தனியார் பள்ளிகளில் முதல் வகுப்புவரை சேரும் குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் தேர்வு முறையையோ, வாய்வழியாகக் கேள்வி கேட்கும் முறையையோ கடைப்பிடிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசுடன் ஆலோசிக்காமல், தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் கிடையாது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தபால் துறை பெரும் இழப்பைச் சந்தித்து வருவதால் 2 ஆயிரம் தபால் அலுவலகங்களை அடுத்த மாதம் மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. (கடந்த ஆண்டு 491 மூடப்பட்டுள்ளன.)
டபிள்யூ ஏஎஸ்பி \ 33 பி அல்லது எச்டி 15082 என அழைக்கப்படும் 3,200 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள கிரகத்தினை இங்கிலாந்தின் ஸ்டாபோர்டுஷயரில் உள்ள கீலே பல்கலைக்கழகப் பேராசிரியர் அலெக்சிஸ் ஸ்மித் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் எல்லா வாக்குச் சாவடிகளிலும் நேரத்தைக் குறிப்பிடும் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
ஆதர்ஷ் குடியிருப்பு மோசடி வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் மீது சி.பி. அய் வழக்குப் பதிவு செய்துள்ளது.
நாளந்தா சர்வதேச பல்கலைக்கழகப் பணிகளுக்காகவும், பீகார் வளர்ச்சிப் பணிகளுக்காகவும் 450 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக சீன அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பாவித் தமிழர்களைக் கொடூரமாகக் கொன்றதற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் 30 ஆண்டுகளாக அதிபராக உள்ள முபாரக் மக்களின் கலவரத்திற்குப் பயந்து, ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மந்திரி சபையை டிஸ்மிஸ் செய்துள்ளார்.
ரயிலில் தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்பவர்கள் அடையாள அட்டைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
வாக்குப் பதிவின்போது கருத்துக் கணிப்பு தடைசெய்யப்பட வேண்டும் என்றும், வாக்காளர் சீட்டுகளை (ஓட்டு சிலிப்) தேர்தல் கமிசனே வீடு வீடாகச் சென்று கொடுக்கும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையாளர் குரேஷி தெரிவித்துள்ளார்.
பூமியிலிருந்து 2 ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தையும் அதைச் சுற்றிவரும் 6 கிரகங்களையும் கண்டுபிடித்த அமெரிக்காவின் கெப்லர் விண்கலத்தின் பெயரின் அடிப்படையில் கெப்லர் \ 11 என்று விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.