பேய்-பிசாசு : அறிவியல் சொல்வதென்ன?

மார்ச் 16-31

– பெஞ்சமின் ரட்ஃபோர்ட்

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
வெளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க;
உன் வீரத்தைக் குழுந்திலேயே கிள்ளி வப்பாங்க.
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற   வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே -நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!

 

– இந்தப் பாடல் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடல்.

பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் அடைமழையாய்ப் பொழிந்த காலகட்டத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.

கடவுள் மூடநம்பிக்கைக்கு இணையாக மட்டுமல்ல, அதற்குத் துணையாகப் பரப்பப்பட்டது பேய், பூதம், பிசாசு, ஆவி மூடநம்பிக்கைகள். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கை உண்டு. தொலைக்காட்சித் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஊடக வியாபாரிகள் கிராபிக்ஸைப் பயன்படுத்தி பேய் அச்சத்தை இன்னும் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பகுத்தறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் நாம் கேள்விகளை எழுப்பி வருகிறோம். இதுவரை யாரும் பதில்  சொன்னதில்லை. மாறாக அவர் சொன்னார் என்றோ, நான் பார்த்தேன் என்றோ சொல்லித் தப்பிவிடுவார்கள். எங்களுக்குக் காட்டு என்றால் அதற்கு உடன்பட மாட்டார்கள். மூடநம்பிக்கை வணிகர்களின் பித்தலாட்டங்கள் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்க அமெரிக்காவிலிருந்து வெளிவரும் skeptical inquirer மாதமிருமுறை இதழின் மேலாண்மை ஆசிரியர் பெஞ்சமின் ரட்ஃபோர்ட் (Benjamin Radford) எழுதியுள்ள இந்தக் கட்டுரை அறிவியல் பூர்வமாக பேய்-பிசாசு பற்றி ஆராய்கிறது.

பேய் பிசாசுகளை நம்புகிறீர்களா? நீங்கள் மட்டும் தனி ஆளல்ல. 2005ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 37 விழுக்காடு, பேய் வீடுகளையும் மூன்றில் ஒரு பங்கு பேய் பிசாசுகளையும் நம்புகின்றனர். உலக முழுவதிலும், ஆயிரக்கணக்கான மக்கள், ஒரு பொழுதுபோக்காக, ஆனால், மும்முரமாக, பேயைத் தேடி வருகின்றனர்! அய்யத்திற்கிடமான செய்திக் கோப்பைச் சேர்ந்த ஷாரன் ஹில் என்ற ஆய்வாளர் அமெரிக்காவில் 2000 தீவிர தொழில் முறையில்லாத பேய் வேட்டைக் குழுக்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்..

கோடிக்கணக்கான ஆண்டுகளாக பேய்கள் மாக் பெத்திலிருந்து விவிலியம் வரை, மற்றும் எண்ணமுடியாத கதைகளிலும், நாட்டுப்புறக் கதைகளிலும் ஒரு மிகுந்த ஜனரஞ்சகமான பொருளாகவே இருந்து வந்துள்ளன. உலகம் முழுவதும், பேய் பிசாசு பற்றிய இயற்கைக்கு மாறான நம்பிக்கைகள் பரவிக் கிடக்கின்றன.

சாவின் விளிம்பில் ஏற்படும் அனுபவங்கள், மரணத்திற்குப் பின் வாழ்வு, ஆவி உலகத் தொடர்பு உட்பட பல காரணங்கள் இயற்கைக்கு மாறான நம்பிக்கைகளாக அமைகின்றன.

இறந்தவர்கள் ஆவியாக நம்முடன் இருக்கிறார்கள் என்பது ஒரு பழைய நம்பிக்கை. அது பலருக்கு அமைதியைக் கொடுக்கிறது. நமது அன்புக்குரிய, ஆனால் இறந்துபட்ட ஒரு குடும்ப உறுப்பினர் நம்மைத் தேடவில்லை; ஆனால் தேவைப்படும் நேரங்களில் நம்முடன் இருக்கிறார்களா? என்றெல்லாம் அவர்கள் நம்ப விரும்பவில்லை. பலர் பேய் பிசாசுகளில், சொந்த அனுபவத்தின் காரணமாகவே நம்பிக்கை கொண்டுள்ளனர்; சிலர் பார்த்துள்ளதாகக் கூறுகின்றனர். அல்லது, விளங்கிக் கொள்ள முடியாத சில தோற்றங்களை உணர்ந்து இருக்கின்றனர்.

பிசாசுகளைப் பற்றிய வாக்குவாதமும் அறிவியலும்

சொந்த அனுபவங்கள் என்பது ஒன்று ; ஆனால், அறிவியல் ஆதாரம் என்பது வேறு. பிசாசுகளைப் பற்றி ஆராய்வதில் உள்ள தொல்லை என்னவென்றால், பேய், பிசாசு என்பது பற்றி, உலக முழுதும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு விளக்கம் இல்லாததுதான். சிலர் அவை இறந்தவர்களின் ஆவி என்றும் ஏதோ சில காரணங்களுக்காக தாங்கள் போகவேண்டிய இடத்தைத் தவறவிட்டதாகச் சொல்லுகிறார்கள். வேறு சிலர், பேய் பிசாசுகள், தொலை உணர்வு உள்ள பிம்பங்கள் என்றும், உலகத்திற்கு நமது மனங்களிலிருந்து காட்டப்படுவதாகும் என்று கூறுகின்றனர்.

சிலர் வேறுவிதமான பிசாசுகளை உண்டாக்குகிறார்கள். மிச்சமான அச்சங்கள், புத்திசாலி பூதங்கள், நிழல் மனிதர்கள் போன்றவை அவை. பல இனமக்களின் தேவதைக் கதைகள் போலவும் டிராகன் கதைகள் போலவும், எத்தனை விதமான பேய் பிசாசுகளை நீங்கள் விரும்புகிறீர்களோ, அத்தனையும் உள்ளன. பேய்கள் பற்றிய கருத்துகளில், பல முரண்பட்டும், உள்ளடங்கியதாகவும் உள்ளன. உதாரணமாக, பேய்கள் என்பது பொருளா? அல்லது பொருளாக இல்லையா?  அவை திடப் பொருள்களுக்கு ஊறு செய்யாமல், ஊடுருவிச் செல்ல முடியுமா? அல்லது அவை தானே அறைக் கதவைச் சாத்திக் கொள்ளவோ, பொருள்களை விட்டெறியவோ முடியுமா? தர்க்க நியாயத்தின்படியும், உருத்தோற்றத்தின் படியும் அவை இருக்க வேண்டும்; அல்லது இல்லாது இருக்க வேண்டும். பேய்கள் மனித ஆன்மாக்களாக இருந்தால் அவை ஏன், ஆடை அணிந்து தோன்ற வேண்டும்? மேலும், இயங்காத பொருள்களான தொப்பி, பிரம்பு, ஆடைகளுடன் காணப்பட வேண்டும்? ரயில்கள், கார்கள், வண்டிகளிலும் கூட  பேய் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பழி வாங்கப்படாது இறந்தவர்களின் ஆவிதான் பேயென்றால், அவை ஒரு ஆவியுலகு சார்ந்த(?) இடைமனிதன் வாயிலாகப் பேசுவதாகச் சொல்லப்படுவதால், அவை கண்டுபிடிக்க முடியாத கொலைகளைப்பற்றி ஏன் சொல்லுவதில்லை? அவை தங்களது கொலைகாரர்களைப் பற்றி அடையாளம் காணமுடியும். அதைப்போல, பேய் பிசாசுகளைப் பற்றி எந்த ஒரு செய்தியும், தர்க்க ரீதியான காரணங்களுக்கு உட்பட்டுத்தானே இருக்க வேண்டும்?

பேய் வேட்டையாடுவோர் பலரும் பேய்களின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க பல ஆக்கப்பூர்வமான முறைகளையும் ஏமாற்று வழிகளையும் கையாளுகின்றனர். உண்மையில் எல்லா பேய் தேடுவோர்களுமே, தாம் அறிவியல் முறையில் செயல்படுவதாகவே கூறுகின்றனர்.

அப்படியே தங்களைத் தோற்றப்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர். ஏனென்றால், அவர்கள் உயர்ந்த அறிவியல் கருவிகளையும், கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவி(Geiger counter), மின்காந்த நில கண்டுபிடிப்பான்கள், அயன் (Ion) கண்டுபிடிப்பான், இன்ஃப்ராரெட் (Infrared) காமிராக்கள், மிக நுண்ணிய மைக்ரோபோன் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதுவரை எந்தவொரு கருவியும் உண்மையில் பேய்களைக் கண்டுபிடிக்க உதவியதாகத் தெரியவில்லை.

சிலர் இதற்கு மாறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். பேய்கள் இருப்பதை நிரூபிக்க முடியாததற்குக் காரணம், ஆவி உலகத்தைப் பற்றி அறிய நாம் தகுந்த தொழில்நுட்பம் கொண்டு இருக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.. ஆனால், இதுவும் சரியாக இருக்க முடியாது. பேய்கள் நாம் வாழும் சாதாரண உலகத்தில் இருந்தால், அவை கண்டுபிடிக்கப்பட்டு, வீடியோ, ஆடியோ, ஃபிலிம் நிழற்படங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லாததால், அவை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பேய்கள் இருந்து அவை அறிவியல்பூர்வமாக காணப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கான சான்றுகள் நம்மிடம் இருப்பதாகக் கூற முடியும். நாம் அவ்விதம் சான்றுகள் கொண்டிருக்கவில்லை. பேய்கள் இருந்து, அவைகள், அறிவியல்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்படாமலிருந்தால், பின் எல்லா நிழற்படங்களும், வீடியோ, மற்றும் பேய்தான் என்று சொல்லப்படும் எல்லா பதிவுகளும், பேய்களினுடையதாக இருக்க முடியாது.

பேய்களைப் பற்றிய பல்வேறு கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. பல பத்தாண்டுகளாக, தொலைக்காட்சி உட்பட பல பேய் வேட்டைக்காரர்களும் ஒரு சிறிய  சாட்சியத்தைக் கொண்டு கூட பேய் இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமூட்டவில்லை.

பலர் ஏன் நம்புகிறார்கள்?

தற்கால இயற்பியலைவிட கடினமான அறிவியலில் பேய் இருப்பதற்கான ஆதாரங்களைக் காணமுடியும் என்று சிலர் நம்புகிறார்கள். பேய்களைக் காண ஒரு அறிவியல்பூர்வமான வழியை அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் யோசனை தெரிவித்துள்ளதாக பெரிதும் நம்பப்படுகிறது.

சக்தி ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஆனால் மாற்றம் அடைகிறது. நாம் இறந்தபின், நமது உடலில் உள்ள சக்தி என்ன ஆகிறது? எந்தவிதமாகவோ அது பேயாக ஆகக்கூடுமா?

நீங்கள் அடிப்படை இயற்பியல் தெரிந்திருந்தால் ஒழிய, அது ஒரு அறிவுப்பூர்வமான கருத்தோட்டமாகத் தெரியும். இதற்கான பதில் எளிதானதுதான்; மர்மமானதல்ல. ஒரு மனிதன் இறந்தால், உடலில் உள்ள சக்தியானது, மற்ற உடலில் உள்ள நுண்ணுயிர்களின் சக்தி எங்கே போகிறதோ, அங்கே சுற்றுப்புறத்தில் கலந்து விடுகிறது.

அந்தச் சக்தியானது வெப்ப உருவத்தில் வெளிப்படுத்தப்பட்டு, அவற்றை உண்ணும் விலங்குகளிடம் சேருகிறது. வனவிலங்குகள் புதைக்கப்படாவிட்டால், புழுக்களும் மற்ற பாக்டீரியாக்களும் ஏற்பட்டு, அவற்றைத் தாவரங்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. மனிதன் இறந்த பிறகு உடல் சக்தி உயிர் வாழ்வதுமில்லை; எல்லோரும் அறிந்த பேய் வேட்டை சாதனங்களால் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை.

பல பேய் வேட்டைக்காரர்கள் ஆபத்தில்லாத, பயனுமில்லாத பல செயல்களில் பங்கு பெறுவது வேடிக்கையாக இருந்தாலும்கூட, அவர்கள் வாழ்க்கையில் கரும் பக்கங்களும் உண்டு. பல ஜனரஞ்சக பேய் வேட்டை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பரவலாக இருந்த நேரத்தில் காவல்துறையினர், கைது செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை உயருவதையும், காயப்படுபவர்களையும், பேய் வேட்டை கொல்லப்படுபவர்களையும் பதிவு செய்தது. 2010இல் பேய் வேட்டை காரணமாக ஒருவர் இறந்துபோனார்.

நண்பர்களுடன், சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் மோதிய ஒரு ரயிலின் பேயைப் பார்க்க முயற்சித்தபோது, வளைவில் வந்த ஒரு உண்மையான ரயிலால் அவர் கொல்லப்பட்டார்; ஆனால் பேய் ரயில் வரவேயில்லை!

பேய்களுக்கான சான்றுகள், ஒரு நூற்றாண்டுகளுக்கு முன் இருந்ததைவிட, 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட, ஏன் ஒரு ஆண்டுக்கு முன்பிருந்ததைவிடக்கூட வளர்ச்சி பெறவில்லை.

முதலில், பேய்கள் என்பது இல்லை. பேய்களைப் பற்றிய செய்திகள், உளவியல், தவறான புரிந்து கொள்ளுதல், தவறுகள் மற்றும் புரளிகளால் உண்டாக்கப்படுகின்றன. இரண்டாவதாக, உண்மையில் பேய்கள் இருக்குமானால், நமது பேய் வேட்டைக்காரர்கள் முழுதும் திறமையற்றவர்கள். முடிவாக, பேய் வேட்டைக்காரர்கள் முயற்சிகள் சான்று பற்றியதல்ல; (அப்படி இருந்தால் எப்பொழுதோ பேய் தேடுதலைக் கைவிட்டிருப்பார்கள்.)

பதிலாக, நண்பர்களுடன் வேடிக்கை செய்வதிலோ, கதைகள் சொல்வதற்கும் தெரியாதவற்றின் நுனியைப்பற்றித்தான் தேடிக் கொண்டிருப்பதாகப் பாசாங்கு பண்ணுவதில் உள்ள ஆனந்தம் ஆகியவையே காரணமாகும்.

என்ன இருந்தாலும், பேய்க்கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும் தானே?

தமிழில்: ஆர்.ராமதாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *