இந்திய தத்துவங்களில் கடவுள் மறுப்பு – 6

பிப்ரவரி 16-28

யோகாவில் கடவுள் உண்டா?

– சு.அறிவுக்கரசு

சாங்கியம்

ஆத்திகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சாங்கியம் கபிலர் என்பவரால் வகுக்கப்பட்டது. இந்தக் கபிலரை கபிலமுனி ஆக்கி, சாங்கியத் தத்துவங்களைச் சிதைத்துத் திருத்தி இடைச்செருகல்களைச் செய்து ஆத்திகப் பட்டியலில் வைத்துக் கொண்டுள்ளனர் வேதமோதிகள்.

பாதராயணன் எழுதிய பிரம்ம சூத்திரமும் அதற்கு உரை எழுதிய ஆதிசங்கரனும் சாங்கியத் தத்துவமானது லோகாயதம் போலவே பொருள்முதல்வாதக் கொள்கை கொண்டது என்றே குறித்துள்ளனர். ஆதிசங்கரன் சாங்கியத்தை கபிஸ்யதந்த்ரம் (கபிலருடைய தாந்த்ரீகம்) என்றே குறிப்பிடுகிறார்.

சாங்கியம் கடவுள் மறுப்பைக்  கொள்கையாகக் கொண்டிருக்காவிட்டால், பாதராயணர் தாம் எழுதிய பிரம்மசூத்திரப் பாடல்கள் மொத்தம் 555இல் 60 பாடல்களை சாங்கியத்தைத் தாக்குவதற்காகவே எழுதியிருக்க மாட்டார். இந்தப் பிரம்மசூத்திரம் பொது ஆண்டுக்கு (கி.மு.) 200 ஆண்டுகளுக்கு பின்பும் பொது ஆண்டுக்கு (கி.பி.) 200 ஆண்டுகளுக்கு முன்பும் இருந்த (இடைப்பட்ட) 400 ஆண்டுகளில் எழுதப்பட்டது என்கிறார்கள். ஆக, குறைந்தது 1800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்றாலும் சாங்கியத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது கடவுள் மறுப்புக் கொள்கையினால்தான்.

லோகாயத நூல்களையும் சார்வாக நூல்களையும் இல்லாமல் செய்ததைப் போலவே, சாங்கிய நூல்களையும் அழித்து ஒழித்துவிட்டனர். ஒழித்துவிட்ட பின்னரும் அக்கருத்துகளை மறுக்க நேரிட்ட கட்டாயத்தில் பரபக்கவாதமாக எடுத்து வைத்துள்ளவற்றிலிருந்து அந்தத் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளமுடிகிறது.

அந்த அடிப்படையில் பிரம்ம சூத்திரத்தில் சாங்கியம் பிரதானவாதம் அல்லது பிரதான காரணவாதம்  எனப்படுகிறது. வேதமோதிகளின் கருத்துப்படி பிரம்மம்தான் முதல்காரணம். எனவே பாதராயணர் சாங்கியத்தின் முதல் காரணம். என்பதாகிய பொருள்முதல்வாதத்தினை மறுக்க வேண்டியிருந்தது. சாங்கியத்தை மறுக்கும் 60 சூத்ரங்களில், முப்பத்து ஏழு சூத்திரங்களை சாங்கியத்தின் வேதவிரோதக் கருத்துகளை எதிர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார். வேதமோதிகள் சாங்கியக் கருத்துகளால் எவ்வளவு பலவீனப்பட்டுப் போயிருந்தனர் என்பதை இதன்மூலம் விளங்கிக் கொள்ளலாம். சாங்கியக் கொள்கைகளை ஆதிசங்கரன் வேத விருத்தா (வேதங்களுக்கு எதிரானவை) என்கிறார். வேதானுகரி மனுவசன விருத்தகா (வேதங்களைப் பின்பற்றிய மனுவின் கருத்துக்கு எதிரானவை) என்கிறார். வேத, வேதே, லோகேவ, உபலபந்தே (வேதங்களாலோ, அனுபவங்களாலோ நிருபிக்கப்படாதவை) என்கிறார்.

ஆதிசங்கரனின் அத்வைதத்திற்கு எதிராக விசிஷ்டாத்வைதத்தைக் கூறிய ராமானுஜன் சாங்கிய எதிர்ப்பில் ஒன்றுபடுகிறான் _ வேதங்களுக்கு எதிரான கொள்கையைக் கொண்டுள்ள கபிலரின் கருத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பது ராமானுஜனின் கூற்று. எதற்காகவாம்?

சாங்கியப் போதனைகளில் இந்த உலகுக்கு அப்பாற்பட்ட கடவுள் கூட்டம் என்பது எதுவும் கிடையாது கார்பே எனும் அறிஞர் சாங்கிய நூல்கள் பற்றி ஆய்ந்து எழுதிய ஜிபிணி ஷிகிழிரிசீகி றிஸிகிக்ஷிகிசிபிகிழிகி ஙிபிகிஷிசீகி எனும் நூலில் இவ்வுலகம் பற்றியும் உயிர்கள்பற்றியும் அறிவுப்பூர்வமாக விளக்கிட மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி சாங்கியம் ஆகும். இத்தத்துவம் நாத்திகம் மட்டுமல்ல, வேதங்களையும் எதிர்க்கும் தத்துவம் ஆகும் என்று தொடக்ககால சாங்கியம் பற்றிக் குறிப்பிடுகிறார். இன்றைய சாங்கிய நூல்களில் திணிக்கப்பட்ட வேத அடிப்படைக் கருத்துகளும் ஆஸ்திகக் கொள்கைகளும் அண்மைக் காலத்தில் செருகப்பட்டவை.

தொடக்க சாங்கியத்தின் கொள்கைகள்: பிரம்மத்தை எதிர்த்து ஆத்மாவை மறுத்தது. இயற்கைப் பொருள்கள் முதலில் தோன்றின. சத்துவம் (ஆரம்பக் கரு), ரஜஸ் (இயங்கும் சக்தி), தமஸ் (இயக்கமற்ற ஜடப்பொருள்) ஆகிய மூன்றும் இணைந்தது பொருள். ஒவ்வொரு கணமும் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக படிநிலை வளர்ச்சி (பரிணாமம்) ஏற்படுகிறது. அதன்வழியாக பிரபஞ்சம் உருவானது. (பிரபஞ்சத்தை ஒருவன்/கடவுள் உருவாக்கவில்லை) பொருள்கள் எப்போதும் அசைந்து கொண்டே இருக்கின்றன. வேதமறுப்புத் தத்துவங்கள் எனப்படும் கடவுள் மறுப்புத் தத்துவங்களான லோகாயதம், பவுத்தம், சமணம் ஆகியவற்றிற்கு மூலத் தத்துவமே பண்டைய சாங்கியம் என உறுதியாகக் கூறலாம். ஆனால் இன்றைய சாங்கியம் வேதமோதிகளின் சதிச் செயலால் ஏற்படுத்தப்பட்ட ஹம்பக் (பிஹிவிஙிஹிநி). வேதமோதிகளின் ஆதரவைப் பெறுவதற்காகவும் அவர்களின் நூல்களைப் போன்றதே சாங்கிய நூல்களும் என்கிற திருப்தியைப் பெறவும் சாங்கிய நூல்களில் திரிபுகள், திருத்தங்கள் செய்தனர்.

நிரந்தரமான விடுதலை (நித்திய சுத்தமுக்தி) ஆத்மாவின் தன்மை போன்ற வேதக் கருத்துகளை சாங்கியக் கருத்துகளுடன் வலிந்து இணைத்தனர். வேதமோதிகள் துதிபாடினர். தூக்கிவைத்து ஆடினர். ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

சாங்கிய தத்துவம் முழுக்க முழுக்க பகுத்தறிவுத் தன்மை உடையது என்பார் கார்பே. ஆதிசங்கரன் குருதரதர்க்கவாலா எனக்கூறி அதனை ஆமோதித்து உள்ளார். இந்தப் பகுத்தறிவுவாதத்தை எதிர்ப்பதற்கென்றே தனி சூத்திரத்தை பிரம்ம சூத்திரத்தில் எழுதிவைத்தனர் என்று ஆதி சங்கரன் குறிப்பிடுகிறான். மூல சாங்கிய நூல்கள் இல்லாத நிலையில் வேதமோதிகளின் எதிர்வாதக் கருத்துகளில் மேற்கோள் காட்டப்பெற்ற தத்துவ வரிகளின் அடிப்படையில் பார்த்தால், சாங்கியம் வேதமோதிகளை எதிர்த்துக் கடவுள் மறுப்புவாதத்தை நிலைநிறுத்திய பண்டைய தத்துவம் ஆகும்.

யோகா

இயற்கைச் சக்திகளுக்கும் மனித உடலில் உள்ள சக்திகளுக்கும் உள்ள உறவுகளை அறிந்து சில நடைமுறைகளை உருவாக்கிக் கட்டுப்படுத்த உதவும் செய்முறைகள்தாம் தந்திர சாதனை என்கிறார்கள். இதனை வேதமோதிகள் தாந்திரீகம் எனப் பெயரிட்டு அதர்வண வேதத்தில் இடம்பெறச் செய்தனர். காலத்தால் மிகமிகப் பின்தங்கிய வேதம் அதர்வணமாகும். தேக தத்துவம் அல்லது உடலைப் போற்றுதல் என்பதே பொருளாகும். எல்லா உளப் பயிற்சிகளுக்கும் அடித்தளம் உடலே என்பது வலியுறுத்தப்படுகிறது. உடம்பு அழிந்தால், உயிர் அழியும். எனவே உடம்பைப் பேணுதல் உயிரை வளர்க்கும் முறை என்கிறார்கள். ஒரு வகையில், காயமே இது பொய்யடா எனும் மாயாவாதத்திற்கு விடப்பட்ட அறைகூவல். ஆய்வாளர்கள் இதனை ஒருவகையில் மெட்டீரியலிசம் (பொருள்முதல்வாதம் -_ லோகாயதம்) என்போரும் உண்டு. அதனால்தானோ என்னவோ, இந்தப் பொருள்முதல்வாதத்தினை ஆன்மீகம் கலந்து கூறும் முயற்சிகளும் வேதமோதிகளால் எடுக்கப்பட்டது.

தந்திரமுறைகளிலேயே தந்திரம் செய்தவர்கள் பதஞ்சலி என்பவரைக் கொண்டுவந்து நிறுத்தி இவர்தான் யோகமுறையைக் சொல்லிக் கற்பித்தவர் என்றனர். பதஞ்சலி யோகா என்று அவர் பெயருடன் இணைத்தே சொல்லத் தொடங்கினர். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகத்தின் தொட்டிலான மொகன்ஜதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியின் விளைவாகக் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் யோகா பயிற்சியில் ஈடுபடும் உருவங்களும் அடக்கம். இந்நிலையில் 1900 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் எனப்படும் பதஞ்சலி இதன் தந்தை என்றால் ஏற்க எப்படி முடியும்? வேதமோதிகளின் எதையும் தமதாக்கிக் கொள்ளும் தன்மைக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு என்றே கூறவேண்டும்.  சாங்கியத் தத்துவத்துடன் தொடர்பு உடையதாக யோகா இருக்கிறது. பதஞ்சலி எழுதிய யோக சூத்திரம் நூலில் ஒவ்வொரு பகுதியின் இறுதியில் சாங்கிய முறைப்படி கூறப்பட்ட யோக முறைகள் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. எனவே சாங்கியம் போலவே யோகாவும் வேதமோதிகளின் கருத்துகளுக்கு எதிரானதே! இந்திய தத்துவ ஞான இலக்கியங்களை ஆய்ந்த அறிஞர் இங்கிலாந்து நாட்டவரான கார்பே கூறும்போது, வேதமோதிகளின் கூட்டத்தைத் திருப்திப்படுத்தி, சாங்கியத் தத்துவத்தின் கடவுள் மறுப்புத் தத்துவத்தைப் பரப்புவதற்காக யோக சூத்திரத்தில் கடவுள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. என்றாலும் யோகாவில் குறிக்கப்படும் கடவுள் உலகைப் படைத்து அல்ல, அதன் இயக்கத்திற்குக் காரணமானது அல்ல, மனிதர்களின் செயல்களுக்குப் பொறுப்பானதும் அல்ல, தவறுகளுக்கு மனிதர்களுக்குத் தண்டனை தருவதோ, நல்ல செயல்களுக்காக வெகுமதி அளிப்பதோ கிடையாது. ஆகவே, சர்வசக்தி படைத்த, சகலமும் அறிந்த, எங்கும் நிறைந்திருப்பதாகக் கதைக்கப்படும் கடவுள் யோகா நூல்களில் இல்லை என்றே தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

கடவுள் மறுப்புத் தன்மையை மறைத்து, மயங்கச் செய்து, பரப்பும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம்! யோகா என்பது தனி தத்துவம் அல்ல. சில செய்முறைப் பயிற்சிகளைத் தெரிவிப்பது மட்டுமே. இதன்மூலம் கடவுளை  அடையலாம் என்பது கிடையாது.

பதஞ்சலிகூட, யோக சூத்திரத்தில் யோகா எட்டு அம்சங்கள் உண்டு என்கிறார். அவற்றில் எதுவும் மனிதர்களைக் கடவுளிடத்தில் அழைத்துப் போகும் வண்டிகள் அல்ல.

1. எம (அடக்கம்), 2. நியம (கட்டுப்பாடு), 3. ஆசன (யோக முறையில் உட்காருதல்), 4. பிராணாயாமம் (மூச்சைக் கட்டுப்படுத்தல்), 5. பிரத்தியாகார (புலனறிவை மறக்கடித்தல்), 6. தாரண (கவன ஈர்ப்பு), 7. தியான (தியானம்), 8. சமாதி (சமாதி)

தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்தல். சமாதி என்பது புலன்களை அடக்கி ஒருவழியிருத்தல். அவ்வளவே!

பதஞ்சலி இவ்வளவு எளிதாக யோகாவை விட்டுவிட விரும்பவில்லை. ஆசன முறைகளைப் பயில்பவர்க்கு விபூதி எனும் அமானுஷ்ய சக்தி பிறக்கும். இந்தச் சக்தி கைவரப் பெற்றுவிட்டால் இயற்கையை வெல்லலாம்; அவர் சொல்படியே இயற்கை செயல்படும் என்றெல்லாம் புளுகி வைத்துவிட்டான். கடலில் நடக்கலாம், நெருப்பில் நனையலாம் என்பன போன்ற கதைகளைக் கட்டிவிட்டான். அவற்றை எடுத்துக்கூறி மக்களை ஏமாற்றிப் பல யோகா குருக்கள் பிழைக்க வழிசெய்துவிட்டான். இந்திரா காந்தி காலத்து தீரேந்திர பிரம்மச்சாரி முதல் பலப்பல அயோக்கியர்கள் இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து சேர்க்கக் காரணமாக இருந்தது இந்தப் புளுகுதான். இந்தக் காலத்து பாபா ராம்தேவ், பாபநாசப் பார்ப்பனன், வாழும் கலை ரவிசங்கர் போலப் பல எத்தர்கள் உருவாக இந்தப் பொய்தான் அடிப்படை.

இந்த வகை யோகாப் புளுகர்கள் அனைவரும் பிதற்றுவது குண்டலினியை எழுப்புதல் என்பதாகும். மூச்சை அடக்குதல் போன்ற பலமுறைகளின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்ப முடியுமாம். குண்டலினி என்றால், சுருண்டு கிடக்கும் பெண்மை எனப் பொருள். இது மலவாயின் மேல்புறத்தில் உள்ளதாம். சித்ரினி (பெண்மையின் ஏழு சக்திகளில் மய்ய சக்தி) குண்டலினியை மூளையை நோக்கிச் செலுத்த வேண்டும். பெண்மைச் சக்திகளில் (சுகம்னா என்கிறார்கள்) உச்சத்தில் இருக்கும் சக்தி, சகஹஸ் தன பத்மம் என்பதாம். இதன் பொருள்: ஆயிரம் இதழ் தாமரை என்பதுதான். அங்கே கொண்டு போய் குண்டலினியை நிறுத்தவேண்டும்.

அலங்காரச் சொற்களையெல்லாம் நீக்கிவிட்டுப் பார்க்கலாம். பெண்மையைக் கிளர்ந்து எழச் செய்யவேண்டும். ஆசனவாய்க்கு மேல் இது இருக்கிறதாம். அதனை எழுப்பி, ஒவ்வொரு கட்டமாக உயர்த்தி உச்ச நிலைக்குக் கொண்டு போகவேண்டும் என்பதுதான் பாமர மொழியில் சொல்லப்படும் குண்டலினி யோகா. இதன் விளக்கம், பொருள் என்ன? அனைவரும் அறிந்ததே! செய்து வருவதே! ஓசோ என்றும் ரஜனீஷ் என்றும் அழைக்கப்பட்ட ரஜனீஷ் சந்திரா மோகன் என்பவர் மட்டுமே யோகா குருவாக இருந்து குண்டலினியை எழுப்பும் முறையைக் கொச்சையாகச் சொல்லிக் கொடுத்து உலகம் எங்கும் பின்பற்றுவோரைப் பெற்றிருந்தார். 59 ஆண்டுக்கால வாழ்வில் பெரும் செல்வத்தை இதன்மூலம் பெற்றார். இப்படி இகவாழ்வில் வளம் சேர்க்க சிலருக்கு யோகா கருவியாக இருக்கிறது. யோகா மூலம் பரவாழ்வில் பலன் அடையலாம் என்று அவர்களே கூறவில்லை. பரலோகம் போவதற்கு யோகாவில் வழி கூறப்படவில்லை. இகலோகத்தில் இன்பமாகவும் நோயின்றியும் வாழ சில பயிற்சிகளை உடலுக்கும் மனதுக்கும் கற்பிப்பதுதான் யோகா! கடவுளுக்கும் யோகாவுக்கும் கடுகளவுகூட ஸ்நானப் பிராப்தி கிடையாது.

ஆய்வோம்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *