கேள்வி : இந்துமத சாமியார் ஆகவோ, மந்திரவாதி ஆகவோ, சோதிடன் ஆகவோ ஏதேனும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா? _ இ. கிருபாகரன், சோளிங்கர்.
பதில் : காவி உடை, சிலருக்குத் தாடி, அரை நிர்வாணம் அல்லது கோமாண்டித்தனம், (அதுவும் இல்லாமலும் வடக்கே கும்பமேளா சாமியார் பிரோமோஷன்) _ ஏமாற்றும் திறன், வாய்ஜாலம் _ இத்தியாதி இத்தியாதி தகுதிகளே முக்கியம்.
கேள்வி : பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை ஊழல் வழக்குகளின் கீழ் கைது செய்ய அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இலங்கையின் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகே அந்நாட்டு அரசால் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். இரண்டு நாடுகளிலுமே மக்களாட்சிதான் நடைபெறுகிறது. இந்த இரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். _ வி. சகாயராஜா, மங்களபுரம்
பதில் : அங்கே சட்டத்தின் ஆட்சி (பாகிஸ்தானில்) நடக்கிறது; இலங்கையில் இராஜபக்சேக்கள் திட்டத்தின் ஆட்சியல்லவா நடைபெறுகிறது! அவரும் அவரது குடும்பத்தவரும் வைத்ததுதான் அங்கே சட்டம், நீதி, ஒழுங்கு எல்லாம் அதிவேக நுனிக்கொம்பராகியிருக்கிறார்!
கேள்வி : கர்நாடக அரசிடம் பயிர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்ற தமிழக அரசின் முடிவு குறித்து? _ எஸ். உமா, பெரம்பலூர்
பதில் : தண்ணீர் தராத தாராள வள்ளல்களா இதற்கு மசிவர்; என்றாலும் முயலுவதில் தவறில்லை. முதலில் தமிழக அரசு தமிழக டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அறிவிக்கட்டும்!
கேள்வி : பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளையும் அகற்றி சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஆதினம் கோரிக்கை விடுத்திருப்பது ஆச்சரியமாக உள்ளதே? _ ஜி. சரசுவதி, கடலூர்
பதில் : பரிதாபத்திற்குரிய மதுரை ஆதினம் இருப்பதைக் காட்டுகிறார் என்று தெரிகிறது! முதலில் மடத்தைப் பார்க்கட்டும்.
கேள்வி : தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புக்களை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உறுதியான தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்தும் விக்கிரவாண்டி-_தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டிய பனையூர் சிவன் கோயிலை மத்திய மாநில அரசு அதிகாரிகள் அகற்றத் தயங்குவதேன்? பயப்படுவதேன்? _ எஸ். கோவிந்தசாமி, விழுப்புரம்
பதில் : உச்சநீதிமன்ற ஆணையை மதிக்காத அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்குத் தொடரலாமே நீங்கள்!
கேள்வி : கலப்புத் திருமணங்கள் எந்த சூழலில் வெற்றி பெறுகின்றன? எந்த நிலையில் தோல்வியைத் தழுவுகின்றன? _ தி. முருகன், கள்ளக்குறிச்சி
பதில் : இரு சாராரிடம் உள்ள புரிதல் உணர்வு மேலோங்கி, தன்முனைப்பு காணாமற் போகும் இடங்களில் வெற்றி; அவை கடைப்பிடிக்கப்படாதபோது தோல்வி. இதில் கலப்புத் திருமணங்கள் என்ற தனித்த விசேஷம் இல்லை.
ஜாதி வெறியர்கள் அச்சுறுத்தல், ஆவேசம், தற்கொலை மற்றும் கொலை மிரட்டல் _ பூச்சாண்டி சில நேரங்களில் காரணமாகலாம்.
கேள்வி : பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய _ அமெரிக்க -_ இஸ்ரேல் கூட்டுப்படை அமைக்கப்பட வேண்டும் என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் யோசனை ஏற்கத்தக்கதா?
_ அ. காவேரி, திருச்சி
பதில் : ஆபத்தான யோசனை, இந்திய சுதந்திர நாட்டினை பிற நாட்டிற்கு அடகு வைக்கலாமா? தவறான யோசனையும் கூட.
கேள்வி : மத்திய அரசின் சமீபத்திய நடுத்தர மக்களுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள் மதவாத சக்திகளை வெற்றிபெற வழிவகுக்கும் மோசமான போக்கு இல்லையா? _ கா. பாரிவேந்தன், காஞ்சி
பதில் : ஆம். காங்கிரஸ் ஆட்சி போலவே அய்க்கிய முற்போக்கு ஆட்சி அனுதினமும் மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.. வெகுமக்களைப் பற்றிய கவலை கொள்ளாத, ஏர்கண்டிஷன்ட் அறை மேதாவிகள், அறிவு ஜீவிகளின் கருத்தினை செயல்படுத்துவதால், மதவெறி சக்திகளுக்கு மகுடம் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும் ஆபத்து நெருங்குகிறது.
கேள்வி : திரைப்படங்களில் கருத்து சொல்வதற்கு வரைமுறைகள் ஏதும் இருக்கிறதா? _ மு. அன்வர், வளசரவாக்கம்
பதில் : கருத்தைக் கண்டு அஞ்சுவதைவிட கோழைத்தனம் வேறு கிடையாது. வரைமுறை கருத்துச் சுதந்திரத்தை குறுக்கக் கூடாத நிலையில் இருப்பதே நல்லது!
கேள்வி : ஈழத்தமிழர் வாழ்வை மலரச் செய்ய அடுத்தக்கட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும்?
_ ஆர். மலர்விழி, திசையன்விளை
பதில் : 04.02.2013 நடந்த கூட்டத்தின் டெசோவின் 9 தீர்மானங்களைப் படியுங்கள்; அதைச் செயல்படுத்த உளப்பூர்வமாக அனைவரும் ஓரணியில் திரண்டால் நிச்சயம் அவர்கள் வாழ்வு மெல்ல, மெல்ல, ஆனால் உறுதியாக மலரும்.