மதம், அரசாங்கம், பிரபுத்துவம் ஆகிய மூன்றும் சேர்ந்து தான் நாட்டை (அதாவது நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களாகிய ஏழைகளை) வருத்துகின்றது. ஆதலால், நாட்டுக்கு உண்மையாக விடுதலை வேண்டுமானால், இம்மூன்று துறையிலும் முறைப்படி பெரும் புரட்சி ஏற்பட்டால்தான் விடுதலை அடைய முடியுமேயல்லாமல், வெறும் அரசியலைப் பற்றி, அதன் அஸ்திவாரத்தை விட்டு விட்டு கூச்சல் போடுவதாலும், அரசாங்க ஆதிக்கத்தின் மீது கண் மூடிக்கொண்டு குறை கூறுவதாலும்,
ஒரு காரியமும் நடந்து விடாது. நிற்க, மேற்கண்ட இம்மூன்று விஷயங்களிலும் புரட்சி ஏற்படும்போது, இம்மூன்றிற்கும் உதவியாக இருக்கின்ற ஆயுதங்களையும் முதலில் நாம் பிடுங்கிக் கொள்ள வேண்டும். அதென்ன வென்றால் அதுதான் கடவுள் என்பதாகும். எப்படியெனில், ஆட்சி ஆதிக்கக்காரன், உங்களை ஆளும்படி கடவுள் எங்களை அனுப்பினார் என்கின்றான். மத ஆதிக்கக்காரன் உங்களுக்காக, உங்களை மோட்சத்திற்கு அனுப்ப கடவுள் இந்த மதத்தை ஏற்படுத்தி, அதைக் காப்பாற்ற எங்களை அனுப்பினார் என்கின்றான். செல்வ ஆதிக்கக்காரன், முன் ஜென்மத்தில் நான் செய்த புண்ணியத்தினால் இந்த செல்வத்தைக் கடவுள் எனக்குக் கொடுத்தார் என்கின்றான். ஆகவே, இம்மூன்று கொடியவர்களுக்கும் (மக்கள் விரோதிகளுக்கும்) ஆயுதங்களாக இருப்பது கடவுளாகும். ஆகவேதான், அதை நாம் முதலில் ஒழிக்க வேண்டி இருக்கின்றது.
ஏனெனில், அம்மூவருக்கும் கடவுள் அனுகூலமாயிருப்பதால், அக்கடவுளை அவர்கள் எப்படி காப்பாற்ற முயலுகின்றார்களோ, அதுபோலவே நமக்கு அக்கடவுள் விரோதமாயிருக்கிறபடியால், நாம் விடுதலை பெறக் கடவுளை முதலில் ஒழிக்க வேண்டியவர்களாயிருக்கின்றோம். அதாவது, அம்மூவரையும் பார்த்து நாம், உங்களைக் கடவுள் அனுப்பினாரோ, கடவுள் உண்டாக்கினாரோ, உங்களுக்குக் கடவுள் கொடுத்தாரோ என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு இல்லாமல் செய்து கஷ்டப்படுத்தி, உங்களுக்குக் கொடுத்து இருக்கும் கடவுளை நாங்கள் அரை நிமிஷமும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி விட்ட பிறகுதான், உங்கள் ஆதிக்கங்களையும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி, ஆகவேண்டும் என்கின்றோம். இந்தக் கொள்கையைக் கொண்டு தான் ரஷ்யர்களும் சமதர்மம் ஏற்பட வேண்டுமானால், முதலாவது கடவுள் ஒழிய வேண்டும் என்று நினைத்து, அதற்காக முதல் முதலாகக் கடவுளைக் காட்டும் மதத்தின் பேரில் போர் புரிந்து வெற்றி பெற்று பிறகே அவர்கள் மற்ற காரியங்களும் செய்து கொள்ளத் தக்கவர்களானார்கள் என்பது விளங்குகிறது.
சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது
(குடிஅரசு 1.6.1930)
உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும், ஒரு சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப்படுமானால், அவரை நடுநிலைமை யுடையவரென்று சொல்லுவதை விட, பாரபக்ஷ முடையவரென்று சொல்வதற்கே மிக மிக இடமிருக்கின்றன.
அவரைக் கருணை உடையவர் என்று சொல்வதை விட கருணையற்றவர் என்று சொல்வதற்கே ஏராளமான பிரத்தியக்ஷ உதாரணங்கள் இருக்கின்றன.
அவரை நீதிவான் என்று சொல்வதை விட அநீதிவான் என்று சொல்வதற்கே தாராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால், அதிக தீமையே ஏற்படுகின்றது, என்று சொல்வதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது.
(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்ட யோக்கியர் என்று சொல்வதை விட அயோக்கியர் என்று சொல்வதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.
அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கின்றாரென்பதை விட தீமையே செய்கின்றார் என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.
அவரால் நன்மை அடைந்தவர்களிடம் தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவரென்று சொல்வதை விட அவர் காட்டுமிராண்டி என்று சொல்வதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.
அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதை விட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அனேகக் காரணங்கள் இருக்கின்றன.
அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதை விட அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.
அறிஞர்களே! ஆராய்ந்து பாருங்கள்!
சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது. (குடிஅரசு 9.10.1930).