– பாண்டு
மகாலட்சுமி… மகாலட்சுமி… மகாலட்சுமி…
தனது நாற்கரங்களில், இருகரங்களிலும் தாமரை ஏந்தி ஒரு கையில் தங்கக் குடமும், மறுகரத்தை ஆசீர்வதிக்கும் பாவத்துடனும், மரகதம் மாணிக்கம் மணிவைரம் பதித்த பொற்கிரீடமுடன் கூண்டில் வந்து நின்றாள் சாட்சாத் அந்த எம்பிரான் ஏழுமலைவாசன் திருப்பதி வெங்கடாசலபதியின் தர்மப் பத்தினி. நீதிபதி, வழக்குரைஞர்கள் மற்றும் உள்ள அவையினர் யாவரும் எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டனர். அவர்கள் எழுந்து அமரும்போது நீதிமன்றத்தில் பழைய நாற்காலிகள் க்ரீச்சிடும் ஒலியும், பலரின் முணுமுணுப்புகளும் அவையை நிறைத்தன.
அப்போது அங்கு நின்றிருந்த குமாஸ்தா சற்றுத் தலையைச் சாய்த்தபடி, காலண்டர்ல எல்லாம் கையில இருந்து ரூவா நோட்டா, கொட்டுமே… இங்க வெறுங்கையை வீசிட்டு இந்த அம்மாவாட்டுக்கு வந்துட்டே…? இல்ல உள்ள வரும்போதே இந்த அம்மாட்ட இருந்தும் இருக்கிறதெல்லாத்தையும் புடுங்கிட்டானுகளா? என்று முணுமுணுக்க.. அவையோரெல்லாம் சிரிக்கலாயினர்.
ஆர்டர்… ஆர்டர்… ஆர்டர்… அவையில் எழுந்த சலசலப்பை நிறுத்திவிட்டுத் தன் கறுப்பு ஃப்ரேம் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்தபடி தொடர்ந்தார் நீதிபதி. ஜெகன்மாதா, உலகைக் காக்கும் தாயே! மேலோகத்தில் இல்லாத நீதிமான்களா? தர்மவான்களா? அதை விடுத்து இந்த பூலோகத்தில் வந்து வழக்குத் தொடுக்க வந்த காரணம் என்ன? வழக்கின் விபரத்தையும் கூறுங்களேன்.
அரிதப்பழசான காற்றாடி ஒன்று சுற்றுவதா வேண்டாமா என க்ரங் க்ரங் என்றபடி சுற்றிக் கொண்டிருக்க, தாமரைப்பூவால் விசிறியபடி தொடர்ந்தார் மகாலட்சுமி. கணம் நீதிபதி அவர்களே! ஸ்ரீநிவாசன், மதுசூதனன், வேங்கடநாதன் என 108 திவ்ய நாமங்களால் அழைக்கப்படும் எம் மணநாதன் எடுக்கப்போகும் பத்தாவது அவதாரமாகிய கல்வி அவதாரத்தை எடுக்காதபடி தடை கோரவே வழக்குத் தொடுக்க வந்துள்ளேன்!
கோர்ட்டே சற்று சலசலத்தது…
அமைதி… அமைதி.. அமைதி… என்று கோர்ட்டார் சற்று உரக்கக் கூறி விட்டுத் தொடர்ந்தார்…
அம்மா… நீங்கள் தொடருங்கள் என்று கூறித் தன் கருப்பு அங்கியைச் சரிசெய்து கொண்டார்.
மேலோகத்தில் நீதிமான்களா? ஹா.. ஹா.. பேருக்குக் கூட இல்லை. இதுதான் உண்மை. அங்கு பெண்களுக்கு மிகவும் அநீதி இழைக்கப்படுகிறது. ஆனால் இப்பூவுலகில் பெண்கள் போற்றப்படுகிறார்கள்; அவர்களது உரிமை பாதுகாக்கப்படுகிறது என நாரதர் சொல்லிக் கேள்வியுற்றேன். பெண்ணாகிய தாங்கள் நீதிபதியாய் அமர்ந்திருப்பதே அதை உறுதி செய்கிறது. ஆகவே எனக்கும் தகுந்த நீதி கிடைக்குமென வழக்குத் தொடுக்க இங்கு வந்துள்ளேன். பெண்ணின் மனசு பெண்ணுக்குத் தானே புரியும்.
அப்போது வெடுக்கென எழுந்த அரசாங்க வழக்குரைஞர் தன் மேல்கோர்ட்டை இருகரத்தால் பிடித்தபடி அம்மா, ஏன் இப்படிச் சொல்கிறீர்கள். பிரம்மா கலைமகளுக்குத் தன் நாவிலும், பெருமாள் அலைமகளாகிய தங்களுக்குத் தன் இதயத்திலும், ஈசன் மலைமகளாகிய உமைக்குத் தன் இடபாகத்தையே தந்தார்கள் அல்லவா? என்று குறுக்கிட்டார்.
வாயில் வெற்றிலை சீவல் போட்டபடி, சுமார் அய்ம்பது வயது மதிக்கத்தக்க அவரைப் பார்த்து வழக்குரைஞர் அய்யா, ஒருவர் தருவதும் ஒருவர் பெறுவதும் எப்படி உரிமையாகும்? இது, மாபெரும் சக்தியின் வடிவாகிய நாங்கள் எப்போதும் அவர்களுக்குள் அடக்கம். அதாவது அடங்கியே இருக்க வேண்டும் என்றல்லவா காட்டுகிறது… சரி ஈசன் தான் தன் இடபாகத்தையே கொடுத்தார் என்று திரும்பத் திரும்ப பீத்துகிறீர்களே!? இங்குள்ள சாதாரண மக்களே கொடுக்கும்போது வலக்கையால் தான் கொடுக்கிறார்கள்.
ஒருத்தருக்கு ஒரு பசுமாடு சொந்தமாக இருந்தது. அவர் இறந்ததும் அதை அவரோட இரண்டு பசங்களுக்குப் பங்கு பிரித்தார்கள். எப்படியென்றால்? ஒருத்தருக்கு முன் பாகம், இன்னொருத்தருக்குப் பின் பாகம். அதாவது, ஒருத்தர் அதோட முன் பக்க வாய்க்குத் தீனி போட்டுக்கிட்டே இருக்கணும். இன்னொருத்தர் நோகாம பின் மடியில் பால் கறந்துக்கிட்டே இருப்பார். இது எப்படி இருக்கு. அப்படித்தான் இருக்கு நம்ம ஈசன் செஞ்ச வேலை. ஆசிர்வாதம் பண்ற வலபாகத்தை அவர் வச்சுடுவாராம். மலம் கழுவும் இடபாகம் உமைக்காம். அதான் சொல்றேன் மேலோகத்துல பெண்களுக்கு மரியாதையும் கிடையாது; உரிமையும் கிடையாது.
சரி… சரி… நாங்க பக்கத்து நாட்டு அரசியலையே தலையிட மாட்டோம்.. மேலோகத்து அரசியல் எதுக்கு? பாய்ண்டுக்கு வாங்கம்மா. மக்கள் எல்லாம் ஆவலோடு எதிர்பார்த்துக்கிட்டு இருக்குற, இப்ப வரும் அப்ப வரும்னு நம்பிக்கிட்டு இருக்கிற கல்கி அவதாரத்த ஏம்மா தடை செய்யனும்ணு கேட்கிறீங்க…? சற்று கோபமாகவே கேட்டார் அரசாங்க வழக்குரைஞர்.
இந்த அவதார புருஷன் இருக்காரே, அவர் பாட்டுக்கு லோகத்த ரட்சிக்கிறேன், மக்களக் காப்பத்துறேன்னு பொசுக்குப் பொசுக்குன்னு இங்கு உள்ள சில கணவன்மார்கள் பொண்டாட்டிய விட்டுட்டு ஜாலியா டூர் போறமாதிரி அவதாரம் எடுத்து கிளம்பிடுறார். அதாவது பரவாயில்லை. ஆனா ஒவ்வொரு அவதாரத்துலயும் பெண் இனத்தை மதிப்பதும் இல்லை; அவர்களது உரிமைகளும் பறிக்கப்படுகிறது. மேலும் அவரது தர்ம பத்தினியான என்னையும் நோக அடிப்பதே அவரது வாடிக்கை. காலங்காலமாக பெருமையெல்லாம் பெற்றிருந்தாலும் இழிநிலைக்குத் தள்ளப்படும் பெண்களின் சார்பாகவும்; அதனையே தொடர்ந்து நிலை நிறுத்தப் பார்க்கும் அவதார ரகசியங்களை அம்பலப்படுத்தவுமே இவ்வழக்கைத் தொடுத்துள்ளேன் என்று பணிவோடு தன் வாதத்தை வைத்தார் லட்சுமி.
இப்படி மொட்டக்கட்டையாய் சொன்னால் எப்படி? சற்றுப் புரியும்படி சொல்லுங்கள் தாயே. என்று கேட்டார் நீதிபதி.
பரசுராமன் அவதாரத்துல, அவர் தந்தைப் பேச்சைக் கேட்டு தன் தாய் தலையையே வெட்டினவர்னு உங்களுக்குத் தெரியாதா? அத விடுங்க. கிருஷ்ணவதாரத்துல ஒரு பக்கம் ருக்மணி மறுபக்கம் ராதை. இது போதாதுனு கோபியர்கள். அதுவும் போதாதுன்னு பத்தாயிரம் மனைவிமார்கள் வேற. சொல்லவே நா கூசுது.
சட்டென குறுக்கிட்ட அரசாங்க வழக்குரைஞர் தாயே! கிருஷ்ண அவதாரத்துல, அவரே நேர்ல தோன்றி சீலை கொடுத்து பாஞ்சாலி மானத்தைக் காப்பாத்தினவராச்சே.. அந்த ஒரு காரணத்திற்காச்சும்… அவர தூசிக்காம இருக்கலாம்ல…
அட மங்குனி வழக்குரைஞர் அய்யா! துரியோதனன் தனது அண்ணியின் சீலைய உருவச் சொல்லி மானபங்கம் படுத்தினானாம்… உங்க பரமாத்தமா வந்து சீலைய கொடுத்து மானத்தக் காப்பாத்தினாராமாம்… கேட்கிறவன் கேனயனா இருந்தா கொசு ஹெலிகாப்டர் ஓட்டுதுன்னு புரூடா விடுவாங்க… உங்களுக்குப் புத்தி இல்லையா?
வழக்குரைஞர் திருதிருவென முழிக்கலானார்.
துரியோதனன் எப்படிப்பட்டவன்னு தெரியுமா? தன் மனைவியின் முத்து மாலைய கர்ணன் கை தவறி அறுத்திட்டப்ப, நண்பா! எடுக்கவா கோர்க்கவானு நிதானமாகக் கேட்டவன். தன் மனைவிய சந்தேகப்படாத உத்தமன். அவன் எப்படி தன் அண்ணிகிட்ட அவசரப்பட்டுத் தரக்குறைவா நடப்பான். அவன் சீலைய பறிக்கச் சொன்னான்னா நீங்க ஊலுஊலுன்னு தலையாட்டுறீங்க.
நீதிமன்றத்தில் அனைவரும் கண்ணிமைக்காது கேட்கலாயினர். மகாலட்சுமி மேலும் தொடர்ந்தார்… நம்ம ஆபத்பாண்டவர் இருக்காரே அவர் லட்சணம் தெரியுமா? கோபியர்கள் குளிக்கும்போது அவர்கள் ஆடைய எடுத்து வச்சுக்கிட்டு, கோபியர்களே! வெட்கத்தைக் களைத்துவிட்டு நீரிலிருந்து மேலே வாருங்கள்னு சொல்லி நிர்வாணமா வரச்சொல்லி ஆடை கொடுத்த கிருஷ்ணர்… பாஞ்சாலிக்கு மானம் போகக்கூடாதுனு சீலைய கொடுத்தாராம்…
இதையும் நீங்க கேட்டுட்டு ஊலுஊலுன்னு தலையாட்டுறீங்க…. போங்கப்பா போங்க.
அம்மா! நீங்க சொல்றதெல்லாம் சரின்னே வச்சுக்கிடுவோம். பின்ன ஏன் பாஞ்சாலி சீலைய துரியோதனன் துச்சாதனனை விட்டு களையச் சொல்லனும்? என்று வழக்குரைஞர் அய்யா கிடுக்கிப்பிடி போட.
லூசாயா நீங்க! மன்னிக்கணும் கோர்ட்டார் அவர்களே… என் உள்ளக்கொதிப்பால் வக்கீலை அப்படிக் கூறிவிட்டேன். என்ன சொல்ல? காலங்காலமாய் இந்த இதிகாசக் குப்பைகளால், புராணப் புளுகுகளால் உங்கள் அறிவு மழுங்கடிக்கப்படுகின்றது… நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம். சரி, பொறுமையாய்ச் சொல்கிறேன்… இங்க உள்ள படிச்சவங்க -_ மேதைகள் இந்த சமூகத்தின் நலனில் அக்கறை உள்ளோர் எல்லாம் சொல்றது என்ன? ஜாதிகள் இல்லைனு ஆனால் கீதையில கிருஷ்ணர் என்ன சொல்றார்…. நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்னு சொல்றார் அவரா பேதமற்றவர்?
ஒருத்தர பிறப்பினால உயர்ந்தோர் தாழ்ந்தோர்னு சொல்றது நாகரீக சமூகத்துல எவ்ளோ கேவலமானது… பிறப்பு தெரியலனு தானே கர்ணன ஒதுக்கி வைச்சாங்க… ஆனா அவன் குணமறிந்து, பண்பறிந்து கர்ணனத் தூக்கிப்பிடிச்ச துரியோதனன் சிறந்தவனா இல்லையா?
உயர்ந்த ஜாதி எப்போதும் உயர்ந்த ஜாதியா இருக்கணும் தாழ்ந்த ஜாதி எப்போதும் தாழ்ந்த ஜாதியா இருக்கணும் இதுதானே நம்ம பரமாத்வோட உயர்ந்த லட்சியம்… இவரப்போயி நீங்க அனாத இரட்சகர்னு சொல்றீங்க…
சரி சொல்லிவிட்டுப் போங்க, போராட்டமே என்னனு தெரியாதவங்களுக்கு புரட்சி சூறாவளி புரட்சிக் கனல்னு பட்டம் கொடுக்கிறவங்கதான நீங்க. புரட்சிங்கிற சொல்லையே சினிமாக்காரங்களுக்கு பட்டமா கொடுத்து அசிங்கப்படுத்துனவங்கதானே நீங்க…
மேற்படி சம்பவத்துல நடந்தது என்னனா? பெண்ணுக்குச் சம உரிமைனு நீங்க குரல் கொடுக்குறிங்க… ஆனால் தர்மர்னு புகழப்படுறவர்… தன் மனைவியைத் தனக்கு உரிமையவள்… தனக்கு உரியவள்னு கருதாம தன் உடைமைனு கருதி சூதுல அடகுவைக்கிறார்.
நம்ம ஆபத்பாண்டவர், அவளை அடகு வைக்கும்போது வந்து தர்மருக்கு ரெண்டு கொடுப்புக் கொடுத்திருந்தார்னா நான் சபாஷ் போட்டுருப்பேன்… ஆனா அவர் வரலையே! இத்தனைக்கும் பாஞ்சாலி அவருக்குத் தங்கச்சி முறை. ம்… என்று பெருமூச்சுவிட்டபடி தொடர்ந்தார்.
அடிமைகள் மேலாடை உடுத்தக்கூடாதுனு அந்தக் காலத்து விதி… மேல்ஜாதி தெருவுக்குள்ள போகும்போது சட்டை இல்லாமதான் போகணும் மேல்துண்ட இடுப்புல கட்டிக்கணும்னு இங்க நடைமுறைல நாம பார்த்ததுதான்… இப்பவும் கூட நம்ம வழக்குரைஞர் அய்யா பெரிய கோயிலுகளுக்குப் போனா அவரு சட்டையையும் கழட்டிட்டு உட்றாங்களே… என்று லட்சுமி சொல்ல, நீதிமன்றத்தில் கலகலப்பு கூடியது. அங்கு பார்வையாளர் பகுதியிலிருந்த ஒரு கருப்புச்சட்டைக்காரர் விசில் அடிக்க, அவரைக் காவலர்கள் அப்புறப்படுத்தினர்.
இதையெல்லாம் வேடிக்கையாகப் பார்த்து ரசித்த லட்சுமி தொடர்ந்தார். கிருஷ்ணர் சீலைய கொடுத்தது… பாஞ்சாலி சத்ரிய குலத்திலிருந்து அடிமைக் குலமா தாழ்த்தப் படக்கூடாது… எப்பவும் உயர் ஜாதி அந்தஸ்துல இருக்கணும்னு தான்… அவர் காக்க விளைந்தது நீங்க நினைக்கிற மாதிரி பாஞ்சாலி மானத்த இல்ல _ குல மானத்தை… என்று கூற… அவையோர் எல்லாருக்கும் தலையே சுற்றியது…
நீதிபதி, இதற்கு மேல் தாங்காதென்று வழக்கை மறுநாளைக்கு ஒத்தி வைத்தார்…
மறுநாள் நீதிபதியே தொடர்ந்தார்… அம்மா! நீங்கள் சொன்ன விஷயம் நேற்று என்னைத் தூங்கவிடவில்லை… இரவெல்லாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தேன்… மற்ற ஏனைய அவதாரங்களை விடுங்கள். இராமவதாரத்தை எண்ணிப் பார்க்கும் போது, உங்கள் குற்றச்சாட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருத்தனுக்கு ஒருத்தி என்று இந்த உலகுக்கே வாழும் நெறியைப் போதித்தவர் அல்லவா! அந்த ஒன்றிற்காகவே அவரை வாயாரப் புகழலாம் இல்லையா?
கணம் நீதிபதி அவர்களே! கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்… இராமன் ஏக பத்தினி விரதன் என்றால் உங்கள் கணவர் என்ன ஏகப்பட்ட பத்தினி விரதரா? என்று லட்சுமி கேட்க…
இல்லை இல்லை என்று பதறிப்போய் தலையாட்டினார் நீதிபதி. அவையில் குசுகுசுவென நகைப்பொலி எழுந்தது….
பத்து அவதாரத்தில் ஒன்றில் மட்டும் ஏகப்பத்தினி விரதனாய் இருந்த என் கணவரைவிட உங்கள் கணவரே சிறந்தவர்… இல்லையா? நீங்கள் உங்கள் கணவரையே போற்றலாம்; புகழலாம். சரியா? என்று சிரித்தார் லட்சுமி.
மேலும் அவரே தொடர்ந்தார்… அசோகவனத்தில துயரில் உழன்று வந்த என்னைக் கட்டி அணைக்காமல் சந்தேகத் தீயில் இறக்கி வேடிக்கைப் பார்த்தவரை எப்படிப் போற்றுவது? இதற்கு, தன் மனைவியை எள்ளளவும் அய்யுறாத துரியோதனனே மேல் அல்லவா?
இராமன் இருக்குமிடந்தான் சீதைக்கு அயோத்தி என அவருடன் வனவாசம் வந்த என்னை நிறைமாசம் என்றும் பாராமல் வனத்தில் தனியே தவிக்கவிட்டவரை எப்படிப் புகழ்வது? லவகுசன் இருவரை வனத்தில் தனியே வளர்க்க நான் பட்ட சிரமங்கள் போற்றுதற்கில்லையா?
இப்படி எல்லா வகையிலும் நோகடித்துவிட்டு, அவருக்கு மட்டும் ஏகபத்தினி விரதன் என்ற பட்டமும் புகழும்… என்று கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிய நின்றார் லட்சுமி.
அவையே மிக அமைதியானது. நீதிபதியின் கண்களிலும் லேசாய் கண்ணீர் அரும்பத் தொடங்கியது.
அம்மா! கல்வியில் சிறந்த கலைமகள் இருக்க, வீரத்தில் தேர்ந்த மலைமகள் இருக்க, தாங்கள் மட்டும் வழக்குத் தொடுக்கவந்த நோக்கமென்ன? என்று கோர்ட்டார் வினவ…
அவர்கள் இருவரும் என் கருத்துக்கு மாற்றுக்கருத்து உடையோர் அல்லர். ஆயினும் பெண் விடுதலை என்பது, பெண்கள் என்னதான் கல்வியில் தேர்ந்தவராயினும், வீரத்தில் சிறந்தவராயினும் பொருளாதாரச் சுதந்திரத்தால்தான் கட்டமைக்க முடியும் என்பதை உணர்த்தவே நான் வந்தேன்.
லட்சுமி சொல்லிக்கொண்டு இருக்கையில், நீதிபதியின் பேனா, கல்கி அவதாரத்திற்கு இடைக்காலத் தடை என்று எழுதிக் கொண்டிருந்தது.