உலகம் அழிந்ததா? உடான்ஸ் உடைந்ததா?

ஜனவரி 01-15

உலகம் அழியாது என்பதை விளக்கும் விழிப்புணர்வுத் துண்டறிக்கைகள் அளித்து விளக்கவுரையாற்றி  மூடநம்பிக்கையை முறியடிக்கப்பட்டதற்காக இனிப்புகளையும் தி.க.தலைவர் கி.வீரமணி வழங்கினார் (சென்னைக் கடற்கரை-22.12.2012)

சரியாக ஓராண்டுக்கு முந்தைய உண்மை இதழின் அட்டைக்கட்டுரை- (ஜனவரி 1-_15, 2012) `உலகம் அழியப்போகிறதா? என்ற தலைப்பில் அமைந்திருந்தது. கடந்த (2012) டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது என்ற பொய்யை அம்பலமாக்கி கி.அழகரசன் எழுதியிருந்தார். பகுத்தறிவுத் தர்க்க ரீதியாகவும், அறிவியல், வானவியல் விளக்கங்களுடனும் உலகம் அழியாது; அச்சம் வேண்டாம் என்ற விழிப்புணர்வு ஊட்டப்பட்டிருந்தது.

ஆனால், ஊடகங்களும் பத்திரிகைகளும் உலகம் அழியப்போகிறது என்றே பீதியைக் கிளப்பின. 2009 ஆம் ஆண்டில் வெளியாகி உலகின் பல மொழிகளிலும் வெளியான 2012 என்ற இங்கிலீஷ் திரைப்படம் ஏற்படுத்திய பீதியும் சேர்ந்துகொண்டது. அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் தமது கனவுகளில் உலகம் அழிவது இப்படித்தான் இருக்குமோ என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.  இந்த பீதி கிளப்பும் வேலை ஆதி நாட்களிலேயே தொடங்கியதாகும்.மதங்கள் தங்கள் வியாபாரத்திற்காகவும், கடவுள் கற்பனையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அந்நாளிலிருந்தே இப்படிப் புளுகுவது வாடிக்கைதான். அறிவியல் வளராத அந்தக் காலத்தில்கூட மெல்ல மெல்லத்தான் இப்படிப்பட்ட வதந்திகள் பரவின. இப்போதோ ஒரு நொடியிலேயே உலகம் முழுதும் வதந்தியைப் பரப்பும் வேலையை ஊடகங்கள் செய்கின்றன. இந்த வதந்தியும் 2012 முழுதும் பரப்பட்டது.

நாம் நினைவுபடுத்திப் பார்த்தால் நம் வாழ்நாளில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி ஒரு வதந்தி பரப்பட்டதை அறியமுடியும். இதில் வேடிக்கை என்னவென்றால்,ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டதுதான். இந்தமுறை நாசாவே சொல்லிவிட்டது என்று ஊதிவிட்டார்கள். மாயன் நாட்காட்டி டிசம்பர் 21, 2012 ல் முடிகிறது என்று சொல்லத்-தொடங்கியவர்கள் பின்னர், பைபிளிலும் உலகம் அழியும் என்றும், கணவன் மனைவியரில் ஒருவர் மட்டும் பிரிக்கப்படுவர் என்றும் சொல்லப்பட்டிருப்பதாக கிறித்துவ மத நம்பிக்கையாளர்கள் பேசத்தொடங்கி-விட்டனர். போதாக்குறைக்கு சில பார்ப்பனர்களும் இதுவரை உள்ள நினைவுகள் எல்லாம் மறந்து-போகும். அந்த நாளுக்கு அடுத்து புதிதாகத்தான் எல்லாவற்றையும் தொடங்கவேண்டும் என்றெல்லா-கூட சொன்னார்கள். எட்டு (அஷ்ட) கிரகங்கள் ஒன்று சேரப் போகின்றன; அதனால் உலகம் அழியப் போகிறது என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே புரளியை கிளப்பி விட்டனர் சிலர்; ஒன்றும் ஆகவில்லை. 1990 களின் தொடக்கத்தில் 2000 ஆம் ஆண்டு பிறந்தால் உலகம் அழிந்துவிடும் என்றார்கள்.அதன் பின் 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால்,புதிது புதிதாக உலகம் அழியும் என்ற பொய் மட்டும் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

அச்சமும் அறியாமையும் பெற்ற குழந்தையே கடவுள் மூடநம்பிக்கை. அந்த மூடநம்பிக்கை வாழும் வரைதான் மதங்களும்,கடவுளும் மக்கள் மனங்களில் வாழ முடியும். இந்த உண்மையை அறிந்த மதவாதிகள் சொல்லும் பொய்களே இப்படிப்பட்ட வதந்திகள். இவற்றிற்குத் துணைசெய்யும் அமைப்புகளாக வணிக நோக்கம் மட்டுமே கொண்ட செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.

அறிவியல் உலகம் இந்த அச்சத்தைப் போக்கின. “இதற்கு எந்தவித ஆதாரமுமில்லை; அறிவியல், வானவியலுக்கு முற்றிலும் மாறான கற்பனை, கட்டுக்கதை, புரட்டு என  அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த விஞ்ஞானி (NASA) – மூத்த ஆய்வாளர் – டாரன்யோமென்ஸ் (Darren Yeomans) கூறினார். கார்ல்சேகன் (Carlsegan)என்ற பிரபல வானவியல் நிபுணர், அசாதாரண நிகழ்வுகளை நம்ப வேண்டுமானால் அதற்கு அசாதாரண சாட்சியங்கள் அவசியம் தேவை என்றார்.

`நிபுரு என்ற ஒரு பெரிய பொருள் (Object) ஒன்று வந்து மோதி அழிக்கும் என்றும் கதை கட்டியுள்ளனர்; இதற்கு எவ்வித சாட்சியங்களோ, ஆதாரங்களோ கிடையாது. டெலஸ்கோப்பிஸ் ஆதரவு சான்றுகளோ இப்படி சூரிய குடும்பத்தில் புவி ஈர்ப்பின் மூலம் ஏதும் இல்லை என்று கூறுகின்றன. ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும், பூமியும் சூரியனும் மில்கிவே என்ற பின் பாதை அருகில் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழமையான நிகழ்வே. அது எந்த ஒரு விளைவையோ, வினையையோ ஏற்படுத்துவதில்லை. இதுபோன்ற புரளிகளுக்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “தற்போதைக்கு உலகம் அழிய எதுவிதமான சாத்தியமும் இல்லை.அது மட்டுமின்றி விண்கல் ஒன்று உலகை தாக்கப்போவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுவரையில் அவ்வாறான விண்கல் எதுவும் சூரிய மண்டலத்துக்குள் வரவில்லை என்பது உறுதி. இதேபோல துருவ மாற்றம் ஏற்படப்போகின்றது இதன்போது 3 நாள் தொடர்ந்து உலகம் இருளாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்-களிலும் எதுவித உண்மையும் இல்லை என நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் கூறியுள்ளார்.

2012 டிசம்பர் மாதம் தொடங்கியவுடனேயே பத்திரிகைகள் அட்டைப்படக் கட்டுரைகள் எழுதின. தொலைக்காட்சிகள் டிசம்பர் 15 லிருந்து விவாதங்கள் நிகழ்த்தின.அவற்றில் வானவியல், அறிவியல் நிபுணர்களும், பகுத்தறிவாளர்களும் பங்கேற்று மக்களின் அச்சம் போக்கினார்கள். கூடவே காமெடிக்காக சில ஜோதிடர்களும் பேசினார்கள். நம்முடைய ஜோதிடர்கள் காலத்தின் போக்கை அறிந்தவர்கள் அல்லவா? தமிழகத்தைப் பொருத்தவரை இந்த வதந்தியை மக்கள் பெருமளவு புறந்தள்ளியதை அறிந்து உலகம் அழியாது என்று ஒத்தூதினார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்கள் உலகம் அழியும் என்பதை நம்பவில்லை என்று கூறியது நல்ல அறிகுறியாகும்.

உலகின் பல நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கை ஆட்கொண்டது. மெக்சிகோ நாட்டினர் பலர் மாயன்கள் வாழ்ந்த பிரமிட் போன்ற கோவில்களில் புகுந்துகொண்டால் உலகின் அழிவிலிருந்து தப்பிவிடலாம் என்று நம்பி அந்தப் பகுதிக்குப் போனார்களாம். சீனாவில் சிலர் கடலுக்குள் சென்று விட்டால் தப்பிவிடலாம் என்று நம்பி படகுகளையும், சிறு கப்பல்களையும் எடுத்துக் கொண்டு கடலுக்குள் சென்று-விட்டார்களாம். சீனாவில் இன்னும் சிலரோ மலை உச்சி மீது சென்று உலகம் அழிவதற்குள் தற்கொலை செய்துகொள்ளக் கிளம்பி-யிருக்கிறார்கள். அவர்களை அந்நாட்டுக் காவல்துறை மீட்டுள்ளது.கடலும்,மலையும் பூமிப்பந்தின் மீதுதான் இருக்கின்றன.பூமி அழிந்தால் அவையும் அழியும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அறியாதவர்களாக அவர்கள் இருந்திருக்-கிறார்கள். இதற்கு என்ன காரணம்.இவர்கள் இன்னும் தமது பகுத்தறிவை பயன்படுத்தாமல் இருப்பதுதானே?

படிப்பறிவு கிடைத்துவிட்டது; ஆனால், பகுத்தறிவு? படிப்பு வேறு; அறிவு வேறு என்று பெரியார் சொன்னது சரிதானே!

இன்னும் எவ்வளவுதான் அறிவியல் வளர்ந்தாலும் அது மக்களை மேலும் மேலும் ஏமாற்றவே பயன்படுகிறது என்பது கொடுமை-யல்லவா. கடந்த ஓராண்டாக பத்திரிகைகள் எழுதிய எழுத்துகள் என்ன ஆயின?ஊடகங்கள் ஒலித்த ஓலக்குரல் எங்கே போயின? மக்களை அச்சம் கொள்ளச் செய்யும் இதுபோன்ற ஒரு செய்தியை ஆராயாமலும்,அதன் அறிவியல் உண்மைகளை எடுத்துக் காட்டாமலும் அப்படியே வெளியிடுவது நியாயமா?  ஊடகங்கள் தம்முடைய பொறுப்பை உணர்ந்து எந்த ஒரு அறிவியல் ஆதாரமற்ற இது போன்ற செய்தியையும் வெளியிடுவதைத் தவிர்க்கவேண்டாமா?

பள்ளிக்கல்வியில் ஆரம்பக் கல்வியில் இருந்தே அறிவியல் பாடத்துடன் பகுத்தறிவையும் போதிக்கும் கல்விமுறை வரவேண்டும்.இல்லையேல் இன்னும் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் உலகம் அழியும் என்ற பொய் வேறு ஒரு வடிவில் உலாவரும்.

– அன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *