ஜனநாயகத்தின் அருமையும், பெருமையும் மக்களுக்குத் தெரிய அன்றைய மத்திய அரசு ஒரு காரியம் செய்தது. அவசர நிலைப் பிரகடனம் வெளியிட்டது. அதற்கு இணங்கிப் போகாத அன்றைய தி.மு.கழக அரசை டிஸ்மிஸ் செய்தது.
1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் நாள் தி.மு.கழக அரசு கலைக்கப்பட்டது. சூரியனை மறைக்க பவானி ஜமுக்காளமா?
அன்று திண்டிவனத்தில் பகுத்தறிவாளர் கழகப் பொதுக்கூட்டம்; அந்தக் கூட்டத்தில் பங்கு கொள்ள தமிழம்மா மணியம்மையாரும். வீரமணியும் மதியமே புறப்பட்டுச் சென்றனர்.
புறப்படுவதற்கு முன்னர் வீரமணி பிரபல புத்தக நிலையத்தில் புத்தகம் வாங்கினார். அதன் பெயர் நள்ளிரவில் வாங்கிய சுதந்திரம்(Freedom at Midnight) என்பதாகும். நாடு விடுதலையாகும் தருணத்தில் டெல்லி பட்டணத் திரைமறைவுகளில் என்னென்ன காரியங்கள் நடந்தன என்பதனை அந்தப் புத்தகம் விவரிக்கிறது. நாடு முழுமையும் பரபரப்பாக விற்பனையானது.
திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் வீரமணி பேசிய பின்னர், அம்மா பேசிக் கொண்டிருந்தார். சென்னையிலிருந்து தொலைப்பேசியில் வீரமணிக்கு அவசர அழைப்புகள் வந்தன. அதேசமயத்தில் கழகப் பிரமுகர்கள் வானொலிச் செய்தியை துண்டுச் சீட்டுகளில் எழுதி வீரமணியிடம் கொடுத்தனர்.
ஒரே செய்திதான். தி.மு.க. அரசை மத்திய அரசு தீண்டிவிட்டது என்பதுதான். அந்தச் செய்தியைப் பார்த்த அம்மா தொடர்ந்து பேசினார். தி.மு.கழக அரசு கலைக்கப்பட்டது பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. மீண்டும் நியாயம் வெல்லும்; நேர்மை நிலைநாட்டப்படும். உதயசூரியன் மீண்டும் உதிப்பான் என்று அம்மா உருக்கமாகப் பேசினார். கூட்டத்தில் பரிபூரண அமைதி.
தமிழகத்தில் அடுத்து என்ன நடைபெறுமோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் குடிகொண்டிருந்தது. ஏற்கெனவே டெல்லிச் சிம்மாசனத்திலிருந்த செங்கோல் களவு போய் சூட்டுக்கோல் நர்த்தனம் புரிந்துகொண்டிருந்தது.
திண்டிவனம் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு அம்மாவும், வீரமணியும் சென்னை திரும்பினர். நள்ளிரவில் சுதந்திரத்தைத் திருட்டுக் கொடுத்துவிட்ட சோகத்தில் சென்னை மாநகரம் மூழ்கியிருந்தது. சாலைகள் வெறிச்சோடிக் காணப் பட்டன. தூக்கத்தையே காணாத அண்ணாசாலை கூட அன்று அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது.
ஆனால், வேப்பேரிப் பகுதி தினத்தந்தி திருப்பு முனையிருந்து அய்யாவின் திடல் கடந்தும் ஏதோ ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. சாலையோரங்களில் காவலர்கள் கண் விழித்துக் காத்திருந்தனர். அம்மாவும், வீரமணியும் வந்த வாகனம் திடலுக்குள் நுழைந்தது. அவ்வளவு தான்.
போலீஸ் பட்டாளம் சுற்றி வளைத்தது; திடலுக்கு வெளியேயும் தமிழ் தெரியாத காவலர்கள் திடலுக்குள் நம் மொழி தெரியாத வட மாநிலக் காவலர்கள், ஏதோ மஞ்சு விரட்டுக் காளையை மடக்கிப் பிடிப்பவர்கள்போல் அவர்கள் சுற்றி வளையமிட்டு வீரமணியை நெருங்கினர். அம்மாவை அவரது அறைக்கு அனுப்பிவிட்டு வீரமணி விடுதலை அலுவலகத்தில் நுழைந்தார்.
அவரைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் நுழைந்தனர். சென்னை மாநகரக் காவல்துறையின் துணை ஆணையரான (ஏ.சி.) பட் வீரமணிக்கு சற்று தூரத்தில் நின்றார்.
‘‘Sir we have come for the unpleasent job.’’
அய்யா, விரும்பத்தகாத காரியம் செய்ய வந்திருக்கிறோம் என்றார் பட்.
வீரமணியைக் கைது செய்யப் போகிறோம் என்பதனைத்தான் அவர் நாகரிகமாகவும் பணிவாகவும் கூறினார்.
அந்த நள்ளிரவில் காவல்துறையினர் கதவுகளைத் தட்டுகிறார்களென்றால், கல்யாணப் பத்திரிகை வைக்கவா வருவார்கள்?
மிஸ்டர் பட், நான் தயார்; நீங்கள் என்னை கைது செய்யலாம்; நீங்கள் உங்கள் கடமையைச் செய்கிறீர்கள். அதற்காக நான் வருந்தவில்லை என்றார் வீரம் விளையும் மணி.
அவருடன் அம்மாவின் தம்பி தியாகராசன், விடுதலை நிருவாகி என்.எஸ். சம்பந்தம் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களைக் கைது செய்ய ஏறத்தாழ 200 காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஒருவேளை அய்யாவின் தொண்டர்கள் பாயும் புலிகள் என்று அந்தக் கன்னடத்துக் காவல்துறை அதிகாரியிடம் யாரோ சொல்லியிருக்கக் கூடும். பொதுவாக அய்யாவின் அடிச்சுவட்டில் நடைபோடுகிறவர் களை நடமாடும் தீப்பொறிகள் என்றுதானே உலகம் கருதுகிறது.
கைது படலத்தை அம்மா கவனித்துக் கொண்டிருந்தார்.
வீரமணியும், மற்றவர்களும் வேனில் ஏற்றப்பட்டனர். அப்போது பின்னிரவு 2.30 மணி. மாநகரக் காவல்துறை ஆணையாளர் அலுவலகத் திற்குக் கொண்டு வரப்பட்டனர். ஒரு ஹாலில் உட்கார வைக்கப்பட்டனர். சூழ்ந்து நின்ற அதிகாரிகள் அனைவருமே புதுமுகங்கள். அறிமுகமான ஒரு அதிகாரியைக்கூடக் காண முடியவில்லை.
கைது செய்யப்பட்ட தி.மு. கழகத் தோழர்களும் ஒவ்வொருவராகக் கொண்டு வரப்பட்டனர். ஆமாம், வீரமணியையும் அவர்களையும் எதற்காகக் கைது செய்தனர்? அந்த நிமிடம்வரை காரணம் சொல்லப்படவில்லை. ஏதோ திகில் படம் பார்க்கும் மனநிலையில்தான் எல்லோருமே இருந்தனர்.
முதல் நாள் மாலைவரை ஆளும் கட்சியினர் என்ற முறையில் தி.மு. கழகத்தினரின் கூப்பிட்ட குரலுக்குக் காத்திருந்த காவல்துறை அதிகாரிகள், இன்றைக்கு அதே கழகத்தினரை சுட்டெரிக்கும் கண்களால் பார்த்தனர்.
நிலைமை தெரியாது; காப்பி கிடைக்குமா? டீ கிடைக்குமா? என்று தி.மு. கழகத் தோழர்களும் கேட்டு வைத்தனர்.
இன்னும் சிறிது நேரத்தில் கீழ்வானம் சிவந்துவிடும். பொழுது புலர்ந்துவிடும். நடிகவேள் எம்.ஆர். ராதாவைக் கைது செய்து அழைத்து வந்தனர். எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில் சிறை சென்ற அவர் தண்டனைக் காலம் முடிந்து சில மாதங்களுக்கு முன்னர்தான் விடுதலையாகி இருந்தார். தம்மை ஏன் கைது செய்தனர் என்று அவருக்கும் புரியவில்லை. ஆனால், அவரைப் பார்த்ததும் அனைவரின் மன இறுக்கமும் தளர்ந்தது.
ராதா அவர்கள் ஆணையர் அலுவலகத்தை நோட்டம் விட்டார். சுவர்களில் மாட்டப்பட்டிருந்த ஆணையர்களின் படங்களைப் பார்த்தார்.
ஏம்பா, வீரமணி இவங்களெல்லாம் யாரு? சுவர்களில் இருந்த படங்களைப் பார்த்து கேட்டார்.
இவர், அய்.ஜி. அருள் என்றார், வீரமணி.
அடுத்து தொங்குகிறாரே அவரு யாரு?
அவர் அய்.ஜி. ராஜரத்தினம். ஏற்கெனவே பணி செய்தவர்கள் என்றார் வீரமணி.
அந்த வரிசையில் திருவள்ளுவர் படமும் இருந்தது.
ஏம்பா வீரமணி, நம்ம திருவள்ளுவர் எப்போ அய்.ஜி.யாக இருந்தார்? என்று ராதா கேட்டார்.
அவ்வளவுதான், கனத்த மனச்சுமையுடன் இருந்த அனைவருமே வாய்விட்டுச் சிரித்துவிட்டனர்.
சொல்ல மறந்துவிட்டோம். நள்ளிரவில் வாங்கிய சுதந்திரம் என்ற நூலைப் படிப்பதற்கு முன்னரே அன்றைய நள்ளிரவில் வீரமணியின் சுதந்திரம் பறிபோய்விட்டது.
அமர்ந்த நிலையிலேயே பலர் கண் அயர்ந்தனர். மேஜைமீது சிலர் முடக்கிப் படுத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் காலைப்பொழுதிலும் கொண்டு வரப்பட்டனர். காலைக்கடன் முடிந்ததும், மதியம் அனைவரும் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சரித்திரத்தில் கறைபடிந்த ஓர் அத்தியாயம் இணைக்கப்பட்டது.
***
வீரமணியைத் தனது வாரிசு என்று அய்யா அவர்கள் அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார். அதற்கு அவருடைய நாணயமும், பணிவும்தான் காரணமா? அவருடைய எளிமையும், இன்முகமும்தான் காரணமா? சமுதாய தொண்டருக்குரிய அத்தனை பண்புகளும் அவரிடம் குடிகொண்டிருக்கின்றன. அதனை அய்யா அவர்கள் அறிந்துதான் வீரமணியிடம் பெட்டிச் சாவியைக் கொடுத்திருக்கிறார்.
முற்றுப் பெற்று விடுமோ என்று அச்சம் கொண்ட திராவிடர் இயக்க வரலாறை அவர் தொடர்ந்து வடித்துக்கொண்டிருக்கிறார்.
அவர் வழக்குரைஞர், சமூகநீதிப் போராளி பழைமைச் சமுதாயத்தைச் சாடிய அய்யாவின் பணியினை இன்றைக்கு முன்னெடுத்துச் செல்கிறார்.
இத்தனை சிறப்பும் கொண்ட ஒரு தலைவர் தமிழகத்தில் இனித்தான் பிறக்கவேண்டும். அவர் பெரியாரின் பெருந்தொண்டர். ஓட்டுப் பெட்டி அரசியலை உதைத்துத் தள்ளியவர். அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்திருந்தால், தமிழக அரசியலே அவர் வீட்டு முற்றத்தில்தான் பாடம் படித்திருக்கும்.
வாக்குப் பெட்டி அரசியல் என்றால் முதலில் அய்யாவின் சித்தாந்தங்களும், தத்துவங்களும் சிதைந்து போகும். மக்களின் மனங்களில் மண்டிக்கிடக்கும் மூடப் பழக்கங்களுக்குப் பூச்சூடவேண்டும்.
மாண்புமிகு என்பதனைவிட மானமிகு என்பதைத்தான் வீரமணி விரும்புகிறார், நேசிக்கிறார்.
எதிர்காலத்தில் திராவிடர் கழகத்தை வழிநடத்திச் செல்ல தக்கார் வீரமணிதான் என்று அய்யா தேர்வு செய்தது நியாயமானது. அவரது நீண்ட நெடுங்காலப் பொதுவாழ்வில் அய்யா மனிதர்களை எடை போடக் கற்றுக் கொண்டிருந்தார். அவர் தேர்வு செய்த வீரமணி இன்றைக்கு எழுபத்தி ஏழு வயதை நிறைவு செய்திருக்கிறார். ஆனால், அறுபத்தி எட்டு ஆண்டுகள் பொது வாழ்வில் ஒளிவீசியிருக்கிறார். இவ்வளவு குறைந்த வயதில் பத்தே வயதில் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்துப் புகழ் பெற்றவர் வீரமணியாகத்தான் இருக்கும்.
***
ஒரு போர் வீரனின் தோளில் தொங்குகின்ற துப்பாக்கியும், வீரமணியின் தோளில் துவள்கின்ற துண்டும் ஒன்றுதான். அவர் ஒரு பிறவிப் போராளி. ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே கொடுமைகளையும், மூட நம்பிக்கைகளையும் சாடுகின்ற போர்க் குணம் இயல்பாகவே அவருக்குப் பிறந்துவிட்டது.
கடலூரில் அவரோடு படித்தவர் உலகம் அறிந்த எழுத்தாளர் ஜெயகாந்தன். இளம் பருவத்திலேயே வீரமணி எவ்வளவு வீராவேசமாகப் பேசுவார் என்பதனை ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்ற தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடலூர் கடைத்தெருவில் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள திடலில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்தில் பனிரெண்டு வயது நிரம்பாத அந்தச் சிறுவன் ஏறி நின்று பிராமணர்களையும், நமது புராணங்களையும் அதில் பொதிந்துள்ள ஆபாசங்களையும், கடவுள்களையும் கிழி கிழியென்று கிழிப்பதை வாயைப் பிளந்து கொண்டு நானும் பார்த்தேன் என்கிறார் ஜெயகாந்தன்.
தமிழக அரசு நிறைவேற்றிய நில உச்சவரம்புச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து அய்யா அவர்கள் ஓர் இயக்கம் தொடங்கினார். 1964 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திராவிடர் கழகத்தின் சார்பில் மாநிலமெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடந்தன. அந்தக் கூட்டங்களில் அய்யாவோடு பங்குகொண்டவர் வீரமணி. உணர்ச்சிப் பெருக்கோடு முழக்கமிட்டவர் வீரமணி.
வீரமணி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது வகுப்புரிமைக்கான போரை அய்யா தொடங்கினார். மாணவர்கள் படிப்பு நிறுத்தம் செய்து, பள்ளிகள், கல்லூரிகளின் முன்பு வாயிற்கூட்டங்கள் நடத்தவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். அந்தப் போராட்டத்தில் பங்குகொண்ட வீரமணி மாநிலமெங்கும் சுழன்று பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டே அவருடைய படிப்பு பாதியில் நின்றது.
அதனைத் தொடர்ந்து கடலூரில் தனது சகோதரர் நடத்திய தேநீர் கடையில் வீரமணி அமர்ந்திருந்தார். சகோதரர் தி.மு.க. உறுப்பினர். அவரைத் தேடி ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரிலிருந்து அண்ணா இறங்கினார். அப்போது அவர் புதிதாய் பிறந்த தி.மு. கழகத்தின் தலைவர். வீரமணியோ அய்யாவின் பிரச்சாரப் போர்ப் படைத் தளபதி.
வீரமணியின் சகோதரர் அப்போது கடையில் இல்லை.
அண்ணாவை வீரமணி வரவேற்றார். கருத்து வேறுபாடுகள் காணாமல் போயின.
காரில் ஏறு குறிஞ்சிப்பாடிவரை போய் வருவோம் என்றார் அண்ணா.
காரில் வீரமணி ஏறினார்; பாதியிலேயே அவர் படிப்பு நிறுத்தம் செய்ததை அறிந்த அண்ணா வேதனைப்பட்டார்.
காஞ்சிபுரம் வா, படிப்பைத் தொடரு என்று அண்ணா கூறினார்.
அண்ணாவின் அழைப்பு வீரமணியின் இல்லத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
அண்ணாவின் அழைப்பை ஏற்று வீரமணி காஞ்சி செல்லவேண்டும். கல்லூரிப் படிப்பைத் தொடரவேண்டும் என்பதுதான் குடும்பத்தாரின் ஏகோபித்த கருத்து.
அய்யா ஒரு முகாம்; அண்ணா ஒரு முகாம். அய்யா முகாமின் தொண்டனாகிய நான் அண்ணாவின் அழைப்பை ஏற்று காஞ்சி சென்று எப்படி படிக்க முடியும்?
இனியும் அய்யாவின் வழியில் மாற்று இயக்கங்களை விமர்சிக்க வேண்டியிருக்கும் என்று வீரமணி மறுத்துவிட்டார்.
இப்படி அவருடைய வாழ்விலும் போராட்டங் களைச் சந்தித்தார்.
(மறைந்த எழுத்தாளர் `சோலைஎழுதி ஆயிரக்கணக்கில் விற்பனையான வீரமணி ஒரு விமர்சனம்எனும் நூலிலிருந்து… )