ஆசிரியர் பதில்கள்

ஜனவரி 01-15

கேள்வி : சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன உத்திரவு வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஆசிரியர் பணி என்பது ஆன்மீகத்தை மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியாகும் என்று அறிவுறுத்தியுள்ளது குறித்து? – எஸ். வடிவேல், ஆவூர்

பதில் : அவருள் உள்ள இந்துத்துவ கருத்துக்களின் வெளிப்பாடு அபத்தமானது. மதக் கல்வி வேறு; ஆசிரியர் பணி அறிவுப் பணி _ அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பணி.
___________________________________________________________

கேள்வி : பகவத் கீதையை ஒரு கொலை நூல் என்று வாதிடுபவர்களை பாரதியார் மூடர் என்று பலமுறை கூறியுள்ளாரே. அப்படி சொல்லுவது அநாகரீகமல்லவா? – ஜே.அய்.ஏ. காந்தி, எரும்பி

பதில் : பாரதியார் பல நேரங்களில் கவிஞர் என்ற உரிமம் காரணமாக பயன்படுத்தக் கூடாத சொற்களைக்கூட பயன்படுத்தியுள்ளார்.
கோட்சேவைப் பார்த்து, கோட்சே கோர்ட்டில் கொடுத்த வாக்குமூலத்தைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் அவரே தன் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பார்!

___________________________________________________________

கேள்வி : முஸ்லீம் பெண்ணடிமையும் பாலியல் கொடுமையும்பற்றி எழுதிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் நாடு கடத்தப்பட்டார். அவருடைய பகுத்தறிவு சிந்தனைபற்றி ஆசிரியர் கருத்து? – திங்கள் நகர் நூர்தீன், நெய்யூர்

பதில் : பாராட்டக்கூடிய துணிச்சல்காரர் அவர். மதவெறிக்கு முன்னால் இப்படி அவரும் மலாலாக்களும் அவதிப்படுவது எதிர்பார்க்கப்படக் கூடியதொன்றே. மதம் நம்பிக்கையில் வாழ்வது _ பகுத்தறிவு அறிவு ஆராய்ச்சிக்குட்பட்டது. ___________________________________________________________

கேள்வி : கற்பு என்னும் சொல் பொதுவானதா? அல்லது பெண்களுக்கு மட்டும் என்று ஏற்படுத்தப்பட்டதா?
– ஜே.இ. பியுலா, ஆற்காடு

பதில் : நம் இலக்கியத்தில் கற்பெனப்படுவது சொற்றிரம்பாமை (சொன்ன சொற்படி நடப்பது _ காப்பாற்றிக்கொளல்) என்று கூறப்பட்டுள்ளது.
அது பிறகு ஏனோ மனுதர்ம விதிகளால் பெண்களுக்கு மட்டுமே கூறப்பட்ட ஒருதலைச் சார்பு நியதியானது. தற்போது நடைமுறையில் பெண்களுக்கு மட்டுமே வற்புறுத்தப்படுகிறது. ஆண்களுக்கு அது வற்புறுத்தப்படுவதில்லை. கற்புக்கரசி என்பதுபோல் கற்புக்கரசன் என்ற சொல்லாட்சி புழக்கத்தில் இல்லையே _ சிந்தித்தீர்களா?

___________________________________________________________

கேள்வி : சீர்திருத்த மதங்களும் சில கட்டாயப்படுத்தப்படும் நம்பிக்கைகளை உடையனவாக இருக்கின்றன என்ற காரணத்தால் அவற்றின் நற்போதனைகளையும் விலக்கி விடுவது சரியா?
– அ. கிருபாகரன், சோளிங்கர்

பதில் : நற்போதனைகள் எதிலிருந்தாலும் எடுத்துக் கொள்ளப்படுதல் நல்லதே _ அவசியமானதே! ஆனால் பெரியார் கூறியபடி, அரிசிக்கடையில் அரிசி வாங்க வேண்டுமே தவிர, மலத்தில் _ அசிங்கக் குப்பையில் அரிசி பொறுக்க வேண்டியதில்லையே!
___________________________________________________________

கேள்வி : இந்திய மக்களில் 90 சதவிகிதம் பேர் முட்டாள்கள் என கூறும் மார்கண்டேய கட்சுக்கு எப்படி வந்தது இந்தத் தைரியம்? – எஸ். குமரன், திருவப்பூர்

பதில் : உண்மையைப் பேச தைரியம் _ இதற்கு மேல் எப்பதவியும் வேண்டாம்; எந்தப் பாராட்டும் தேவையில்லை என்று கருதியிருப்பார் போலும்!
___________________________________________________________

கேள்வி : இளம்பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை ஒழிக்க என்னதான் தீர்வு?
– அருள்மாணிக்கம், மணப்பாடு.

பதில் : 1. அடிமைத்தலையறுத்தல். 2. வலுவான சட்டங்களை காலதாமதமின்றி செயல்படுத்தி தண்டித்தல். 3. விரும்புகிறவர்களுக்கு இலவசத் துப்பாக்கி லைசென்ஸ் வழங்குதல் பிறகு வாலாட்டம் தானே அகலும்.
___________________________________________________________

கேள்வி : நரேந்திர மோடியின் தொடர் வெற்றிக்குக் காரணம் என்ன? குஜராத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக ஊடகங்கள் கூறுகின்றன. அது உண்மையா? – மு. சுரேஷ்கண்ணன், கழுதி.

பதில் : அச்சுறுத்தும் அரசியல் முதற்காரணம். ஊடகங்களின் பிரச்சாரப் புழுதியின் மயக்கம், பணபலம்; இப்போது பழைய ரக அதிகாரம் ஆட்டங்கண்ட நிலை. கிராம மக்கள் புரிந்து கொண்டு விட்டார்களே!
___________________________________________________________

கேள்வி : தமிழக விவசாயிகளும் தற்கொலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்களே? இவர்களைக் காக்க மத்திய _ மாநில அரசுகளின் நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும்?
– எம். பாலசுப்பிரமணியன், குடவாசல்

பதில் : உடனடியாக காவிரி நீர் வரத்து; இழப்பீடு கணிசமான அளவு நிதிஉதவி. நிரந்தரத் தீர்வு _ இவை முக்கியம்.
___________________________________________________________

கேள்வி : தாங்கள் அண்மையில் படித்த ஆங்கில நூல் பற்றி…?
– எஸ். ஜோசப், காங்கேயம்

பதில் : வரலாற்று ஆசிரியர் (பேராசிரியர்) ராமச்சந்திரகுகா அவர்களது Makers of Modern India’ நூல். அதில் இந்துத்துவா பேசுவோரின் உண்மை முகத்தைக் காட்டுவதாக இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *