அறிவு பிறந்த இடம் – புண்ணியஸ்தலம் அல்ல!
கடந்த இதழில் மருத்துவமனை திறப்புவிழாவில் கலைஞர் அவர்களாலும், அன்னை மணியம்மை அவர்களாலும் வெளியிடப்பட்ட இரண்டு பிரகடனங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்பிரகடன அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஓராண்டுகள் பெரியார் — அண்ணா நினைவகம் உருவாக்கப்பட்டிருப்பது பெரிதும் மழ்ச்சிக்குரியதே!
தந்தை பெரியார் அவர்களின் 97ஆவது ஆண்டு பிறந்த நாளன்று இந்த நினைவகத் திறப்புவிழா மிகச் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. தமிழ் நாடெங்குமிருந்தும் கழகத் தோழர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர்.
மாலை 5.30 மணிக்கு நினைவகத் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிகாந்தன் பாரதி வரவேற்புரை ஆற்றினார். உலகில் பல நாடுகளில் வெறும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மட்டுமே இருந்த நிலையில், இந்தியாவில்தான் சமுதாயத்தின் பிறவியிலேயே உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து சமுதாய நீதிக்கு முதல் குரல் இந்த ஈரோட்டிலிருந்தேதான் கிளம்பியது! என்று குறிப்பிட்டார்.
கழகத் தலைவர் அம்மா அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசுகையில், அறிவு பிறந்த இடமாக இந்த ஈரோட்டைக் கொள்கிறோமேயல்லாமல், மற்றபடி இதை ஒரு புண்ணியஸ்தலமாக அல்ல, என்று குறிப்பிட்டார்கள். மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் சாதிக்பாட்சா, கண்ணப்பன் ஆகியோரும் நானும் உரையாற்றியபின் நினைவகத்தைத் திறந்து வைத்து தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் தந்தையின் கொள்கைகளை முழக்கிச் சங்கநாதம் செய்ததோடல்லாமல் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் தன் நிலையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
அப்பொழுது அவர் கையாண்ட பருப்பு, உளுந்து, அகப்பை உவமை இலக்கிய நயத்தைவிட இலட்சியநயம் மிகுந்ததாகும்.
நான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற காரணத்தால் சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம். முதல்வர் அங்கே போகிறார், இங்கே போகிறார் என்று சிலருக்குச் சந்தேகம்! தோன்றுவது இயற்கை.
இரண்டு பெண்கள் அகப்பையை வைத்திருந்தார்கள் என்றால் ஒரு பெண் அகப்பையை வேகமாகச் சுழற்றினாள். அடுத்த பெண்ணின் கையிலிருந்த அகப்பையில் உளுந்தும், பருப்பும் இருந்ததால் மெதுவாக அசைத்தாள். அதைப்போல ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற காரணத்தால், நான் அகப்பையை மெதுவாக அசைக்கிறேன். அவசியம் ஏற்பட்டால் உளுந்தையும் பருப்பையும் கீழே கொட்டிவிட்டு, உங்களைவிட வேகமாகச் சுழற்றுவேன் என்று குறிப்பிட்டார். கலைஞர் இவ்வாறு பேசி முடித்ததும் கழகத் தலைவர் அம்மா அவர்கள் குறுக்கிட்டு, கலைஞர் அவர்கள் உளுந்தையும் பருப்பையும் கீழே கொட்டிவிட்டு அகப்பையை வேகமாகச் சுழற்றத் தயார் என்று குறிப்பிட்டார். நான் அவருக்கு ஒன்று தெரிவித்துக் கொள்வேன், அகப்பையை நீங்கள் மெதுவாகவே அசையுங்கள். உளுந்தையும் பருப்பையும் கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால்? அப்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள்.
இந்தப் பேச்சை மறுநாள் திருவண்ணாமலையில் அய்யா அவர்களின் சிலை திறப்பு விழாவிலே குறிப்பிட்டு, அய்யா அவர்கள் இருந்தால் எப்படி கருத்துத் தெரிவிப்பார்களோ, அதைப்போலத்தான் அய்யா அவர்களின் இடத்திலிருந்து அன்னையார் அவர்களும் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள் என்று கலைஞர் சுட்டிக் காட்டினார்.
நினைவகத் திறப்பு விழா முடிந்ததுதான் தாமதம் _ ஆயிரக்கணக்கானவர்கள் தாய்மார்களும், தோழர்களும் நீண்ட வரிசையாக அணிவகுத்து அய்யா_அண்ணா ஆகியோர் நினைவகத்தை இரவு நெடுநேரம் வரை பார்த்துக்கொண்டே இருந்தனர்.
எந்த அண்ணாவும் அவரது தம்பிமார்களும், பொருந்தாத் திருமணம் என்று கூறி, தந்தை பெரியார் அவர்கள் இயக்கத்தின் எதிர்காலம் கருதி திருமணம் என்ற பெயரால் தான் செய்வது ஓர் ஏற்பாடே என்பதை ஏற்றுக் கொள்ளாமல் வெளியேறி தனிக் கழகம் கண்டு, பிறகு அரசியல் கட்சியாக முடிவு எடுத்தார்களோ அவர்களே, அன்னையாரின் அளப்பரிய தொண்டு உள்ளத்தை _ தூய நற்பணியை _ தந்தை பெரியார் அவர்களது வாழ்நாளை நீட்டிப் பாதுகாத்த தொண்டூழியத்தைப் போற்றத் தவறவில்லை.
ஒருமுறை அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது _ (எப்போதும் நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 11 மணிக்குமேல் அவர்கள் தனிச் செயலாளர் திரு.கே சொக்கலிங்கம் அய்.ஏ.எஸ். அவர்களை வைத்து கோப்புகளைப் பார்த்து கையொப்பம் இடும் வேளையில்தான் எங்களை வரச்சொல்லி அய்யா அனுப்பிடும் முக்கிய தகவல்களைக் கேட்டுக் கொள்ளுவார்கள். (அந்த சிறப்பு நேரம் அவர்களாலேயே எனக்கு ஒதுக்கித் தந்த நல்லதொரு வாய்ப்பாகும்!) ஒருமுறை என்னிடம் கேட்டார்; விடுதலை நிர்வாகி நண்பர் என்.எஸ். சம்பந்தமும் என்னுடன் வந்து உடன் இருந்தார். ஏம்பா, அய்யா உடல்நிலை எப்படி உள்ளது? இந்த வயதிலும் இப்படி அவர் அலைய வேண்டுமா? நான் அந்த கடுமையான சுற்றுப் பயணம் கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, அவரது உடல் நலம் பற்றியும் மிகவும் கவலைப்பட்டேன் என்று ஆர்வமும் அதிகமான கவலை கொண்ட ஈடுபாட்டுடனும் கேட்டார்கள். அதோடு 30 ஆண்டுகளுக்கு முன்பு அய்யாவுக்கு அடிக்கடி வயிற்றுவலித் தொல்லை இருக்குமே, அது எப்படி உள்ளது? டாக்டர் குருசாமி முதலியார், டாக்டர் சடகோபனிடம்தான் போவார் என்றார். அதற்கு நான் அப்படி எந்த வயிற்றுவலியும் இல்லை அண்ணா, இப்போது அம்மா அவர்கள் உணவில் பக்குவத்தோடு சமைத்துக் கொடுப்பதும் அய்யாவைக் கட்டுப்படுத்தியும் வருவதால் அப்படிப்பட்ட பிரச்னை எதுவும் அய்யாவுக்கு இல்லை என்றேன்.
உடனே அண்ணா மகிழ்ந்து சொன்னார்; ஆம் அய்யா சிறு குழந்தைபோல் கண்டதையும் சாப்பிட்டுவிடுவார். மணியம்மையார் அவர்களது கண்காணிப்பு, பக்குவப்பட்ட உணவு சாப்பாடு மூலம் அதை அறவே போக்கிவிட்டார் என்றால் அவருக்குத்தான் அந்தப் பெருமை; நாம் நன்றிகூற வேண்டியவர்கள் ஆனோம்! என்று கூறினார்கள்.
அதுபோலவே தந்தை பெரியார் அவர்கள் இருந்திருந்தால் எப்படியெல்லாம் தி.மு.க.வுக்கு நெருக்கடி ஏற்படும்பொழுதெல்லாம், அதற்கு அரணாக இருந்து தோள்கொடுத்துக் காப்பாற்றியிருப்பார்களோ, அதேபோல அன்னையார் அவர்கள் தலைமையில் இயக்கம் இயங்கிய போதெல்லாம் உறுதுணையாக நின்றார்; அதற்காகவே கலைஞர் போன்ற தி.மு.க. தலைவர்கள் நன்றி உணர்வுடன் பாராட்டி மகிழவும் தவறவில்லை.
பொதுவாழ்வில் இது ஓர் அரியதோர் நிகழ்வு என்றே பதிவு செய்யப்படவேண்டும்.
இரண்டும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்தான் என்பதை இத்தகைய சம்பவங்கள் தெளிவாக நாட்டோருக்கு உணர்த்துகின்றன! ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ஜிலீமீ ஷ்லீமீமீறீ லீணீ நீஷீனீமீ ஷீ ணீ யீறீறீ நீவீக்ஷீநீறீமீ என்று. அதாவது சக்கரம் முழுச் சுற்றும் சுற்றி துவக்க இடத்திற்கே வந்து நின்றது என்பதே அதன் பொருள் ஆகும்; அதன்படி திருமணத்திற்கு முன்பு 1949இல் துவக்கம் எப்படி இருந்ததோ அதேபோன்று ஓர் அணியில் திராவிடர் இயக்கமும் அமைந்துள்ளது.
– நினைவுகள் நீளும்…