Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : எனது நண்பர் ஒருவர், நூற்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த ஜாதி அடை யாளங்களும், வாழ்க்கை முறைகளும் மாறிவிட் டதால் ஒருவரின் உண்மையான ஜாதியினைக் கண்டறிய முடியாத காலகட்டத்தில், இன்னும் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது முற்றிலும் பொருத்தமற்றது; கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய அனைத்து இன மக்களுக்கும் பயன்தரும் வகையில் இடஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்கிறாரே? -_ சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை

பதில் : எந்த வாயில் வழியில் சிறைக்குள் கைதியாக்கப்பட்ட மனிதன் சென்றானோ அந்த வாயில் வழியே வெளிவந்தால்தான் அதற்குப் பெயர் விடுதலை; வேறு வழிகளில் வெளிவந்தால் அது விடுதலை அல்ல. தப்பி ஓடிய குற்றவாளி என்று ஆகும். அதுபோல, காலங்காலமாக ஜாதி, (சூத்திரன் _ பஞ்சமன்) காரணமாகத்தான் கல்வி _ உத்தியோகம் மறுக்கப்பட்டது. அதை அடையாளம் காணுவதே இப்போது தேவை. இன்று மற்றவர்களுக்குச் சமவாய்ப்பை _ இடஒதுக்கீடு இல்லாவிடில் ஒடுக்கப்பட்ட வர்கள் பெற்றிருக்க முடியுமா? இன்னமும் அதிகாரவர்க்கம், உச்சநீதி, உயர்நீதிமன்றங்கள் இவைகளில் கதவு திறக்கவில்லை. இன்னும் 50 ஆண்டுகள் கழித்து கேட்க வேண்டிய கேள்வி உங்களுடையது. முறையாக சமூக நீதி இடஒதுக்கீடு அமல் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் ஆனால் நாம் இதை மாற்றுவதுபற்றி யோசிக்கலாம்.

கேள்வி : குடிஅரசு தொகுதிகள் போலவே அதன் பிறகுள்ள அய்யாவின் உரை, எழுத்துக்களை வெளியிடுவீர்களா?
-_ கு. பழநி, புதுவண்ணை

பதில் : அய்யாவின் எழுத்துக்கள் _ பேச்சுகள் காலவரிசைபடுத்தப்பட்டு, கடவுள், மதம், பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்ற தலைப்பில் உள்ளது. அத்தொகுப்புகள் பணி தொடரும்.

கேள்வி : தங்களது எண்பதாவது பிறந்த நாளை நினைவுபடுத்தும் வகையில் ஒருசில இதழ்களில் வருகிற வாசகர் கடிதத்திற்கான சிறந்த பரிசு என்றோ (அ) சிறந்த கேள்விக்கான பரிசு என்றோ (அ) அறிவுப் போட்டிக்கான பரிசு என்றோ… உண்மை இதழில் ஒரு செய்தியினை வெளியிட்டு வாசகர்களை மகிழ்விப்பீர்களா? _ தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : எனக்கென்ன சம்பந்தம் அதில்? ஏற்பாட்டாளர்களை அல்லவா நீங்கள் கேட்க வேண்டும்? அறிவுப் போட்டிப் பரிசு எப்போதும் உண்டே!

கேள்வி : நாற்பது ஆண்டுகளுக்குமேல் கடல் கொள்ளையும், கொலையும் செய்துவரும் சிங்கள ராணுவத்திடம் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற கச்சத்தீவை மீட்டெடுப்பது, -குறிப்பிட்ட மீன்பிடி பகுதியை வெளிநாட்டு கம்பெனிக்கு குத்தகைக்கு கொடுப்பது, இதில் எது தீர்வாகும்? அல்லது மாற்றுத் தீர்வு என்ன? _ திங்கள் நகர் நூர்தீன், நெய்யூர்

பதில் : கச்சத்தீவு மீட்டெடுப்பது முதல் தீர்வு. இரண்டாவது நடந்தால் நம் நாட்டு மீனவர்கள் வாழ்வுரிமை என்னாவது?

கேள்வி : பெயரை மாற்றி அமைப்பதின் மூலம் அற்புதங்கள் நிகழும் என்ற மனப்போக்கு வளர்ந்து வருவது குறித்து?
_ எஸ். சாந்தி, பெரம்லூர்

பதில் : அற்புதங்கள் நிகழாது _ உணர்வுகள் வளர உதவக் கூடும்.

கேள்வி : மது மற்றும் போதை வஸ்துகளின் தீமையை விளக்கியும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு குறித்து விழிப்புணர்வை தூண்டவும், வெடி, மத்தாப்பு கொளுத்துவதற்கு டெசிபல் அளவை வற்புறுத்தி பத்திரிகை, ஊடகங்களில் பல லட்சம் (மக்கள் வரி) பணத்தை செலவு அளித்து விளம்பரம் செய்வதைவிட, அவைகளை தயாரிக்கவே மத்திய, மாநில அரசுகள் சட்ட நடவடிக்கையின்மூலம் தடைசெய்தால் என்ன?  _ மன்னை சித்து, மன்னார்குடி-_1

பதில் : வாக்கு வங்கி அரசியலில் இது அவ்வளவு எளிதில் நடக்காதே; பிரச்சாரம் அரசு மூலம் நடப்பது வெறும் சம்பிரதாயமாகிவிடக்கூடும்!

கேள்வி : நம் இன எதிரிகளுக்கும், நம் இன துரோகிகளுக்கும் ஒற்றுமை என்ன? வேற்றுமை என்ன?
_ வெங்ட. இராசா, ம. பொடையூர்

பதில் : இன எதிரிகள் _ எதிரில் நிற்பவர்கள் _ கண்ணுக்குத் தெரியும். இனத்துரோகிகள் _ முதுகில் குத்த பின்னால் நிற்பவர்கள் _ கண்ணுக்குத் தெரியாதவர்கள். இது வேற்றுமை! ஒற்றுமை _ நம்மை ஒழிப்பதில் ஒரே பணிதான் அவர்களுடையது.

கேள்வி : சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆபத்து நேருமா?
_ எம். ரமேஷ்குமார், குலசேகரப்பட்டினம்.

பதில் : நிச்சயமாக ஆபத்து நேராது. மத்திய ஆட்சியைக் கவிழ்க்க பல கட்சிகளும் தயாராக இல்லை!

கேள்வி : தர்மபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதலை தமிழ் தேசியம் பேசுவோர் கண்டிக்கவில்லையே ஏன்?
_ இரா. மதிஒளி, சிதம்பரம்

பதில் : தாழ்த்தப்பட்ட சகோதர, சகோதரிகள் _ ஆதிதிராவிடர்கள் என்பதால் ஒருவேளை கண்டிக்கவில்லையோ என்னவோ?

கேள்வி : டிசம்பர் இறுதியில் உலகம் அழியப் போவ தாக பைபிளையும் பஞ்சாங்கத்தையும் மேற் கோள் காட்டி சிலர் அச்சுறுத்தி வருவது பற்றி?
_ மு.கலைச்செல்வி, குண்டாண்டார் கோவில்

பதில் : இப்படிப்பட்ட புருடா ஆசாமிகளை பலமுறை உலகம் கண்டு கைகொட்டிச் சிரித்துள்ளது. இன்னும் புத்தி வரவில்லையே.