நாகம்மையின் விரதத்தைக் கலைத்த இராமசாமி
– மதுமதி
இராமசாமிக்கும்
நாகம்மைக்கும்
திருமணம் நடந்தது;
தாயம்மைக்குள் நடந்த
போராட்டம் முடிந்தது;
தன் வழிச் செல்லும்
இராமசாமியை
உன் வழி அழைத்து வா
சொன்னது தாயம்மை;
தலையாட்டியது
நாகம்மை;
நல்ல மனையாளாக
முதலில் மாறிக்கொள்வோம்;
நல்ல மணாளனாக
அவர் மாறிக்கொள்வார்;
நாகம்மை
நினைத்துக் கொண்டார்;
மனதில் விதைத்துக் கொண்டார்;
பூப்பறிப்பது முதல்
பூசைக்கான வேலைகள் வரை
சமைப்பது முதல் பரிமாறுவது வரை பாகவதர்களை
உபசரிப்பது முதல்
பஜனைகளை பாடுவது வரை
தாயம்மையோடு சேர்ந்து பயணிக்கலாம்..
நாகம்மை முடிவெடுக்க
முடிவு ஆரம்பமானது.
தாயம்மையை
பிரதிபலித்தார் நாகம்மை;
உளம் சிலிர்த்தார் தாயம்மை;
இராமசாமியை பக்தியெனும் பரணில்
ஏற்றி வைக்க சரியானவள் என் மருமகள் .
தாயம்மை நினைத்தார்;
மூடநம்பிக்கைக்கு
முட்டுக்கட்டையாக இல்லாமல்
முட்டுக் கொடுப்பவளாக அல்லவா மனைவி நாகம்மை இருக்கிறாள் !.
இராமசாமி திகைத்தார்;
தாயம்மையின்
ஆச்சாரத்திற்கு துணைபோகும்
நாகம்மையின் அச்சாரத்திற்கு அணைபோட இராமசாமி முனைந்தார்;
திட்டங்களை வரைந்தார்;
விரத நாட்களிலும்
அசைவ சாப்பாட்டை சமைக்கச் சொல்லுவார்;
பஜனைகளைக் கேட்டுக்கொண்டே
எழும்புத்துண்டை
சுவைத்து மெல்லுவார்;
குழந்தை வரம் வேண்டி
விரதம் இருக்கும் நாகம்மையை
எள்ளி நகையாடுவார்;
கிள்ளி விளையாடுவார்;
இராமசாமி தொட்டது
தீட்டெனக் கருதி
நாகம்மை முகத்தைச் சுளிப்பார்;
இராமசாமியோ அதைக் கண்டு களிப்பார்;
இராமசாமியை
குளிக்க வைக்க நாகம்மை போராடுவார்;
குளிக்காமல் இராமசாமி தொட்டால்
மீண்டும் மீண்டும் நீராடுவார்;
கோபமடைந்த தாயம்மை
நாகம்மையின் விரதத்தை
கலைத்துக்கொள் என்றார்;
முடிவில் இராமசாமியே வென்றார்;
சூரியன் உதிக்கும்…