அன்னையார் அவர்கள் உடல்நிலை தளர்ந்த நிலையிலும், அடிக்கடி சென்னை பொதுமருத்துவமனையில் தனியே உள்ள (26ஆம் எண் என்று நினைவு) ஒரு தீவிர, சிகிச்சைப்பிரிவு அறை -_ டாக்டர் எஸ்.செந்தில்நாதன் அவர்களது குழு டாக்டர்களின் மேற்பார்வையில், அவரது யூனிட்டுக்காகவே ஒதுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது, பணியாற்றுவது, சுற்றுப்பயணம் செய்வது முதல் எல்லாவற்றிலும் குன்றாத ஆர்வத்தோடு கடமையாற்றி வந்தார்.
எனது பணி, அவருக்கு உதவுவதும், அவர் தலைவர் என்ற முறையில் இடும் கட்டளைகளைச் செய்து முடிப்பதும்தான்!
தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் அவரைத் தலைவராகக் கொண்டு எப்படி அவர்தம் அசைவைக்கூடப் புரிந்து செயல்பட்டுப் பணியாற்றினோமோ, அதேபோல் _ முடிந்தால் அதற்கு மேலேகூட _ அம்மாவின் தலைமையின்கீழ் பணிபுரிந்து கடமையாற்றிட வேண்டும் என்ற கட்டுப்பாடு காக்கும் ஓர் எளிய தொண்டனாகவே என்னை நான் பக்குவப்படுத்திக்கொண்டேன்.
ஒருநாள் அன்னையார் என்னை அழைத்து, என்ன நீ முன்பெல்லாம் கலகலப்பாக, என்னிடத்தில் உரிமை எடுத்துக்கொண்டு, பாசம் பொங்க பழகும் மகனாக இருப்பாயே இப்போது ஏதோ என்னைவிட்டு தள்ளி தொலைதூரம் சென்றவனைப்போல நடந்து கொள்கிறாயே என்று கேட்டார்; இந்தக் கேள்வி எனக்கு ஏதோ திடீர்த் தாக்குதல்போல இருந்தது.
உடனே நான், அம்மா அப்படி ஒன்றுமில்லை. என்றும் நீங்கள் என்னைப் பெறாது பெற்ற தாய்தான், நான் உங்களின் பாசம் பொங்கும் பிள்ளைதான். அதில் எள்மூக்கு முனை அளவில்கூட குறைவில்லை; முன்பு நீங்கள் இயக்கத்தின் தலைவர் அல்ல; என்னைப் பொறுத்தவரை ஒரு தாய் _ பாசத்தைப் பொழிவிக்கும் தாய்தான். ஆனால் நம் அய்யா அவர்களின் மறைவுக்குப் பின் நீங்கள் இயக்கத்தின் தலைவர்; பிறகே என் அம்மா. நான் உங்களின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஒரு பொதுச்செயலாளர் என்ற தொண்டன் அல்லவா? அந்தக் கட்டுப்பாடு காக்கும் பிள்ளைதான்! எனவேதான் உங்களைத் தலைவராகவே பார்த்து, செல்லப்பிள்ளைபோல் நடந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறேன்; என்னைப் பொறுத்தவரையில் அது என் ஆழ்மனத்தின் ஆணை போலும். அதுதான் அம்மா நியாயம். என்றும் உங்கள் கட்டளைகளைச் செயல்படுத்தும் தொண்டன், பணியாளன், பிறகு உங்கள் பிள்ளை அவ்வளவுதான் என்றேன். அம்மாவின் கண்களிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர்; அதைக்கண்டு நீருற்றுப்போல பொங்கி வழிந்தது எனது கண்ணீரும்!
அவர்கள் அனுமதியோடுதான் ஓரிரு நாள்கள் வெளியூர் நிகழ்ச்சிகளுக்குச் சென்றேன். நான் சென்னையில் இல்லாதபோது மருத்துவமனையில் (ஸ்பெஷல் வார்டில்) இருந்த அம்மா அவர்கள், விடுதலை நிர்வாகி நண்பர் நாகரசம்பட்டி சம்பந்தம் அவர்களை அழைத்து, திரு.கா.திரவியம் அய்.ஏ.எஸ். (அவர்கள் அப்போது தமிழக அரசின் கல்வித்துறை செயலாளர்) அவரை மாலையே வந்து என்னைப் பார்க்கும்படி நான் கேட்டுக்கொண்டதாகச் சொல்லி அழைத்துவாருங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி அவரும் வந்து அம்மாவை மருத்துவமனை ஸ்பெஷல் வார்டு அறையில் சந்தித்தார். அவருடன் பேச முனைந்த அன்னையார், திரு.சம்பந்தம் அவர்களை நீங்கள் சற்று வெளியேயிருங்கள் என்று கூறி அறைக்கு வெளியே அனுப்பிவிட்டார். சுமார் 30 நிமிடங்கள் பேசியபின் அவர் விடைபெற்றுச் சென்றார்.
சில ஆலோசனைகளைக் கேட்கவே அவரை அழைத்திருக்கக்கூடும். நான் அறிய விரும்பவில்லை. அடுத்த நாள் காலையில் கடலூரிலிருந்து கழக நிகழ்ச்சி முடித்துத் திரும்பிய நிலையில் அம்மாவைப் பார்த்து உடல்நிலை பற்றிக் கேட்டபோது அவர்களே என்னிடத்தில் திரு.திரவியம் அய்.ஏ.எஸ். அவர்களை அவசரமாக வரச்சொல்லி சில ஆலோசனைகளைக் கேட்டேன் என்றார். அப்படியா சரிங்க. அதற்கு மேல் அவரிடம் எதுவும் கேட்கவே இல்லை நான்!
இது அய்யாவிடம் பணியாற்றும் என்னைப் போன்றவர்களுக்குரிய நடைமுறைதான். அவர்களாக ஏதாவது சொன்னால்தான் அதை அறிந்துகொள்ளுவோமே தவிர, நாங்களாக கேட்கவோ, தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது அவர்கள் உரையாடும்போது எங்கள் வழமையாக இருக்காது! எனக்கு யார் வந்து அய்யாவைப் பார்க்க வந்தாலும் _ குறிப்பாக முக்கியஸ்தர்கள் குடும்ப விஷயம் பேசும் கழகத்தவர், அய்யாவின் உறவுக்காரர்கள் எவர் வந்தாலும் நான் உடனே வெளியே வந்து நின்று கொள்வேன். அவர்களாகவே கூப்பிட்டால்தான் அங்கே செல்லும் முறையைக் கடைப்பிடிப்பேன். தனியாக ஏதாவது அய்யாவிடம் பேச வருவார்கள்; நாம் ஏன் அவர்களின் தனிமையை -_ உரையாடலைக் கெடுப்பானேன். நமக்கு உரிமையும் கிடையாது என்று எண்ணுபவன். ஆனால், நண்பர் சம்பந்தம் அம்மா வெளியே இருங்கள் என்று கூறியதை அவர் ஏதோ பெரிய அவமானமே தனக்கு ஏற்பட்டுவிட்டதுபோல உடன் இருக்கும் நண்பர்களிடம் (ஏன் என்னிடம்கூட) சலித்துக்கொண்டு, அம்மாமேல் சற்று கோபத்துடன் ஒரு முணுகல் பிரச்சாரத்தைக் (Whispering Campaign)கட்டவிழ்த்துவிட்டார்.
அம்மா அடுத்து என்னை அழைத்து அன்றைய பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும், தமிழக சட்டமன்றச் செயலாளராகவும் இருந்த திரு.சி.டி.நடராசன் அவர்களை அழைத்து வந்து தனது சொத்துக்களை தனி ஒரு அறக்கட்டளை ஆக்கிட, சட்டதிட்டங்களையெல்லாம் அவசரமாக தயாரித்துத் தர வேண்டும் என்றும், அந்த உயில் மருத்துவமனையிலிருந்தே எழுதினார்கள். அந்த உயிலின் ஒரு பகுதியை அப்படியே தருகிறேன். பின்பு தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருமோ என்று அஞ்சி அந்த உயிலை அவசரமாக எழுதி, அந்த அறக்கட்டளையை செய்து பாதுகாத்து அறக்கட்டளையாக பதிவு செய்யும் பொறுப்பை _ அவருக்கு ஏதாவது நிகழ்ந்துவிட்டால் நான் செய்ய வேண்டும் என்று (Executed) என்றபடி எழுதிடும்படிச் செய்து பதிவாளர் முன்பு கையொப்பம் இட்டார்! அந்த பகுதியை அப்படியே தருகிறேன்.
1. அரசு சென்னை பொது மருத்துவ மனையின் சூப்ரெண்டும் தந்தை பெரியாரின் மருத்துவருமான டாக்டர் கே. இராமச்சந்திரா அவர்கள்
2. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள்
3. சி.டி.நடராஜன் அவர்கள்
4. வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள்
5. மேட்டூர் டி.கே.இராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் சாட்சியாக கையொப்பமிட்டுள்ளனர்.
(அந்தப் பகுதியை இங்கே தந்துள்ளேன்).
ஆகியோர்களை மருத்துவமனைக்கே வரும்படிச் செய்து, பதிவாளரை அழைத்துவந்து மருத்துவமனையிலேயே பதிவுசெய்து விட்டார்கள்_ 1974 செப்டம்பரிலேயே தனி அறக்கட்டளைகளை பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக்கழகம் என்று சட்டதிட்ட விதிகளுடன் பதிவு செய்திடும் அதிகாரம் பொறுப்பை எனக்களித்து செய்தார்கள். அதன்பின் நல்வாய்ப்பாக எனக்கு அப்பணி செய்ய நேரிடவில்லை. அம்மா அவர்களே உடல்நலம் தேறி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின் சென்னையிலே பதிவாளர் முன்னிலையில் சென்று இந்த அறக்கட்டளையைப் பதிவு செய்தார்கள். அதன்பின் என்னைத் தனியாக அழைத்துப் பேசினார். அது என்ன?
நினைவுகள் நீளும்…