இராமசாமி போட்ட நாடகம்
– மதுமதி
அடிக்கடி கோவிலுக்குச் செல்லுதல்
பஜனைப் பாக்களை
வாய் நிறையச் சொல்லுதல்
என நாகம்மை மாறியிருந்தார்;
பக்தியதனில் ஊறியிருந்தார்;
தன் வழியில் நாகம்மை நடப்பாள்;
தான் சொல்வதைக் கேட்க
காத்துக் கிடப்பாள்;
என நினைத்த இராமசாமிக்கு
நாகம்மையின் பக்தி பைத்தியமும்
பஜனை வைத்தியமும்
சுத்தமாய்ப் பிடிக்காமல் போனது;
நாகம்மைக்கு அதுவே
இரண்டு கண்கள் ஆனது;
நாகம்மையைப் பார்க்க
தாயம்மையைப் போலவே
இராமசாமிக்கு இருந்தது;
இதனால்
இருவருக்குமிடையே
சிறு இடைவெளி பிறந்தது;
கணவனை
மந்திரமாக உச்சரிக்காமல்
இறைவனை மந்திரமாக உச்சரிப்பது
இராமசாமிக்குப் பிடிக்கவில்லை;
கணவனுக்குப் பிறகுதான்
இறைவன் என
நாகம்மையும் நடிக்கவில்லை;
கணவனைக் காணும்
வேளைகளில் கூட
கடவுளைக் காணும்
ஆர்வம் கொண்ட நாகம்மையை மாற்றவொரு
திட்டத்தைப் போட்டார்:
நண்பர்களின் உதவியைக் கேட்டார்;
பக்தியென்பது
ஒரு பெண்ணுக்கு
பாதுகாப்பைக்கூட
தர முடியாதது என உணர்த்தவும்
கணவனை விடவும்
இறைவன் மேலானவன் இல்லை என உரைக்கவும்
சிறு நாடகத்தைத் தயாரித்ததோடு மட்டுமல்லாமல்
இயக்கவும் செய்தார்..
இந்நாடகம்
நாகம்மைக்குள் ஏற்படுத்துகிற தாக்கமே
இத்திட்டத்தின் நோக்கம்..
எனக் கருதிய இராமசாமி
நாடகத்தை ஆரம்பித்தார்..
வழக்கம்போல் நாகம்மை
தனியாக கோவிலுக்குச் சென்றார்;
எதிரில் நால்வரைக் கண்டதும்
பயந்து நின்றார்;
நால்வர் கூட்டம்
அவரைச் சுற்றியது;
நாகம்மையின் அடிவயிற்றில் பயம் பற்றியது;
தனிமையில் மாட்டிக்கொண்டோமே
என்ன செய்வது என
பயத்தில் நடுங்கினார்;
உள்ளுக்குள்ளேயே ஒடுங்கினார்;
இது நாடகம் என்பது
நாகம்மைக்குத் தெரியாது;
சுற்றியிருப்பவர்களுக்குப்
பார்த்தால் புரியாது;
கயவர்களிடம் சிக்கிக் கொண்டோம்
என்ன செய்வது..? யோசித்த நாகம்மை,
பெருமாளே என்றார்;
திருமாலே என்றார்;
ஒரு ஆளும் வரவில்லை;
தப்பிக்கும் வரத்தைத்
தரவில்லை;
அங்கே இராம சாமியைத் தவிர
வேறு எந்த சாமியும் வரவில்லை..
சமயம் பாராமல்
சமயம் பார்த்து வந்த
இராமசாமியைக் கண்ட
நாகம்மை
நிம்மதி அடைந்தார்;
தனியாக கோவில் வந்தால்
பாதுகாப்பில்லை,
ஆபத்தெனில் இறைவன்
எழுந்தருள மாட்டான் என்பதை நாகம்மை
உணர்ந்தார்.