அய்ந்தறிவு விலங்குகளுக்குண்டு. மேலே
ஆறாவ தாம்அறிவு மனிதர்க் குண்டு.
சிந்திப்ப தைஒத்தி வைத்து விட்டுச்
சிகைவளர்க்க மாத்திரமா சிரம்நமக்கு?
முந்திப்போய் எத்தனையோ கண்டார், மேற்கே
மூளைகொண்டு வெற்றிகண்டார். இங்கே நாமோ
மந்திரத்தில் மாவிழுமென் றெண்ணி வானை
வாய்பிளந்து பார்த்துக்கொண் டிருக்கி றோமே!
படையெடுக்கும் பொய்மைகளை உள்ளே விட்டுப்
பகவானை நிழலுக்குள் வைப்ப தற்குக்
குடையெடுத்துப் போவதென்ன தெளிவா? உச்சிக்
கோபுரங்கள் நிழல்தருமா எளியார் வாழ?
வடைமாலை சாத்துவதால் உடையற் றோரை
வாடைவந்து கடிக்காமல் தடுத்தல் ஆமோ?
படுக்கையறை கல்லுக்கு எதற்கு? ஆயும்
பகுத்தறியா வெண்கலத்து மணிமு ழக்கு?
தீச்சட்டி ஏந்துவதும் சுற்றுப் பாறை
தேய்ந்துவிட உருளுவதும், கல்முன் நின்று
கூச்சலிட்டு வேண்டுவதும், வேம்புக் கொத்தால்
கூச்சத்தைக் காப்பதுவும், உடலில் ஊசி
பாய்ச்சுவதும், ஓடுகவிழ் மண்டை மீது
பால்தேங்காய் உடைப்பதுவும் அறிவுதானா?
சூழ்ச்சிகளால் சுருண்டோரே கண்விழிப்பீர்.
தோள்உயர்த்தி உலகத்தைச் சுற்றிப் பார்ப்பீர்.
பத்தியமாய்ச் சாப்பிடும்நீர் அங்கே சென்று
பக்தியுடன் மண்சோறு தின்ன லாமா?
சொத்தைகளே – ஆயிரமாய்ப் பால்கு டங்கள்
சுமந்துசென்று கல்மீது ஊற்ற லாமா?
சத்துணவு கிடைக்காமல் குன்றிப் போகும்
சாமான்யர் குழந்தைகளைப் பார்த்துள் ளீரா?
நித்திரையில் வாழ்வோரே – பழமும் பாலும்
நிதம்எவர்க்குத் தேவைஎனச் சிந்தித் தீரா?
– நீலமணி