நீதி
மருத்துவ மனைகளையும் கல்வி நிலையங் களையும் பார்த்துப் பயந்த மக்கள், இன்றைக்கு நீதிமன்றங்களையும் பார்த்துப் பயப்படுகிறார்கள். சின்ன வழக்கு தொடுப்பதில் தொடங்கி, வக்கீல் கட்டணம், தீர்ப்புக்கான காலம் என நினைத்தாலே மலைக்க வைக்கின்றன நீதிமன்ற நடவடிக்-கைகள். அதுவும் உச்ச நீதிமன்றம் நாட்டின் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த நிலையை முற்றிலும் மாற்ற வேண்டும்!
– முன்னாள் நீதிபதி, வீ.ஆர்.கிருஷ்ண(ய்யர்)
இந்தியன்
ஓர் அந்நியன் -_ அதுவும் சுற்றுலாப் பயணிபோல வந்து செல்பவன் _ ஒரு நாட்டின் அரசியல், சமூக நிலையை அத்தனை எளிதாக மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால், ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிகிறது. ஏற்றத்தாழ்வு, எல்லா இடங்களிலும் இருக்கிறது என்றாலும், இந்தியாவில் உச்சத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. அது என்னை அறைகிறது.
– ஆங் லீ.ஹாலிவுட், திரைப்பட இயக்குநர்
பெரியார்
சமூக நீதிக்கான போராட்டத்தில் பெரியார் வகித்த பங்கு மகத்தானது. எத்தனை விமரிசனங்களும், நிராகரிப்புகளும் வந்தாலும் அதை மறைக்க முடியாது. வரலாறு பெரியாரை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தன்னுடனேயே இணைத்துச் செல்லும். அவர் ஒரு காலகட்டம். அவரின் பங்களிப்பு, கருத்தியல் தளத்திலானது. அரசியல் ரீதியாக நாம் வென்றெடுக்கிற பல உரிமைகள் கருத்தியல் தளத்தில் மாற்றம் ஏற்படும்போது மட்டுமே முழுமை பெறுகின்றன என்ற நுட்பத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு இருந்த துணிச்சலும், அறிவு நேர்மையும் எவருக்குமில்லை.
பெரியாரை விமர்சிக்க வேண்டாம் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அந்த விமரிசனத்தையும் பகுத்தறிவு அடிப்படையில் வைத்தால் சரியாக இருக்கும். தமிழ்தேசியத் தலித்திய அரங்குகளில் பெரியார் மீது வைக்கப்படும் விமரிசனங்கள் உணர்ச்சி வயப்படுவதன் வெளிப்பாடாகவே பெரும்பாலும் இருக்கின்றன. ஒன்று மட்டும் நிச்சயம். பெரியாரை நிராகரித்தால் தலித்திய, தமிழ் தேசிய கருத்தியல் செயற்பாட்டில் அடிப்படைவாதம் வளரும். மேலும், அது இந்துத்துவாவின் வளர்ச்சிக்கும் கைகொடுக்கும். ஓர் உதாரணம் சொல்கிறேன். அண்மையில் கிருஷ்ணகிரி அருகே ஒரு பள்ளி வளாகத்தில் நிறுவப்பட இருந்த பெரியாரின் சிலை தடுக்கப்பட்டு, அங்கே ஹெட்கேவரின் சிலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்-பட்டன. தீவிர இந்து சார்பாளரான அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரின் இந்த முயற்சி நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகே நிறுத்தப்பட்டது.
– அழகியபெரியவன், இலக்கியவாதி