சாலையோரங்களில் குப்பை கொட்டுவதும், கழிப்பிடமாகப் பயன்படுத்துவது நம்ம ஊருக்குப் புதிதல்ல. இந்தத் தொல்லையைக் களைய நம்மாட்கள் ஒரு உத்தியை வைத்திருக்கிறார்கள். அந்த இடத்தின் சுவரில் உடனே சர்வ மதக் கடவுள் படங்களை வரைந்துவிடுவார்கள். அதனால் அந்த இடம் குப்பை மற்றும் கழிவுகளில் இருந்து தப்பிவிடும் என்பதற்காக அப்படிச் செய்து வருகிறார்கள். ஆனால், பல இடங்களில் அதையும் தாண்டி கழிக்கவோ, குப்பை கொட்டவோ அருகில் வேறு இடங்கள் இல்லாத சூழலில் அந்தக் கடவுளர்களின் முன்பே கழித்துவிடுவது உண்டு. என்ன செய்வது? இயற்கைக்கு முன்னால் செயற்கைகளால் நிற்கமுடியாதே! அப்படி ஒரு இடந்தான் இந்தப் படம். கடவுளின் முன்னால் குப்பை கொட்டப்படுகிறது எனக்கவலைப் பட்டுள்ளார் அப்படத்தை எடுத்துள்ள செய்தியாளர். குப்பை கொட்டுவதற்கு ஒவ்வொரு தெருவிலும் குப்பைத்தொட்டிகளை வைத்து அதனை முறைப்படி, நேரம் தவறாமல் அகற்றினால் எல்லா இடங்களிலும் குப்பை கொட்டுவார்களா? மாநகராட்சிக்கு, கவுன்சிலர்களுக்கு புத்தி சொல்லாமல் மக்களைக் கடிந்து கொள்வது சரியா?
தெருவுக்குத் தெரு கோவில்களைக் கட்டுவதில் ஆர்வம் காட்டும் பொது நல வாதிகள்(?) ஒவ்வொரு தெருவிலும் கழிப்பிடம் கட்ட முனைவதில்லையே ஏன்? இதனைச் சுட்டிக்காட்ட பத்திரிகைகளும், ஊடகங்களும் முன்வருவதில்லையே ஏன்?.