எதிர் நீச்சல்

டிசம்பர் 01-15

மானமிகு ஆசிரியர் அவர்கள்  முன்பு அமெரிக்கா வந்திருந்த போது கட்டாயமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று ஒரு அழகான ஏரிக்கரை யோரத்தில் தங்கியிருந்தோம். அந்த ஏரியிலே வாடகைக்கு எடுத்த எந்திரப் படகை நாங்களே ஓட்டிச் சென்று மகிழ்ந்தோம்.ஆசிரியர் அவர்கள் , அவர் பேரன்களை விடக் குழந்தையாக மாறி மகிழ்ச்சியுடன் ஓட்டி மகிழ்ந்தார். நான் படகி லிருந்து குதித்து ஏரியில் நீந்தினேன். அப்போது தான் ஆசிரியர் சொன்னார் நான் குதித்தால் கட்ப்பாரை நீச்சல் தான், எனக்கு நீந்தத் தெரியாது என்றார். ஆம்! அவருக்குத் தண்ணீரில் நீந்தத் தெரியாதே தவிர அவரது வாழ்க்கையே அடுத்தடுத்த எதிர் நீச்சல்கள் தான்!

அவர் பிறந்த உடனே அன்னையை இழந்தார். ஆனால் அவரிடம் வாழ்க்கையில் பல அன்னையர் கள் அன்னை மணியம்மை, அமெரிக்காவில் வாழ்ந்த வர்ஜீனியா கர்ச்னர் போன்ற அன்னையர்கள் அன்பு செலுத்தினர்.இன்றும் பல இயக்க அன்னையர்களின் பாச மழையிலே அவர் நனைந்து மகிழ்கின்றார். இந்த உண்மை அன்பைப் பெற்றவர்கள் அதை மனதால் முழுதும் ஏற்று மகிழ்பவர்கள் என்று பார்த்தால் ஆசிரியர் அவர்கள் எதிர் நீச்சல் வீரர் தானே !

எனக்குப் பள்ளியில் நண்பர்கள் அழைத்த பெயர் “குட்டப் பயல்”. ஆம், வகுப்பில் நான் தான் மிகவும் குட்டையானவன். ஆனால் பெரிய மாணவர் களுடனும் போட்டி போட்டு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்பேன். அவர்க ளெல்லாம் எனக்கு நெருங்கிய நண்பர்களாகவே இருந்தனர். ஆசிரியரின்  உயரம் உங்களுக்கெல்லாம் தெரிந்தது தான். அதைப் பற்றி நான் அவரிடம் கேட்டதில்லை, ஆனால் எனக்குத் தெரியும் பள்ளி வாழ்க்கையில் எத்தனை எதிர் நீச்சல் போட்டிருப்பார் என்று.

கடலூரிலிருந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குத் தினமும்  புகைவண்டிப் (அந்தக் காலத்து ரயில்) பயணம் தான் .வசதி இருந்திருந்தால் அங்கே விடுதியிலே தங்கிப் படித்திருக்கலாம். அந்தப் புகை வண்டிக்குக் காத்திருந்து நேரங்கெட்ட நேரத்திலே எழுந்து,கிளம்பிச் சென்று வருவதே பெரிய எதிர் நீச்சல் தான். அவருக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட வேண்டிய அவசரச் சூழ் நிலை.அன்று தந்தை பெரியார் அவர்களின் தந்தி மணி ஆர்டர் மூலம் கட்டி எதிர் நீச்சல் அடித்தார்.

கழகத் தொண்டையும் பேச்சாளராகச் செய்து கொண்டு,படிப்பையும் பார்த்துக் கொண்டு அதிலும் தங்கப் பதக்கம் பெறுவது என்பது எதிர் நீச்சல் தானே! வழ்க்கறிஞராகப் படித்த போது கல்லூரிக்குச் சென்ற நாட்கள் மிகக் குறைவே.படித்து முடித்துப் பேராசியரைப் பார்த்த போது அவர் நீ விரமணியில்லை, வகுப்பில் உன்னைப் பார்த்ததே கிடையாதே என்ற பெருமை பெற்ற்வர்.அய்யா பொருளாளர் தான் வகுப்பிற்கு வீரமணி ! இது செய்திக்காகத் தான் இளைய தலைமுறை கடைப்பிடிக்க அல்ல !

வழக்கறிஞர் தொழில் தொடங்கிக் கையில் கொஞ்சம் பணம் புழங்கத் தொடங்கியதும் வந்தது ஒரு பேரதிர்ச்சி. தந்தை பெரியார் அவர்கள் முழு நேரமாகப் பணியாற்றி விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்கச் சொல்கின்றார்.ஆனால் ஆசிரியர் சம்பளம் வாங்க மாட்டேன் என்கின்றார்.சரி யென்று பெரியார் அவர்கள் அவருக்கே உரித்தான நடை முறை முடிவை எடுக்கின்றார். ஆசிரியருக்கு நல்ல வசதியான மணமகளைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கைக்கு வழி வகுத்து விடுகின்றார். அய்யாவும் அன்னை மணியம்மையாரும் பெண் பார்க்கின் றார்கள், ஆசிரியரோ மணமேடையில் தான் பார்க்கின்றார். அந்த மோகனா அம்மையார் தனது கனவுகளையெல்லாம் இந்தக் கொள்கை விரும்பிக்காக விட்டுக் கொடுக்கின்றார்.

மண மேடையிலேயே அவர் விரும்பிய பட்டாடை அணியாமல் வாழ்க்கையைத் தொடங்கி, எளிமை, ஓயாத பயணம், இன்றும் தொடரும் பயணம், செலவத்திலே வளர்ந்தவர் இன்று கொள்கை ஆற்றிலே எதிர் நீச்சல் போட்டுக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி ஆசிரியரைக் கண் இமை போலக் காத்து வருகின்றார். கழகக் குடும்பத்தினரின் அன்பே அவருக்கு நாம் தரும் நன்றியாகும்.அன்னை மணியம்மையார் அய்யா அவர்களை வாழ வைத்தது போல இவரும் ஆசிரியர் அவர்களை வாழவைத்துத் தமிழர்களின் நெஞ்சங்களில் பெருமையடைகின்றார்.

ஆசிரியர் அவர்களின் பொது வாழ்வில் அவர் அடைந்த துன்பங்களை எழுதினால் இடம் போதாது. ஒவ்வொரு இடர்ப் பாட்டையும் மேலே போகும் சந்தர்ப்பமாகப் பயன் படுத்திக் கொண்டது தான் அவரது திறமை.பெரியாரின் மூளை. எதிரிகள் உண்டாக்கிய ஒவ்வொரு தடைக் கற்களும் இன்று கொள்கை வெற்றிகளின் மாளிகையின் கற்களாக மாற்றப் பட்டுள்ளன. தமிழன் இன்று ஓரளவிற்கு மானத்துடன் வாழ முடிகிறதென்றால் அதற்கு என்ன விலை கொடுக்கப் பட்டுள்ளது என்பதைப் பார்த்தாலே போதும். அந்தக் கருப்பு மெழுகு வர்த்திகளின் அளவிலா அர்ப்பணிப்பு என்பதையே தனது உயிராக, உணர்வாக மதித்து வாழும் நேரம் முழுதும் தமிழர் முன்னேற்றம் என்று எதிர் நீச்சல் போட்டு வருகின்றார். வரும் வெற்றி மாலைகளை விடத் தூற்றுதல்களே மிகுதி. அதுவும் பயன் பெற்ற தமிழர்களே தூற்றுவது தான் மிகவும் வேடிக்கை யான அனுபவம். அதை வேதனையாகக் கொள்ளா மல் விளையாட்டாக அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான் என்று  புன்னகை புரியும் போது அருகே இருப்போர் ஆச்சரியப் படுவார்கள். எத்தனை நம்பிகைத் துரோகங்களை அனுபவித்துள் ளார்?துணிவில்லாதவர்கள் மலைத்திருப்பார்கள். ஆனால் தந்தை பெரியாரின் துணிவை அருகே இருந்து மூச்சாகப் பெற்றதனால் அதையெல்லாம் தூசியாகத் தள்ளி விட்டு தொடரட்டும் பணி என்று எதிர் நீச்சல் போடுகின்றார்.

நமது எதிரிகளுக்குப் பெருங்குறை இந்த மனிதரி டம் ஏதாவது அப்பழுக்குக் கண்டு பிடிக்க முடியுமா என்று முயன்று தோற்பது தான்.எனக்குத் தெரிந்த பல நல்லவர்கள் மேலே வந்ததும் ஏதாவது ஒரு இடத்திலே வீழ்ந்துள்ளார்கள், வீழ வைக்கப் பட்டுள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் தளர்ச்சியை உண்டாக்கி அவர்களை அவரது கொள்கையில் ,பண்பாட்டில் வீழ வைப்பது தான் அரசியல், வணிக, தொழில் வேலை முன்னேற் றம் என்றாக்கி விட்டார்கள். இதையெல்லாம் தாண்டி எந்த குழிகளிலும் வீழாமல் பண்ம், புகழ், பதவி, உறவு என்ற எதற்கும் சிறிதும் இடங் கொடுக்காமல் நெருப்பாக வாழ்ந்து எதிர் நீச்சல் போட்டு வருகின்றார்.கொளகையிலே மறுத்துப் பேசுபவர்கள் கூட அவரது பண்பாட்டைப் பாராட்டுகின்றார்கள்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கடமை வீரர் காமராசர்  என்ற தமிழ் கடல்களிலே அன்பால் நீச்சல் அடித்த உண்மையான பெருமை இவருக்குண்டு. அவருடன் சேர்ந்து நாமும் தமிழின முன்னேற்றம் என்ற மாளிகை கட்ட ஒரு துரும்பை எடுத்துப் போடுகின்றோம் என்ற் மன நிறைவே நமது நண்பர்கள், குடும்பங்கள் மற்றவர்களுடன் நாம் போடும் எதிர் நீச்சல்! தொடர்வோம் நீச்சலை!

– சோம.இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *