ஆசிரியர் பதில்கள்

மார்ச் 16-31

கேள்வி : முன்னாள் அரசு எடுத்த கொள்கை முடிவை, இந்நாள் அரசு, கொள்கை முடிவு என்ற போர்வையில் தவறான முடிவு எடுத்து பெருத்த நிதி இழப்பை ஏற்படுத்துவது சரியா? ஜி.சாந்தி, பெரம்பலூர்

பதில் : சரியல்ல. இது நம் கருத்து மட்டுமல்ல, உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை மாற்ற (தி.மு.க. அரசு கொண்டுவந்தது என்பதற்காக) முயற்சித்த நேரத்தில் தமிழ்நாடு அரசு அப்பீலுக்குச் சென்றபோது இதே கருத்தைக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

ஆனால் அதே உச்ச நீதிமன்றம் தமிழக சட்டப்பேரவைக் கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றிடச் செய்யும் உள்நோக்கம் கொண்ட முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றபோது வேறுவிதமாகக் கூறியதுதான் வேடிக்கை.

கேள்வி : இலங்கை வீரர்கள் பங்கேற்கும் ஆசிய–தடகளப் போட்டியை அனுமதிக்க இயலாது என, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது சரியா தவறா? இது குறித்து தங்களது கருத்து? தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி-

பதில் : நல்ல துணிச்சலான முடிவு. பல விசயங்களில் நாங்கள் அவர்களது நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டாலும், இந்த அறிவிப்புக்காக, முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவைப் பாராட்டுகிறோம். இடதுசாரிக் கட்சியாகிய சி.பி.எம். இதுபற்றிக் கூறியிருக்கும் கருத்து எமக்கு உடன்பாடானதல்ல.

கேள்வி : குற்றவாளிகளை முகத்தை மூடி அழைத்துச் செல்வதன் நோக்கம் அவர்கள் தொடர்ந்து குற்றங்களைத் தைரியமாய் செய்ய வசதி செய்து கொடுப்பது தானே? ந.அருட்கோ, சோளிங்கர் –

பதில் : நல்ல கேள்வி. முகமூடிகள் அணிவதை ஒழிக்கக் காவல்துறை முன்வர வேண்டும். முகமூடித் திருடர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்!

கேள்வி : நமது நாட்டில் எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதானே பிராமண ஜாதி? இரா.செல்வம், வீரமங்கலம் –

பதில் : பிராமணர் _ ஜாதியில்லை, வர்ணம். வர்ணம் (சதுர்வர்ணம்) வேறு; ஜாதி வேறு _ காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் தெய்வத்தின் குரல் நூலில் உள்ளபடி. (அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா _ ஜாதி)

கேள்வி : தேசியக் கட்சிகள் எதுவும் இனி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாதென்பதற்கு எண்ணற்ற காரணங்கள் இருப்பினும், அதில் முக்கியமாய் – முதன்மையாய் தாங்கள் நினைக்கும் காரணம் எது? பா. மணிகண்டன், காரைக்குடி –

பதில் : மொழி, வழி, விழி அவர்களுடையது வேறு. திராவிடர் கட்சிகளுக்கு வேறு _ அடிப்படைக் காரணம் இது!

கேள்வி : இன்றைய சூழலில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சனையில், அய்.நா.வை நம்பலாம்; அமெரிக்காவைக் கூட நம்பலாம்!  தமிழர் விரோத இந்தியாவை எப்படி நம்ப முடியும்? சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில் : அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் நண்பரே, இந்தியாவும் டெசோ மற்றும் தமிழ்நாட்டின் எழுச்சியால் காங்கிரஸ் சிந்தனையில் ஒரு மாற்றம் புகுந்துள்ளது என்பதை விரைவில் தெரிந்துகொள்ளலாம்!

கேள்வி : அந்தி சூரியனையும் சந்தி சூரியனையும் பார்ப்பது பாவமாமே- – சொல்கிறார் திருப்பதி அய்யங்கார் தொலைக்காட்சியில்….. இல.சங்கத் தமிழன், செங்கை

பதில் : பலே பலே சூரியனையே பார்ப்பது பாவம் என்ற அம்மையார் ஆட்சிக்கு ஆதாரம் தேடுகிறதுபோலும் இது! முட்டாள்தனத்திற்கு முதற்பரிசு தரலாமே!

கேள்வி : பாலியல் வன்முறை தொடர்பான தீர்வுகளுள் ஒன்றாக ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்பது சரியா? – மா.அகிலன், கரூர்

பதில் : ஆத்திரத்தின் விளைவு; இது நம் நாட்டில் தவறாகவே கையாளப்படும் அபாயம் ஏராளம் உண்டு.  —-

கேள்வி : வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை முன் நிறுத்துவதால் பா.ஜ.வுக்கும் ராகுல்காந்தியை முன் நிறுத்துவதால் காங்கிரசுக்கும் எதிர்பார்த்த பலன் கிடைக்குமா?
பி.அன்பரசி, திருவாரூர்

பதில் : இப்போது கருத்துச் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பதில் கூறுவதே பொருத்தம். தேர்தல் வெற்றிக்குப் பல காரண காரியங்கள் உண்டே!

கேள்வி : தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமா? ந.முரளி, நாகர்கோவில்—-

பதில் : சாத்தியமே இல்லை. ஆனால் தேவை. இந்தியா முழுவதும் கொள்கைப்பூர்வமான முடிவாக எடுத்தால் பெரும் அளவு வெற்றி (முழு அளவு முடியாது) பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *