மூடநம்பிக்கை வியாபாரிகள்தான் அறிவியலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையம், சினிமா உள்ளிட்ட ஊடகங்களில் முதலில் நுழைபவர்கள் இவர்கள்தான். வெகு மக்களைச் சென்றடையும் ஊடகங்களின் மூலம் மக்களின் மூடநம்பிக்கையை வளர்த்துப் பணம் சேர்க்கும் கொள்ளைக்காரர்களாக உருவாகின்றனர். அரசோ, நீதிமன்றங்களோ இவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் சாமியார்கள், ஜோசியக்காரர்களின் ஆட்சி ஊடகங்களில் பெருகிவிட்டது. இந்நிலையில் மிகச் சரியான நடவடிக்கையை அண்மையில் திரிபுரா மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் அரசு எடுத்துள்ளது.
ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, அவர்களின் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. இம்மாநிலத்தில் ஜோசியர்கள் சிலரும் சாமியார்கள், மந்திரவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும் தொலைக்காட்சியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனராம். இதன் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடத்த, பாபா கமால் ஜேடி என்ற மந்திரவாதி(?)யை அழைத்து வந்தனர். ஆனால், இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். சாமியார்களும், மந்திரவாதிகளும் ஜோசியர்களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.
ஓட்டல்களில் தங்கிக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்து தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும் மந்திரவாதிகளும் அழைப்பு விடுக்கின்றனர். இவர்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்த் தொலைக்காட்சிகள் சிலவற்றில் தாயத்து, மந்திரத்தகடு விற்கும் புதிய கும்பல் சில மாதங்களாக அடியெடுத்து வைத்துள்ளது என்பதைத் தமிழகக் காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். இவர்களைப் போலவே நித்தியானந்தா போன்ற ஹைடெக் சாமியார்களும் தியானம், யோகா என்கிற பெயரில் தொலைக்காட்சி மூலமாகத்தான் விளம்பரம் பெறுகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.