இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! இன்னமும் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை. சொந்த நாட்டு மக்களாகிய தமிழ் மக்கள் அங்கே ஏதோ பிடிபட்ட நாட்டின் போர்க் குற்றவாளிகள் போல் கொடுமையாய் நடத்தப்படும் கோரம் படமெடுத்தாடுகிறது.
முள்வேலிக்குள்தான் அங்கு எஞ்சியுள்ள தமிழர்கள் பலர் முதியவர்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் – சொல்லொணாத் துயரத்துடன் அரை வயிற்றுக் கஞ்சிக் குக்கூட வழியில்லாமல் அவலமான வாழ்க்கையை சுமந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடும் பரிதாப நிலை!
எம் தமிழச்சிகளின் நிலையோ எழுதவும் கூசும் வகையில் சிங்கள இராணுவத்தால் நடத்தப்படுகின்ற சோகம் தொடர் கதையாகி வருகிறது!
குறைந்தபட்ச மனித உரிமை, வாழ்வுரிமைகூட இன்னும் எம் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை.
வட பகுதியான யாழ்ப்பாணம் கிழக்குப் பகுதிகள் எங்கும் சிங்கள இராணுவ ஆட்சியே; ஒவ்வொரு குடி மகனுக்கும் ஒரு இராணுவ சிப்பாய் என்பதுபோன்று உள்ள நெருக்கடி நிலை!
போர் நடந்து முடிந்தபிறகு தமிழர்களை மீள் குடியமர்த்துதல் நடைபெறாமல், அந்தப் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களைக் குடியமர்த்தும் திட்டமிட்ட அநீதி அரங்கேறிக் கொண்டுள்ளது.
தமிழர்களின் அடையாளங்களைக்கூட விட்டு வைக்கக் கூடாது என்ற சிங்களப் பேரினவாதம் நிர்வாணத் தன்மையில் வெறிகொண்டு, ஊர்ப் பெயர்களை மாற்றுவது முதல் அங்கே தமிழர்கள் வழிபடும் கோயில், சர்ச், பள்ளிவாசல் எல்லாம் அழித்தொழிக்கப்படும் அவலம் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன.
இதுபற்றி டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் இந்தியப் பிரதமருக்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களுக்கும் தமது வேதனையைத் தெரிவித்து, தடுத்து நிறுத்த வேண்டும் என்று எழுதிய கடிதத்திற்கு அந்த அம்மையார் அவர்கள், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கலைஞருக்குக் கடிதம் எழுதி, இதுபற்றி கவலை கொள்கிறேன்; அவசியம் வெளி உறவுத் துறை அமைச்சருடன் பேசி ஆவன செய்வதாக குறிப்பிட்டிருப்பது சற்று ஆறுதல் தருகிறது. நடவடிக்கை செயலில் தெரிய வேண்டும்.
இது ஒருபுறம்; தமிழக மீனவர்கள்மீது சிங்கள இராணுவத்தின் தாக்குதல், உரிமைகள் பறிப்பு நாளொரு முறையும் பொழுதொரு வேளையும் நடந்த வண்ணமே உள்ளது. வழக்கமான வெண்டைக்காய் பதிலையே மத்திய அரசு தருகின்ற நிலை!
இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல், போருக்குப் பின் மேலும், மோசமான இடி அமீன்தர்பார், ஆள் தூக்கிச் செல்லும் அரசின் கூலிப்படை ஏவுதல் மூலம் காணாமற் போனவர்கள் பட்டியலில் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர்.
வருகின்ற மார்ச் மாதத்தில் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் இந்த அடாவடி அட்டகாசத்தை எதிர்த்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், மனிதாபிமானத்தின் மற்றொரு வெளிப்பாடு; இதில் இந்திய அரசு அதன் பங்கை அதிகமாகச் செய்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்றிட வேண்டும்.
தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் வாக்களிப்பால்தான் மத்தியில் இன்றைய இந்திய அரசு உள்ளது என்ற உண்மையை உணர்ந்து தம் கடமையைச் செய்திட தயங்கக் கூடாது.
இந்நிலையில் உலக நாடுகள் உண்மைகளை உணர்ந்து, இலங்கையின் யதேச்சதிகார ஆட்சி எப்படி மனித உரிமைகளைப் பறிக்கும் ஹிட்லர் ஆட்சியாக மாறி யுள்ளது என்று உணர்ந்திடும் நிலை கண்டு, இலங்கை அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சே குமுறுகிறார் – கொக்கரிக்கிறார்.
அய்.நா.வும், இதர பல உலக நாடுகளும் இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றனவாம்; பசப்புரை பகருகின்றார். மிரட்டுகிறார். அய்.நா.வை மிரட்டி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர்களையும் போர் நடக்கும்போது மிரட்டி, கப்பலேற்றிய கபட வேடதாரி மற்றொரு வேடம் தரித்து உள்நாட்டு இறையாண்மை பற்றிப் பேசுகிறார்.
எம் தமிழினம் பூண்டோடு, கூண்டோடு அழிக்கப்படும் முயற்சிகளை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க வேண்டுமா?
அய்.நா.வின் நோக்கம் என்ன? உலகம் ஒரு குலம் என்ற நிலை ஓங்கியுள்ளபோது, அநீதி, அக்கிரமம், அழிப்பு வேலைகளை கை கட்டி மனிதநேயம் உள்ளோர் வேடிக்கை பார்ப்பார்களா?
கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேசிடும் குடும்ப வாழ்க்கையில் தான் பிறர் தலையிடக் கூடாதே தவிர, கணவன் மனைவியைக் கொலை செய்ய முயன்றால் அடுத்த வீட்டுக்காரன் வேடிக்கை பார்க்கலாமா? கண்டித்துக் கடமையாற்றுவது தவறா என்று அறிஞர் அண்ணா அவர்கள் நல்லதொரு உவமை கூறியதைவிட, வேறு இதற்குப் பொருத்தமான பதில்தான் ஏது?
உள்நாட்டுப் பிரச்சினை என்றால், இந்திய அரசிடம் இலங்கை உதவி கேட்கலாமா? இராணுவப் பயிற்சிக்கு வரலாமா? 1000 கோடி ரூபாய்களைப் பெற்று அந்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க – புனர் வாழ்வுக்கு நிதி கேட்கலாமா? இந்திய வீடு கட்டுவோரை, பல்கலைக் கழகத்தவரை அழைக்கலாமா?
சர்வதேச போர்க் குற்றவாளியான ராஜபக்சேக்களை உலகம் பார்த்து தண்டனை வழங்கும் காலம் தூரத்தில் இல்லை.
–