Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அறிவார்ந்த பயன்பாட்டு பொருளியல் சிந்தனையாளர்

ஆயுதம் ஏந்தாமல் அரசியல், பொருளாதார மாற்றங்கள் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளன. ஆனால் சமூகப்புரட்சி என்பது ஆயுதம் தாங்கித்தான் பெரும் பாலும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழ் நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அறிவாயுதம் தாங்கி சமூகப்புரட்சி நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் சமூகப்புரட்சிக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது பெரியார் இயக்கமே!

சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு, சமுதாயத்தினர் பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டுள்ள சமூக அவல நிலையே காரணம் என்பதைப் எடுத்துரைத் தவர் தந்தை பெரியார். இந்த மண்ணுக்கு ஏற்ற சமத்துவத் தத்துவங்களை களம் இறங்கி, துணிச்ச லாகப் பிரச்சாரம் செய்து இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். அரசியல் புரட்சியை விட சமூகப் புரட்சியை முதன்மையாகக் கருதிய தந்தை பெரியார். பொருளாதார மாற்றங்களை விட சமூகமாற்றத்தின் பணி கடுமையானது என எடுத்துரைத்து அந்த சமூக மாற்றத்திற்காக அயராது உழைத்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாருக்குப் பின் அவர்தம் கொள்கை வழித்தடத்தில் சமூகப்புரட்சிப் பயணத்தை வழிநடத்தி வருபவர் ஆசிரியர் கி.வீரமணி ஆவார். பெரியாரை இழந்த மானிடம் பெறும் ஆறுதல் பெறுவது இவரிடம் எனும் கவிஞரின் வரிகளுக்கு ஒப்ப பெரியாரின் உளப்பாங்கு, போராட்டக்களப் பாங்கு அணுகுமுறைகளால் வார்த்து எடுக்கப்பட்ட ஆசிரியர் வீரமணி, பெரியாரின் பகுத்தறிவுக் கருத்து களை உலகளாவிய அளவில் கொண்டு செல்லு வதில் – தந்தை பெரியாரை உலக மயமாக்கல் (Globalisation of Periyar) என்னும் அரும் பணியில் வெற்றி கண்டு வருகிறார்.

ஒரு சமூகப்புரட்சி இயக்கத்தில், 80 வயதினை எட்டும் தலைவரின் பொதுவாழ்க்கை 71 ஆண்டுகள் என்பது உலகில் ஒப்பிடமுடியாத அரிய தொண்டறப் பணியாகும். சமூக மாற்றம் பற்றிய கண்ணோட்டம் ஆசிரியரது சிந்தனையில் – செயலில் அதிகமாக இருப்பினும், இயல்பான நடைமுறைக்கு உகந்த பொருளாதார எண்ணங்கள் அவரது எழுத்துகளில், செயல்பாடுகளில் சமூக வாழ்வுக்கு பலன்கூட்டி வருகின்றன.  தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை உலகளாவிய அளவில் கொண்டு செல்வதற்கு ஆசிரியர் வீரமணி அவர்களது உலகளாவிய பொருளாதாரச் சிந்தனைகள் பயன்பட்டு வருவதும் ஒரு நுண்ணிய அணுகுமுறை இயல்பாகும். சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் இந்தத் தலைவரின் பொருளாதாரச் சிந்தனைகள், எண்ண வெளிப்பாடுகள், பொது வாழ்க்கையில் பயணித்த – பயணித்து வரும் இதர தலைவர்களிடம் காணமுடியாதவை. மக்களுக்குப் பயன்படும் பொருளாதாரக் கருத்துகள் மாற்றங் களை உருவாக்கும் வல்லமை தரும் தாக்கங்கள், ஆசிரியர் வீரமணி அவர்களின் பொதுவாழ்க்கை பயணத்தில் – சமூக மாற்றத்திற்கான பயண அலைகடலில் கிடைத்திடும் அரிய முத்துக்களாகும்.

விடுதலையின் 77 ஆண்டு கால இதழியல் காலவெளியில், தமிழர் தலைவர் கி.வீரமணி தொடர்ந்து 50 ஆண்டுகள் அதன் ஆசிரியராக முத்திரை பதித்து வருவது ஒரு உலக சாதனை ஆகும். 1962 ஆம் ஆண்டு விடுதலை ஆசிரியர் பொறுப்பில் தந்தை பெரியாரால் அமர்த்தப்பட்ட தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது முதல் தலையங்கமே பொருளாதாரம் சார்ந்தது. வரியில்லாமல் ஆட்சி நடக்குமா? என்பது தலையங்கத்தின் தலைப்பு. பொருளாதாரக் கருத்துகளைச் சொல்லும் பொழுது மக்களுக்கு இனிக்கப்பேசுவதுதான் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலாளனவர்களின் நடைமுறை போக்கு. அந்த நிலையில் கசப்பாக இருந்தாலும் மானிட சமுதாய மேம்பாட்டுக்கு உகந்த பொருளா தாரக் கருத்துகளை ஆணித்தரமாகக் கூறும் வல்லமை அந்தத் தலையங்கத்தில் தென்படுகிறது.
தனிமனிதனின் பட்ஜெட் என்பது வளரக் கூடிய செலவை அமைத்துக்கொள்வதாகும். அரசாங்க பட்ஜெட் என்பது செய்ய வேண்டிய செலவினங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வருமானத்தைப் பெருக்குவது என்பதாகும். இது பொருளாதாரக் தத்துவத்தின் பாலபாடம் – விடுதலை 25.8.1962

கடுமையான பொருளாதாரத் தத்துவத்தினை மிக எளிமையாக, எதர்த்தமாக, பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் ஒரு பாடம் நடத்துவதைப் போன்ற ஆசிரியப்பாங்கு அவரது முதல் தலையங்கத்திலே வெளிப்பட்டது ஒரு விடிவெள்ளி முளைத்தது போன்றதாகும்.

இந்த நாட்டுப் பொருளாதாரத்தன்மை, மக்கள் நலம் சார்ந்த (Welfare State) சூழல் வாய்ந்தது. செல்வவளம்  நிறைந்த மக்களிடமிருந்து வளம் குன்றிய மக்களின் வாழ்வாதார வசதிகளைப் பெருக்குவதுதான் ஒரு அரசின் கடமையாக இருக்க முடியும். அதற்கு உரியவர்களிடம் வரிகளை விதித்து, வசூலித்து, உகந்தவர்களுக்கு வழங்குவது அரசின் பணியாக இருக்க முடியும். பொருளாதார வளம் குன்றியவர்கள் பெரும்பாலனவர்கள் வாழும் இந்த மண்ணில், மாநில அரசோ, மய்ய அரசோ வரியில்லாத பட்ஜெட் எனச் சொன்னால் அது ஒரு பொருளாதாரத் தேக்கநிலையை ஊக்குவிக்கும் செயலாகத்தான் இருக்க முடியுமே தவிர பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கையாக இருக்க முடியாது. Fiscal internation is the economic function of State(நிதி சார்ந்த உகந்த இணைப்பு நடவடிக்கையே ஒரு அரசின் பொருளாதார வளர்ச்சிப் பணியாகும்) முதல் தலையங்கத்தில் வெளிப்பட்ட பொருளாதாரச் சிந்தனைகளின் விரிவு பரிணாமப் போக்கு 80 வயதினை எட்டும் நிலையிலும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் எண்ண வெளிப்பாட்டில், செயல்பாட்டில் நீடிக்கிறது. ஆரம்ப நிலையில் ஏற்றுக்கொள்வதற்கு உகந்ததாக பொதுமக்களால் கருதப்பட்டாலும்; காலப் போக்கில் உண்மைநிலையை உணர்த்தும் போக்கு ஆசிரியர் வீரமணி அவர்களின் பொருளா தாரம் சார்ந்த அறிக்கைகளின் தனித்துவமாகும்; தொடர்ந்து விடுதலை இதழுக்கு அணி சேர்க்கும் அங்கமாகும்.

2 ஜி ஊழல் (?) என்பது ஊடகங்களால், ஆதிக்கவாதிகளால் பெரிதுபடுத்தப்பட்ட ஒரு சதிச்சொல். நீதியினை வழங்க வேண்டிய நிதித் துறை, நிர்வாகத்துறையாக மாறி ஆதிக்கவாதிகளின் கைகளில் செயல்பட்டு வரும் சூழல்கள் நிலவு கின்றன. இல்லாத இழப்பினை, உத்தேச இழப்பாக (presumptive loss) உருவப்படுத்திய நிலையில், பரந்துப்பட்ட செல்பேசி பயன்பாட்டில் ஒரு மாபெரும் தொடர்பு புரட்சி கண்ட நிலையில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் வீரமணி அவர்களின் குரல் வலிமையாக எழும்பியது. பொது நீரோட்டத்திற்கு கலந்து சென்று விடாமல், எதிர்த்து நின்று, உண்மை விளக்கத்தின் வெளிச்சமாக ஆசிரியர் வீரமணி விளங்கி வருகிறார். தந்தை பெரியார் தம் துணிச்சலைப் போன்றே களம் இறங்கினார். ஒத்த கருத்தாளர்களை உடன் அழைத்துக்கொண்டு உண்மை விளக்கப் பிரச்சாரம் செய்தார். ஊடகங்கள்,  ஆதிக்கவாதிகளின் 2 ஜி விசயம் பற்றிய உள்ளீட்டு ஆதாயங்களால், ஆசிரியர் அவர்களின் கருத்துகளுக்கு உண்மையான, வெளிப்படையான ஆதரவு பெருகவில்லை.

ஆனால் ஆண்டுகள் சில கடந்து, இன்று 2 ஜி  மறுஏலம்விட்ட தொகை அளவினை ஒப்பிடுகையில் அன்று அரசியல் அதிகாரத்தில் இருந்தோர் எடுத்த முடிவுகள் சரியானவையே என்பதை உணர்த்துவதாக உள்ளன. தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்துறையில் நடைபெற்ற ஒரு மாபெரும் புரட்சியை ஊழல் திரையிட்டு மறைத்திடும் வரலாறே 2 ஜி விவகாரம் என்பதை ஆணித்தரமாக வாதம் செய்து வருபவர் ஆசிரியர் வீரமணி. கசப்பாக இருந்தாலும், கால வெள்ளத்தைக் கடந்து மக்களுக்கு உண்மையினை, வளமையினை வழங்க வல்ல கருத்துகளை வழங்கும் பெட்டகமாக ஆசிரியர் வீரமணி விளங்கி வருகிறார். பெரும்பான்மை மக்களின் ஆதரவு தமது கருத்துக்கு வேண்டும் என நினைக்கும் பெரும் பாலான தலைவர்களிடையே, தமது கருத்துக்கு ஆதரவுகள் வரும் நாளில் மக்களுக்கு உண்மை விளங்கும். நன்மை பயக்கும் என கருதி எண்ணங்களை வெளிப்படுத்தி செயல்படும் தனித்துவத் தலைவராக விளங்கி வருகிறார் ஆசிரியர் வீரமணி. அவரது பொருளாதாரம் சார்ந்த கருத்துகளுக்கும் இந்தப் போக்கு முற்றிலும் பொருந்தும்.

நாத்திக இயக்கத்தின் தலைவராக விளங்கும் ஆசிரியர் வீரமணி மதச்சார்ப்பின்மையின் வெளிப்பாடு, வெறும் அரசமைப்புச்சட்டக் குறிப்பாக இல்லாமல், நடைமுறைக்கு வர ஏதுவாக பொருளாதாரம் சார்ந்த கருத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக, நிதி ஆதாரம் குறைவான நிலையில், வெளிநாடுகள், பன்னாட்டு நிதியங்களிடம் கையேந்தும் நிலைக்கு நாடு தள்ளப்படும் சூழலை சரி செய்ய கோயில்களில் பயன்படுத்தப்படாமல் ஆண்டாண்டு காலமாக முடங்கிக் கிடக்கும், தங்க ஆபரணங்கள் மற்றும் இதர விலை உயர்ந்த பொருட்களை அரசே ஏற்க வேண்டும், மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

மக்களால் வழங்கப்பட்ட சொத்துகள் மக்களின் மேம்பாட்டிற்கு, நல்வாழ்விற்குப் பயன்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். நிதிஆதாரம் இல்லாமை இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை அல்ல; இருக்கும் நிதி ஆதாரத்தை முறையாக, ஆக்கரீதியாகப் பயன்படுத் தாத போக்கே, பொருளாதார வளர்ச்சித் தேக்கத் திற்கு அடிப்படை என்பதை ரத்தினச் சுருக்கமாக வலியுறுத்தி வருகிறார் ஆசிரியர் கி.வீரமணி.

நாட்டுப் பொருளாதாரம் உலக மயமாக்கப்பட்டு வரும் சூழலில், மக்களின் பொருளாதார நல்வாழ்வுக்கு, வழங்கப்பட்டு வரும் மானியம் (subsidy) குறைக்கப்பட்டு வரும் போக்கு வலுப்பட்டு வருகிறது. மதச்சார்பின்மை நாடான இந்தியாவில் மத நம்பிக்கைகளுக்கு அரசே ஊக்கம் கொடுத்து வரும் செயலாக, பல்வேறு மதம் சார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள்சென்று வருவதற்கான மானியத்தினை அரசு வழங்கி வரும் செயலினைக் காண்பித்து, இன்னும் பலதரப்பு மத நடவடிக்கைகளுக்கு மானியத்தை வழங்கிடும் போக்கினைக் கண்டித்து – அப்படிப் பட்ட மதம் சார்ந்த மானியங்களை நிறுத்திவிட்டு, மக்களுக்கு பொருளாதாரம் சார்ந்த மானியத்தை தொடர்ந்து வழங்கி சமத்துவ நிலை உருவாகிட ஆசிரியர் வீரமணி வெளிப்படுத்தி வருகிறார்.

வளமான, ஆக்க ரீதியான, மக்கள் தொகை பற்றிய எண்ணம் இல்லாமல் – அவர்களின் மேம்பாட்டுக்கு உகந்தவைகளாக தனது பொருளாதாரச் சிந்தனைகளை வெளிப்படுத்தி வரும் ஆசிரியர் வீரமணியின் இந்த தனித்துவத் தன்மைக்கு அவரது பொருளாதாரக் கல்வி அறிவும் ஒரு அடிப்படைக் காரணம் ஆகும்.

ஆம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இடை நிலை படிப்பில் (B.A. Hons.), பட்டப் படிப்பில் (Intermediate),பொருளாதாரத்தைப் பாடமாகக் கொண்டவர் ஆசிரியர் வீரமணி. படிக்கும் காலத்திலும் தலைசிறந்த மாணவராக விளங்கினார் என்பது இடைநிலைப் படிப்பில், அதிக மதிப்பெண்கள் பெற்றமைக்கு சீமாட்டி ஸ்ட்ரேதி பரிசு (The Lady  Strathie Prize 1952-53) மற்றும் பட்டப்படிப்பில் சர் தாமஸ் ஆஸ்டின் பரிசு (The Sir Thomas Austin Prize 1955-56), , நடராஜா தங்கப்பதக்கம் (The Sri Nataraja Gold Medal – 1955-56),சிம்சன் பொருளாதாரப் பரிசு (The Sri J.Simpson Economic Prize  1955-56), பெற்ற பரிசுகளே, அடையாளங்களாகும். பட்டப் படித்த  பின்னர், பிரிட்டன் அல்லது அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் மேல்படிப்பு படத்திட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் தலைவர், 1956 ஆம் ஆண்டில் பரிந்துரைத்த வேளையில் (…. I would strongly recommend him for a suitable award for foreign studies in one of the British or American Universities), சட்டப்படிப் பினைத் தொடர்ந்து, பின்னர் தந்தை பெரியாரின் பாதையில் முழுநேர சமுதாயப் பணி ஆற்றிட வந்தார் ஆசிரியர் வீரமணி.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் எனும் பழமொழிக்கு ஒப்ப ஆசிரியர் வீரமணி அவர்களது பொருளாதாரச் சிந்தனைகள் மாணவப் பருவத்தில் மொட்டுவிட்டு, இளம் வயதில் மலர்ந்து இன்று கனியாக சமுதாயத்தின் உண்மையான உகந்த மேம்பாட்டுக்கு வலு சேர்த்து வருகின்றன.

வாழ்க ஆசிரியர் கி.வீரமணி!

பயன் விளைத்திடுக அவர்தம் சிந்னைகள்!!

– வீ.குமரேசன்