இந்த உலக நாத்திக மாநாட்டுக்கு என்னையும், நார்வே நாட்டு பிரதிநிதிக் குழுவைச் சார்ந்த மற்றவர்களையும் அழைத்ததற்கு நன்றி.
நார்வே நாட்டு மனிதநேய அமைப்பின் பொதுச் செயலாளராக நான் பணியாற்றுகிறேன். எங்களது முக்கிய நோக்கம் மனிதநேயத்தை வளர்ப்பது, மதம் மற்றும் கடவுள் நம்பிக்கையிலிருந்து மக்களை விடுதலை பெறச் செய்வது, பல்வேறுபட்ட மதங்களைச் சார்ந்த – எந்த மதத்தையும் சாராத சமூகத்தினரை சமத்துவ முறையில் நடத்துவது ஆகியவைதாம்.
பெண்கள் உரிமைகளுக்காகப் பணியாற்றிப் பழக்கப்பட்டவள் நான். இதுதான் பத்தாண்டு காலத்துக்கும் மேலாக எனது முக்கியப் பணியாகவே இருந்து வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக நார்வே நாட்டின் பாலியல் சமத்துவ அலுவலராகப் பணியாற்றி வருகிறேன்.
மற்ற பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, நார்வே நாட்டில் பெண்களின் நிலை நன்றாகவே இருக்கிறது. உயர்கல்வி பயில்வோரில் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இடம் பெறுகின்றனர் என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
நார்வே பெண்கள் வாழ்க்கையில் பலவிதப் பணிகளிலும் இடம் பெற்றுள்ளனர். அரசியலிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் நன்றாகவே இருக்கிறது. என்றாலும் நார்வேயில் உள்ள தொழிலாளர் சந்தை இன்னும் அதிகப் படியான அளவில் பாலியல் வேறுபாடு காட்டுவதாகவே உள்ளது. ஒரே மதிப்பிலான பணி செய்யும் பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான சம ஊதியம் வழங்குவதற்கு இன்னமும் நாங்கள் போராட வேண்டியிருக்கிறது.
இன்றுள்ளது போல பெண்களின் நிலை எப்போதுமே நன்றாக இருப்பதில்லை. 1960 இல் தொழிலாளர்களையும், வீட்டு மனைவிகளையும் கொண்ட நாடாகவே நார்வே இருந்தது. 20 விழுக்காட்டுக்கும் குறைவான பெண்களே வேலை செய்பவர்களாக இருந்தனர். பெண்களுக்கு அதிக கல்வியறிவு இருக்கவில்லை. வீட்டு நிருவாகத்திலும், குழந்தை வளர்ப்பிலும் அவர்களுக்கே முக்கியப் பொறுப்பு இருந்தது. அரசியலில் முடிவுகளை மேற்கொள்வதில் பெண்கள் பங்கு கொள்வதில்லை.
பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுவது என்பது பாரம்பரியத்துக்கும், அதிகாரத்துக்கும், தவறான எண்ணங் களுக்கும் எதிராகப் போராடுவதாக இருந்தது. கடந்த இருபது முப்பதாண்டு காலமாக பெண்களின் உரிமைப் போராட்டம் என்பது நார்வேயில் மதப் பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு போராட்ட மாகவே இருந்து வருகிறது.
அரசியல் மற்றும் பல்வேறுபட்ட முக்கியமான அமைப்புகளில் குழு உறுப்பினர் களாக பெண்கள் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு முன், இது போன்ற முக்கிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்கு முன் பெண்கள் ஆண்களுக்கிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் பணி வெற்றி பெறவில்லை.
எவான்ஜலிகல் லூதர்ன் அரசு ஆதரவு தேவாலயத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு பன்முகக் கலாச்சாரம் கொண்ட சமூகமாகவே நார்வே இருந்தது. 80 விழுக்காட்டுக்கும் மேலான பெரும்பாலான மக்கள் இன்னமும் இந்த அரசு தேவாலயத்தைச் சேர்ந்தவர்களே. என்றாலும், எப்போதும் எங்கள் நாட்டில் மத சிறுபான்மையினரும், நாத்திகரும் மற்றும் இதர மத, கடவுள் நம்பிக்கையற்றவர்களும் இருந்து வந்துள்ளனர். தொடக்க காலங்களில் அவர்கள் பாகுபாடு காட்டப்பட்டு அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
எங்களது நார்வே மனிதநேய அமைப்பு 1956 இல் உருவாக்கப்பட்டு, தொடக்கத்தில் 300 உறுப்பினர்கள் இருந்தது இன்று 77,000 உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு சிறு சமூகத்திலும் எங்களது உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வளர்ச்சி பெற்று வருகிறோம்.
50 ஆண்டு காலமாக எங்களது பணியின் முக்கிய நோக்கமாக இருந்து வருவது அரசு சார்ந்த தேவாலயத்துக்கு எதிராகவும், பொதுத் துறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வேறுபாடு காட்டப்படும் சமூகப் பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் போராடுவதாகும்.
மனிதநேயர்களின் கவனம் பெண்கள் உரிமைகளின் பால் குவிக்கப்பட வேண்டியதற்கான சிறந்த காரணங்கள் இவை:
1. பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவம் என்பது மனித உரிமைகள் பற்றியதாகும்.
ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அய்க்கிய நாடுகளின் மனித உரிமை மாநாட்டுத் தீர்மானங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வேறுபாடுகளையும் களையும் மாநாடு, மனித உரிமை மாநாடுகளில் ஒன்றாகும். அய்க்கிய நாடுகள் மன்றத்தின் ஒரு பெரிய எண்ணிக்கை கொண்ட நாடுகளால், 160 நாடுகளால், இந்தத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
2. மனித உரிமைகள் மீது மனிதநேயம் ஒரு சிறப்பான கவனத்தைக் கொண்டுள்ளது
மனிதநேயத்தின் மய்யத்தில் தனிப்பட்ட, பொறுப்புள்ள மனிதர் வைக்கப்படுகிறார். ஆகவே, மனித நேயத்தின் நோக்கமே, சுதந்திரமானவராகவும், பொறுப்புள்ளவராகவும் தன்னை வளர்த்துக் கொள்ள ஒவ்வொரு மனிதருக்கும் வாய்ப்பு அளிப்பது என்பதே. எங்களது அமைப்பின் துணை விதிகளில் கூறியுள்ளது போல, பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்தில் மனித உரிமைகளுக்கு மதிப்பு ஏற்படுவதற்காக நாங்கள் பணியாற்றுகிறோம்.
3. தனிப்பட்டவர் மீது கவனம் செலுத்துதல்
என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மனிதரும் இணையற்றவராகவும், தனிப்பட்ட சுதந்திரமானவராகவும் பார்க்கப்பட வேண்டும், நடத்தப்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஆனால், இன்று பல மக்கள் அந்தச் சூழ்நிலையில் இல்லை. மக்களைக் குழுக்களாகப் பிரித்து அதன்படிச் செயல்படும் மனப்பான்மையை நாம் பெற்றிருக்கிறோம். , சமூகத்தில் உள்ள சிறுபான்மையினர் அல்லது தங்களைக் காத்துக் கொள்ள இயலாத குழுக்களைப் பற்றி நாங்கள் பேசும்போது, இந்த குழு சிந்தனை அடிக்கடி தோன்றுகிறது என்பது, மனித உரிமைகளுக்காக பெண்களுடன் பணியாற்றிய எனது அனுபவமாகும்.
இது பெண்கள், புலம் பெயர்ந்து வந்து குடியேறியவர்கள், ஓரினச் சேர்க்கையில் விருப்பம் கொண்ட ஆண்கள், பெண்கள் மற்றும் இதர கலாச்சாரங்கள் மற்றும் மதங்களிலிருந்து வந்த மக்கள் ஆகிய அனைவருக்கும் பொருந்தும்.
தங்களைக் காத்துக் கொள்ள இயலாத மற்ற குழுக்களைப் போலவே சமூகத்திலான பெண்களின் வாய்ப்புகளையும் இது கட்டுப்படுத்தி, குறைத்துவிடுகிறது. மற்றவர்களைச் சார்ந்திருப்பவர்களாக அவர்களை ஆக்கி அவர்களின் சுதந்திரத்தையும், பொறுப்புகளையும் அது குறைத்து விடுகிறது.
4. மதமும் பெண்கள் உரிமைகளும்
பழைய பாரம்பரியமான பழக்க வழக்கங்களுக்கும், தவறான எண்ணங்களுக்கும் எதிரான போராட்டத்தின் மய்யத்தில் பெண்கள் உரிமைகளுக்கான மற்றும் ஆண் பெண்ணிடையே சமத்துவத்துக்கான போராட்டம் என்ற ஒரு கூறு உள்ளது.
அனைத்துக் கலாச்சாரங்களிலும், அனைத்துக் கால கட்டங்களிலும், மதப் பாரம்பரியப் பழக்க வழக்கங்கள் பெண்களின் வாழ்க்கையையும், சமூகத்தில் அவர்கள் பங்கேற்றுக் கொள்வதையும் கட்டுப்படுத்திக் குறைத்துவிடுகிறது.
மதம் மற்றும் ஆண், பெண் அதில் ஆற்றும் பங்கு ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்பைப் பற்றி ஆய்வு செய்த நார்வே நாட்டுக்காரர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கீழ்க்கண்ட முடிவுக்கு வந்துள்ளார்.
பெண்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவது, மத நிலைப்பாட்டுடன் தொடர்புடைய சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் நெருங்கிய தொடர்புடையது.
சமூகத்தில் பெண்களின் நிலை மற்றும் பங்கு பற்றி ஆற்றல் நிறைந்த அய்ரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவியதை அய்ரோப்பா பற்றிய தனது ஆய்வின்போது தான் கவனித்ததாக அவர் கூறுகிறார்.
இந்த ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார்: ஓர் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அய்ரோப்பிய ஒன்றியம் வெற்றி பெற வேண்டுமானால், அது உலக அளவிலான, தாராளமான, மக்களாட்சி மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டுமேயன்றி, மதத்துடன் எந்த விதத்திலும் தொடர்புடையதாக இருக்கக்கூடாது. மதம் மற்றும் அதில் ஆண்கள், பெண்களின் பங்கு ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்புதான் இதற்கான முக்கியக் காரணம்.
எனது கருத்துப்படி, மதங்கள் பாரம்பரியமாகவே பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை உள்ளடக்கியவையாகவே இருந்து வந்துள்ளன. இதனை நாம் உலகெங்கும் காணலாம். பெண்கள் ஒடுக்கப்பட்டு, அதிகாரமின்றி, வறியவர்களாக உள்ளனர். ஆண்கள் பெண்களுக்கிடையே உள்ள இது போன்ற வேறுபாடுகளை மதங்கள் ஆதரிக்கின்றன – வளர்க்கின்றன என்றுகூடக் கூறலாம்.
பெண்களுக்குப் பயன்படும் அனைத்து முன்னேற்றங்களுக்கும் எதிரானதாகவே நார்வே நாட்டுக் கிறித்துவ தேவாலயங்களில் பெரும்பாலானவை உள்ளன. ஆரோக்கியம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய பெண்களின் உரிமைகள் இது போன்ற எதிர்ப்பைப் பெறுவதாக உள்ளது. இத்தகைய எதிர்ப்பைப் பெறும் மற்ற பகுதிகள் பெண்கள் கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது, அரசியலில் ஈடுபடுவது, மக்களாட்சி உணர்வு பெறுவது ஆகியவையாகும்.
பெண்கள் உரிமைகள் மீது மனிதநேயர்களாக நாம் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும். பெண்களின் மனித உரிமைகளைக் கட்டுப்படுத்தும் மதத் தலைவர்களின் முயற்சிகள் அனைத்துக்கும் எதிராக நாம் கண்டனம் எழுப்பி விவாதிக்க வேண்டும்.
பாரம்பரியப் பழக்க வழக்கத்தின் மதிப்பு பற்றியே மதத் தலைவர்கள் அடிக்கடி கவனம் செலுத்துகிறார்கள். நமது பாரம்பரியப் பழக்க வழக்கங்களில் பெரும்பாலானவற்றின் மதிப்பே கேள்விக்குறியாக இருப்பதாகும் என்றே நான் கூறுவேன். அவற்றில் பெரும்பாலானவை பெண்களின் உரிமைகளுக்கு எதிரானவை . அனைத்து பழைய பாரம்பரியப் பழக்க வழக்கங்களும், அவை மதம் பற்றியோ அல்லது தேசியம் பற்றியோ பிரதிபலிப்பதாக இருந்தால், பெண்களின் நன்மைக்கு எதிராக அவை செயல்படும் வரை அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதே எனது கருத்தாகும்.
நான் முன்பு கூறியபடி, தவறான எண்ணத்திற்கும், பழைய பாரம்பரியப் பழக்க வழக்கங்களுக்கும் எதிரான போராட்டம், பெண்களின் உரிமைகள், ஆண், பெண் சமத்துவத்துக்கான போராட்டத்தின் மய்யக் கூறாக விளங்குவதாகும். அனைத்துக் கலாச்சாரங்களிலும், அனைத்துக் காலகட்டங்களிலும், மதப் பாரம்பரியப் பழக்க வழக்கங்கள் பெண்களின் வாழ்க்கையையும், சமூகத்தில் பெண்கள் பங்கேற்பதையும் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டன.
பெண்கள் அதிகாரம் பெறுதல் மற்றும் மனிதநேயம் ஆகியவை வெற்றி பெறுவதற்கு சில அடிப்படையான சூழ்நிலைகள், நிபந்தனைகள் உள்ளன.
அரசியல் செயல்பாட்டுக்கான கோரிக்கையுடன் இணைந்த கல்வி, செய்தி மற்றும் தகவல் ஆகியவற்றின் முக்கியத்துவம், மதப் பாரம்பரியப் பழக்க வழக்கங்கள், தவறான எண்ணங்களை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பது ஆகியவை இப்பணியின் மய்யக் கூறுகளாகும்.
மனித உரிமைகள் மீது கவனம் செலுத்துவதும், மக்களாட்சி முறையும், சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை என்ற முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடியவை என்று எவர் ஒருவரும் நன்றாக முடிவெடுக்கலாம்.
அனைத்து மக்களின் பொருளாதார சுதந்திரத்துக் காகவும், நல வாழ்வுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றுவது மனிதநேயத்தின் முக்கியமான கூறுகளாகும்.
நான் கூறியபடி, பொருளாதார சுதந்திரம் சமத்துவத்திற்கும், அதன் மூலம் அறிவு, அதிகாரம் பெறுவதற்கும் வழிகோலுகிறது. இது இறுதியில் ஆண்கள் பெண்களிடையே சமத்துவத்தையும், மேலும் மதச்சார்பற்ற சமூகங்களையும் உருவாக்கும் என்று நம்புவோம்.
(ஜனவரி 2011 இல் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் கிறிஸ்டின் மைல் ஆற்றிய உரை)