று அந்த மேம்பாலத்தின் மீது வண்டி ஓட்டிச்  செல்லும்போது உணரமுடியும். எதுவுமே தெரியாமல் முதன்முதலாய் அதைக் காண்பவர்கள், அதுவும் குறிப்பாக சீனா மற்றும் மேற்கத்திய நாட்டில் உள்ள மேம்பாலங்களைக் கண்டவர்கள், கத்திப்பாரா மேம்பாலத்தில் என்ன பெரிய சிறப்பு உள்ளது? என வினவுவர். ஆகவே, தாத்தா சந்ததியினர்தான் திராவிடர் இயக்கத்தின் தாக்கத்தினை இக்கால சமூகத்தினருக்கு எடுத்து உரைக்க முடியும். இடைப்பட்ட அப்பாக்கள் தலைமுறை அந்த வேலையைச் சரியாய்ச் செய்யாமல்விட்ட கோளாறுகள்தானே இப்போதைய சிக்கல்களுக்குக் காரணம். இந்த நூலின் தலைப்பே  வித்தியாசமான ஒன்று. திராவிட இயக்கம் என்பதில் ர் விகுதி வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டிருக்கும். வரலாறு தெரிந்தவர்களுக்கு அதன் வித்தியாசம் புரிந்திருக்கும். 1912இல் சென்னை மாகாண சபையாக  தொடங்கிய பொழுதே அதன் நோக்கம் பார்ப்பனர் அல்லாத மக்களை மேம்படுத்துவதே.

பார்ப்பனர் அல்லாதார் அமைப்பு என்றால் எதிர் மறையாக உள்ளது என்றும், ஏன் 3 விழுக்காடு மக்களை மய்யப்படுத்தி நாம் ஒரு அமைப்பினைத் தொடங்க வேண்டும் தேக்கம் என்பதைக் கூட ஓர் எதிர்மறைச்  சொல்லாக அன்றி, அதை நேர்வினையாகப் பயன்படுத்தி இருப்பது நூலாசிரியரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. ஓடிக்கொண்டிருக்கும் நீரினைத் தேக்கி வைத்தால்தான் விவசாயம் , குடிநீர், மின்னுற்பத்தி எனப் பயன்படுத்த முடியும். இன்றைய சூழலில் இவ்வியக்கம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூறும் பொழுது, நம்முடைய இன்றைய மற்றும் நாளைய சமுதாயத்திடம்  திராவிடர் இயக்க வரலாற்றினைக் கொண்டு செல்வதில் நம்  ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. வரலாறு அறிந்த சமூகம்தான் வெற்றி பெற்ற சமூகமாக இருக்கமுடியும். லெனினின் பார்வையில் திராவிடர் இயக்கம் என்ற கப்பல், பயணம் தொடர தயார் நிலையில் உள்ளது. வழி நடத்த மாலுமிகள் தயார் நிலையில் உள்ளனர்.

ஆனால், எந்தத் திசையில் பயணிப்பது என்பதற்கு வழிகாட்ட திசைகாட்டிதான் இல்லை என்று கூறுகிறார். இன்றைய காலகட்டத்தில் திராவிடர் இயக்கத்தினைக் குறித்து விமர்சனங்கள் எழுப்பப்படும் நேரத்தில் சரியான சமயத்தில் எழுதப்பட்ட நூல் திராவிடர் இயக்கம் – நோக்கம் தாக்கம் தேக்கம். பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் தோழர் லெனின். அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய உன்னதமான நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *