தெரியாததைப் பேசலாமா?
விஞ்ஞானம்பற்றிக் கருத்துக்கூறி அறியாமையைக் காட்டிக் கொண்ட இளையராஜா, 05.12.2012 தேதியிட்ட குமுதம் இதழில் மருத்துவம் பற்றிக் கருத்துக்கூறி தன் மேதா விலாசத்தைக் காட்டிக் கொண்டுள்ளார்.
எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் இருப்பதைப் போல், மருத்துவத்திலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் _ நீங்கள் _ பயன் அடைந்திருக்கிறீர்களா?
என்று வியாசர்பாடி எம். மோகன் வினா எழுப்ப, நம் அதிமேதாவி இளையராஜா அவர்கள் வழக்கம்போல் தத்துப்பித்தென்று பேத்து வைத்துள்ளார்.
இளையராஜா பதில்: பயன் இருக்கலாம் என்றாலும், மருத்துவ வளர்ச்சி இல்லாத காலத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்துவிட்டு, (மருத்துவ) வசதி வந்த நேரத்தில், நோயாளியாக வாழ்வதைப் பார்த்து என்ன சொல்வது? இதுதான் பயனா?
நம் உடம்பில் ஓடும் இரத்தம் முழுவதும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதிய இரத்தமாக மாறிவிடுகிறது. அது இயற்கையின் நியதி. 12 மாதங்களில் நான்கு முறை இந்த மாற்றம் வரும். காரணம், இயற்கையில் 4 பருவங்கள் மாறுவது நம் உடம்பும் இயற்கையோடு ஒட்டி, இந்த மாற்றத்தை தானாகவே ஏற்படுத்திக் கொள்கிறது! இதன்படி பார்த்தால், நம் உடம்பில் நோய் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. ஏனெனில் பழைய இரத்தம் மாறிவிடுகிறதே? ஒவ்வொரு பருவத்திலும் இயற்கையாக என்ன உணவு விளைகிறதோ அதை நாம் உட்கொண்டால் போதும். நோய் வராது. மாறாக நாம் உரம் என்ற பெயரில் _ கெமிக்கல் _ மருந்துகளால் விளைந்த தானியங்களையும் காய்கறி பழங்களையும் உண்கிறோம். அத்தோடு நாம் எடுக்கும் எல்லா மருந்து மாத்திரைகளுக்கும் ஒரு _ பக்க விளைவு (side-Effect) இருப்பதை உணராது அதையும் போட்டுக் கொள்கிறோம்.
அதற்கே பழகிப் போன நம் ரத்த அணுக்களுடைய பக்க விளைவுகளுக்குப் பழக்கப்பட்டு நோயை நிரந்தரமாக ஆக்கிவிடுகிறது. இதுதான் முன்னேற்றமா?
நம்முடைய மாற்றம் முக்கியமா? நமக்கு வெளியில் இருக்கும் மாற்றம்தான் முக்கியமா?
என்று கேள்வி கேட்டு தன் பதிலை முடிக்கிறார்.
நம் உடலில் ஓடும் இரத்தம் முழுவதும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதிய இரத்தமாக மாறிவிடுகிறது. அது இயற்கையின் நியதி என்கிறார் இளையராஜா.
எங்கோ அரைகுறையாகக் கேள்விப்பட்ட செய்தியை, மருத்துவ மாமேதையைப் போல தன்னை எண்ணிக் கொண்டு பிதற்றியுள்ளார். தனக்குத் தொடர்பில்லாத, தான் அறியாத துறைகளில் அதிமேதாவியைப் போல கருத்துக் கூறுவது இழிவையே தரும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
இரத்தம் என்றால் என்ன? அது எவற்றால் ஆனது? அவற்றை சுத்தம் செய்யும் உறுப்புகள் எவை? என்று எதையும் அறியாது கருத்துக் கூறியுள்ளார்.
இரத்தத்தில் 1. வெள்ளை அணுக்கள், 2. சிவப்பு அணுக்கள், 3. பிளாட்லெட்ஸ் என்ற மூன்று முதன்மை அணுக்கள் உள்ளன. அங்ககம், அனங்ககம் என்ற இருவகை பொருள்கள் உள்ளன.
புரோட்டீன், ஹார்போஹைட்ரேட், கொழுப்பு போன்ற அங்ககப் பொருட்களும் (Organic); சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னிசியம் போன்ற அனங்ககப் (Inorganic) பொருட்களும் உள்ளன.
இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களில் 1. நியூட்டோபில் 2லு நாட்களுக்கு ஒருமுறையும், 2. ஈஸ்னோபில் 7 முதல் 12 நாள்களுக்கு ஒருமுறையும், 3. பாஸோபில்ஸ் 12 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறையும், 4. மோனோசைட்ஸ் 2 முதல் 5 நாள்களுக்கு ஒரு முறையும், 5. லிம்போசைட்ஸ் லு முதல் 1 நாளுக்கு ஒரு முறையும் (அதாவது ஒவ்வொரு நாளும்), தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன.
சிவப்பு அணுக்கள் 120 நாள்களுக்கு (நான்கு மாதங்களுக்கு) ஒரு முறையும், பிளாட்லெட்ஸ் 8 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும் தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன.
ஆக, இரத்தத்தில் உள்ள மூன்று முக்கிய பொருட்களும் ஒவ்வொரு நாளும், 2 முதல் 120 நாள்களுக்கு ஒருமுறையும் புதுப்பித்துக் கொள்கின்றன. அதாவது இது ஒவ்வொரு நாளும் நடைபெறும். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்து கொண்டிருக்கையில், ஏதோ தண்ணீர் தொட்டியில் தொட்டியைக் கழுவி புதுத் தண்ணீர் விடுவது போல புது இரத்தம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வதாக பிதற்றியுள்ளார்.
மேலும் இரத்த சுத்தம் என்பது உயிர்வளி (ஆக்ஸிஜன்) உதவியால் ஒவ்வொரு நொடியும் நடந்துகொண்டுள்ளது.
எலும்பு மஞ்சையில் உற்பத்தியாகும் இரத்த செல்கள் மற்றும் உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, கொழுப்பு போன்ற பொருட்கள் கணையம் போன்ற உறுப்புகளால் பராமரிக்கப்படுகின்றன. கணையம் கெட்டுப் போனால், அல்லது இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டால், இரத்தத்தில் சர்க்கரை மிகும். இப்படி பல உறுப்புகளின் பங்கு இரத்த சுத்தத்திற்கு ஒவ்வொரு நொடியும் கட்டாயம். அப்படியிருக்க, இரத்தம் 3 மாதத்திற்கு ஒரு முறை உடலில் புதிதாய் வருவதால் நோய்வர வாய்ப்பே இல்லை; இரசாயனப் பொருள் கலந்த காய்கறி, உணவுப் பண்டங்களாலேதான் நோய் வருகிறது என்கிறார்.
நோய் வருவதற்கு இரசாயனப் பொருட்களும் காரணம் என்றாலும் அவையே அனைத்து நோய்களுக்கும் காரணம் அல்ல. இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் வருவதற்கு முன்னும் எல்லா நோய்களும் இருந்தன. எனவே, இரசாயனம் மட்டும் காரணம் அல்ல. இரசாயனங்கள் தவிர்க்கப்பட்டு இயற்கை உரங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதும், மரபணு மாற்று உணவுப் பண்டங்கள் உடலுக்குக் கேடு என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக அவையே காரணம், மருத்துவத் துறையே தேவையில்லை என்பது அறியாமையின் விளைவு அல்லவா?
இயற்கையாய் விளையும் உணவுகளையே உட்கொண்டால் நோய் வராது என்பதும் தவறான கருத்து. செயற்கை உணவால் வரும் நோயின் அளவு குறையும் என்பதே உண்மை.
இரத்தத்தில் உள்ள பொருள்கள் ஒவ்வொரு நாளும் அல்லது வாரம் ஒருமுறை அல்லது 4 மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்வதால், நோய் வராமல் இருக்காது. நோய் வருவதற்கான காரணங்கள் வேறு.
நாம் சரியாக இருந்தாலும் கொசுவாலும், புகையாலும், கழிவுகளாலும், தொற்றாலும் நோய் வருவதை எப்படித் தடுக்க இயலும்? இயற்கையிலே இதயத்தில் ஓட்டை போன்ற நோய்கள் வருவதை என்ன செய்ய இயலும்?
பக்க விளைவுகள் மாத்திரைகளால் வருவதால் மருந்தும், மருத்துவமும் வேண்டாம் என்பது அறியாமையல்லவா?
மின்சாரம் தாக்குகிறது. அதற்காக மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? நோய் குணமாக வேண்டுமா? உயிர் காக்கப்பட வேண்டுமா? என்று வரும்போது பக்க விளைவுகளை பார்த்தால், ஆளே போய்விடுவானே!
பக்க விளைவுகளை குறைக்க முயலவேண்டும்; செயற்கை உணவுகளை தவிர்க்க வேண்டும், இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும், புகை, மது, போதை போன்றவற்றைத் தொடக்கூடாது, ஒழுக்கமும், கட்டுப்பாடும் அவசியம், உடற்பயிற்சியும், உடலுழைப்பு கட்டாயம் என்று கருத்துக் கூறினால் அது அர்த்தமுள்ள அறிவுரை. அதை விடுத்து மருத்துவமே வேண்டாம். மருத்துவம் வராத காலத்தில் நன்றாக இருந்தோம், மருத்துவம் வந்த பின்தான் எல்லா நோயும் வருகிறது என்பது புரியாமை; அறியாமை; அறைகுறைச் சிந்தனை.
மருத்துவமும், மருத்துவமனைகளும், மருத்துவர்களும் இல்லையென்றால் எப்படியிருக்கும்? கற்பனை செய்தால் அப்போது புரியும். புதுமையாய் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் பிதற்றக் கூடாது; தெரியாத துறைகளைப்பற்றி தெரிந்தவர்போல் பேசி இழிவைத் தேடக்கூடாது. இளையராஜாக்கள் இசைப்பற்றி, சாதிப்பதுபற்றி பேசினால் நன்று.
– மஞ்சை வசந்தன்