புதுக்கவிதை

மார்ச் 01-15

தோழர் இரா.சென்ராயன் எழுதியுள்ள உருவி எடுக்கப்பட்ட கனவு கவிதைத் தொகுப்பு இலக்கிய உலகின் கவனத்தை பெறக்கூடிய வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. அதில் சில கவிதைகள் தலைப்பே இல்லாமல், படிப்பவர்களே தலைப்பை ஊகித்து கொள்ளும்படிக்கு விட்டிருப்பது சிந்தனையை இன்னும் செம்மையாக்குகிறது. அதிலிருந்து சில கவிதைகள்…

குடிநீர்
என எழுதப்பட்ட
தொட்டியின் குழாயில்
டம்ளரோடு
இழுத்துக்கட்டப்பட்ட
இரும்புச்சங்கிலி
அறிவிக்கிறது
நீ
திருடனென்று
***

பறை
இசை வாளின் உறை.
அடிக்க அடிக்க
காற்றின் கரத்தில்
சுழல்கிறது வாள்.
அதிகாரத்தின்
மூச்சுக்காற்று திணறுகிறது.
பதம் போதாதென்று
நெருப்பில் காய்ச்சப்பட்டு
முன்னெப்பொழுதைவிட
முன்னேறுகிறது
காற்றின் பிடறியேறி.
அதிர்கிறது
கோட்டை.
***
ஒளி புகும் சிறகுகள்
அடுக்குமாடி வீட்டின்
மூலையில்
சிலந்தி பின்னிய நூலாம்படை.
சில நாட்களுக்கு முன்னால்
பூக்களைத் தேடி வந்து
சிக்கிய தும்பியின்
மிச்சமிருந்த ஒளிபுகும் சிறகுகள்
அசைந்து கொண்டிருக்கின்றன
தென்றலை இழந்த
மின்விசிறிகளின் சுழற்சியில்.
***

எல்லோருக்குமான
வாழ்க்கைதான்
நமக்கும் என்றாகிறபோது
அர்த்தமற்றுப் போகின்றன
சிகரங்கள்.
***

அச்சத்தின் விரல்கள்
ரத்தம் குடிப்பதில்லை எறும்புகள்.
கவ்வுவதை கடிப்பதாக உணர்கிறோம்.
ஒரு வெல்லக்கட்டியைப்போல
நம்மை இழுத்துச் செல்ல
முயற்சிக்கின்றன எறும்புகள்.
நசுக்கி விடுகின்றன
அவகாசமும் வாய்ப்பும் மறுக்கிற
நம் அச்சத்தின் விரல்கள்.
***

வார்த்தைகள் போல
சிலநேரங்களில்
பீறிட்டுக்கிளம்புகின்றன
தோட்டாக்கள்.
தெருவெங்கும் ஆதிதொட்டு
உறைந்து கிடக்கும் ரத்தத்தை
துடைத்தெறிகிறது
அவ்வப்போதைய
நிவாரண நிதி.
இன்னும்
உறையவேண்டிய ரத்தத்திற்கு
மீண்டும் பளபளப்பாக்கப்படுகிறது
ஜாதித் துப்பாக்கிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *