Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மதத்தின் பெயரால் இசைப் பெண்களுக்குத் தடை!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஒரு இசைக்குழு.பிரகாஷ்(காலை ஒளி)என்ற அந்தக் குழு மூன்று இஸ்லாமிய இளம் பெண்களால் தொடங்கப்பட்டது.இப்போது அந்தக் குழு அம்மாநில இஸ்லாமிய மத குரு பஷீருத்தீன் அகமது என்பவரால் தடை ஆணை(பத்வா) பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அக்குழு தற்போது கலைக்கப்பட்டுள்ளது. மேடையில் பாடுவது இஸ்லாமுக்கு விரோதமானது. இசையும் நடனமும் இஸ்லாம் மதத்தில், தீயவை-அனுமதிக்கப்படாதவைஎன்று கூறியுள்ளார்  பஷீருத்தீன் அகமது.

இசை இஸ்லாமில் தடுக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அந்தப் பெண்களில் ஒருவர் பிபிசி செய்தி நிறுவன செய்தியாளரிடம் கூறியுள்ளார். காஷ்மீரிலிருந்து பல இசைக் கலைஞர்கள் உருவாகி, இன்றளவும் இசை வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர் என்று சுட்டிக்காட்டுகின்ற அந்தப் பெண்கள், தம்மீது மட்டும் ஏன் மத ஆணை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நௌஷாத், குலாம் அலி, மெஹ்தி ஹஸன் போன்ற சிறந்த இசை மேதைகள் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்களது இசைப் பயணம் நிறுத்தப்படவில்லை.இசை இஸ்லாத்துக்கு எதிரானது என்றும், அது ஆடவர்களின் உணர்வுகளைத் தூண்டுகிறது என்றும் கூறப்பட்டால் முஸ்லிம் ஆடவர்கள் மன உறுதி இல்லாதவர்கள் என்று நாங்கள் கருதலாமா? தமது இசைக்குழுவின் மீது தடை விதிப்பதற்காக மதகுரு தெரிவித்த கருத்து தவறானது என்றும் அப்பெண்கள் கூறியிருக்கின்றனர்.

காஷ்மீரில் தங்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும் மூன்று பேர் அடங்கிய அந்த இசைக் குழுவினர் வருத்தப்படுகிறார்கள் என்று பிபிசி கூறியுள்ளது.

இதேவேளை, முஸ்லிம்களின் புனித குர்-ஆன் இசைக்கு எதிரானது அல்ல என்கிறார் இசையறிஞரும் ஆய்வாளருமான நா.மம்மது.

“இசை இஸ்லாத்துக்கு எதிரானது என்றால், ஆண்கள் பாடுவதையும் தடை செய்ய வேண்டுமல்லவா?

பெண்கள் பாடுவதையும், அவர்கள் இசைக் கருவிகளை வாசிப்பதையும் மட்டும் தடை செய்வது என்பது பெண்கள் மீதான ஓர் ஒடுக்குமுறையே.

அடிப்படை வாதத்தை பேணும் இஸ்லாமியத் தலைவர்களே இசையையும் கலைகளையும் ஒடுக்குவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

இசையை இஸ்லாமியர்களிடமிருந்து எந்த சக்தியாலும் ஒதுக்கிவிட முடியாது என்று அழுத்தமாகக் கூறுகிறார் மம்மது..

இசை என்பது மனித உணர்வு சார்ந்தது.மதங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது.மொழிகள் உருவாவதற்கு முன்னமே மனிதன் காடுகளில் வாழ்ந்த காலத்திலேயே இசை தோன்றிவிட்டது.எனவே, இசையைத் தவிர்த்துவிட்டு வாழமுடியாது.இதனை பஷீருத்தீன் அகமது போன்ற மதவாதிகள் உணரவேண்டும்.

பாகிஸ்தானின் புகழ்பெற்ற பாடகி மறைந்த நசியா ஹாசனின் குரலை இன்று உலகம் கேட்டுக்கொண்டிருக்கிறதே.அப்படி ஒரு குரல் இன்னும் இன்னொருவருக்கு வாய்க்கவில்லை. டிஸ்கோ திவானே..என்ற பாப் பாடல் மூலம் உலக இசை ரசிகர்களைக் கவர்ந்தவர் நசியா ஹசன். இந்தப் பாடலின் சாயலில் `குர்பானி இந்தித் திரைப்படத்தில் இவர் பாடிய ஆப் ஜெய்சா கோயியே……பாத் பஞ்சாயிஎன்ற பாடல் 1980 களில் இந்தியாவையே கிறங்கவைத்தது. இப்போது கலைக்கப்பட்டுள்ள பெண்கள் இசைக்குழுக்களில் இருந்த 3 பெண்களும் 10 ஆம் வகுப்பு மாணவிகள்.வருங்காலத்தில் இவர்களில் நசியா ஹசன்களும் உருவாகலாம்.

இன்னும் எத்தனைக் காலம்தான் பெண்களை அடக்கிவைக்க மதவாதிகள் நினைக்கிறார்களோ!அடக்க அடக்கத்தான் ஆர்வம் அதிகரிக்கும். பாகிஸ்தானில் மலாலாக்களுக்கு கல்வி உரிமை மறுப்பு.சவூதியில் ரிசானாவுக்கு கொடூர மரணதண்டனை.ஆப்கனில் கேட்கவே வேண்டாம்.இப்போது காஷ்மீர் வழியாக தலிபானிசம் இந்தியாவிற்குள் நுழைகிறதோ என்ற அய்யத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

– அன்பன்