85ஆம் தொடர் – கி.வீரமணி
மணியம்மையார் அந்த நாளில் எஸ்.எஸ்.எல்.சி. வரையில் படித்தவர். அதைவிட சுயமரியாதைக் குடும்பத்தவர். பகுத்தறிவுப் பிழம்புடன் முப்பது ஆண்டுகள் அருகில் இருந்து பழகியவர். அவர் பெரியாரின் இக உலக மனைவியார் மட்டுமல்ல; பெரியாரின் கருத்-தோட்டங்களை அறிந்தவர். கனிந்த அனுபவம் உடையவர். பெரியாரைப் பேணிக் காத்தது_95 வயது பழுத்த பழமாகிவிட்ட அந்த உடலை அல்ல! வற்றாத பகுத்தறிவு ஊற்றாய் இருந்ததே அந்த உடலுக்குள் ஓர் மனம் அதற்காக பெரியாரை நன்றாக நெருக்கமாக, துல்லாபமாக அறிந்தவர் மணியம்மையார். அவரைத் தலைவராக்கி கழகப் பணிகளை நீடிப்பதென திருச்சி பெரியார் மாளிகையில் கூடிய திராவிடர் கழக முக்கியஸ்-தர்கள் ஒருமனதாக முடிவு செய்திருக்கிறார்கள். இதோ பெரியார் போய்விட்டார்; இனிமேல் கருப்புச் சட்டைக்காரர்களுக்குள் அடித்துக்-கொள்வார்கள் என்று எதிர்பார்த்த வட்டாரங்கள் ஏமாற்றம் அடைந்தன.
திருச்சியில் திராவிடர் கழக மேலிடம் செய்த முடிவுகள் முக்கியமாக மூன்று. மணியம்மையாரின் தலைமையில் கழகப் பணிகளை பெரியார் உயிரோடு இருந்திருந்தால் என்னென்ன கிளர்ச்சிகளை (தமிழர் சமுதாய இழிவு ஒழிப்புக்காக) நடத்த திட்டமிட்டிருந்தோமோ அவற்றை அப்படியே நடத்துவது என்பது முதல் முடிவு; மற்ற இரண்டு முடிவுகள் இதைப் போலவே முக்கியமானவை. எக்காரணத்தைக் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் கழகம் தனது கொள்கைகளில் இம்மியும் விட்டுத் தராது, தமிழ்நாட்டுப் பொதுவாழ்வில் கடுமையான பத்தியங்களை கொண்டது திராவிடர் கழகம் மட்டுமே. அப்பத்தியம் என்னவா? தேர்தலில் ஈடுபடுவதில்லை; அரசியலில் நேரடியாக பங்குகொள்வதில்லை என்பது. வீரமணியின் வாசகத்தில் கூறுவதென்றால்,
நம் உயிர் இருக்கும்வரை தேர்தல் பக்கம், பதவி பக்கம், ஓட்டுச் சாவடி பக்கம் தலைவைத்து படுக்க மாட்டோம், படுக்க மாட்டோம், எக்காரணத்தைக் கொண்டும் நமது கொள்கைகளை எவருக்கும் விட்டுத்தர மாட்டோம். இது மகத்தான முடிவு. இதைவிட பெரிய முடிவு இன்னொன்று. தமிழகப் பொதுவாழ்வில் திராவிடர் கழகம் தனித்தன்மையுடன் தொடர்ந்து நடக்கும் என்ற தீர்மானம் இதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய முடிவு _ தமிழினத்துக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.
ஏனெனில் திராவிடர் கழகம் _ சாதாரண ஸ்தாபனம் அல்ல. இந்தியாவில் அகில இந்திய காங்கிரசுக்கு ஈடான _ எதிரிடையான ஸ்தாபனம். ஒன்று கொள்கை ரீதியாகவும் வரலாறு ரீதியாகவும் இருக்குமானால் அது திராவிடர் கழகமே. மூர்த்தி சிறிதாயிருக்கலாம்; ஆனால் கீர்த்தி பெரிது. ஸ்தாபன ரீதியாக திராவிடர் கழகம் லட்சோப லட்சம் தொண்டர்களைக் கொண்டதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் போர் வீரனுக்குரிய மிடுக்கும் ஒழுங்குமுறைகளும் கொண்டது; குறியும், நெறியும், கொள்கை உறுதியும், சபலப் பலவீனமும் அற்ற ஆயிரமாயிரம் வைர நெஞ்சங்களைக் கொண்ட கோட்டை திராவிடர் கழகம். இந்த ஸ்தாபனத்தைக் கை ஆயுதமாகக் கொண்டுதான் பெரியார் தமிழ்நாட்டு வரலாற்றை தன்னிச்சைப்படி மாற்றி அமைத்தார். இன்னும் சொல்வதென்றால் இந்தியாவிலேயே திராவிடர் கழகத்தைப் போன்ற பலமானதொரு ஸ்தாபனமே இல்லை எனலாம். 1973 டிசம்பர் 24 வரையில் எப்படியென்றால், ஒரே ஒரு தலைவர்! அவர்களது ஒரே ஒரு வழி _ அவர் இடும் ஒரே ஒரு ஆணை எல்லாத் தொண்டர்களின் பார்வையும் ஒரே திக்கில், ஒரே குறியில்!
உதாரணமாகக் கடலினைக்காட்டி பாய் என்று பெரியார் ஆணையிட்டால் ஏன் என்று கேட்காமல் பாய்ந்து விடக்கூடிய கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை (ஆர்.எஸ்.எஸ். என்ற இந்து வகுப்பு வெறி அமைப்பினைத் தவிர) எங்குமே காண-முடியாது! தேர்தல்களில் நிற்க அனுமதிக்காததின் மூலம் பெரியார் தனது படையின் வீரத்தை, மிடுக்கை அப்படியே காப்பாற்றி வந்திருக்கிறார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் அடுத்து சுயமரியாதை இயக்கம் ஆகிய இரண்டின் சுத்தமான _ நேரடியான வாரிசு நாங்கள் என்று மார்தட்டிக் கூறக்கூடிய நெஞ்சுறுதியும் _ மரபுப் பெருமையும் உடையவர்கள் தி.க.வினர். அரசியலில் ஈடுபடாமலே அரசியலின் போக்குகளை,, திசைகளை தமிழர் நலனுக்கு _ மேம்பாட்டுக்கு தமிழர்களின் விரோதிகளுக்கு விரோதமாகத் திருப்பி விட்டுக் கொண்டே வந்தவர் பெரியார்! அரசியலில் ஈடுபடாமல் சமுதாயத்தை திருத்தி அமைக்க முனைவதுதான் திராவிடர் கழகத்தின் பலத்துக்கும் சுத்தத்துக்கும் வேர்க்-காரணம். கழகத்தின் தனித்தன்மை என்பதே இதிலிருந்து முளைப்பதுதான். ஆக இந்த அம்சத்தைத் திருத்த தீர்மானம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துவது நிம்மதியைத் தரவல்லது _ தமிழினத்துக்கு.
அதை விடவும் மகிழ்ச்சிக்குரியது ஒன்று இருக்குமானால் திராவிடர் கழகம் தனித்-தன்மையுடன் தொடர்ந்து இயங்குமென்ற முடிவை முதல்வர் கலைஞர் கருணாநிதி மனமாரப் பாராட்டி வரவேற்றிருப்பது. இந்த முடிவு எங்களுக்கு தெம்பை உற்சாகத்தை நல்ல ஆறுதலை அளிக்கிறது என்று கூறியிருப்பதின்மூலம் கலைஞர் கருணாநிதி அவருடைய அபூர்வ அரசியல் தெளிவுக்கு சான்று காட்டியிருக்கிறார்.
ஆனபோதிலும் திராவிடர் கழகத்தை தனித்-தன்மையுடன் நடத்துவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதிலும் பெரியார் இல்லாத கழகத்தை என்பதைக் குறிப்பிட்டே தீரவேண்டியிருக்கிறது. ஏனெனில் பெரியார் தனித்தலைவர். இந்தியாவே கண்டிராத அபூர்வ தலைவர். தமிழ் மண் கண்டிராத அசாதாரணத் தலைவர். அவர் தனக்கென்று எதையும் நாடாதவர். தமிழினத்தின் தர்ம சத்திரம்போல திராவிடர் கழகத்தை அவர் வைத்திருந்தார். அவருடைய வேர்க் கொள்கை ஒன்றே ஒன்றுதான்.
அது தமிழினத்தின் இழிவு எல்லாம் நீங்கி மானமும் மரியாதையும் கவுரமும் சுயமரியாதையும் உடைய இனமாகி வளம் கொழித்து அறிவு ஆர்ந்த வாழ்க்கை வாழவேண்டுமென்பதுதான். தமிழர் கவுரவமடைவதற்காக தான் அகவுரவமடையவும் பெரியார் தயங்கியதில்லை. தமிழினம் உயர்வடை-வதற்காக தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளவும் கூடியவர். அரசியலில் எந்தப் பதவியையும் வார்பட்டை அறுந்துப் போன மிதியடியைப் போல அவர் கருதினார்! பதவி, பட்டம் நாடாத மனம், ஒரே வெறி, ஒரே கொள்கை _ தமிழினத்தின் இழிவுக்குக் காரணமான சக்திகளை கருத்துக்களை ஒடுக்குவது, மூச்சு ஒடுங்குவது வரை அது ஒன்றே தாய்க்கொள்கை! மற்ற கொள்கைகள் எல்லாம் இந்தத் தாய்க்கொள்கை பெற்றெடுத்த குழவிகளே. இக்கொள்கைப் போராட்டத்தில் அவருக்கு உறவு குறுக்கிட முடியாது. நண்பர்கள் கிடையாது. சொந்தம் _பந்தம் கிடையாது. இப்படிப்பட்ட தனித் தலைமையை தமிழினம் இன்னொரு தடவை காண முடியுமா என்பதே சந்தேகம். ஆக இந்தத் தனித் தலைவரின் தனித் தலைமை இயல்பாகவே திராவிடர் கழகத்துக்கு தனித்துவத்தை தந்து வந்தது.
இந்தத் தனி தலைமையின் மூலம் திராவிடர் கழகம் என்ற தேரை, பெரியார் சடார்- சடாரென திசை திருப்பியதுண்டு. சில மேற்கோள்கள்:
1954 வரை காங்கிரசைக் கடுமையாக எதிர்த்து வந்த பெரியார் 1954_ல் ராஜாஜியைக் கிளப்பிவிட்டு காமராசர் வந்தவுடனே இவருடைய நினைவை மோப்பம் பிடித்து 1954லிருந்து 67 வரை பச்சைத் தமிழருக்கு நாமாவளி பாடிவந்தார்! தனது சுயநலத்துக்காகவா? தமிழரின் நலனுக்காக. காமராசரைக் கருவியாகக் கொண்டு தன் குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டார்! அதுபோலவே 1967 தேர்தலில் தி.மு.க.வை மூர்க்கமாக எதிர்த்து வந்த பெரியார் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அண்ணா பெரியாரைத் தேடி திருச்சிக்குப் போய்ச் சந்தித்து தனது இதயத்தைத் திறந்து காட்டியவுடனே காமராசருக்கு அப்படியே பிரிவு உபசாரம் தந்துவிட்டு, சுத்தத் தமிழர் அண்ணா ஆட்சியையும் அதன் பிறகு பகுத்தறிவு ஆட்சியான கருணாநிதி ஆட்சி நிலையும் பலமாக ஆதரித்து வந்தார்! ஆக அவ்வப்போதைய சூழலுக்கு ஏற்ப தனிக்கோணத்தில் தனி வழியில் தனிக்கொள்கை எடுக்கும் ஆற்றல் பெரியாருக்கு எப்பொழுதும் உண்டு. இதனால் கட்சி அரசியலில் அவர் மாட்டிக் கொண்டதே இல்லை. அதோடு புனுகுப் பூனைக் கூண்டில் புலி அடைபட முடியுமா _ அதுவே விரும்பினாலும்? அவரை எந்தக் கட்சியினாலும் கட்டிப்போட முடியாது. அவர் வடிவம் அத்தகையது.
திராவிடர் கழகத்திலுள்ள எந்தத் தலை-வருக்கும் மட்டுமின்றி ஏன் தமிழகத்தின் தலைவர்கள் யாருக்குமே அந்த வடிவம் கிடையாது. ஆதலால் பெரியார் இல்லாத திராவிடர் கழகம் தனது அரசியல் நிலைகளை மேற்கொள்ளும்-பொழுது உசாரும் _ உன்னிப்பும் காட்டுவது அவசியம். இதை எழுதுவது தமிழினப் பாசமுடைய ஏடு ஒன்றின் விமர்சகன் என்பதைக் குறிப்பிட்டே தீரவேண்டி இருக்கிறது. அரசியல் போக்குகள் _ நிகழ்ச்சிகள் எப்படி மாறினாலும் திராவிடர் கழகம் தமிழினத்தின் பொது ஸ்தாபனம். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட தன்மான ஸ்தாபனம் என்ற பெயரைக் காப்பாற்றிக் கொள்ளும் பெரிய பொறுப்பு திராவிடர் கழகத் தலைவர்களுடையது. இவ்வளவு காலம் பெரியாருடன் _ பெரியாரின்கீழ் பழகிப் பெற்றுள்ள தேர்ச்சியும் அனுபவமும் அவர்களுக்கு நிச்சயம் இந்தச் சாதுரியத்தை அளிக்கும் என்று நம்பலாம்.
பெரியார் இல்லாத திராவிடர் கழகம் தனது பணியைத் தொடர்ந்து நடத்துவது உண்மையிலேயே ஆச்சரியம். திராவிடர் கழகத் தலைவர்கள் தங்கள் நிலைகளை _ கோணங்களை _ அணுகுமுறைகளைப் பெரியாரின் கொள்கைகள் என்ற உரை கல்லில் அவ்வப்போது உரைத்துப் பார்த்துக் கொள்வதில் சிறிது சோர்வு காட்டினாலும் விபரீதம் விளையக்கூடிய வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இதை திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் உணர வேண்டிய அளவுக்கு உணர்ந்து இருப்பதற்குரிய ஜாடைகள் நன்றாகத் தெரிகின்றன. இதைவிட நிம்மதியை தரக்கூடியது தமிழினத்திற்கு வேறு என்ன இருக்க முடியும்?
இப்படி நிறைவுபெற்ற அந்தக் கட்டுரையை எழுதியது யார் என்று பிறகுதான் நமக்குத் தெரியவந்தது. சென்னைக் கடிதம் என்ற தமி-ழோவியம் தீட்டும் பேனா மன்னர், தமிழ்நாட்டின் மூத்த முதிர்ந்த பத்திரிகையாளரான ஜே.வி.கே. (J.V.K.) அவர்கள் என்பது. ஜே.வி.கண்ணன் என்பது அவரது முழுப்பெயர். அவர் (Free lance) எழுத்தாளர். முன்பு விடுதலையில் பணியாற்றியவர்; ஜஸ்டிஸ் பத்திரிகை விடுதலை நாளேட்டின் ஆபிஸராக இருந்த திரு. டி-.ஏ.வி. நாதன் அவர்களின் அன்புத் தோழர். அய்யா, அண்ணாவிடம் அளவு-கடந்த பற்றுகொண்ட திறமைமிக்க எழுத்தாளர். வந்தவாசி, வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளில் தொடர்புடையவர். கடைசிவரை தனது பெயரை விளம்பரப்படுத்த விரும்பாது கூச்சத்தையே மேலாடையாகப் போர்த்திக் கொண்டவர். அவர் தமிழ்முரசில் இப்படி எழுதியது சிங்கப்பூர் முதல் பற்பல நாடுகளில் வாழும் திராவிடர்களையும் திராவிடர் கழகப் பணிகள்பற்றி கூர்ந்து கவனிக்க அடிகோலியது.
தமிழ்நாட்டிலுள்ள அத்துணை கழக மாவட்டங்களிலும் அன்னையாரும் நானும் மாவட்டக் கழக, ஒன்றிய, நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் முற்பகலிலும் மாலை பொதுமக்களைச் சந்தித்து கழகக் கொள்கைகளை விளக்கியும் தந்தை பெரியார் இல்லை என்ற மக்களின் மனக்கவலைக்கு மருந்திடுவதுபோன்ற பணிகளைச் செய்தபோது கட்சி வேறுபாடு கருதாது அனைவரும் நல்லவண்ணம் பேராதரவு தந்தனர் என்பது, கூடிய கூட்டத்தின் வாயிலாகவும் அவர்கள் காட்டிய அன்பு, பரிவு, பாசம் பெரியார் தொண்டு தொடர வேண்டியதன் அவசியத்தை நாடு உணர்ந்திருக்கிறது என்பதைத் துல்லியமாய்க் காட்டியது.
கடலூருக்கு அன்னையாருடன் நான் இந்தச் சுற்றுப்பயணத்தில் சென்றபோது, நூற்றாண்டு விழா கண்ட கடலூர் நகராட்சியின் சார்பில் 4_2_1974ல் எங்கள் இருவருக்கும் வரவேற்பு தரப்பட்டது. நகராட்சித் தலைவர் திரு. சுப்ரமணியம் அவர்கள் வரவேற்றார். ஏற்கனவே 1972ல் (13_8_1972 அன்று) கடலூரில் தந்தை பெரியார் சிலை திறப்புக்கு வந்தபோது, தந்தை பெரியார் அவர்களுக்கு கடலூர் நகரசபை மிகச் சிறப்பான முறையில் வரவேற்பளித்தது. ஓராண்டிற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவராக வந்த அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களுக்கும் (கடலூர்) மண்ணின் மைந்தனாகிய எனக்கும் _ பெரியார் தொண்டன் என்பதால் _ நகராட்சி வரவேற்புத் தந்து பெருமைப்படுத்தியது என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு அல்லவா? அவ்வரவேற்பினை ஏற்றுக்-கொண்டு அன்னையார் அவர்கள் பதிலளிக்கையில் மிகுந்த தன்னடக்கத்துடன், இந்த நகரமன்றத்தில் எத்தனையோமுறை தந்தை பெரியார் அவர்களுக்கு வரவேற்புக் கொடுத்துள்ளீர்கள். அப்போதெல்லாம் அய்யா அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை கேட்டிருக்-கின்றீர்கள். இன்றைக்கு எங்களுக்கும் அந்த முறையில் வரவேற்புக் கொடுத்து மிகவும் பெருமைப்படுத்தி இருக்கின்றீர்கள். நூற்றாண்டு விழா கண்ட நகர்மன்றம் இந்தக் கடலூர் நகர் மன்றம். இதுபோன்ற நகரமன்றங்களால் வரவேற்பு பெறுவது என்பது பெருமையான ஒன்றுதான்.
என்றாலும், இந்தப் பெருமைகளை எங்களுக்கு நீங்கள் கொடுப்பதெல்லாம் எங்களுக்குள்ள தனித் தகுதியால் அல்ல என்பதை நாங்கள் உணராமல் இல்லை. இந்தப் பெருமைகளுக்கும் பாராட்டு-களுக்கும் அடிப்படையாக, ஆணிவேராக இருப்பவர்கள் தந்தை பெரியார் அவர்களே ஆவார்கள். அய்யா அவர்களின் தொண்டுகளுக்கு, பணிகளுக்கு நீங்கள் காட்டுகிற ஆதரவுக்கு அடையாளமாகவே எங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் என்றே கருதுகிறோம். பொது-மக்களைச் சந்தித்து நேரிடையாகத் தொண்டு செய்யும் வாய்ப்பு ஏற்படும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அய்யா அவர்களுக்குத் தொண்டு செய்தாலே அது மறைமுகமாக பொதுமக்களுக்கும் நேரிடையாக இயக்கத்திற்கும் தொண்டு செய்-வதற்குச் சமம் என்று கருதியே இந்த இயக்கத்தில் என்னை ஒப்படைத்ததோடு, அய்யா அவர்களின் நலனைக் காக்கும் அப்பணியில் ஈடுபட்டு இருந்தேன். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பணியைச் செய்து வந்த எனக்கு, இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று கனவிலும் கருதியதே கிடையாது.
அய்யா அவர்களின் திடீர் மறைவு நாட்டில் ஒரு சூன்யமான நிலையை ஏற்படுத்திவிட்டது. என்ன செய்வது? எப்படி இயங்குவது? என்ற ஒரே திகைப்புக்கு ஆளாக்கப்பட்டோம்.
இந்த நிலையில் அய்யா அவர்களால் உருவாக்கப்பட்டு கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தை தொடர்ந்து நடத்திச் செல்லும் பெரும் பொறுப்புக்கு கழகத் தோழர்களால் ஆளாக்கப்பட்டேன்.
இது எவ்வளவு பெரிய பொறுப்பு என்று நினைக்கும்போது இதற்கு நான் தகுதிதானா என்று என்னையே நான் கேட்டுக்கொள்ளுகிறேன். கழகத் தோழர்களின் உறுதியும் பொதுமக்கள் காட்டுகிற எழுச்சியும்தான் என்னை இந்தப் பொறுப்பில் தொடர வலிமையை அளித்திருக்கிறது. எங்களுக்கு அளிக்கப்பட்ட பெருமைகளை எல்லாம் அய்யாவின் காலடிகளுக்குச் சமர்ப்பித்து அய்யா அவர்கள் விட்டுச் சென்ற பணிகளில் அயராது பாடுபடுவேன் என்று உறுதி கூறுகின்றேன் _ என்றெல்லாம் குறிப்பிட்டார்கள்.
அன்னையாருக்கு முன்பாக நானும் ஒருசில வார்த்தைகளில் எனது பதிலுரை, நன்றியுரையை தெரிவித்துக்கொண்டேன்.
…. என்னைப் பாராட்டி வரவேற்பு அளித்துள்ளீர்கள் என்றால் அதற்குக் காரணம், காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பார்கள்; அந்த முறையில் கடலூருக்கு உரிய என்னைப் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள் என்றே கருது-கிறேன். நீங்கள் கூறியிருக்கிற பெருமைகளுக்கு எல்லாம் நான் தகுதிபெற்றில்லாவிட்டாலும் அந்தத் தகுதிகளை எல்லாம் இனி பெற முயற்சி செய்வேன் என்று கூறிக்கொள்கிறேன்.
ஞானப்பால்பற்றி இங்கு என்னைப் பாராட்டிப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் (சுப்ரமணியம்) குறிப்பிட்டார். நான் ஒன்றாவது வயதிலேயே என் தாயை இழந்தவன். தாய்ப்பால் பேறு பெறாதவன். நான் உண்ட பால் எல்லாம் 9 வயது முதலே தந்தை பெரியார் அவர்களையே தாயாகவும் தந்தையாகவும் கொண்டு உண்ட பகுத்தறிவுப் பால்தான்!
நகராட்சிகள் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தால்தான், அம்மை, காலரா போன்ற தொற்றுநோய்கள் கடவுள்களால் அளிக்கப்படுபவை என்று மக்கள் நம்புவதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முடியும். நடைபாதைக் கோயில்களை அனுமதிக்கக் கூடாது நகராட்சிகள் என்பதாகக்-கூறி, தந்தை பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது செய்த துணிவான சீர்திருத்த நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி ஏற்புரையை முடித்தேன்.
அன்னையார் அவர்கள் திராவிடர் கழகத் தலைமை பொறுப்பை அய்யா அவர்களுக்குப் பிறகு ஏற்ற நிலையில் முதல் உள்ளாட்சி வரவேற்பு ஈரோட்டுப் புறநகர்ப் பகுதியாகிய பிராமணப் பெரிய அக்ரஹாரம் என்ற ஊரில். ஊரின் பெயர் அப்படி இருந்தாலும் அங்கே ஒரு கணிசமான பெரும்-பகுதியினர் இஸ்லாமியர்களேயாவர். அவர்கள் அத்துணை குடும்பமும் தந்தை பெரியார் இடத்திலும், திராவிடர் இயக்கத்தின்பாலும் மிகுந்த மரியாதையையும் பற்றையும் வைத்திருக்கிறவர்கள் இன்றளவும்.
அங்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்த சுயமரியாதைச் சுடரொளி மானமிகு பெருமாள் அவர்கள் அங்குள்ள இஸ்லாமிய இளைஞர்கள் பலரையும் திராவிடர் இயக்க ஆர்வலராக ஆக்கியவர்கள் ஆவார்! அங்குள்ளவர்கள் தோல் ஏற்றுமதி வாணிபம் செய்பவர்கள். சென்னையிலும், வெளிநாடுகளிலும் அலுவலகங்கள் உண்டு. நண்பர் இஸ்மாயில் போன்ற பிரபல குடும்பங்கள் தந்தை பெரியாரிடம், அன்னையாரிடம், நம்மிடம் உறவுக்காரர்களைப்போல் பழகுபவர்கள். எல்லா நிகழ்ச்சிகளிலும் நாங்கள் கலந்துகொள்ள உரிமையோடு அழைப்பவர்கள்.
அந்த பேரூராட்சியில் 3_2_1974 அன்று (ஈரோடு உறுதிநாள் கூட்டத்திற்கு, வருகை தந்த அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் த. ஜோசப் தலைமை வகித்தார். உறுப்பினர் சுப்ரமணியம் வரவேற்பிதழை வாசித்தளித்தார்.
என்னை உரையாற்றும்படிக் கேட்டுக் கொண்டதை ஏற்று சிறிதுநேரம் நானும் பேசினேன்.
அன்னையார் அவர்கள் வரவேற்பைப் பெற்று அய்யா அவர்களுக்கும் இவ்வூருக்கும் உள்ள உறவுமுறை எப்படி நெருக்கமான கொள்கைபூர்வ ஆதரவு வகைப்பட்டது என்பதை நினைவுகூர்ந்து, அய்யாவை அழைத்துச் செய்வதைப்போலவே என்னையும் அழைத்துப் பெருமை செய்துள்ளீர்கள் என்று கூறி தனது நன்றியறிதலைத் தெரிவித்துக்-கொண்டார்கள்.
– நினைவுகள் நீளும்…