உருமாறும் தமிழ் அடையாளங்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்

மார்ச் 01-15

அடையாளம் என்பது நமது நிறைய நேரங்களில் நமது உரிமை இன்னும் சொல்லப்போனால் நம்முடைய தனித்துவம், இன்னும் சொல்லப்போனால் நம்முடைய மீட்பு, பல நேரங்களில் நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம் என்பது அரசியல், எல்லா வகையிலும் அடையாளம் என்பது தனித்துவமான செயல்பாடு. ஆனால் இந்த அடையாளம் காலம்காலமாக உருமாறிக்கொண்டே இருக்கிறது இல்லையா?  தமிழகத்தின் எந்த நூற்றாண்டிலும் ஒரு மனிதன் பிறந்திருந்தாலும், தன் காலகட்டத்தில், முந்தய காலக்கட்டத்தின் அடையாளங்களெல்லாம் கைவிடப்பட்டு மாறிக்கொண்டிருந்ததை பார்த்திருப்பான். ஒன்று அவன் உருமாறியிருப்பான் அல்லது, வைவிடாமல் இருக்கமாக, பற்றிக் கொண்டிருப்பான் அல்லது தத்தளித்திருப்பான்.

 

கடந்த 5-, 10 ஆண்டுகளாக நான் ஓர் ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்தேன். நான் வாசித்த தமிழ் இலக்கியங்களை, தமிழ் நிலப்பரப்புகளை, தமிழகத்தினுடைய பழமையான விஷயங்களை, நாமே ஏன் நேரில் போய் பார்க்கவே இல்லை. கொற்கையை, முசிறியை, வஞ்சியை, கொடுங்கலூரை, தமிழ்நாட்டினுடைய நான் தமிழ் இலக்கியங்களை வாசித்து தமிழ் இலக்கியம் எனக்கு கற்றுக்கொடுத்த ஒரு தமிழ் நிலப்பரப்பிருக்கிறதில்லையா, மூவேந்தர்கள் ஆண்டதாக சொல்லக்கூடிய அந்த நகரங்கள் தமிழகத்தினுடைய பண்டைய பெருமைகளைப் பற்றி சொல்லக்கூடிய, இடங்களுக்கெல்லாம் நாம் ஏன் நேரில் பார்க்வில்லை, தமிழ்நாட்டில் தானே குடியிருக்கிறேன். எனக்கு ஏன் கொற்கை தெரியவில்லை? எனக்கு ஏன் ஆதித்ய நல்லூருக்குப் போகவில்லை.

எங்கோ இருக்கிற நான் வந்து இமயமலைக்கு போயிருக்கிறேன். எங்கோ இருக்கிற வேற தேசங்களுக்கு நாடுகளை நோக்கியெல்லாம் போயிருக்கிறோம். என் அடையாளங்களை நான் ஏன் திரும்பிப் பார்க்கக்கூடாதா, ஓர் 10 ஆண்டுகாலமாக, ஒவ்வொரு இடத்திற்கும் 10, 20 முறை, வேறு வேறு நண்பர்களோடு வேறு வேறு துறை சார்ந்தவர்களோடு போயிருக்கிறேன். இப்படி போய் நான் பார்த்த, கொற்கையைப்பற்றி, ஆதித்தநல்லூரைபற்றி, பூம்புகாரையும் கொடுங்கலூரையும், முசிறியையும், கொடுமணத்தை, அறிக்கமேடை, மள்ளசமுத்திரத்தை, மாங்குடியை, இப்படி தமிழ்ஊறும் நல்லுலகம் கொண்டாடிய அந்த ஊர்களையெல்லாம் இப்போது என்ன அடையாளத்துடன் இருக்கின்றன. அந்த ஊர்களையெல்லாம் -ஏன் தமிழர்களே பார்ப்பதற்குத் தயங்குகிறோம். நம்மில் எத்தனை பேர் கொற்கையைப் போய் பார்க்கின்றனர். பாண்டியர்களைப்பற்றி பேசும் போதெல்லாம் பெருமைப்படுகின்றோம். பாண்டியர்கள் ஆண்ட இடம் பாண்டியர்களின் தலைநகரமாக இருந்தது கொற்கை என்கிறோம். கொற்கை, தூத்துக்குடி மாவட்டத்தில் தானே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் இரவு பயணம் செய்தால்போதும் விடிகாலையில் கொற்கைப் போய் இறங்கிவிடலாம். ஏன் தமிழ்மக்கள் தன்னுடைய அடையாளங்களை பாதுகாக்க மறுக்கிறார்கள். அடையாளங்களோடு தன்னை ஒப்புக் கொடுத்துக் கொள்வதில்லை, அல்லது அதுசார்ந்து இயங்குவதில்லை. கொற்கை என்கிற ஊருக்கு போறதுக்காக, பிரதான சாலையில் நின்று கொண்டு வழிகேட்கிறேன். அங்கிருந்து 4 மைல் தூரத்தில் அந்த ஊர் இருக்கு. அந்த பிரதான சாலையிலிருக்கக் கூடிய, ஒருவருக்குக் கூட அந்த ஊர் தெரியவில்லை.

சென்னையில் தெரியாவிட்டால் பரவாயில்லை. 4 மைல் தூரத்தில் இருக்கிறவங்களுக்கு தெரியவில்லை., அவங்க கேட்கிறாங்க, என்ன விசயமாகப் போறீங்க. 2 தான் அவர்களுக்கு அடையாளம். 1. ஜாதி, இந்த ஜாதியைச் சார்ந்தவரா நீங்கள். அங்கே மனம் உறவு இருக்கிறதா என்று, இன்னொன்று தேவாலயம். நீங்கள் அங்கிருக்கிற தேவாலயத்திற்கு, வழிபடப் போகிறீர்களா என்று, கேட்கிறார்கள். அது ஒரு பண்டைய நகரமில்லையா, தமிழர்களுடைய பெருமைக்குரிய அடையாளமில்லையா? அந்த அடையாளம் தமிழ்நாட்டில் இருக்கின்றபோது, தமிழர்களாகிய நாம் அந்த நகரத்தைப் பார்த்து, அங்கே என்ன இருக்கிறது? என்ன இல்லை? ஏன் இல்லை? என நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா, அப்படின்னு, நான் அந்த ஊருக்குப் போனேன். அந்த ஊரைப் பார்த்தேன். இப்படி என்னுடைய பயணங்கள். பயணத்தின் வழியாக நான் கண்ட உண்மைகள், ஒரு பக்கம். இன்னொரு பக்கம், தமிழர்கள் வாழக்கூடிய நாடுகளுக்கெல்லாம், கடல்கடந்து, 5 ஆண்டுகளாக போய்கொண்டிருக்கிறேன். அமெரிக்காவிற்கும், கனடா, பாரிசிலும், லண்டனிலும் இன்னும் சொல்லப்போனால், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, மலேசியா, சிங்கப்பூர், இங்கெல்லாம் தமிழ்க் குடும்பங்களோடு தமிழ் மக்கள், தமிழகத்திற்கு வெளியே, எப்படி வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது. எதை கைவிட்டிருக்கிறார்கள். எதை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

நான் சென்று தங்கிய தமிழ் குடும்பங்களிலெல்லாம் தமிழ்ப்பற்று இருக்கிறது. தமிழ் உணர்வு இருக்கிறது. ஆனால் அது அடுத்த தலைமுறைக்கு இருக்காதோ? என்கிற அச்சம் மேலதிகமாக இருக்கிறது. ஏனென்றால் அந்த வீட்டில் எந்த பிள்ளைகளுக்கும் தமிழ் தெரியாது. அதுவாக எனக்கு புரிகிறது. ஆஸ்திரேலியாவில் ஒருவர், பிள்ளையை தமிழில் பேசவைப்பது கடினம் என்று தமிழ்நாட்டில் ஏன் எல்லோருமே அதே நிலையில், வீட்டில் ஏன் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் போலவும் வீட்டு மொழியாக ஆங்கிலம் உருமாறிப் போய் வருவதும்தான் எனக்கு எழுத்தாளனாக கவலையும், அதிர்ச்சியும் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இவ்வளவு பெருமைக்குரிய ஒன்றாக, மொழியை, அதன் மரபை, நாம் நம் காலத்தில் இழக்கப்போகிறோமா, ஒரு தேசத்தி-னுடைய மொழி என்பது அதன் அடையாளமாக இல்லையா, ஒரு இனத்தினடைய மொழி என்பது அதன் சொத்தில்லை, எதனால் நம் பிள்ளைகள் தமிழ் பேச மறுக்கிறார்கள். அப்போ அவர்கள் சொல்கிறார்கள். ஒன்று எங்களுக்கு கற்பிக்கத் தெரியவில்லை. இன்னொன்று கற்பதால் பயனில்லை என்று நினைக்கிறார்கள். எப்படி இந்த சிந்தனை வந்தது. யோசித்துப்பாருங்கள் உலகிலேயே வேறு எந்த இனத்திற்கும் இதுபோல வந்ததே கிடையாது. அதனுடைய தாய்மொழியால் கற்றுக்கொள்வதால் அந்த வளர்ச்சிடைய மாட்டோம் என்று உலகில் எந்த இனமுமே, இதுபோன்ற ஒரு அவநம்பிக்கை கொள்ளவே இல்லை, பிரிட்டிஷ்காரர்களிடம் பேசியிருக்கிறேன். ஆஸ்திரேலியன்ஸ்ட்ட பேசுகிறேன், சைனீஸ், எந்த இனத்தவரிடம் பேசினாலும் அவர்களுடைய தாய்மொழியில் சிந்திப்பதனால், கற்றுக்கொள்வதால் தங்களுடைய அடையாளங்கள் அறிவு விஸ்தாரப்படும் என் நினைப்பதனால் தமிழ்மக்கள் தமிழ்மொழியில் பேசுவதால், கற்றுக்கொள்வதால், தமிழை வீட்டில் பழகுவதால் எதிர்காலம் இல்லை என நினைக்கக்கூடிய ஒரு காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலனியத்தினுடைய மாற்றத்தினால் நமக்கு, உணவில் உடையில் மாற்றம் வந்துள்ளது, நம்முடைய சிந்தனையில் அன்றாட செயல்பாடுகள் வரை மாற்றம் வந்துள்ளது. இன்றைக்கு பிரிட்டிசுடைய கல்வி முறை மிகப் பெரியளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. அவர்கள் தேசத்திலேயே அவர் கல்விமுறை செல்லுபடியாகவில்லை.  காலனியம் என்பது எவ்வளவு மோசமானது என்றால், இல்லாத எஜமானனுக்கு நாம் எப்போதும் அடிமையாக இருப்போம். எஜமானனும் இல்லாவிட்டாலும். அந்த உரிமையை ரத்து செய்துவிட்டாலும் நாம் அடிமையாக வாழ்ந்த அந்த நினைவுகளினுடைய தொடர்ச்சியாக நாம் அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், நம்மை எப்போது நம்மை பண்பாட்டு அடிமைகளாக மாற்றினார்கள்–? வெளிநாடுகளில் தமிழர்கள் எல்லோரும் இனரீதியாக ஒன்று சேர்கிறார்கள். தமிழர் திருவிழாவை கொண்டாடுகிறான் அங்கெல்லாம் தமிழ் என்று சொல்லும்போது, ஒரு பெருமை இருக்கிறது. அவர்கள் இந்த பெருமையை காட்டுவதற்கு எதை உதாரணமாக காட்டுகிறார்கள்.

நான் பொங்கல் விழாவில் கலந்துகொண்டேன் கனடாவில். எதைக் காட்டுகிறார்கள் என்றுக் கேட்டால் திரும்பவும் அவர்கள் சேர, சோழ, பாண்டியன் என்று ஈராயிரம் வருடத்திற்கு முந்தைய தமிழனைத்தான் அவர்கள் கருதுகிறார்களே தவிர, 10ஆம் நூற்றாண்டு தமிழனையல்ல, 8ஆம் நூற்றாண்டு தமிழனையல்ல. 19ஆம் நூற்றாண்டு தமிழனையல்ல. தமிழர்கள் ஏன் தங்களுடைய புராதன அடையாளங்களை மட்டுமே, தங்களின் பெருமைக்குரிய அடையாளமாக கருதுகிறார்கள்.
இத்தனை நூற்றாண்டுகள் நாம் மாறி வந்துவிட்டோம் இல்லையா! அதற்கப்புரம் நம்மை யார் யாரோ, ஆண்டுவந்தார்கள். கிட்டத்தட்ட, ஒரு விஜயநகரப் பேரரசு, நாயக்கர் ஆட்சி வந்ததற்கு பின்னாடி தமிழகத்தை தமிழ் மன்னர்கள்தான் ஆண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் முதல்முதலாக நடந்த மாற்றமே,விஜயநகர ஆட்சியின்போதுதான். தமிழர் அல்லாதோர் ஆட்சி தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது. ஏறத்தாழ 200 ஆண்டுகாலம். தமிழ்மொழியும் தமிழர்களும் அன்னியர்களால் ஆளத் தொடங்கினார்கள்.

கிருத்துவத்திற்கு முன்னாள்  500, 600 ஆண்டுகள் நமக்கு பாரம்பரியம் இருக்கிறது. இவ்வளவு பெரிய பாரம்பரியம் கொண்ட தமிழர்கள் தன்னை எந்த புள்ளியில் வைத்துக்கொள்கிறார்கள். எந்த பண்பாட்டின் தொடர்ச்சியாக கருதுகிறாக்ள் என்று பார்த்தால், அவர்கள் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களுடைய தொடர்ச்சியாக கருதுகிறார்கள். அப்போ நமக்கிருப்பது, நம்முடைய அடையாளங்கள் முக்கியமான அடையாளங்களாக இருப்பது வரலாற்று அடையாளங்கள். வரலாற்று அடையாளங்கள் என்றால் என்ன? நம்மை யார் ஆட்சி செய்தார்களோ, எவர் நம்மை, நில ரீதியாக பிரித்து நம் மக்களுடைய வாழ்க்கைக்கு போதுமானதான ஆதாரங்களைத் தந்து, இந்த வாழ்க்கையை முன்னெடுத்துப் போனார்களோ அவர்களை நம் வரலாற்று ரீதியாக முன்னோடியாகக் கருதுகின்றோம். பண்பாட்டு அடையாளமாக நம் தமிழர்கள் எதைக் கருதுகிறார்களோ, பண்பாட்டு அடையாளமாக தன்னுடைய உணவாகவும் இருக்கலாம். தமிழர் பழக்கவழக்கங்களாகவும் இருக்கலாம், தமிழர்களுடைய குடும்ப உறவுகளில் ஏற்படக்கூடிய சடங்குகளாகவும் இருக்கலாம், தமிழர்களுடைய குடும்ப உறவுகளில் ஏற்படக்கூடிய சடங்குகளாகவும் இருக்கலாம். எல்லா பழக்கத்திற்கும் தமிழன் இன்னும் பின்னாடி போய்விடுகிறான். சங்க காலத்தைத்தான் நம்முடைய அடையாளமாக கருதுகிறான். இன்றைக்கும் கூட ஒரு தமிழன், தமிழ்க் குடும்பத்தினுள் விழா எடுக்கிறதென்றால், உடனடியாக அந்த விழா எதனுடைய, தொடர்ச்சியாக இருக்குமென்றால், சங்க காலத்தினுடைய ஏதாவது தொடர்ச்சியாக இருக்கும், நான் சங்க காலத்தில் இருந்த 5 நிலப் பரப்புகளை தமிழ்நாட்டில் காண விரும்பினேன், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற 5 நிலங்களும் தமிழகத்தில் எங்கு இருக்கிறது? அப்படி இன்றைய தமிழகம் இல்லை, அன்றைய தமிழகத்தில் எந்த நூற்றாண்டில் தமிழகம் இருந்தது, நிலவியல் ரீதியாக பிரிக்கப்பட்ட தமிழகத்தின் பழந்தமிழகத்தைப் பார்த்தால். ஏதாவது மாவட்டத்தில் இவை அய்ந்தும் இருக்கும், இன்றைக்குக்கூட நாங்கள் வேடிக்கையாக சொல்வோம். எங்களுடைய இராமநாதபுர மாவட்டத்தில் இந்த 5-ம் இருக்கிறது.  முழுமையாகத் தமிழர்கள் இதுபோன்ற நிலப்பரப்புகளில் எங்காவது வாழ்கிறார்களா, இருக்கிறார்களா? தமிழனுடைய அடையாளங்களை இனி நாம் தமிழகத்தில் தேடக்கூடாது. தமிழகத்தின் அடையாளங்களை தமிழர்களின் வேர்களை இந்தியா முழுவதும் தேடவேண்டும், இந்திய முழுமையிலும் தமிழனுடைய வேர்கள் இருக்கிறது, அடையாளங்கள் இருக்கிறது.

குறிப்பாக நான் ஒரிசா மாநிலத்திற்கு சென்றேன். ஒரிசா மாநிலத்திலிருக்கக்கூடிய பூர்வகுடிகள் தமிழர்கள் என்று சொல்லப்படக்கூடிய பழங்குடி மக்களைப் பார்த்தேன். ஒரிசாவில் கோராபுட் என்ற மாவட்டம் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் அதிகமான பழங்குடியினர் வசிக்கிறார்கள். இதில் ஒரு பழங்குடியினர் தமிழ் பழங்குடியினர். அவர்களுடைய பூர்வீக மொழி தமிழ்மொழி. இங்கு அவர்களுக்கு மொழி இல்லை. ஆனால் அந்த மொழியைத் தொடர்ந்து, இன்னொரு மொழியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த மொழி அந்த இனத்தோடு பேசிப் பழகும்போது, அவர்கள் சொல்கிறார்கள். ஒரு பெண் பூப்படையும் வயதை அடைந்துவிட்டால், அதற்குப் பிறகு அவர் தன்னுடைய தாயோடு இருக்கமாட்டாள். அவளை கவனித்துக்கொள்வதற்கு செவிலித்தாய் இருப்பாள், அந்த செவிலித்தாய்தான் இனிமேல் அவளுக்கு எல்லாம். அவள் திருமணமாகிப் போகிற வரை அவர்தான் பொறுப்பேற்கிறார். அமந்த பொறுப்பேற்கக்கூடிய செவிலித்தாய் என்பவள், ஒருவருக்கல்ல அந்த ஊரிலிருக்கக் கூடிய, பூப்பெய்திய எல்லா இளம் பெண்களுக்குமே அவள் செவிலித்தாயாக இருப்பாள். இதே போலத்தான் ஆண்களுக்கும், ஒருவர் இருப்பார். இவர்களின் கட்டுப்பாட்டில்தான் பிள்ளைகள் இருப்பார்களே தவிர, பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் கிடையாது. இந்தப் பெண் ஒருவரை, யாரையாவது காதலித்தால் அவர் செவிலித்தாயிடம்தான் சொல்வாள். செவிலித்தாய் போய் சொந்தத் தாயிடம் போய் சொல்லி திருமணம் செய்து வைப்பார்கள் என்று சொன்னார். எனக்கு உடனே தோன்றியது. இதுதானே சங்க கால மரபு. இந்த மரபு ஒரிசாவில் பழங்குடி மக்களிடம் இருக்கிறது. இன்றைக்கும் செவிலித்தாய் இருக்கிறாள். ஆனால் தமிழ் நாட்டில் ஓர் நாகரீகம் இருந்து அழிந்து போய்விட்டதே! என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு மாநிலத்தில் அதே நாகரிகம் பழங்குடியினர் மத்தியில் இருந்து கொண்டிருக்கிறதென்றால் நாம் நம்முடைய மரபினுடைய தொடர்ச்சியை மிக விஸ்தாரமாக இந்தியா முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்பொழுதான் நம்முடைய பண்பாட்டை, பண்பாட்டுக் கூறுகளை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் 184 பெயர்களும் தமிழ்ப் பெயர்களில் உள்ள பெயர்கள், கொற்கை என்ற பெயரில் பாகிஸ்தானில், கிராமம் இருக்கிறது. இந்த பாதையில், இந்த புள்ளியில் இந்த கிராமம் இருக்கிறது. அந்த ஊருக்கு எத்தனை மைல் தூரம். நாம் செல்லலாம் என்று வரைபடத்தை அவர் காட்டுகிறார். இந்த கொற்கையை பார்க்கும்போது, ஆச்சரியமாக இருக்கிறது. கொற்கை அங்கே எப்படி போனது. சரி ஒரு ஊர் இருந்தால் பரவாயில்லை, தற்செயலாக ஒரு வணிகர் போயிருக்கலாம். வணிகம் செய்யப் போனவர், தான் தங்கி இருந்த இடத்திற்கு அந்த பெயரை வைத்திருக்கலாம் என்றால், 100-க்கும் மேற்பட்ட ஊர்கள், 100க்கும் மேற்பட்ட ஆட்களினுடைய பெயர்கள். தமிழகத்தை ஆண்ட பண்டைய மன்னர்களின் பெயர்களிலெல்லாம் அதே பெயர்களில், பாகிஸ்தானிலும் இருக்கிறது.

ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறதென்றால், தமிழினுடைய வேர்கள், தமிழருடைய வேர்கள், நாம் இதுவரை சரித்திரத்தில் படித்ததுபோல் இல்லாமல், இன்னும் மிகுந்து ஓடியிருக்கிறது, இன்னும் அகலமாக ஆழமாக நாம் ஆய்வு செய்ய வேண்டிய, குறைபாடு இருக்கிறது. இப்போதுதான் அதை தொடங்கி இருக்கிறோம் என்று தோன்றுகிறது. அப்படிப் பார்த்த தமிழரை தமிழனுடைய அடையாளங்களை நாம் ஆய்வு செய்யத் தொடங்கும்போது நமக்கு இரண்டு வகையான ஆய்வுகள் இருக்கிறது. நூற்றுக்கணக்கான புத்தகங்கள், துறைசார்ந்து வந்திருந்தாலும், எந்த புத்தகமும் முழுமையானதாக புத்தகம் அல்ல, எல்லா புத்தகமும் என்னைக் கேட்டால், பகுதி, பகுதியாக சிறந்தவைதானே தவிர, முழுமையாக இன்னும் தமிழில் வரலாறு ஒரு தனி நூலாக எழுதப்படவில்லை. இது வரலாற்று பூர்வமாக நிலவியல்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக தமிழன், தமிழினம், தமிழினம் வாழ்ந்ததினுடைய வரலாற்றுக்கான குறைபாடு என்றால், இதற்கு சாட்சியாக இருப்பது எது? இலக்கியம் இன்றைக்குக்கூட தமிழ் இன்னும் தன்னுடைய வரலாற்று அடையாளங்களுக்கு சாட்சியாக தன்னுடைய இலக்கியத்தைத்தான் அகநானூற்றில் சொல்லப்பட்டிருக்கிறது, புறநானூற்றில் குறிப்பிட்டிருக்கிறது, மணிமேகலையில் சொல்கிறார்கள். அவர்கள் சிலப்பதிகாரத்தைச் சொல்கிறார்கள் என்று சொல்கிறோமே தவிர, இந்த ஊர் கல்வெட்டில் இந்த ஊர் சான்றில், என்று குறிப்பிடுவது குறைவு. நாம் வரலாற்றுச் சான்றுகளாக இலக்கியத்தைத்தான் நாம் அதிகமாக குறிப்பிடுகின்றோம். சொல்லப்போனால் நிறைய தமிழ் மன்னர்களைப் பற்றி ஏன் நேரடி சான்றுகள் தமிழகத்தில் இல்லை, இருப்பவை எல்லாம் இலக்கிய சான்றுகள்தான். (சென்னை, பெரியார் திடலில் திராவிடர் வரலாற்று மய்ய நிகழ்ச்சியில் ஆற்றிய உரை)

தொடரும்…

தொகுப்பு : செல்வகுமார், பிரபாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *