வினய பிடகம் என்கிற பவுத்த நூலில் பவுத்தர்களை உலகாயதம் கற்பதை கவுதம புத்தரே தடுத்தார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. வேதமறுப்புத் தத்துவங்கள் கடவுள் மறுப்பைக் கொண்டிருந்தாலும் ஒன்றையொன்று எதிர்த்து வந்தன என்பதை விளங்கிக் கொள்ளலாம். சமணம் கூறியதை பவுத்தம் மறுத்தது. பவுத்தம் கூறியதை சமணம் மறுத்தது. இரண்டும் சேர்ந்து உலகாயதத்தை எதிர்த்தன. அவரவர் மனைவி அவரவர்க்கு உயர்வு என்பதைப் போல, அவரவர் கொள்கையை உயர்த்திப் பிடிப்பதற்காக, அதிகம் பேர் ஏற்குமாறு செய்வதற்காக இத்தகைய மோதல் போக்கைக் கடைப்பிடித்தனர்.
இதனால் பொது எதிரியான வேதமோதிகளுக்கு இடம் கிடைத்துவிட்டது. கடவுள் மறுப்பாளர்களைத் தனித்தனியாகவும் ஒன்று சேர்ந்தும் எதிர்க்க வசதியாகிவிட்டது. விளைவைத்தான் அனுபவிக்கிறோம்.
புத்தகோசர் என்பார் உலகாயதத்தை விதண்டாவாத சத்தா என வருணித்துள்ளார். சத்தா என்றால் சாத்திரம் எனப் பொருள். விதண்டா என்றால் சாமர்த்தியமான விவாதம் என்றுதான் பொருள். எனவே விதண்டாவாதம் என்பது வேறுபாடு காணமுடியாத ஒரே பொருளைத்தரும் சொற்களே என்பது நியாய தர்சன தத்துவவாதியான ஜெயந்தரின் கூற்றாகும். உலகாயதத்தைப் பவுத்தர்கள் வெறுத்தனர் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாகும்.
பவுத்தமதக் காழ்ப்பு எப்படிப்பட்டவை என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு கூடக் கூறலாம். காக்கைகளின் எலும்பு வெள்ளையாக இருப்பதால் காக்கையின் நிறம் வெள்ளை. நாரைகளின் குதியின் நிறம் சிவப்பு என்பதால் நாரைகள் சிவப்பு நிறம் கொண்டவை எனும் பவுத்தக் கருத்து தாஸ்குப்தா எழுதிய கி பிமிஷிஜிளிஸிசீ ளிதி மிழிஞிமிகிழி றிபிமிலிளிஷிளிறிபிசீ என்கிற கேம்பிரிட்ஜ் பதிப்பித்த நூலில் கிடைக்கும் தரவு தெரிவிக்கிறது.
சுக்ரநீதிசாரம் எனும் நூல் நாத்திகர்களை வலிமையானவர்கள் எனக் கூறுகிறது. உடல் வலிமையன்று; அறிவு வலிமையைக் குறிப்பிடுகிறது. விளக்கம் கூறும்போது, இவர்கள் கடவுளையும் வேதத்தையும் மறுத்தவர்கள். இவர்கள் நேர்வாத ஆக்கப்பூர்வத் தன்மை கொண்டவர்கள். சர்வம் ஸ்வாயாபிகம் மதம் என்பதைச் சார்ந்தவர்கள். அதாவது எல்லாமே இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும், பகுத்தறிவு அல்லது தர்க்கரீதியான விவாதத்திற்கு ஆக்கப்பூர்வ அணுகுமுறையைக் காட்டியவர்கள். தம் கொள்கைகளை இத்தகைய அணுகுமுறையால் கைக்கொண்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறது.
உலகாயதம் பற்றிக் குறிப்பிடும்போது சாணக்யர் தம் அர்த்தசாத்திரத்தில், உலகாயதத்தை தர்க்க விஞ்ஞானம் அதாவது அன்விக்சிகி எனக் குறிப்பிடுகிறார்.
உலகாயதத்தை ஹேதுசாத்திரம் என்று மனுநூல் குறிப்பிடுகிறது. இந்தக் கொள்கை கொண்டவர்கள் ஹைதுகர்கள் (தர்க்க சாஸ்திரிகள்) என்று மனுநூல் கூறுகிறது.
வேத, கடவுள் மறுப்புவாதிகளான சமணர்கள், பவுத்தர்கள் ஆகியவர்கள் பற்றிப் பேசும் பாகவதம் அவர்களுடன் ஹைதுகர்களையும் சேர்த்துப் பேசிக் கண்டனம் செய்கிறது.
உலகாயதத்தை விவரிக்கும் பிரகஸ்பதியத்தைத் தம் தந்தை கற்றபோது பாஞ்சாலியும் அதனைக் கேட்டுக் கொண்டிருந்ததைத் தன் அய்ந்து கணவர்களில் மூத்தவனாகிய யுதிஷ்டிரனிடம்(தர்மன்) கூறியதாக பாரதம் வனபர்வத்தில் எழுதப்பட்டுள்ளது.
புத்த மதத்தைப் பற்றி விரிவாக ஆய்ந்து மூன்று பெரும் நூல்களை எழுதிய ரைஸ் டேவிட்ஸ் (ஸிபிசீஷி ஞிகிக்ஷிமிஞிஷி) என்பார் எழுதியுள்ள நூலில் நாகசேனன் என்பானின் உலகாயத அறிவுபற்றிய சிறப்புபற்றி மிலிந்தம் என்ற நூல் குறிப்பிடுவதாக எழுதியுள்ளார். எனவே உலகாயதர்களின் (கடவுள் மறுப்பாளர்களின்) அறிவுக்கூர்மை சிறப்புக்குரியதாக அந்தக் காலத்திலும் கருதப்பட்டு வந்ததை அறிந்து கொள்ளலாம்.
பாணர் எழுதிய ஹர்ஷ சரிதத்தில் துறவியர்களின் பட்டியல் எழுதப்பட்டுள்ளது. அதில், பவுத்தர், ஜைனர், கபிலரின் சாங்கியவாதிகள், உலகாயதர்கள் முதலியவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
நியாய மஞ்சரி எனும் நூல் ஜெயந்தரால் எழுதப்பட்டது. இதில் உலகாயதக் கருத்துகள் எதிரிகளின் கருத்துகளாகக் காட்டப்படுகின்றன. இக்கருத்துகளை மறுத்து பிரம்மஜல சத்தா எனும் நூல் கூறுகிறது.
சாந்தோக்ய உபநிஷத், மைத்ரேயினி உபநிஷத் ஆகியவை உலகாயதக் கருத்துகளை, அசுரர்களின் கருத்துகள் என அலட்சியப்படுத்தியுள்ளன. பார்ப்பனர்களுக்கும் வேதங்களுக்கும் கடவுள்களுக்கும் அவற்றைத் தூக்கிப் பிடிக்கும் இதிகாச சாத்திரங்களுக்கும் எதிர்ப்பானவர்களை அசுரர்கள் எனக்கூறி அழிக்கும் பண்பு அவர்களுக்குண்டு என்பதை அகிலமே அறியும். அசுரக் கருத்தாக இருந்தாலும் அற்பக் கருத்துகளாக இல்லை என்பதை மறுக்க முடியாத அறிவுச் சூன்யங்கள் இவர்கள்!
இதே பாதையில் பயணிக்கும் மற்றொரு உளறல் கீதை என்பது. அதில் உலகாயதம் பற்றி அபரஸ்பர சம்பூதம் இம்அன்யத் காம ஹைதுகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர் ஆண்பெண் சேர்க்கையால் உருவானவர்கள் எனும் கொள்கை உள்ளவர்கள் என்று கீதை குறிப்பிடுகிறது. மேலும், கடவுளையும் மறு உலகத்தையும் மறுப்பவர்கள் எனவும் கூறி உலகாயதத்தைப் பற்றி விளக்குகிறது.
ஆரம்பத்தில் முழு நாத்திகவாதமாக இருந்த சாங்கியம் வேதமோதிகளின் வழக்கமான சதிச் செயல்களால், தீவிர ஆன்மீகவாதமாக மாற்றப்பட்டு மூல சாங்கியத்திற்கு நேர் முரணான தத்துவமாக மாற்றப்பட்டுவிட்டது.
சூத்ரகிருதொன்க சூத்திரம் உலகாயதம்பற்றிக் கூறிவிட்டு சாங்கியத்தைப்பற்றியும் கூறுகிறது. இதன் ஆசிரியர் சீலங்கர் என்பார், உலகாயதத்திற்கும் சாங்கியத்திற்கும் இடையே வேறுபாடில்லை. உலகாயதம் போல் அல்லாது சாங்கியம் ஆன்மாவை ஒத்துக் கொள்கிறது. ஆனாலும் இந்த ஆன்மா ஒன்றுக்கும் உதவாதது. எந்த வேலையும் செய்யாதது. எல்லாவற்றையும் பிரகிருதியே (இயற்கையே) செய்கிறது. எதற்கும் பயன் இல்லாத (அகிம் சிக்கரா) ஆன்மாவைக் கொண்டுள்ளதால் உலகாயதவாதிகள் சாங்கியத்தை எதிர்க்கிறார்கள் என்கிறார்.
இந்தியத் தத்துவப் பாரம்பரியத்தில், நிரீஸ்வர பிரதான கரணவாதம் என்பதுதான் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. அதாவது கடவுள் என்பதன் முதன்மை நிலையை மறுத்து பொருளை முதன்மைப்படுத்திய பொருள்முதல்வாதம் அல்லது உலகாயதம் என்பதே சிறப்பாக நிலவியது. மதிக்கப்பட்டது. கடவுளைத் தூக்கிப் பிடிக்கும் வேதங்கள், உபநிஷத்கள் ஆகியவற்றின் வேதாந்தக் கருத்துகளுக்கு எதிர்க்கருத்தாக இவை விளங்கின. கடவுள் மறுப்புக் கருத்துகள் அறிவுக்குப் பொருந்துவனவாகவும் ஈர்க்கக் கூடியனவாகவும் இருந்துள்ளன. மக்களிடையே திணிக்கப்பட்ட நம்பிக்கைகளை, வழிபடு பொருள்களை, வழிபாட்டு முறைகளை, சடங்குகளை, அவற்றிற்கு ஆதாரமாகக் காட்டப்பட்ட சாத்திரங்களை எதிர்த்து வந்திருக்கின்றன. மக்கள் வாழும் இவ்வுலகம் பற்றிய செயல்களை அக்கருத்துகள் வலியுறுத்தின. பரலோகம் என்பதை மறுத்து அதற்கான சடங்குகளை எதிர்த்தன.
சுருதி என்றால் வேதத்தின் வெளிப்பாடு. ஸ்மிருதி என்றால் வேதமரபு _ புனிதச் சட்டம். இந்த இரண்டையும் பண்டைய கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மறுஉலகம், துறக்கம் (சுவர்க்கம்) என்பதைக் கேலி செய்தனர். இதன் தத்துவகர்த்தர் இவர் என்பதாக எவரையும் சுட்டமுடியாது. அறிவுப்பூர்வமாகச் சிந்தித்த மக்களே வேதவிரோதிகளாயினர். அவர்களது வாழ்வியல் நடைமுறைகள் பார்ப்பனியக் கொள்கைகளுக்கும் வாழ்வியல் நடைமுறைகளுக்கும் எதிராக, இயல்பாகவே அமைந்திருந்தன.
மனுநூலுக்கு உரை எழுதியவர்கள் கடவுள் மறுப்பாளர்களை இரண்டு பெயர்களால் சுட்டியுள்ளனர். நாஸ்திகர்கள் என்றும் ஹைதுகர்கள் என்றும் குறித்துள்ளனர். மேதாதி என்பவர் இவ்விரண்டையும் இணைத்து உலகாயதம் என்றாக்கினார். நாஸ்திதத்தம், நாஸ்திஹதம், நாஸ்தி பரலோகம் இதி என்கிறது சுலோகம். இதன் பொருள் தானம் இல்லை, யாகம் இல்லை, மறுஉலகம் இல்லை என்பதாகும். உரை எழுதிய மேதாதி சுமார் 1100 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர். மனுநூல் 2200 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டது என்கிறார்கள். எனவே, உலகாயதர்களும் 2200 ஆண்டுகளுக்கு முன் இருந்தோரே! பார்ப்பனர்களுக்குத் தானம் தரமாட்டோம், பரலோகம் போவதற்காகப் பார்ப்பனரை வைத்து யாகம் செய்யமாட்டோம், இன்னும் சொல்லப்போனால் பரலோகமே இல்லை என்கிற கொள்கையோடு வாழ்ந்துள்ளனர்.
கொள்கையைப் பற்றிக்கூடப் பார்ப்பனர் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். தம் பிழைப்பு போகிறதே, வருமானம் இல்லாமல் ஆகிறதே என்கிற கவலைதான் கடவுள் மறுப்புக் கொள்கையை எதிர்த்துச் செயல்பட வைத்தது என்றுகூடக் கருதலாம்!
கடவுளை நம்பும், வேதவாதிகள் (இந்துக்கள்) எனும் சனாதனிகள் 2002ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 99 கோடி உள்ளனர். அதுபோலவே மற்றொரு மாறுதல் விரும்பா மதமான இசுலாத்தைச் சேர்ந்தோர் 110 கோடிப்பேர் உள்ளனர். மாறுதலை அறவே விரும்பாத கத்தோலிக்கக் கிறித்துவர்கள் முசுலிம்களைப் போலவே 110 கோடிப் பேர் இருக்கின்றனர். புரோடஸ்டன்ட் கிறித்துவப் பிரிவினர் 33 கோடி, பழமைவாதக் கிறித்துவப் பிரிவினர் 22 கோடி, ஏனைய கிறித்துவர்கள் 36 கோடி 40 லட்சம் பேர் என கிறித்துவர்கள் மொத்தத்தில் 201 கோடியே 40 லட்சம் பேர் உலகம் முழுக்க இருக்கின்றனர்.
பவுத்தர்கள் 36 கோடிப் பேரும் ஜப்பானிய ஷிண்டோ மதத்தினர் 5 கோடியே 28 லட்சம் பேரும் யூதர்கள் 1 கோடி 72 லட்சத்து 63 ஆயிரம் பேரும் உள்ளனர். சீன நாட்டில் பல்வேறு மதப் பிரிவுகளைச் சார்ந்தவர்களாக (கன்ஃபியுசனிசம், டாவோயிசம் போன்றவை) 22 கோடியே 50 லட்சம் பேர் இருக்கின்றனர்.
கடவுள் நம்பிக்கையற்ற, மதமற்ற பகுத்தறிவாதிகளாக 118 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் பேர் இருக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? கடவுள் நம்பிக்கையுள்ள மதவாதிகள் என்ற கணக்கில் எந்தவொரு தனிப்பட்ட மதக்காரர்களின் எண்ணிக்கையைவிடவும் கூடுதலாக கடவுள் மறுப்பாளர்கள் உலகில் உள்ளனர் என்பது விளங்குகிறது, அல்லவா!
சற்றொப்ப 119 கோடி உலகாயதர்கள், சார்வாகர்கள், வேத மறுப்பாளர்கள், ஆன்மா, மறுபிறப்பு, கர்மவினை, தலைவிதி போன்ற மூடக்கருத்துகளை எதிர்த்தவர்கள், சொர்க்கம், நரகம், யாகம், ஜெபம், பிரார்த்தனை போன்ற மூடச்சடங்குகளைச் செய்யாதவர்கள் நாளும் வளர்ந்துகொண்டே வருகிறார்கள். இதற்கான வித்து இந்திய மண்ணில்தான் விதைக்கப்பட்டது என்பதே நமக்கெல்லாம் பெருமை தரும் ஒன்றுதானே!
அதிலும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய கடவுள் மறுப்புப் பிரச்சாரகர் என்று இந்திய மண்ணில் குறிப்பிடப்பட வேண்டியவர், புத்தருக்குப் பின், தந்தை பெரியார் மட்டுமே! நான் உலகமே நாத்திக (பகுத்தறிவு)மயமாக வேண்டும் என்பதற்கு ஆகவே உயிர் வாழ்பவன் எனத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்.
எதனால் இந்தத் தத்துவத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார் என்பதற்கான விளக்கத்தையும் அவரே கூறுகிறார். ஏனெனில் நமது நாடு ஆத்திகம் காரணமாக மிகமிகக் கீழான நிலைக்குப் போய்விட்டது. மக்களுக்கும் அத்து இல்லாமல் மானம், வெட்கம், சுயமரியாதை என்பவை அடியோடு பாழ்படுத்தப்பட்டு விட்டன. இதை இனிமேல் இரண சிகிச்சை மூலம்தான் சரிப்படுத்த முடியுமே தவிர எப்படிப்பட்ட மேதாவி மருத்துவராலும் (நேரில் விவாதித்து) மருந்து கொடுத்து சரிப்படுத்த முடியாத நிலை அடைந்துவிட்டது.
ஆத்திகம் சரியா, நாத்திகம் சரியா என வாதம் நடத்தும் ஒருவரை மற்றவர் திருப்திப்படுத்தி அவரது தத்துவத்திற்கு வரச் செய்யும் பழையகால முறைகள், இன்றைய நிலையில் சரிப்பட்டு வராது என்கிற அளவுக்கு ஆத்திகம் என்கிற கடவுள் ஏற்புக் கொள்கை மக்களையும் சமூகத்தையும் பாழ்படுத்திவிட்டது என்கிறார் பெரியார். எனவே சூரணம், பஸ்பம், குளிகை, லேகியம் சாப்பிடுவது போன்ற மருத்துவ முறைகளால் சமூகத்தில் பீடித்திருக்கும் நாள்பட்ட நோயைக் குணப்படுத்த முடியாது. தற்போது உள்ள ஆங்கில மருத்துவ முறைப்படி மருந்து, மாத்திரைகள், ஊசி மருந்துகள் போன்றவற்றினால் குணப்படுத்த இயலாத நிலையில் அறுவை மருத்துவத்தைக் கைக்கொள்வதைப் போன்று சமூக நோய்க்கு அறுவை சிகிச்சைதான் நிவாரணம் அளிக்கும் என்றே பெரியார் முடிவு செய்து தம் பிரச்சார முறையைக் கடுமையாக்கினார்.
அதன் விளைவாகத்தான் கடவுள் மறுப்புத் தத்துவம் இம்மண்ணில் பரவி பல கோடியினர் பகுத்தறிவுவாதிகளாகிய நிலை இங்கு ஏற்பட்டது. அதுபோலவேதான் உலகம் எங்கும்!
பெரியார் சொன்னதைப் போல, அறுவை மருத்துவ முறை தேவைப்படும் அளவுக்கு நாள்பட்ட நோயாக வைதீகம் இருப்பது உண்மையா?
தோராயமாகப் பொது ஆண்டுக் கணக்குக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக (கி.மு.1500) இந்த நாட்டிற்குள் வந்தேறிய ஆரியர்களின் வேதங்கள் சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உருவாக்கப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் கருத்து உண்டு. இந்த வேதங்களும் ஒரே காலத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல. 200 ஆண்டுகள் 300 ஆண்டுகள் இடைவெளியில் உருவாக்கப்பட்டுள்ளன.
ரிக் வேதம் காலத்தால் மூத்தது. 10 ஆயிரத்து 414 பாடல்களும் 10 மண்டலங்கள், 107 சூக்தங்களும் கொண்டது. ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 826 சொற்கள் உள்ளன. இவை அனைத்தும் தங்கள் தேவர்களையும் தங்களுக்குத் தானம் தரும் வள்ளல்களையும் குஷிப்படுத்தி மகிழ்ச்சியளிக்கும் பாடல்களாக எழுந்த குவியல்கள். இது வேத மொழியில் உள்ளது. வேத மொழி வேறு. பாணினி என்பான் இலக்கணம் எழுதிச் சீர்செய்த சமக்கிருத மொழி வேறு. வேதத்தை மூன்று ஸ்வரங்களில் பாடவேண்டுமாம். உதாப்தம், அனுதாப்தம், சரிதம் என்று மூன்று நிலைகளைக் கூறுகிறார்கள். உரத்துப் பாடினால் (8 கட்டையா?) உதாப்தமாம். தாழ்த்திப் பாடினால் அனுதாப்தமாம். மத்திமமாகப் பாடினால் சரிதமாம். இந்த இலக்கணம் வேதமொழிக்கு உண்டு. சமக்கிருதத்திற்குக் கிடையாது.
சாம வேதம் இசைப்பாடல்களின் தொகுப்பு. யஜூர் வேதம் பிரமாண விதிகளைக் கூறுவது. அதர்வண வேதம் என்பது மிகவும் பிற்கால வேதம். மந்திரங்களை அடிப்படையாக வைத்து, ஏமாற்றுவதைக் கற்பிக்கும் வேதம்.
ரிக் வேதத்தில் இந்திரன் என்பதுதான் கடவுள். விண்சார்ந்த தெய்வங்கள் எனும் பிரிவில் ருத்ரன், வருணன், சூரியன், புருஷன், இரண்டு அஸ்வினி தேவர்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை இயற்கைப் பொருள்களே! மண் சார்ந்த தெய்வங்கள் எனும் பிரிவில், பிருத்வி, அக்னி, பிரகஸ்பதி, சோவின், துவஷ்டா என்பவையும் சிந்து சுதாத்ரி, சரசுவதி போன்ற நதிகளும் அடக்கம். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட தெய்வங்களாக இந்திரன், தெருத அபத்தியன், அஜ ஏகபதன், ருத்திரன், வாயு, நீர் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.
ரிக் வேதப் பாடல் சந்தங்கள் ஏழு. காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்குப், பிரகதி, தரிஷ்டுப், ஜகதி, திராட் என்பவை ஏழு சந்தங்கள். புழக்கத்தில் காயத்ரி சந்தம் மட்டுமே இருந்து வருகிறது.
ரிக் வேதத்தின் கடைசி மண்டலமான பத்தாம் மண்டலத்தில்தான் பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர எனும் நால்வருணப் பாகுபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் உள்ள சொற்களின் சேர்க்கையில் மொழி வேறுபாடும் கருத்து வேறுபாடும் உள்ளது என மொழியியல் அறிஞர் கிருஷ்ணகோஷ் என்பார் பதிவு செய்துள்ளார். இதனால் பத்தாம் மண்டலம் இடைச்செருகல் என்றும் கூறப்படுகிறது.
ரிக்வேதப் பாடல்களை சுமார் 350க்கும் மேற்பட்வர்கள் பாடியுள்ளனர். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து பாடியவை அல்ல. சுமார் 400 ஆண்டு காலத்தில் பாடப்பட்டவை. தொல்பழங்காலத்தவர்களான அங்கிரசர், பிரகஸ்பதி, ரகுக்கள், கிஷகா போன்றோர் பாடிய ஒருசில பாடல்கள் உள்ளன. பிந்தைய காலத்தவர்களான பரத்வாஜர், காஷ்யபர், கோதமர், அத்தரி, விசுவாமித்திரர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோர் பாடியவையும் உள்ளன. இன்னும் நிறையப் பேரின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு ரிக்வேதம்.
கடவுள் கொள்கைபற்றிக்கூட, ரிக் வேதம் குழப்பமாகத்தான் கூறுகிறது. படைப்பு சுலோகம் இப்படித்தான் முடிகிறது.
யார் அறிவார்? யார் உறுதியாகக் கூறமுடியும்?
யாரால் இப்படைப்பு நிகழ்ந்தது? எப்போது நடந்தது?
உலகத்திற்குப் பிறகுதான் கடவுளர்கள் பிறந்தனர்!
படைப்பு எப்போது, யாரால் நிகழ்ந்தது? யாருக்கும் தெரியாது!
அவன்தான் செய்தானா?
அவன் செய்யவில்லையா?
யாருக்கும் தெரியாது!
சொர்க்கத்தில் இருந்து பார்க்கும் அவனுக்கு மட்டும் தெரிந்திருக்கலாம்! அல்லது அவனுக்கும் இது தெரியாதிருக்கலாம்!
உலகத் தோற்றம் இதுவால்தான், இவனால்தான் எனக் கூறமுடியாத நிலைப்பாடு ரிக்வேத காலத்திலேயே இருந்தது என்றால் சம்சயவாதம், சந்தேகவாதம் (கிநிழிளிஷிஜிமிசிமிஷிவி) தோன்றிவிட்டதே! பின் எப்படி கடவுள்? எனவே உலகாயதக் கொள்கைக்கு ரிக்வேதம்கூட சான்று கூறுகிறது. வசிஷ்டர் பாடியவையும் உள்ளன. இன்னும் நிறையப் பேரின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு ரிக்வேதம்.