மோடிதான் பிரதமருக்கான பிதாமகனா? –

ஜனவரி 01-15

மோடி நான்காவது முறையும் குஜராத் மாநில முதலமைச்சர் ஆகிவிட்டார்.

அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை; அடுத்த பிரதமர் தாமோதரதாஸ் நரேந்திர தாஸ் மோடிதான் – இன்றே எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்று ஜோராகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏடுகள் எழுத ஆரம்பித்துவிட்டன.

மோடி என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார் என்பதை எல்லாம் தம் கண்களுக்கு எதிரே பார்த்துக் கொண்டிருக்கும் 90 விழுக்காடு குஜராத் ஊடகங்கள் உருட்டல் புரட்டல் செய்து, ஆகா மோடியைப் போல் உண்டா என்றுதான் எழுதுகிறார்கள்.

பிற மாநிலங்களில் உள்ள பார்ப்பன ஏடுகள், முதலாளித்துவ ஊடகங்கள், சங் பரிவார் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மோடியைப் பிரதமராக்கித் தம் ஞானக் கண்களால் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றன.

குஜராத்தைப் பொறுத்தவரையில் ஒரு காரியத்தில் அவர் திட்டமிட்டு வெற்றிப் பெற்றுள்ளார் என்பதை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.

இந்து – முஸ்லிம் என்கிற ஒரு நடுக்கோட்டைப் (றிளிலிகிஸிமிஷிகிஜிமிளிழி) போட்டு இரு அணிகளாகப் பிரித்து, இந்து வாக்கு வங்கியை உருவாக்கியதுதான் அவர் செய்த தந்திரம்.

அதிலும் அவருக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் அண்மையில் சத்பவானா என்னும் பெயரில் கூட்டங்களை ஏற்பாடு செய்து உண்ணாநோன்பு மேற்கொண்டதாகும்.
அதில் சகல மதத்தவர்களும் மோடியைச் சந்திப்பது, கைகுலுக்குவது, பூங்கொத்துக்களைக் கொடுப்பது, சால்வைகளை அளிக்கச் செய்வது எனும் நாடக அரங்கேற்றமாகும்.

அவர் அமர்ந்திருக்கும் மேடை அரசு பணம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு சோடணை செய்யப்பட்டிருந்தது. பார்த்தாலே மலைக்க வைக்கும் ஏற்பாடு அது.

முஸ்லிம்கள், கிருத்தவர்கள் கூட விட்டில் பூச்சிகளாக விழுந்தனராம். அதிலும்கூட இஸ்லாமிய சகோதரர் அளித்த அந்தக் குல்லாயை அணிந்து கொள்ள மறுத்து விட்டார். என்னதான் வேடம் போட்டாலும் உண்மை உணர்வு முன்னுக்கு வந்து அவர் உருவத்தை அம்பலப்படுத்தி விட்டதே.

குஜராத் மாநிலத்தில் மக்கள் தொகையில் 9 விழுக்காடு முசுலிம்கள். ஆனால், பி.ஜே.பி. சார்பில் ஒரு வேட்பாளர் கூட நிறுத்தப்படவில்லையே.

உலகில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் முசுலிம்கள் இருப்பது இந்தியாவில்தான்.

அப்படி இருக்கும்பொழுது அந்த மக்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அறவேயில்லாத ஒருவர் இந்தியாவின் பிரதமராவதை எண்ணிப் பார்க்கவே குமட்டவில்லையா?

குஜராத்தில் இந்த முறையில் வெற்றி பெற்றுவிட்டதால். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அதனை அரங்கேற்றலாம், வலை விரிக்கலாம் என்று மோடி நினைப்பாரேயானால், அதனைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால், மோடியின் இந்த வஞ்சக நெஞ்சே அவரைத் தனிமைப்படுத்தித் தூக்கி எறியும்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் மோடியின் மீது இந்த முத்திரை ஆழமான ரணமாகப் பதிந்துவிட்டது.

மோடிக்கு முதல் முறை விசா மறுத்த அமெரிக்கா, இரண்டாம் முறை அளித்துவிட்டது என்ற ஒரு தகவல் கசிந்த சில நாள்களிலேயே அது உண்மையல்ல என்று அறிவிக்கப்பட்டு விட்டதே!

மோடியின் முயற்சியால் குஜராத் மாநிலம் சிறுபான்மை மக்களின் குருதி வெள்ளக்காடாக ஆக்கப்பட்ட நிலையில், அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி திருவாய் மலர்ந்தது என்ன?

எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன் என்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொள்ளவில்லையா?

ராஜதர்மத்தைக் கடைபிடிக்கவும் என்று அறிவுரை பகரவில்லையா?

ஏன்? உச்சநீதிமன்றம் இதுவரை யாருக்கும் அளிக்காத கிரீடத்தையல்லவா மோடியின் தலையில் சூட்டியது _ -நீரோ மன்னன் என்ற அந்த கழுவவே முடியாத கறைக் கிரீடம்.

இன்னுமொரு சாதனைக்குச் சொந்தக்காரர் இந்த மோடி.

இந்திய வரலாற்றிலேயே மோடியின் அமைச்சரவையில் இருந்த ஒரு பெண்ணுக்குக் கிடைத்திட்ட தண்டனை எதற்காகவாம்?

நரோடா பாடியா எனும் இடத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைக்காக மாயா பென் கோட்னானி எனும் மோடி அமைச்சரவையில் அலங்கரித்த ஒரு பெண்ணுக்கு 28 ஆண்டுகள் சிறை.

படுகொலை செய்யப்பட்டவர்கள் 97 பேர்கள் என்றால், அதில் 35 குழந்தைகள்!

இந்த அரும்பெரும் வீர தீரச் செயலை முன்னின்று ஒரு பெண் செய்ததற்காக அவருக்கு அளிக்கப்பட்ட வெகுமதி என்ன தெரியுமா? மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்!

ஆகா, மோடியின் திறமையே திறமை!  குழந்தைகளைக் கொன்று குவித்தவருக்கு குழந்தைகள் நலத்துறை!

அந்தப் பெண்மணி ஒரு டாக்டர் என்பதால், கொலைகள், பிணங்களைக் கண்டு அஞ்சமாட்டார் என்று மோடி நினைத்திருக்கலாமோ!

இந்த மனிதாபிமானமும், சாமர்த்தியமும் மோடியைத் தவிர வேறு யாருக்குத்தான் வரும்?

இந்தப் பெண்மணியைக் காப்பாற்ற என்னென்ன தில்லுமுல்லுகளை எல்லாம் மோடி செய்தார் என்பதை நீதிபதியே அம்பலப்படுத்தி விட்டாரே!

மாயா கோத்னானிக்கு அப்போதையை விசாரணை அமைப்புகள் அனைத்தும்  (அதாவது உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பதற்கு முன்பு) உதவியாக இருந்துள்ளன. பலியானவர்களைப்பற்றிக் கவலைப்படாமல், பாதிப்பை ஏற்படுத்தியவரைப் பாதுகாக்கும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்-பட்டன. கோத்னானியின் பெயர்கூட இந்தச் சம்பவத்தில் வந்துவிடாதபடி காக்கக் கடுமையாக முயன்றுள்ளனர் என்பது மோடியின் முகத்தில் நீதிபதி கொடுத்த சாட்டையடியல்லவா?

ஒருக்கால் இந்துத்துவா பல்கலைக் கழகத்தில் மோடிக்குக் கிடைத்திட்ட சிறப்புப் பட்டம் போலும்! எனவே, இத்தகைய மேதாவிதான் இந்தியாவுக்குப் பிரதமராகத் தகுதி படைத்த கோமான் என்று குருமூர்த்தி கம்பெனிகள் சொன்னாலும் சொல்லும்.
மோடியின் அமைச்சரவையில் இருந்தவருக்குத் தண்டனை. மோடிக்கு அல்லவே என்று கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு சோ போன்றவர்கள் பூணூலால் எழுத முயற்சிக்கலாம்.

அதுவும் உண்மையல்ல. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் ராஜு ராமச்சந்திரன் தம் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளது என்ன? மோடி குற்றவாளிதான், அவர்மீது கீழ்க்கண்ட தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும் என்று கூறவில்லையா?

மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையில் பகைமையை ஏற்படுத்தியது தொடர்பாக இந்தியக் குற்றவியல் சட்டம் இ.பி.கோ. பிரிவு 153-ஏ(1) மற்றும் பி, பிரிவின்கீழும், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் ஏற்படுத்த முனைந்தது தொடர்பாக 153-பி(1), சட்டத்துக்குக் கீழ்ப் படியாத அரசு ஊழியர் என்ற முறையில் 166 பிரிவின்கீழும், பகைமையும், வெறுப்பையும் விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக 505(2) பிரிவின் கீழும், வழக்குத் தொடரலாம் என்று உச்சநீதிமன்றத்திற்கு உதவியவர் கிவிமிசிஹிஷி சிஹிஸிமிகிணி அறிக்கை கொடுத்துள்ளாரே!

மக்களிடையே பகைமையை வளர்த்தவர் இந்திய ஒருமைப்பாட்டைக் குலைத்தவர் போன்ற குற்றங்களுக்குரியவர்தான் பாரதத் திருநாட்டின் பிரதமருக்கான மகாபுத்திரர் என்று இந்நாட்டுப் பார்ப்பன ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்!

இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள் சார். -மோடி குஜராத் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவரவில்லையா?

இந்தியாவின் பிரதமரானால் குஜராத்தைப்போல முதல் இடத்திற்கு நகர்த்திவிடுவார் என்று பிரச்சாரப் புழுதி ஒரு பக்கம்.
உண்மையா? உண்மையா?

பொருளாதார நிபுணர் அபுசலே ஷெரீப் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார் (பிப்ரவரி 2012).

இந்தியாவின் ஏழை மாநிலமான உத்தரப்பிரதேசத்தைவிட குஜராத்தில்தான் பசிப் பட்டினிக்காரர்கள் அதிகம் என்று கொடுத்த புள்ளி விவரத்திற்கு இதுவரை பதில் உண்டா?

2011 இல் இந்தியத் திட்டக்குழு சொன்னது என்ன?

நுண்ணூட்டச் சத்து குறைப்பாட்டில் குஜராத் மாநிலம் இன்னொரு சோமாலியா என்று கூறியுள்ளதே! குஜராத் மாநிலத்தில் 44.6 விழுக்காடு குழந்தைகள் (5 வயதுக்குட்பட்டவர்கள்) சத்துக் குறைபாட்டால் அல்லல்படுகின்றனர் என்ற அறிக்கைக்கு நாணயமான மறுப்பு இல்லையே!

மொத்த உற்பத்தியில் 3 ஆவது இடத்தில் இருக்கும் குஜராத் தனி நபர் பங்களிப்பில் 9 ஆவது இடம்.

கல்வியில் 14 ஆவது இடம். பரப்பளவில் 7 ஆவது மாநிலமாக இருக்கும் இம்மாநிலத்தில் அமைக்கப்பட்ட சாலைகளின் நீளம் என்ற கணக்கீட்டில் பத்தாவது இடத்தில்தான் இருக்கிறது. ஊட்டச் சத்து இல்லாமையால் எடை குறைந்த மக்கள் என்பதில் 11 ஆம் இடம். தனி நபரின் சராசரி ஆயுட்காலம் என்பதிலும் இந்தியாவில் 10 ஆவது இடத்தில்தான் குஜராத் இருக்கிறது.

இந்த உண்மைகளை எல்லாம் திரையிட்டு மறைத்துவிட்டு, மோடி ஆட்சியில் குஜராத் முதல் மாநிலம் என்பதெல்லாம் அசல் கயிறு திரிப்பே! அக்கிரகாரவாசிகளின் கைகளில் பதுங்கிக் கிடக்கும் ஊடகங்களின் உருட்டல் புருட்டல் போக்கு.

வளர்ச்சிதான் இப்படி தளர்ச்சி என்றால், ஊழல் இல்லாத நிருவாகம் என்று சான்றிதழாவது கொடுக்க முடியுமா?

மாநில அரசின் ஊழலை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் மாநில லோகா யுக்தாவுக்கு நீதிபதியை நியமனம் செய்வதில் என்ன உதறல்?

ஆளுநர் அத்தகையப் பதவியைப் பூர்த்தி செய்தபோது, நீதிமன்றம் சென்று குட்டு வாங்கியவர்தானே இந்த நரேந்திர மோடி.

சி.ஏ.ஜி. அறிக்கை, சி.ஏ.ஜி. அறிக்கை என்று மற்றவர்கள் விடயத்தில் ஊளையிடுகிறார்களே,

மோடி அரசின் ஊழல்பற்றி அதே சி.ஏ.ஜி. என்ன சொல்லியிருக்கிறது?

பல்வேறு விஷயங்களில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே (ஏப்ரல் 2012).

தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை குஜராத் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:
விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.

அரசின் பட்ஜெட்டில் 19 இனங்களில் ரூ.1,444 கோடி சேமிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரூ.2,045 கோடி செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.601 கோடி கூடுதலாகத் திரும்ப ஒப்படைக்கப்-பட்டுள்ளது. இது அரசின் பட்ஜெட் தொடர்பான செயல்பாடு சரியில்லை என்பதையே காட்டுகிறது.

முறையான விளையாட்டுக் கொள்கை வகுக்கப்படவில்லை. பயிற்சியாளர்கள் அனைவரும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான விளையாட்டு விடுதிகள் செயல்பாட்டில் இல்லை.

குடிநீர்க் கொள்கையும் சரியாக வரையறுக்கப்-படவில்லை. தேசிய நதி நீர் பாதுகாப்புத் திட்டம், எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்-படவில்லை. சபர்மதி ஆற்று நீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாகக் கண்காணிக்கவில்லை.

நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்களை, தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கவில்லை.

நிர்வாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங்கள் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட ரூ.71.8 கோடியை வருவாய்த்துறை பயன்படுத்தவே இல்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங் பரிவார் கணக்குப்படி _- பார்ப்பனர்களின் ஆசைப்படி இந்தியாவின் பிரதமர் எப்படிப்-பட்டவராக இருக்கவேண்டும்?

1. மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை-யற்றவராக இருக்கவேண்டும்.

2. சிறுபான்மை மக்களைக் கொன்று குவிப்பவராக இருக்கவேண்டும்.

3. வேதனைகளை சாதனைகளாக உருமாற்றிக் காட்டவேண்டும்.

4. அப்படி என்றால் நூற்றுக்கு நூறு இந்தியாவுக்குப் பிரதமராக இருக்க லாயக்குள்ளவர் சாட்சாத் தாமோதரதாஸ் நரேந்திர தாஸ்மோடிதான்!

– கலி.பூங்குன்றன்

மனித உரிமை ஆர்வலர்களைக் கண்டால் மோடி ஓட்டம்…?

அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வையாளர் கிறிஸ்தோப் ஹேன்ஸ் குஜராத் இனப்படுகொலைகளுக்குப் பின் முஸ்லிம்கள் முற்றாக குஜராத்திலிருந்து ஒழிக்கப்படுகின்றார்கள் என்பதை அறிந்தார்.

உடனேயே அவர் குஜராத்தையும் சுற்றிப் பார்க்க ஏற்பாடுகளைச் செய்தார்.

2002 முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி ஏற்பாடுகளையெல்லாம் செய்வதுபோல் நடித்தார்.

கடைசி நிமிடத்தில் அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வையாளர், குஜராத் வரக்கூடாது எனக் கூறிவிட்டார். தன்னை குஜராத்திற்குள் அனுமதிக்கவில்லை என்பதை ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார், அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வையாளர்.

முஸ்லிம்கள் _ கிறிஸ்தவர்கள் _ தலித்கள் பழங்குடியினர், பெண்கள் _ இவர்களின் உரிமைகள் சதா சர்வகாலமும் ஆபத்தில்தான் இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

Source: 1 Statement of UN Social Rapportaeur.
TH: 31/3/2012 – MGM.

வாக்கு குறைந்தது

மோடியின் வெற்றியை ஊடகங்கள் ஆஹா.. ஓஹோ… எனக் கொண்டாடிவிட்டன. ஆனால், உண்மை என்ன தெரியுமா? சென்ற தேர்தல்களை விட இந்த முறை மோடிக்கு வாக்குகள் குறைந்துவிட்டன. 2002ல் 49.9 விழுக்காடு பெற்ற பா.ஜ.க. 2007ல் 49.1 விழுக்காடும், இந்த முறையான 2012ல் 47.9 விழுக்காடுமே பெற்றுள்ளது. எம்.எல். ஏக்களின் எண்ணிக்கையும் முறையே 127, 117, 115 என குறைந்துள்ளது. குஜராத்தில் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்குமான 9 விழுக்காடு வாக்கு வேறுபாடுக்கு அந்த மாநிலத்தின் தலைவர் ஒருவரை காங்கிரஸ் முன்னிறுத்தாததே காரணம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ராகுலுக்கும், சோனியாவுக்கும் நாடாளு மன்றத்தேர்தலில் வாக்குகள் கிடைக்கலாம். ஆனால், குஜராத்தில் உள்ளூர் தலைவரையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு என இருக்கும் தனிப்பட்ட பலம் என்பதைவிட காங்கிரசின் பலவீனமே மோடி போன்றவர்களை மீண்டும் வெற்றிபெறவைக்கிறது

 

நீரோ மன்னன் மோடியின் மோசடி

குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சமூக இணைய தளங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரது டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தில் பத்து லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள், அதுவும் அவர் கணக்கு துவங்கி குறுகிய காலத்தில் இது நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மோடி கூறுகையில், இது வெறும் எண்ணிக்கை அல்ல மாறாக உங்களது அன்பு என்று பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது கணக்கில் 50 சதவீதம் போலி கணக்கு என்பது தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில் ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதள பொறியாளர்கள் குழு ஒன்று இதுகுறித்து ஆய்வு செய்ததில் மோடியின் டிவிட்டர் கணக்கில் 50 சதவீதம் போலி பயனாளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள்.

அதாவது அவரது கணக்கில் 46 சதவீதம் போலி கணக்கும், 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்காளர்கள் எனவும் கூறியுள்ளனர். மீதமுள்ள 13 சதவீதம் பேர் மட்டுமே உண்மையாக பின் தொடர்பவர்கள் என்பது தெரிகிறது.

மோடியின் டிவிட்டர் கணக்கு 2010ஆம் ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இணைந்திருந்தனர்.  2011ஆம் ஆண்டு முடிவில் நான்கு இலட்சம் பேர் இணைந்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டுமே அதிகமானவர்கள் இணைந்திருப்பதாக காணப்பட்டது. இப்போது அது போலித்தனமாக காட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவது போல பா.ஜ.க. முன்னணி தலைவராக திகழும் மோடியின் மோசடி ஒட்டுமொத்த பா.ஜ.கவுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *