வாக்கு வங்கி அரசியல் ஓட்டுப்பயிற்சியாளர்களை ஓரங்கட்டுங்கள்!

ஜனவரி 01-15

கடும் நோய்க்கான கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்த மருந்துகளில்கூட அளவான அளவே பயன்படுத்தப்பட வேண்டிய ஜாதி என்ற விஷத்தை, மருந்தை மறந்து விட்டு விஷத்தை மட்டுமே குடித்தால் நீங்கள் என்னாவீர்கள்?

தந்தை பெரியாரும், அம்பேத்கரும் கூறியபடி, பிற்படுத்தப்பட்ட  ஜாதி சூத்திரர்களும், அடுக்கின் வெளியே தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகும் பஞ்சமர்கள் என்ற இரு சகோதரர்களும் கைகோர்த்துப் போராட வேண்டிய சகோதரர்கள் அல்லவா?

அதைவிட்டு உட்ஜாதி – அரசியல் லாபத்திற்காக – தேர்தல் அரசியலில் வாக்கு வங்கிகளைத் தேடி சந்தர்ப்பவாத சதிக்குப் பலியானால் இதுவரை நீங்கள் பெற்றுள்ள – இனி பெற வேண்டிய சமூக நீதி உரிமைகள் – இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்புகள் திடீரென்று காணாமற்போகும் என்பதை நினைத்து, வீடு எரிவதைப் பார்த்து, புரியாத சிறுபிள்ளைகள் கூத்தும் கும்மாளமும் கொள்வதுபோல ஆடாதீர்!

பார்ப்பனர்கள் – ஊடகங்கள் – உங்களில் சிலரை கொம்பு சீவி விட்டு மோத விட்டு, ரத்தம் குடிக்கக் காத்திருக்கும் நரிகளாகி உசுப்பேற்றுகின்றனர்! ஏமாறலாமா?

மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் முழுவதும் அமுலாகி விட்டவனவா? யோசித்துப் பார்த்தீர்களா?

இளைய பெருமாள் கமிட்டி (மத்திய அரசு கமிட்டி) செயல் வடிவம் கண்டு விட்டதா?

உச்சநீதிமன்றத்திலும், பல மாநில உயர்நீதிமன்றங்களிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நீதியரசர்கள் போதிய அளவுக்கு Adequate Representation அடைந்து விட்டார்களா?

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் இவர்கள் இடஒதுக்கீடு கேட்பார்கள்; பார் பார் இதோ இவற்றை தனியார் மயமாக்கி இடஒதுக்கீட்டிற்கு – சமூக நீதிக்குச் சமாதி கட்டுகிறோம் என்று ஓசைபடாமல் திட்டமிட்டு வெற்றி பெறுகிறதே ஆரியமும் அதில் நுழைந்த அதிகார வர்க்க ஆட்சியும்! புரிந்து கொண்டீர்களா?

மத்திய அரசுப் பதவிகளில் செயலாளர்கள் என்ற சக்தி வாய்ந்த பதவிகளில் 132ல் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்தான் ராஜ்யம் என்பது போல ஒருவர்கூட இல்லை என்று துறை சார்ந்த அமைச்சரே 6.12.2012இல் நாடாளுமன்றத்தில் கூறியது கேட்டு, உங்களைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்ல  முயலும் சிலர்  அவர்கள் திருவாசகங்களில் கூறுவதானால் ஓட்டுப் பொறுக்கிகள் அந்தத் தலைவர் விரிக்கும் வலையில் வீழ்ந்து வாழ்வுரிமையை  -வளர்ச்சியை – முன்னேற்றத்தை இழக்கத் துடிக்கலாமா?

மண்டல் குழுப் பரிந்துரைகளுக்காகவும், இளைய பெருமாள் கமிட்டி பரிந்துரைக்காகவும் திராவிடர் இயக்கம் போராடியபோது இவர்கள் எங்கே போய் இருந்தனர்? வீட்டின் கதவைச் சாத்திக் கொண்டு வீணைக் கச்சேரி அல்லவா கேட்டுக் கொண்டிருந்தனர்; இப்போது இப்படி வீண் கச்சேரி நடத்தி, மாயையை உருவாக்கி, உங்களுக்கு ஜாதிப் போதையை ஏற்றும் மயக்கப் பானங்களை அல்லவா தரத் துடிக்கிறார்கள்?

நியாயந்தானா? சிந்தியுங்கள்! 18 வயது வந்த பெண்ணுக்குத் தனது வாழ்விணையரைத் தேர்வு செய்யத் தகுதி இல்லை என்பது உங்கள் வாதமானால், 18 வயதில் வாக்குரிமையை – ஓட்டுப் போடும் வாய்ப்பை – மாற்றிட நாடு தழுவிய அளவில் பிரச்சாரம், போராட்டம் செய்ய முன் வருவீர்களா? சட்டத்தை மாற்றிடப் போராடுவீர்களா?

21 வயது பெண் மாற்று ஜாதியில் காதல் செய்தால் அதை ஏற்பீர்களா?

பெற்றோர்களைக் கேட்டுத்தான் காதல் திருமணம் வயது வந்தபெண் முடிவு செய்ய வேண்டும் என்றால், இது மகளிரை மறுபடியும் அடிமையாக்கும் சமூக அநீதி அல்லவா?

பெற்றோர்கள் கூறுகிறபடி 18 வயது வந்த ஆண் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பெற்றோர்கள் ஆணைப்படி- சம்மதம் பெற்ற பிறகே அவர்கள் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுவீர்களா?

அப்படிக் கூறுவது எப்படி நியாய விரோதம், சட்ட விரோதம், மனித உரிமைப் பறிப்புக் குற்றமோ, அது போன்றது தானே மகளிர் உரிமையைப் பறிப்பதும்?

தமிழ்ப் பாங்கு, தமிழன், தமிழினம்  என்று கூறும் இவர்களால் காதல் இல்லாமல், குறுந் தொகைப் பாடல்கள் இல்லாத தமிழ் இலக்கியங்கள் உண்டா? குறளின் காமத்துப் பாடல் எழுதி, கண்ணொடு கண் நோக்கொக்கின் குறளும் குற்றமானதா?

வாக்குவங்கி அரசியலில் நடத்தும் ஒட்டுப் பசியாளர்களை  ஓரங்கட்டுவீர்!

உண்மையான உரிமைகளை வென்றெடுக்க, திராவிடர் கழகத்தின் – திராவிடர் இயக்கத்தின் பெரியார் தத்துவங்களின் கொள்கையை ஏற்பீர்! வலங்கை, இடங்கைகளைப் பிரிக்காதீர்!

பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்களையும் மோதவிட்டு அரசியல் பதவிப் பசியைத் தீர்க்க எண்ணாதீர்!

இணைப்பீர்!
இணைப்பீர்!

இன்றேல் வீழுவது நாமே!

வாழ்வது ஆரியமே, அவாளே! புரிந்து கொள்வீர்.

சிந்திப்பீர், செயல்படுவீர் தனியார் துறை இடஒதுக்கீட்டுப் போர்க் குரல் கொடுக்க ஆயத்தமாவீர்!

பெரியார் நினைவு நாள் சூளுரை இதுவே!

 

கி.வீரமணி
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *