நூலின் பெயர்: சாதி முறையைத் தகர்க்க இயலுமா?
ஆசிரியர்: டி.ஞானையா
வெளியீடு: விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை–41. செல்பேசி: 9444265152
பக்கங்கள் : 184 விலை ரூ. 150/- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்; 92 வயதிலும் ஓயாது உழைப்பவர்; 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவுடைமைக் கொள்கையைக் கடைப் பிடித்து வருபவர் டி.ஞானையா.இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றி முக்கால் நூற்றாண்டைக் கடந்த நிலையில், அதுகுறித்த ஆழ்ந்த சிந்தனைகளைத் தயங்காது வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் வெளிவந்த இவரது நூல்களில் மிக முக்கியமான நூலாக இந்நூல் கருதப்படுகிறது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகள் பார்க்கத் தவறிய பார்வைகளை இந்நூல் முன்வைத்துள்ளது.அவற்றிலிருந்து சில பக்கங்கள் இங்கே…
இந்திய தலித்துகளால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் சமூகப் பொருளாதார அம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காடிலாக் காரில் பயணம் செய்யக்கூடிய கறுப்பினக் கோடீசுவரர்களைக் கொண்ட நீக்ரோ குடியினர் அதிகரித்திருப்பதை நீக்ரோ இதழான எபோனி பெருமையுடன் சுட்டிக் காட்டுகிறது. உயர்குடிப் பெண்கள் பங்கேற்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளை அனுப்புகின்றனர். வெள்ளையர்களைப் போலவே தங்கள் இனத்திலுள்ள அடித்தட்டு மக்களை வெறுக்கின்றனர். கறுப்பின முதலாளிகள் குறித்துக் கறுப்பின எழுத்தாளரான பிரைசர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். புதிய நீக்ரோ மத்திய தர வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது எனவும் அது வெள்ளையர்களின் மத்திய தர வர்க்கத்தைப் போலவே செயல்படுவதாகவும் எபோனி குறிப்பிடுகிறது. அமெரிக்க அதிபருக்கு அடுத்த வலுவான அரசியல் நிலையில வெளியுறவு அமைச்சர்களாகக் காண்டலிசா ரைசம், அவருக்கு முன் ஜெனரல் காலின் பாவெலும் இருந்ததை நாம் கண்டோம். இறுதியில் ஆப்ரிக்கக் கென்ய வம்சாவழித் தோன்றல் ஒபாமா இரண்டாம் முறையாக அதிபராகியுள்ளார். வரும் காலங்களில் மேலும் பல ரைஸ், பாவல் மற்றும் ஒபாமாக்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். சுய மரியாதையுள்ள எந்தவொரு நீக்ரோவும் சாதாரண சிகரெட்டைப் புகைக்க மாட்டார் என எபோனி (ணிதீஷீஸீஹ்) சுட்டிக்காட்டுகிறது. உண்மையில் இது ஒரு அர்த்தமுள்ள விமர்சனமாகும்.
**
மார்க்சிய இயக்கங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இயங்கிய டு போய்ஸ் எதிர்கொண்ட இனப் பிரச்சனை சாதிப் பிரச்சனைபோல வரலாற்றுப்பூர்வமானதும் சிக்கலானதுமாக இருக்கவில்லை. இனப் பிரச்சனையைக் காண்பதும் புரிந்து கொள்வதும் ஆராய்வதும் தீர்வுக்கான வழிவகுப்பதும் சுலபம். அதனால் டு போய்ஸ் மார்க்சியத்தோடு சமாதானமாகப் போக முடிந்தது. விடுதலைக்கான கறுப்பர் போராட்டம் வர்க்கப் போராட்டத்தோடு சுலபமாக இணைய முடியும். வெள்ளை இனத்தின் கம்யூனிஸ்டுகள் தமது இன அடையாளத்தை வீசி எறிந்து விடுவது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் இந்தியாவிலோ மார்க்சியர்களும் கம்யூனிஸ்டுகளும் தமது சாதி சமூகத்தில் – ரத்த உறவுகளால் பிணையப்பட்ட வேர்விட்டுப் படர்ந்த மரபுகளில் வாழ்ந்தனர். அவர்கள் ஒரே சாதியைச் சார்ந்து அந்த சாதியின் அனைத்து சமூக பழக்கங்களையும் கடைப்பிடித்தனர். மரபுகள் சுலபமாக அழிவதில்லை. சாதிய மனோபாவம் உணர்வின் எல்லைக்கு அப்பாலும் இயங்குகிறது. உணர்வுக்கு அப்பாலானதாகவும் இருக்கிறது. இந்து மதம் முன் வைக்கும் இந்து இறை இயல் மற்றும் இந்து பண்பாடு மற்றும் நாகரிகம் போன்றவற்றுக்கு இதுவே அடிப்படை.
**
அம்பேத்கர் மார்க்சியத்தை விரிவாகக் கற்றவர், அதனை ஆதரித்தவர், ஆனாலும் தனியானதொரு தொழிலாளர் கட்சி ஒன்றை அவர் தொடங்கினார். சாதிப் பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் இணைந்து வர வேண்டுமென விரும்பினார். எல்லா விதமான சமூக மாற்றங்களுக்கும் வர்க்கப் போராட்டம் மட்டுமே கருவியாகும் என்ற நிலையைக் கம்யூனிஸ்டுகள் எடுத்த காரணத்தால், தொழிலாளி வர்க்கப் பிரச்சனைகள் சிலவற்றில் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து நின்றாலும் ஒரு தவிர்க்கவியலாத பிளவு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை வர்க்க முரண்பாடுதான் அடிப்படையானது. பிற அனைத்துச் சமூக முரண்பாடுகள் மீதும் அது தலையிடுகிறது. தனது செல்வாக்கைச் செலுத்துகிறது. அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல், உயர்சாதி மற்றும் உயர் வர்க்கங்களால் தலைமை தாங்கப்படும் பல வர்க்க அய்க்கிய முன்னணியைக் கட்டுவதற்கு உந்தித் தள்ளியது. இந்த அடிப்படை நிலையை ஒட்டியே பிற அனைத்துப் பிரச்சனைகளும் அணுகப்பட்டன. இதன் காரணமாக, அம்பேத்கரிடமிருந்து மட்டுமல்லாது பெரியார் மற்றும் ஜோதிபா பூலேவின் சத்திய சோதக் மண்டல் ஆகியவற்றிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகள் விலகி நிற்க நேர்ந்தது. அவர்கள் ஏகாதிபத்திய ஆதாரங்கள், தேச விரோதிகள் எனப் பலவாறாக தூற்றப்பட்டனர். அம்பேத்கர் கம்யூனிஸ்ட்டுகளுடனும் மார்க்சியர்களுடனும் மிகவும் கசப்படைந்தார். மார்க்சியத்தை வறட்டுத்தனமாகவும் இயந்திரகதியாகவும் பயன்படுத்தியதன் விளைவாகப் பிரிவு விரிசலாகிப் போனது.
**
இன அடிப்படையிலான இந்து தேசியம் அல்லது இந்துத்துவா முன்னோடிகளான திலகர், மாளவியா-, ஸ்ரதானந், லஜபதிராய் போன்றவர்கள் மூலம் சாதி மேலாண்மை இணைக்கப்பட்டது. இந்த உயர் சாதியினர் தம்மை ஆரியர்கள் எனப் பெருமையோடு அழைத்துக் கொண்டனர். இந்து மதத்தின் அதாவது இந்திய நாகரிகத்தின் மைய அடித்தளமாக வேதங்களும் சமஸ்கிருதப் புராதன இலக்கியங்களும் அடையாளப்படுத்தப்பட்டன. இதன் விளைவுதான் இந்திய தேசிய காங்கிரஸ் (1885), அதன் உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள், நிர்வாகிகள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர் என பலரும் உயர்சாதிக்காரர்களாகப் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தனர். இதில் பெரும்பாலோர் நில உடைமையாளராகவும் இருந்தனர். இந்திய தேச வாதம் என்பதைக் கட்டியவர்களில் மிகப் பெரும்பான்மையோர் இப்படித்தான் இருந்தனர்.
**
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் சூத்திர ஞானிகள், கவிஞர்கள் மற்றும் தத்துவ அறிஞர்களான குருநானக், கபீர், சொக்கமேளா, துக்காராம், துளசிதாசர் போன்றோர் தோன்றினர். அவர்களில் பெரும்பாலோர் சனாதன தருமத்தையும் வருணாசிரம தர்மத்தையும் எதிர்த்து ஒற்றைக் கடவுள் கோட்பாட்டைப் போதித்தனர். அவர்கள் பிராமணியத்தைப் புறம தள்ளி சமத்துவத்தையும், பொதுவான அன்பையும் வலியுறுத்தினர். தமிழ்ச் சித்தர்கள் தமது புகழ்பெற்ற பாடல்களின் மூலம் சமுதாயத்தைப் பற்றிய உண்மை நிலையை வெளிக்கொணரும் பகுத்தறிவுக் கருத்துகளை முன் வைத்தனர். அத்தகைய மூலதத்துவப் போக்குகள் பாடநூல்களிலிருந்து திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டன. சாருவாகர்களுக்கும் அவர்களுடைய உலகாயதக் கருத்துகளுக்கும் எங்கும் இடமில்லை. இடைக்காலத்தைச் சேர்ந்த சூத்திரத் துறவிகள் பற்றி பாடத் திட்டங்களில் எதுவுமில்லை. நமது குழந்தைகள் பிராமணியக் கண்ணோட்டத்திலான அறிவை மட்டுமே பெறுகின்றனர்.
அதனை மறுத்த சூத்திரர்கள் மற்றும் தலித்துகளின் இலக்கியங்களிலிருந்து எதனையும் பெறவில்லை.
**
அம்பேத்கரின் இந்துமதம் குறித்த புதிர்களும், இராமர், கிருஷ்ணரைப் பற்றிய புதிர்களும் என்ற நூல் அனைத்து மாநிலப் பாடநூல்களிலும் ஏன் இடம் பெறவில்லை? இராமாயணத்தைப் பற்றிய பெரியாரின் விமர்சனமும், அறிவியல் மற்றும் பகுத்தறிவு குறித்த சிங்காரவேலரின் நூல்களும் ஏன் மாணவர்களிடம் கொண்டு செல்லப்படவில்லை? அம்பேத்கர், பூலே, சாகுமகராஜ் மற்றும் பெரியாரை தேசியத் தலைவர்களாக உருவாக்கும் உணர்வு பூர்வமான மாற்றைக் கட்டமைக்க உ.பி.-யில் மாயாவதி முயற்சித்தார். அம்பேத்கர் மற்றும் பிற தலித், சூத்திரத் தலைவர்களுக்குப் பெரும் நினைவுச் சின்னங்களை அவர் எழுப்பினார். ஆகப் பெரும்பகுதியான மக்களாக உள்ள தலித்துகளாலும், சூத்திரர்களாலும் அவர்கள் மரியாதை செய்யப்படவில்லையா? லக்னோவில் பெரியாரின் சிலையை நிறுவியது வட இந்தியாவிலுள்ள மேல்தட்டினரின் கோபத்துக்கு ஆளானது ஏன்? இராமாயணம், மகாபாரதம், மனுஸ்மிருதி குறித்த அவருடைய கருத்தை அடித்தட்டு சாதியினரும் தெரிந்து கொள்ளட்டும், 9 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் திரேதாயுகத்தில் இராமன் வாழ்ந்ததாக வால்மீகி இராமாயணம் குறிப்பிடுவதைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அயோத்தியில் அவர் பிறந்த இடத்தை அடையாளம் காட்ட முடியுமா? 9 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தியிலோ அல்லது உலகில் வேறு எங்குமோ மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்றும் அவர்களுக்குத் தெரிய வேண்டும். தசரத மன்னனுக்கு 64,000 மனைவிகளும் கிருஷ்ணபிரானுக்கு 1,16,108 மனைவிகளும் ஒரே சமயத்தில் இருந்ததாக மாணவர்களிடம் கூற வேண்டும். இது ஒருவருடைய நம்பிக்கை சார்ந்ததாக இருக்கலாம். இதனை மாணவர்களிடம் கூறுவதற்கு அவர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்?
கிருஷ்ணபிரானுக்கு எத்தனையோ மனைவிகள் இருந்த போதிலும் அவர் வேறொருவருடைய மனைவியான ராதையுடன்தான் குடும்பம் நடத்தினார். அதை மறைப்பது ஏன்? உங்களுடைய சொந்தப் புனித நூல்கள் கூறும் விஷயத்தில் எதற்காக வெட்கப்பட வேண்டும்? ஸ்
இன்றைய தினம் பிராமணர்களே மிகத் தெளிவானவர்களாகவும், மிகவும் சகிப்புத் தன்மை கொண்டவர்களாகவும் உள்ளனர் என்பதையே நமது அனுபவங்கள் காட்டுகின்றன.
பிராமணர்களிடம் சாதிப் பஞ்சாயத்துகளோ, கருணைக் கொலைகளோ ஏதும் நடைபெறுவதில்லை. பிராமணிய மேலாண்மையின் கோட்டையாகத் திகழும் தமிழகத்தில் பிராமணியச் சமூகமே தமது சமூகப் பழக்க வழக்கங்களை வேகமாக மாற்றி வருகிறது. விதவைப் பெண்களுக்கு மொட்டையடித்துக் காவி அல்லது வெள்ளை உடை உடுத்தும் வழக்கத்தைக் கடந்த அய்ம்பதாண்டுக் காலத்தில் அவர்கள் அமைதியாகக் கைவிட்டுவிட்டனர். பிராமணப் பெண்கள் மடிசார் புடவை உடுத்துவதைக் கைவிட்டு விட்டனர்.
குடுமி வளர்ப்பதையும், நெற்றியில் நாமமிடுவதையும் ஆண்கள் விட்டுவிட்டனர். சூத்திரர்களைக் காட்டிலும் தமிழகப் பிராமணர்களிடையேதான் பெருமளவில் சாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. சூத்திரர்களைப்போல பிராமணியக் குடும்பங்களில் கலப்புத் திருமணத்தால் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது குறித்த குற்றச்சாட்டு எதுவும் வருவதில்லை. சூத்திரர்களிடத்தில் இன்னும் சொல்லப்போனால் தலித்துகளிடம் சாதியப் பிடிமானமும், வைதிகச் செயல்பாடுகளும் வலுவாகவும், உறுதியாகவும் உள்ளன. பிராமணர்கள் கடற்பயணம் மேற்கொள்வதைச் சாத்திரங்கள் தடை செய்திருந்தன. ஆனால் அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. தற்பொழுது உலகம் முழுவதும் குறிப்பாக உயர் வேலை வாய்ப்புகளில் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அமெரிக்காவில் சிலிகான் பள்ளத்தாக்கின் தெருக்களில் உங்களைக் கடந்து செல்லும் மூவரில் ஒருவர் இந்தியப் பிராமணராக இருப்பார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்கள் ஆசிரியர்களாக உள்ளனர்.