திருவள்ளுவர் மக்களைத் திட்டலாமா? – பேரா.ந.வெற்றியழகன்

மார்ச் 16-31

சொன்ன சொல்லை மறந்திடலாமா?

வாழ்வியல் நெறி வகுத்த வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்தும் அ(றி)றவுரைகள் பலப்பல. அவற்றுள் பின்வருவனவும் அடங்கும். இன்சொல் கனி போன்றது; அதனையே பேசுதல் வேண்டும். வன்சொல் காய் போன்றது; அதனைப் பேசுதல் கூடாது. இன்சொல் தனக்கும் பிறர்க்கும் இன்பம் தரும்; வன்சொல் துன்பம் தரும். எனவே, மனிதன் எதற்காக வன்சொல் வழங்க வேண்டும்? இக்கருத்தமைந்த குறட்பாக்கள் கீழ்வருபவை;

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று – (குறள்: 100)

இன்சொல் இனி(தீ)ன்றல் காண்பான்  எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது? _ (குறள்: 99)

இவ்வண்ணம், அடுத்தவருக்கு அறிவுரை வழங்கிய வள்ளுவர், சில இடங்களில் கடுஞ்சொல்லை, வன்சொல்லை, தாம் மட்டும் ஏன் வழங்க வேண்டும்? வழங்கலாமா? மக்களைத் திட்டுகிறார். திட்டலாமா? தாம் சொன்ன சொல்லைத் தாமே மறந்திடலாமா? தமது அறிவுரையைத் தாமே துறந்திடலாமா?

என்வழி தனிவழி

திட்டித் திருத்துவது அறுவை மருத்துவம் போன்றது; தந்தை பெரியார், அறுவைச் சிகிச்சை முறை (Surgical Cure) யினையே கையாண்டார். இது, என் வழி – தனி வழி என, வெளிப்படையாக அறிவித்தார். நோயாளிக்கு, துன்பம் _ வலி வந்தாலும் தாழ்வில்லை, நோய் தீரவேண்டும்; ஆள் பிழைக்க வேண்டும் _ இதுதான் என் வழிமுறையின் நோக்கம் _ அடிப்படை என்றும் தெளிவுபடுத்தினார்.

வள்ளுவர் பெரியார் வழியில்

இதே நடைமுறையைத்தான் வள்ளுவரும் அந்தக் காலத்திலேயே கையாண்டிருக்கிறார். திட்டுவது மனிதன் திருந்துவதற்காக; புண்படப் பேசுவது அவன் பண்பட வேண்டும் என்பதற்குத்தான்! மனிதன், மனிதன் போல வாழக்கூடாது; மனிதனாக வாழ்தல் வேண்டும் என்பதற்காகத்தான்.

எப்படி எல்லாம் ஏசுகிறார்?

திருத்த முடியாத மனிதனை, விலங்கு, மரம், மரப் பொம்மை, மண், மண்பொம்மை, பதர், மயிர், பிணம் என்றெல்லாம் திட்டுகிறார்; சாடுகிறார். மனிதன், தன் மேலான நிலை தவறி, இறங்கி, தாழும்போது அவனை மனிதன் எனக் கூறாமல் அவனை இழிபொருள்கள் போலவும்,  இழிபொருள்கள் ஆகவும் கருதுகிறார்; திட்டுகிறார்.

வள்ளுவர் கையாளும் வழிவகை

திட்டுவதற்குக் கூட வள்ளுவர் இரண்டு வழிவகைகளை மேற்கொள்கிறார். ஒன்று, உவமை. அதாவது அது போலாதல். இரண்டு உருவகம். அதாவது அதுவேயாதல். ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?
வழிவகை மி. உவமை _ அது போலாதல்

1. விலங்கு நிலை

அறிவு தரும், பெறும் நூல்களைக் கல்லாது, உருவத்தில் மட்டும் மனிதனாக _ மனிதர்களாக இருப்பவர்களை விலங்குகள் போன்றவர்கள் எனச் சாடுகிறார். அக்கருத்தமைந்த குறள் இது:
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ(டு) ஏனை யவர் _ (குறள்: 410)

2. மரம் நிலை   பச்சைப் பசுமரம்:

என்னதான் கூரிய அறிவுடையராயினும் மக்கட்பண்பு அவரிடம் இல்லாமல் போனால் அவர்கள் மக்கள் அல்லர்; மரம் போல்வர் என்று சாடுகிறார் வள்ளுவர். அரம்போலும் கூர்மையரேனும், மரம்                                போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர் _(குறள்: 997)

இது உயிர் மரம்: பசுமை மரம். நீ காற்று; நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன் _ என ஒரு திரைநாயகன் தான் மரம் என்பதை எத்துணை வெளிப்படையாக, தயக்கம் இன்றி ஒத்துக்கொள்கிறான் பாருங்கள்!

பட்டுப்போன மொட்டை மரம்

அன்பு எனும் ஈரம் இல்லாது மனிதன் உயிர்வாழ்வது, உள்ளபடியே வறண்ட பாலை நிலத்தில் பட்டுப்போன வற்றல் மரம் தளிர்த்து நிற்பதற்கு ஒப்பாகும். அதாவது, பட்ட (வற்றல்) மரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதுபோல, அன்பு இல்லாத மனித வாழ்க்கை தழைக்காது! இந்தக் கருத்தமைந்த குறட்பா இது: அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை                             வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று _ (குறள்: 78)

மட்கிப் போன மரம்:

உலகியலோடு ஒத்துப்போதல்; அதாவது மற்றவர் உணர்வை மதித்து நிற்கும் நயத்தக்க நாகரிகம் ஆகிய கண்ணோட்டம் இல்லாத மாந்தர் மண்ணோடு மண் ஆகி மட்கிப் போன மரத்துக்கு ஒப்பாவார் என்கிறார் _ இல்லை இழித்துரைக்கிறார் வள்ளுவர்.
மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர் _ (குறள்: 576)

3. மண் நிலை   உப்பு (உவர்_களர்) மண்:

கல்வியறிவில்லாதவர் எவருக்கும் எந்த வழியிலும் பயன்படாத அவர் உயிரோடு இருக்கிறார் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், வாக்காளர் பட்டியல் அட்டையில், குடும்ப அட்டை (Ration Card) யில் ஓர் எண் (Number) ஆகத்தான் இடம் பெற்று இருக்கிறார். மக்களிடையே அவர் ஓர் உறுப்பினர்(Member) அல்லர். அந்த அளவுக்குத்தான் அவர் மதிப்பு உள்ளது. அத்தகையோர், எதுவும் விளைய முடியாத உப்பு (உவர்-_களர்) மண் போன்றவர் எனத் தாழ்த்திப் பேசுகிறார் குறளாசான். உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். _ (குறள்: 406)

4. மண்பொம்மை நிலை  கண்கவரும் மண்பொம்மை:

நுண்மையானவற்றிலும் பருமையானவற்றிலும் (Microcosom amd Macrocosom) உள் நுழைந்து ஊடுருவி ஆராய்ந்து உண்மை காணும் அறிவு இல்லாதவர்களின் அழகு ஒப்பனைப் பகட்டாரவாரம் எல்லாம் மண்ணால் புனைந்த வனப்பான பொம்மையினைப் போன்றதாகும். மனிதன் ஆனாலும்அவன் மண்பொம்மைதான் என்கிறார் வள்ளுவர். ஒரு திரைப்பாடலில் வரும்,
தஞ்சாவூரு மண்ணை எடுத்து
தாமிரவருணி தண்ணியை விட்டுச்
சேர்த்துச் சேர்த்துச் செய்ததிந்தப் பொம்மை
என்ற அடிகளை இங்கு நினைவு கூர்க.

மண் பொம்மை _ அதுவும் பெண் பொம்மை தான் அது. உண்மையான பெண் அல்ல. இதுதான் அக்கருத்தமைந்த குறட்பா.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று _ (பாவை _பொம்மை) (குறள்: 407)

5. மயிர்நிலை  மண்ணில் உதிர்ந்த மயிர்

தம் உயர்ந்த பண்பு நிலையிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டால் அவர், தலையிலிருந்து, கீழே மண்ணில் _ தரையில் உதிர்ந்து விழுந்த மயிர் போன்றவர் என்று மிகமிகத் தாழ்த்திப் பேசுகிறார் வள்ளுவர் பேராசான்.

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. _ (குறள்: 964)
மயிர் அத்துணை இழிவா? எனக் கேட்கலாம்.

கண்களா மின்னலா?
கூந்தலா ஊஞ்சலா?
ஆறடி கூந்தல் காலடி மீதில்
மோதுவ(து) என்னடி சந்தோசம்?
என்றெல்லாம் கவிஞர் புகழ்ந்து பாடியுள்ளனரே? அது அத்துணை இழிந்ததா? கவிஞர், தலைமயிரைப் புகழ்ந்து பாடுவர். அது, தரைமயிர். ஆனால்? புறம் தள்ளுவர்; மக்கள் ஒதுக்கி விடுவர். கேட்கலாம், ஒட்டுமுடி (சவரிமுடி)யாகி தலையில் ஏறியிருக்கிறதே, பெருமையல்லவா? _என்று. உண்மை! ஆனால், ஒட்டுமுடிதான்; இயற்கை முடி அல்ல; அது! அதற்கு மேற்கொண்ட வளர்ச்சியும் இல்லை; வாழ்வும் இல்லை!

6. மரப்பொம்மை  கயிற்றால் இயங்கும் மரப்பொம்மை

மனத்தின்கண் நாணம் இல்லாதவர்களாய் இருந்து, உலகில் சிலர் நடமாடி வருகிறார்கள் என்றால் அந்த நிலை மரத்தாலாகிய பொம்மை கயிற்றினால் இயக்கப்பட்டு உயிருள்ளது போல மயக்கும் தன்மையை ஒத்ததாகும்.

நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று _(குறள்: 1020)

(நாண் _1. வெட்கம், 2. கயிறு)

வழிவகை மிமி. உருவகம் _ அதுவேயாதல்

1. மறுபடியும் மரம்  வலுவற்ற மரம்:

இதற்கு முன், மரம் போலும் மனிதர்களைக் காட்டித் தாழ்த்திப் பேசிய வள்ளுவர் இப்பொழுது, அதுவேயாதல் என்னும் உருவக நிலையில் எடுத்துரைக்கிறார். ஒருவருக்கு வலிமை என்பது ஊக்க மிகுதியேயாகும். அதுவே நிலைத்த வலுவான செல்வம். அவ்வூக்கம் இல்லாதவர்கள் மரங்கள் என்றே கருதப்படுவர். மரங்களுக்கும் மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மக்களுக்குள்ள தனித் தோற்ற வடிவில் காணப்படுவதேயாகும் என்கிறார் அவர்.

உரமொருவற்(கு) உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம் மக்கள் ஆதலே வேறு _ (குறள்: 600)

2. பதர்  பயனற்ற பதர்:

பயனற்ற வீண்சொற்களைப் பெரிதுபடுத்திப் பேசுபவனை மனிதன் என்று சொல்லாதே! அவன் மக்களிடையே இருக்கும் பதர் ஆவான். பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல் _ (குறள்: 196)

3. பிணம்  அவர் இறந்து போனாரே!

அய்யப்பாட்டிற்கு இடமில்லாமல், தம்மை நல்லவர் என்று நம்பிய ஒருவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தவறான ஒழுக்கத்தில் ஈடுபடுபவர் இறந்து போனவரைக் காட்டிலும் வேறானவர் அல்லர். அவர் இறந்தவரே ஆவார்! உயிர் அற்ற வெறும் தசைப் பிண்டம்தான்! என்று இழிவாகப் பேசுகிறார் குறளார். விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்

தீமை புரிந்து ஒழுகுவார் _ (குறள்: 143)
(விளிந்தார் _ இறந்தவர். இல் _ மனைவி)

 

செத்தவர் பட்டியலில் சேர்த்துவிடலாம்:
பிற உயிர் படும் துயர் கண்டு தானே அத்துயர் அடைந்தவனுக்கு ஒப்பாக தன்னைக் கருதி செயல்படுபவனே (ஒத்தது அறிபவனே) உள்ளபடியே உயிர் வாழ்பவன் எனப்படுவான்.

இந்த ஒப்புரவுப் பண்பு இல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும்கூட அவன் செத்துப் போனவர்கள் பட்டியலிலே (ஜிலீமீ றீவீ ஷீயீ லீமீ பீமீணீபீ) சேர்க்கப்பட வேண்டியவனே ஆவான் என்பது வள்ளுவப் பெருமகனாரின் திருவாய்மொழி.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். _(குறள்: 214)

அதுமட்டுமல்லாமல், அப்படிச் செத்துப் போனவன் வைக்கப்படும் இடம் வீடல்ல; ஊர் அல்ல; பிணத்தைச் சுட அல்லது புதைக்க வைக்கப்படும் சுடுகாடு அல்லது இடுகாடுதான் என்றும் பொருள்படுவது காண்க!

செத்த பிணம் என்ன செய்யும்?

தன் இல்லம் நிறைய பெருஞ்செல்வத்தைச் சேர்த்து வைத்துள்ள ஒருவன், அதனைக் கொண்டு வயிறார உண்டு, அவனும் பிறரும் நுகரவில்லை என்றால் எதுவுமே செய்ய முடியாமல் பிணமாக இருக்கும் செத்தவனே ஆவான் என்றும் திட்டுகிறார் வள்ளுவப் பெருமகனார். வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்                          அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
_ (குறள்: 1001)

திட்டுவது தேவைதானே?

மனிதனை, விலங்கு, மரம், மரப்பொம்மை, மண், மண்பொம்மை, மயிர், பதர், பிணம் என்றெல்லாம், உவமையாலும் உருவகத்தாலும் மனிதத் தன்மையற்றவனை  _ அற்றவரை திருவள்ளுவர் திட்டுவது தேவைதானே? சாடுவது சரிதானே?   திட்டுவதன் காரணம் இப்பொழுது நமக்குத் தெளிவாகப் புரிந்திருக்குமே? தவறு செய்தவன் திருந்திட வேண்டும்; தப்பு செய்தவன் வருந்திட வேண்டும்; என்பதற்காகவே திருவள்ளுவர் மனிதனை அவ்வளவு கடுமையாகத் திட்டியுள்ளார். இப்பொழுது சொல்லுங்கள், திருவள்ளுவர் மக்களைத் திட்டலாம் அல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *