அப்பொதும்…. அது இப்போதும்….
கடந்து சென்றிருக்கிறேன்,
கல்லுரி நாட்களில் வழிநெடுக
பல கடவுளர் ஆலயங்களை.
பத்துக்கல்
இடைவெளிக்குள் பத்துக் கோயில்கள்;
அந்தப் பத்தும்
அப்போது கிழவி;
இப்போது அழகி.
எல்லாமே இழந்து
சாகக் கிடந்த நோயாளியாய்,
இடிந்து விழுவதற்கு
அவை
நாட்களை எண்ணிக்கொண்டிருந்தன.
சுவரில்
பூச்சுச்சதைகள் உதிர்ந்து
காச நோயாளியாய்
கல் எலும்புகள் தெரிந்தன.
பரமன் இடங்களில்
பரதேசிகள் படுத்துக் கிடந்தனர்.
அதிதுயிலில் ஆலய மூலையில் அன்னக்காவடிகள்.
சாலையோரம்
உள்ளிழுக்கப்பட்ட சில கோயில்கள்,
வழிப்போக்கருக்கு
ஒதுக்குப்புற கழிப்பறையானது.
பிச்சைக்காரர்கள்
அங்கு இல்லறத்தை இனிதாக்கிய வேளைகளில்
இறைவன்
தலையிட்டு, தடையிட்டு
எந்தத் தாக்கீதும் அனுப்பியதில்லை.
திரைப்படம்
இரண்டாம் ஆட்டம் பார்த்துவரும்
கிராமத்து ஜோடிகளின்
திருட்டு உறவுக்கு
ஆலயங்களின்
இருட்டுக் கதவுகள் திறந்தே இருந்திருக்கின்றன.
உடல் பசியின்
பகல் விருந்துகளுக்கும்
இடிந்த கோயில்
இடிந்து போனதில்லை.
பகலும் இரவும்
கள்ளச் சாராய விற்பனை
அங்கேதான் களைகட்டும்
அந்தக்காலம்.
ஆலயம்
சமூக விரோதிகளின் சரணாலயம்.
வடக்கே பாபர் மசூதியில் ஒருகால்;
தெற்கே
இராமர் பாலத்தில் ஒருகால்;
கவுட்டி கிழிந்த
கவிச்சு வாடைக் கும்பல்
அரியணையில்
கொஞ்சகாலம் ஆலாபனை செய்தபோது
அனைத்துக் கோயில்களும்
மறுபடியும்
அரிதாரம் பூசிக்கொண்டன.
வரிப்பணத்தில் வரிந்து கட்டிக்கொண்டு
வழிப்பறி செய்யத் தொடங்கிவிட்டன
பழைய கோயில்கள்
புதிய முறுக்கோடு.
கொடுக்காத கடனுக்கு
கொலை;
பிணத்தைத் திணித்துக் கொண்டே கோயில்
இப்போது குபேரன் வழிபட்டதலம்
கடத்தி வரப்பட்ட கன்னிகள்
காமுகர்களால்
கதறக் கதறக் கற்பழிக்க…
இடம்தந்து இருட்டாய் நின்ற கோயில்;
இப்போது
திருமணம் முடிக்கும் தலம்
திருவிழாவில்
பெற்ற பிள்ளை காணாமல் போக
பைத்தியம் பிடித்து தாய் திரிந்த இடம்
பிள்ளை வரம் தரும் தலம்
இப்படியாய், இப்படியாய்…
புதுப்பித்த பழைய ஆலயங்களில்
புதிய அய்தீகத் திணிப்பு.
மனித தர்மத்தை மறந்த ஆரியம் –
சட்டப்படி, நியாயப்படி, தர்மப்படி தான்
மனுதர்மத்தை நிலைநிறுத்தும்.
ஆலயப் புதுப்பிப்பில்
அர்ச்சகர்களுக்கு வேலை.
மடத்தமிழன் மதி
மந்திரங்களால் மகிமைபடுத்தப்படுகிறது.
அதோ
எல்லாக் கோயில்களிலும்,
கடவுளரை வாழவைக்க
எண்ணிக்கையில் அதிகமாய்,
பெண்கள் கிளம்பி விட்டார்கள்.
கையில் அர்ச்சனைத் தட்டுகளோடு.
– முனைவர் சு.பொன்னியின் செல்வன்,
தஞ்சாவூர்