எண்பது ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் தன்னைப் பொதுத் தொண்டில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள தமிழர் தலைவரின் அரும்பெரும்பணிகளை இந்தச் சிறிய கட்டுரைக்குள் அடக்கிக் காட்ட எண்ணுவது அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டும் அரிய செயல். மாதந்தோறும் ஏறத்தாழ இருபது நாட்களுக்கு மேல் தமிழகத்திலும், அவ்வப்போது வடபுலங்களிலும், ஆண்டுக்கு ஓரிரு முறைகள் அயல்நாடுகளிலும் பயணம் செய்து பெரியாரியக் கொள்கை விளக்கத்திலும், மக்கள் தொடர்பிலும், இயக்க வளர்ச்சியிலும், மூட நம்பிக்கை ஒழிப்பிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு கொள்வதைப் பற்றியும் ஈங்கு சுருக்கிக் சொல்லுதல் எளிதல்ல.
தலைசிறந்த பேச்சாற்றலும், கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும் ஆளுமைத் திறனும் ஆய்வுச் சிந்தனையும் கொண்ட ஆசிரியர் அவர்களிடம் அய்ந்து மணித்துளிகள் உரையாடினாலே, தமிழகத்தின் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல், நிலைமைகளை தெளிவாக அறிந்து பயன் பெறலாம். ஆயினும் யானறிந்த வரையில் தலைவர் அவர்களின் மனித நேயம், அளப்பரிய ஆற்றல், உறுதி, ஊக்கம், சட்ட நுணுக்கம், பொது அறிவு பற்றிய சில செய்திகள் இங்கு கொடுக்கப் பெற்றுள்ளன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் யான் பின்னால் பயின்றாலும் வீரமணி அவர்கள் கடலூரிலிருந்து ரயில் பயணம் செய்து வரும் மாணவர் என்று அறிவேன். இரவில் வந்து செல்லும் ஓரிரண்டு துரித ரெயில் தவிர அனைத்து ரயில்களும் அந்நாட்களில் ஆடி அசைந்து முக்கி முனகி ஒவ்வொரு இடத்திலும் நின்று நின்று இரண்டு மணி நேரம் கழித்துச் சிதம்பரம் வந்து சேரும். ரயில் பயணத்திலேயே தினமும் நான்கு மணிநேரம் போய்விடும்.
அப்படி கடலூரிலிருந்து வருகின்ற மாணவர் குழுவோடு ஒன்றாக வந்து இனிமையாகப் பழகி னாலும், அரட்டைச் கச்சேரியில் சேராமல் ஏதாவது ஒரு நூலையோ, பத்திரிகையினையோ படித்துக் கொண்டு வருவதே இவரது பழக்கம். இல்லை யானால் பொருளாதார ஆனர்ஸ் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறி தங்க மெடல் பரிசு வாங்க முடியுமா? அறிவுப் பசியை அடக்கியிராவிட்டால் அரங்கத்தில் ஏறிப் பரிசு பெற்றிருக்க முடியுமா?
முதுகலைப் படிப்புக்குப் பின்னர் பல்கலைக் கழகத்திலேயே ஆய்வுப் பணியில் சேர்ந்தாலும், அதனை ஒதுக்கி விட்டு சென்னையில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆகிறார். தந்தை பெரியாரின் ஆணைப்படி கடலூர் வழக்கு மன்றத்தைப் புறந்தள்ளி மீண்டும் சென்னை பயணம். விடுதலை நாளிதழை விட்டு விடுவதா அல்லது ஈரோட்டுக்கு எடுத்துச் சென்று வார இதழாக மாற்றுவதா எனும் பெரியாரின் வினாவுக்கு விடை கிடைத்து விட்டது. வீரமணி என்னும் இளைஞர் 1962ஆம் ஆண்டில் சென்னையில் பெரியார் திடலில் விடுதலை நாளிதழின் ஆசிரியராகிறார். பெரியாரே அழைத்துச் சென்று ஆசிரியர் இருக்கையில் அமர்த்துகிறார்.
எழுத்தாளர்களின் பத்திரிகை வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. சிற்சில நேரங்களில் பத்திரிகையின் வாழ்வும் நிரந்தரம் இல்லாமலேயே போய்விடும். அதுவும் ஒரு குறிக்கோளோடு பணபலமின்றி சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு அரசின் சட்ட திட்டத்துக்கு அடி பணிந்து பத்திரிகையினை நடத்துவது அவ்வளவு எளிதல்ல. பத்திரிகையே மூச்சுத்திணறுவது ஒரு புறமிருக்க, பத்திரிகை ஆசிரியருக்கும், அதனுடைய நிறுவனருக்கும் ஒத்துப் போகாது. பண்டித நேருவுக்கு நெருங்கியவராகக் கருதப்பட்ட கே. ராமராவ் என்பார் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டுக்கு வருவதற்கு முன்னர் ஏறத்தாழ இருபத்து மூன்று ஆண்டு காலம் பதினேழு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். அப்படியின்றி தந்தை பெரியாரின் சிந்தனையை செயலை, உயிர் மூச்சைத் தனதாகக் கொண்டுள்ள ஆசிரியர் அவர்கள் அய்ம்பதாண்டு காலம் விடுதலையின் ஆசிரியராக இருந்ததுவும், தொடர்ந்து இருப்பதுவும், செய்தி உலகத்தில் ஒரு பெரும் இமாலய சாதனை.
எந்த நேரத்திலும் எந்தத் தலைப்பிலும் எடுத்த எடுப்பிலேயே தமிழிலும் ஆங்கிலத்திலும் தங்கு தடையின்றி பொருத்தமாகவும் சரளமாகவும் பேசுகின்ற தமிழர் தலைவரின் பேச்சாற்றல் வியப்புக்குரியது. கொச்சைத் தமிழும் பண்டிதர் நடையும் ஒதுக்கிய பண்பாட்டுத் தமிழ். நயத்தக்க நாகரிகம், நல்லதோர் மேற்கோள், பொருத்தமான பேச்சு, நிதானமான சொல்லோட்டம் ஆகிய இவையன்றி ஆவேசமோ, ஆத்திரமோ, அறைகூவலோ விடுக்கின்ற அகங்காரப் பேச்சாக இருக்காது. எதிரியின் ஆத்திரத்தைத் தூண்டாமல் அடங்கி விடச் செய்துவிடும்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சிறுமியர் சிலர் இயற்கைச் சூழலைப் போற்றி ஆதரிக்கின்ற ஒரு நடன நிகழ்ச்சி. அவர்களைச் சிறப்பித்துப் பாராட்டுமாறு வேண்டுகோள். மேடையேறிய தலைவர் பேசியது அய்ந்து மணித்துளிகளே என்றாலும் நடனக்கலை பற்றி அவர் பயன்படுத்திய கலைச் சொற்கள் அனைத்தும் அவரது பரந்துபட்ட, ஆழ்ந்த அறிவின் விளக்கமாக இருந்தது. பட்டமளிப்பு விழா, திருமணங்கள், அரசியல் அரங்கம், விவாத மேடை பாராட்டு விழா போன்ற இடங்களில் தலைவரின் சொற்பொழிவு வெறும் உத்தேசமாக அல்லாமல் அய்யத்துக்கு இடமின்றி உண்மையோடும் ஆதாரத்தோடும் அமைந்திருக்கும். குறிப்புகளும், ஆதாரங்களும் அதிகமாயின் மேடையில் அந்தந்த நூல்களே பேசும்.
ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் ஆங்கில நூல்களின் சொந்தக்காரர் அவர். அவ்வப்போதும் தொடர்ந்தும் படிக்கின்ற நூல்களின் மிகச் சிறந்த கருத்துகளைக் கலந்து அவர் எழுதிய மனித வளக்கலை நூல்கள் இலக்கியம், மொழி, வரலாறு, சமூக இயல், அரசியல், மருத்துவம், உடல்நலம் பற்றிய அரிய கருத்துகளை உள்ளடக்கியவை. பொதுவாழ்வில் அதுவும் சமூகத்தில், அரசியலில் பங்கு பெறும் தலைசிறந்த அறிஞர்களின் இத்தகைய சிந்தனைக் கருவூலங்களை மாணவர்க்குப் பாடமாக வைக்கும் மனப்பக்குவம் கல்லூரிகளில் ஏற்பட வில்லை என்பது ஒரு பெருங்குறை. இதனைச் சீர் செய்ய விரும்பும் பல்கலைக் கழக பாடத்திட்டக் குழுவினர் இத்தொகுதிகளைக் கருத்தூன்றிப் பயில வேண்டும்.
குணத்தில் உயர்வும், கொள்கையில் பிடிப்பும் அன்பின் மிகுதியும் நேர்மையில் சீர்மையும் தலை வருடன் கூடப்பிறந்தவை. கொண்ட கொள்கை யினை அவர் குழிதோண்டிப் புதைப்பதில்லை. ஒருமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூரில் சிறைவாசம். உடல் நலம் இல்லாத வீரமணி அவர்களை நீங்கள் ஏன் விடுதலை செய்யக் கூடாது எனும் நிருபர்களின் கேள்விக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி, விடுதலை அளித்தாலும், அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார், என்று கூறிய பதில் தமிழர் தலைவரின் தனித் தன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு. கருஞ்சட்டைப் பட்டாளம் சிறையிலிருக்கும்போது, தான் மட்டும் வெளிவரும் பேச்சுக்கே இடமில்லை என்பது உண்மை.
கொள்கையில் உறுதிப்பாடு என்பது பலரது விருப்பு வெறுப்புக்கு ஆளாகும் சிக்கல். வளைந்து கொடுக்காத உறுதி. ஒரு சமயத்தில் அன்றைய முதலமைச்சருக்கு பிடிக்கவில்லை. அதனால் வில்லிப்புத்தூர் அருகே தலைவர் வந்த காரின் மீது தாக்குதல். உடைந்த கண்ணாடி நெற்றிப் பொட்டில் சிதறி இரத்தக் கசிவு. அந்த நிலையிலும மம்சாபுரம் அருகே நிகழ்ச்சி முடிந்த பின்னரே மருத்துவமனை. எந்தநிலையிலும் அந்த முதல்வரை மன்னித்தோம் அவரது செயலை மறந்தோம் என்கிற பெருந்தன்மை. பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்னும் சகிப்புத் தன்மை. எதிர்ப்பு கண்டு கலங்காத, தோல்வி கண்டு துவளாத மனப்பக்குவம்.
உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை என்றான் பாரதி. தலைவரோ அச்சம் தவிர்த்த நிலை மட்டுமல்ல. பதட்டம் இல்லாமல் பகையினை வெல்லும் மன உறுதியாளர். ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களின் அருங்கொடையால் டில்லி நகர்ப்புறத்தில் உருவாகி அங்குள்ள கிராமப்புற மக்களின் கணினிப் படிப்பிற் கும், தையல் வேலைக்கும், தொழில் வாய்ப்புக்கும் வழி திறந்துவிட்ட எழிலான கண்ணாடிக் கட்டிடம் ஒரு அரசியல் கோமாளியின் கோணல் புத்தியின் வழிப்பட்டு நீதிமன்றத் தடையுத்தரவு வரும் நிலையிலேயே தரை மட்டமாக்கப்பட்டு விட்டது.
உணர்ச்சி வயப்பட்டோராயின் உடைந்த மனதும் உணர்ச்சியின் நெகிழ்வும் கலங்கிய உள்ளமும் உயிரையே போக்கியிருக்கும். ஆனால் கலங்கா நெஞ்சமொடு கண்ணீர் சிந்தாமல் கருத்தூன்றிப் போரிட்டு நியாயத்தை உறுதி செய்த தலைவர் அரசின் தவறுக்குத் தண்டனைபோல அந்த இந்திய தலைநகரிலேயே பிறிதோர் மனையும் பெற்றுவிட்டார். பெரியாரியத்தைச் சிக்கல் செய்யலாமே தவிர சீரழிக்க முடியாது என்பது உறுதியாகி விட்டது.
பெரியாரியக் கொள்கைகள் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் கூறும் நல்லுலகில் பரவி நின்றது. அவரது கொள்கை வழித் தோன்றலாகிய தானைத் தலைவரின் பன்முகப் பார்வையாலும் உலகளாவிய கண்ணோட்டத்தாலும், அரிய உழைப்பாலும் பெரியாரியம் இந்தியப் பெருநிலத்தில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளது. மண்டைச் சுரப்பினை உலகு தொழும் என்ற புரட்சிக் கவிஞரின் கவித்துவம் பொய்யாகவில்லை. உலகின் பல நாடுகளிலும் அறிவுலகப் பேராசானைக் கோலோச்சச் செய்த பெருமை தமிழர் தலைவருக்கே உரியதாகும்.
இன்றியமையாத இன்னுமோர் நிகழ்ச்சியைச் சொல்லியாக வேண்டும். கழகத்தின் தலைமைப் பொறுப்பு தலைவரிடம் வந்தவுடன் காழ்ப்புணர்ச்சி தலைதூக்கி நின்றது. போர் முகத்தில் நேர் வருவதற்கு அஞ்சிய வஞ்சகர் சிலர் வருமானத்துறை வரி விதிக்க வேண்டுமென வரிந்து கட்டித் துணை நின்றனர். அய்யா தேடிய அனைத்துக்கும் வரி விதித்தால் கழகமே மூழ்கி விடும் என்று தப்புக் கணக்குப் போட்டனர். கழகச் சார்பில் வாதிட்டு நின்ற வழக்குரைஞரும் வீரமும் களத்தில் போட்டு வெறுங்கையோடு வந்து நின்றார். நிதானம் இழக்காமல் தமிழர் தலைவர் அந்த வழக்குரைஞருக்குக் கூறிய சட்ட உத்தி, நீதிமன்றத்தின் மதிய அமர்வில் தலைகீழாக மாறி வெற்றியைத் தந்துவிட்டது. பண்டித நேருவின் வருமானம் காங்கிரஸ் இயக்கத்துக்குச் சேர்ந்ததால், நேருவுக்கோ காங்கிரசுக்கோ வருமான வரி போடவில்லையே! தந்தை பெரியார் தமிழகத்தின் மாபெருந் தலைவர், யுனெஸ்கோவும் அவ்வாறு அவரை உலகப் பெருந் தலைவராகப் பாராட்டி யுள்ளது. எந்த வருமானத்தையும் அவர் தனக் கென்று வைத்துக் கொள்ளவில்லை. எனவே அவரது வருமானம் தனி நபர் வருமானமாகக் கருதி வரி விதிப்புக்கு ஆளாக முடியாது! பண்டித நேருவிற்குப் பொருந்துகின்ற சட்டம் தந்தை பெரியாருக்குப் பொருந்தாமல் போகுமா? இக்கருத்தை மனதில் ஏற்ற வழக்குரைஞர் மதியத்துக்குப் பின் அவ்வாறே வாதாடி வாகை சூடி வந்தார். தமிழர் தலைவரின் சட்ட நுணுக்கக் குறிப்பு வாதம் கழகத்தை மிகப் பெருந்தொல்லையிலிருந்து மீட்டு வந்ததோடு இன்றுவரை நம் திராவிடர் கழகத்தின் கொடியும் கொள்கையும் வானோங்கி வளர்ந்து சிறக்கக் காரணமாய் அமைந்தது. இவ்வாறு கழகத்தின் நாடி நரம்பாகி, நம்பிக்கைச் சுடரொளியாய், உயிர் மூச்சாய்த் திகழும் உன்னதத் தலைவர் நீடு வாழ்ந்து மென்மேலும் சிறக்கப் பல்காலும் வாழ்த்துகிறேன்.
– டாக்டர் பழனி. அரங்கசாமி