பொறியாளர் இரண்யன் சட்டையை களைந்ததும் காஞ்சனா கேட்டாள். ஒரு வாரத்துக்குள்ளே பேய் வீடு கசந்து விட்டதாக்கும். இன்று படுக்கை அங்கேதானா இல்லை இங்கேயா? என கிண்டினாள்.
பேய்க்குப் பயந்தவன் நானல்ல. அது ஓடி ஒளிந்து இரண்டு நாளாச்சு. இப்ப நிலமையே வேறே. வாங்கின கட்டிடத்துக்கு ஏக கிராக்கி என்றான் இரண்யன்.
என்ன சொல்றீங்க. நிஜமாகத்தானா? விழிபிதுங்க கேட்டாள், காஞ்சனை.
சொல்றேன் கேளு. முதல் நாள் போய் நாம வாங்கின பேய் வீட்லே படுத்தேனா பாரு. உண்மையிலேயே கொஞ்சம் நடுக்கந்தான் போ. நிலைமை சரியில்லே. நடுராத்திரி வீட்டுக்குள்ளே விதவிதமான சப்தம். நடுஹாலில் படுத்திருந்தேனா, கிரிச் கிரிச் என சப்தம். படபடவென ஓசை. அறையைச் சுற்றி, ஏகப்பட்ட சன்னல்கள். சன்னல் என்று சொல்ல முடியாது. பெரிய வட்டவடிவில் வெண்டிலேட்டர்கள். காற்று உள்ளே போகும்போதும் வெளியேறும்போதும் வினோதமான சப்தங்கள் எழும். எப்ப சுத்தம் பண்ணினதோ- _ நூலாம்படை சடைசடையாய் தொங்கின. காற்று பலமாக அடித்தால் அது அறுந்துபோய் சாட்டை அடியாய் விழும். குலை நடுங்கும். கட்டின டாக்டர் மேற்கத்திய பாணியில் கட்டினாரே தவிர தொடர்ச்சியா மெயிண்ட்னஸ் இல்லை. கடன் தொல்லையால் கட்டியவர் இந்த வீட்டில் தற்கொலை செய்துக் கொள்ள, அவரது ஆவி இந்த வீட்டில் நடமாடுவதாக புரளி. கேட்க வேணுமா? வாடகைக்கோ, விலைக்கோ யாரும் வரலே. பேய் வீடுன்னு பிரபல்யமாய் போச்சு!
என் பகுத்தறிவு சற்று சிந்திக்க வைத்தது. விடிந்ததும் என் முதல் வேலை கடைவீதி போய் கயிற்றுக்கடையில் பம்பரம் சுற்றுவோமே அதைவிட ரெட்டை மடங்கு கனத்த கயிற்றுகெண்டு அரை டஜன் வாங்கி வெண்டிலேட்டர்களை ஆணிவளையத்தில் இழுத்து இறுக முடிந்தேன். காற்று போக வர தடையில்லை. கிரீச் சப்தம் போயே போச்சு! மறுநாள் தூக்கம் என்னை அள்ளிக் கொண்டு போனது. எப்படியோ டாக்டரின் ஆவியை சமாளித்தாகி விட்டது. கதவைத் திறந்து நிம்மதியாக வாசற்படி இறங்கினால், மற்றொரு பீதி கிழவி உருவத்தில் என்னை பயமுறுத்த தயாரானாள். அது யாரு கிழவி _ புது வரவா இருக்கு காஞ்சனா ஆவலுடன் கேட்டாள்.
கட்டடத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாதவள். பகல் முழுதும் பேய் கட்டிடத்தின் வாசற்படியில் தின்பண்டக் கடை போட்டு, பக்கத்துப் பள்ளிப்பிள்ளைகளிடம் சரியான வியாபாரம். பொழுது மங்கியதும் கடையை கட்டுவாளாம். அவள் போட்ட குண்டு. தம்பி இளவட்டமா தெரிகிறீங்க. இரவு நேரத்திலே இங்கே மோகினி ஆட்டம் உண்டு, என் கண்ணால் கண்டதைச் சொல்றேன். அதுவும் திங்கட்கிழமைன்னா ஆத்தா தவறாமே வந்துடுவா. கழுத்து கொள்ளாமே மல்லிகைப்பூ. வாசம் ரெண்டு மைலுக்கு வீசும். ஆனா யாரையும் தொந்திரவுபடுத்தினதாக தெரியலே. ஜல்ஜல் என கொலுசு சப்தம் என் காதாலே கேட்டிருக்கேன். கால் தரையிலே பாவாது. கொஞ்சம் சுத்தபத்தமா, பதனமா இருந்துக்குங்க தம்பீ! என்றாள் கிழவி.
அதென்ன திங்கட்கிழமை மட்டும். அம்மணி மோகினிக்கு பிடித்தமான நாள்! என் பகுத்தறிவு நுணுக்கமாக ஆராய ஆராய ஒன்று புலப்பட்டது. அன்றுதான் எங்கள் ஊர் சந்தை கூடும் நாள். பட்டிதொட்டிகளி லிருந்து இளசுகள் எங்கள் ஊர் நோக்கி படையெடுக்கும். பொறி தட்டியது. புலப்பட்டது.
இந்த வீட்டு அமைப்பு வெளிப்புறத்திலிருந்து, யார் வேண்டுமானாலும் அந்த வீட்டு மொட்டை மாடிக்கு எளிதாக மாடிப்படி ஏறி மேலே போகலாம். தங்கலாம். படுக்கலாம். இப்படி வாடகை இல்லா தங்குமிடமா? முதல் வேளை! ஒரேநாளில் கொத்தநாரும் சித்தாள்களும் அழைக்கப்பட்டு மாடிப்படி அடைக்கப்பட்டது.
நான் எதிர்பார்த்த திங்களும் உடனடியாக வந்தது. மோகினியும் வந்தாள். கிழவி சொன்ன மாதிரி தலைநிறையப் பூ. காலிரண்டு மட்டும் தரையில் ஊன்றி! பத்தடி தூரத்தில் மோகினியைப் பின்தொடர்ந்து ஒரு பகட்டு மைனர். ப்ச்சு என்ற சலிப்புச் சத்தம் இரண்டு பேர்களிடமிருந்தும் ஏகோபித்து வந்தது.
அவர்கள் ஏமாற்றம் எனக்குப் புரிந்து இனி இந்த வீட்டு மாடிக்கு மோகினி நடமாட்டம் இராது என உறுதி _ புரிந்தது. பாவம் இருளாயி கடலை கிழவி!
எல்லா நடவடிக்கைகளையும் துப்பறியும் கதைபோல மிக உன்னிப்பாக கேட்டுக்-கொண்டிருந்த காஞ்சனை, அப்ப ஆவியும் போயி, மோகினி பிசாசும் போனது. சும்மா போகலே, வீட்டுக்கு கிராக்கி மேலே கிராக்கி உண்டாக்கி, கூரையை பிச்சுக்கிட்டு கொட்றமாதிரி ரேட்டையும் ஏத்திட்டாங்கன்னு சொல்லுங்க
அதான் இல்லே காஞ்சனை! வீட்டை நான் யாருக்கும் விற்கப் போறதில்லே. அதை பொது பகுத்தறிவு நூலகமாக்கப் போறேன் என்றான் இரண்யன் உறுதியுடன். தன் கணவனை மிகப் பெருமையுடன் ஏறிட்டாள் காஞ்சனை.
– சந்தனத்தேவன்