– திருமகள்
எனக்கு அமைந்த முதல் ஊர்தி வாழ்விணையர் அவர்கள்தான். அந்த ஊர்தி இருக்கிற காரணத்தால்தான் எனது இலட்சியப் பயணம் தடையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது.
எங்களுடைய தேனிலவு எல்லாம் தந்தை பெரியாருடைய பிரச்சாரப் பயணமே தவிர வேறு எதுவும் கிடையாது.
நானோ ஒரு காட்டுச் செடி போல இருந்தவன். அவர்களோ குரோட்டன்ஸ் செடி போன்றவர்கள்.
நான் எவ்வளவு துன்பத்தைத் தாங்குகிறேனோ அந்த துன்பத்தை அவர்கள் தாங்கித் தாங்கிப் பழக்கப்படுத்தும்படியாக ஆக்கப்பட்டு விட்டோம் என்பது இருக்கிறதே அப்படிப்பட்ட ஒரு நல்ல சமுதாய நலம் உள்ள ஒருவரை தந்தை பெரியார் எனக்கு அடையாளம் காட்டினார் என்று சொன்னால் பணி தொடருவதற்கு காரணமாக இருக்கிறது என்று சொல்லி இந்த நேரத்திலாவது நான் என் இணையருக்கு நன்றி காட்ட வேண்டும் என்ற தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் வரிகளைப் படித்ததும் ஒரே பூரிப்பாயும் இன்பமாயும் இருந்தது. (நன்றி: விடுதலை நாளிதழ் 24.8.95)
அன்றையக் காலத்தில் பெண்ணே பெண்ணைப் புகழ்ந்தாலும் ஆடவர் யாராவது வேறொரு பெண்ணைப் புகழ்ந்தாலும் பெண் வர்க்கம் சகித்துக் கொள்ளாது என்ற நிலைமை இருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு பெண்கள் பொறுமையின் சிகரம் என்று வர்ணித்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு பொறாமையின் உருவமாக வும் இருந்தார்கள். ஆனால் இன்று பொறுமையும் அவளை விட்டுப் போய்விட்டது; பொறாமையும் போய்விட்டது என்றே கூறலாம். காரணம் இன்று பகுத்தறிவுப் பகலவன் வித்திட்ட விழிப்புணர்வால் ஆணுக்குச் சரிநிகராக வந்துவிட்டாள். இருந்தா லும் இன்றும் அவளிடம் ஒரு ஏக்க உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.
தான் செய்த செயல்கள் சரியா? சரியற்றதா? தானே அதற்கு மதிப்பெண்கள் போடுவதைக் காட்டிலும், தனக்குகந்தவர்கள் மதிப்பளிப்பதில் தான் மகிழ்ச்சியும் மனநிறைவும், மேன்மேலும் தன்னை அச்செயலுக்கு ஈடுகொடுக்க ஆயத்த மாகும் நிலை உண்டாக்கும். இது நாடு நலம் பெறத் துடிக்கும் எல்லோர்க்கும் பொருந்தும்.
அடிமைப்பட்ட பெண்ணினம்; அடிவாங்கிய பெண்ணினம்; அச்சுறுத்தலுக்கு அடங்கிய பெண்ணினம்; இப்படி வாழ்ந்த இனம் இன்று நாடு நலம் பேண, துணைவனுக்கு துணையாய் இருந்து; தலைவனை தரணி போற்றும்போது, தலைவியை தலைவன் போற்றுவது பெருந்தன்மை நிறைந்த கடமை என்று எண்ணி இனமானக் காவலரின் பெருந்தன்மை நிறைந்த உள்ளுணர்வை போற்றிப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. திராவிடர் கழகத் தலைவரும் நம் குடும்பத் தலைவரும் விடுதலை நாளிதழின் ஆசிரியருமான மானமிகு கி. வீரமணி அவர்களின் பாராட்டுகள் அவரின் இணையர்க்கு மட்டும் கிடைத்தவையாக கருதவில்லை. பெண்ணினத்திற்கே கிட்டிய பாராட்டுகள் என்றே எடுத்துக் கொண்டு பெருமைப்படுகிறோம்.
எண்பதாம் அகவை விழா கொண்டாடும் இந்நாளில் மகளிர் சார்பில் பொங்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.
Leave a Reply