இரண்டு நல்ல மனிதர்களிடம் நடக்கும் மோசமான திருமணம் என்றொரு புதிய கருத்தைச் சொல்கிறீர்கள், இதைக் கொஞ்சம் விளக்கிச்சொல்ல முடியுமா? என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் அவர்களிடம் நேர்காணல் எடுக்கிற நெறியாளர் கேட்கும் போது, “ஆமாம். இரண்டு பேரும் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர்கள். அவர்களைச் சேர்த்து வைப்பது சில நேரங்களில் மோசமான திருமணமாக இருக்கும். ஏனெனில், ஒருவருடைய உண்மையான சுபாவம் யாருக்குத் தெரியும் என்றால் அவருடைய நெருக்கமான துணை என்று சொல்லப்படுபவருக்குத்தான் தெரியும்.
‘‘இவ்ளோ நல்லா சம்பாதிக்கிறான், குடிப்பழக்கம் கிடையாது, அதிர்ந்து கூட பேசறது கிடையாது, மரியாதை தெரிந்தவன், அந்தப் பையனிடம் இந்தப் பொண்ணு எதுக்கு விவாகரத்து கேட்கிறது?” என்று சுற்றி இருப்பவர்கள் கேட்பார்கள். அதேபோல, ‘‘இவ்வளவு நல்ல பொண்ணு, இந்த மாதிரி கிடைக்கவே கிடைக்காது, அந்தப் பொண்ணைப் போய் டைவர்ஸ் பண்றேன்னு சொல்றியேப்பா” என்றும் சொல்லுவாங்க… அவங்களுக்குத் தான் தெரியும். அவங்க வாழ முடியுமா முடியாதா என்று…
ஏனெனில், நாம் ஒரு கோணத்தில் மட்டுமே தான் பார்க்கிறோம் என்ற ஓர் அழகான பதிலைக் கொடுத்திருக்கிறார்கள். இதை ஒரு சமூகம் எப்போது புரிந்து கொள்கிறதோ அப்போது மணமுறிவு பற்றிய சமூகத்தின் பொது மனநிலையில் அங்கீகரிப்புகள் பெருகும்! அண்மைக்காலத்தில் விவாக ரத்து குறித்த அலசல்கள் அதிகமாகி இருக்கின்றன. சமூகத்தில் அமைதியாக நடந்து கொண்டிருக்கிற இந்த நிகழ்வுகள் பிரபலங்கள் சார்ந்தது என்பதால் பேசு பொருளாய் இருக்கின்றன.
ஆனால், மற்ற எவரையும் பாதிக்காத, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளியிலிருந்து அதற்குத் தொடர்பற்ற மற்றவர் அலசுவது அறிவார்ந்த செயலா? மனிதநேயத்திற்குச் சிறிதேனும் பொருந்துகிற செயலா? என்றால் இல்லவே இல்லை என்று சொல்லலாம்.
தேவைகளின் பரிமாற்றமே திருமணங்கள்!
ஒரு மனிதன் நூறாண்டு காலம் வாழ வேண்டுமென்றால் அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இதய மருத்துவர் சொக்கலிங்கம் அவர்கள் கூறுகிறார். ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி எப்படி வரும்? அவனுடைய தேவைகள் நிறைவேறும் போது தான் வரும். ஒரு மனிதன் தன் உணவு, உடை, உறைவிடம் இவற்றைத் தனி மனிதனாக இருந்து உழைத்துப் பெற முடியும். குடல் பசியோடு நின்று விடுவதில்லை, உடல் பசியும் மனிதனுக்கு இயற்கையானது. அந்தப் பசியைத் தீர்த்துக் கொள்ள ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் துணையும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் துணையும் தேவை என்பது இயற்கையின் நியதியாக இருக்கிறது.
அதனால் தனியாளாக இருந்து சிரமப்படும் புறவாழ்வின் நெடிய பக்கங்களின் இன்ப துன்பங்களைக் கடந்து மீளவும், அகவாழ்வில் தன் தேவைகளை நிறைவேற்றும் ஒரு தேர்வாகவும் ஒருவரோடு ஒருவர் கூடி வாழ்ந்து மகிழ்ச்சி பெறுதலே ஒரு மனிதன் திருமணம் செய்து கொள்வதற்கான காரண
மாகிறது. ஆனால், இதன் நோக்கம் என்பது சிதைக்கப்பட்டு அதற்குள் பெண்ணடிமைத் தனங்கள், ஜாதியை நிலை நிறுத்தும் முறைகள் பெரிதும் புகுத்தப்பட்டு விட்டதால் திருமணம் என்பதையே கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்று திருமண விழாக்களிலேயே தந்தை பெரியார் பேசினார்.
கவலைக்கான கருவியா?
“மேரேஜ் இன்ஸ்டிடியூஷனாக இல்லா விட்டால் மனிதன் 100 வருஷத்துக்கு மேல் வாழ்வான். மனிதனுக்கு கவலையும் தொல்லையும் கொடுப்பது குடும்பமாகும். இந்தக் குடும்பத் தொல்லை தான் மனிதனின் ஆயுளைக் குறைக்கச் செய்கிறது” என்று ஆணித்தரமாகக் கூறினார் பெரியார்.
உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் (Happiness Index)முதன்மையில் இருக்கும் நாடுகள் அதிகமான விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியலிலும் முதன்மையில் இருக்கின்றன. உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக இருக்கிற டென்மார்க்கில் அதிக எண்ணிக்கையிலான விவாக ரத்துகள் பதிவாகி உள்ளன. இந்தியாவில் விவாகரத்து வீதம் 1000 திருமணங்களுக்கு ஒன்றுக்கும் குறைவு. மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 140ஆம் இடத்தில் தான் இருக்கிறது. விவாகரத்து ஆனவர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அதற்குக் காரணமாக அவர்கள் தெரிவித்தது – பரஸ்பர நம்பிக்கையும் உறவின் மீதான பொறுப்பும் குறைந்ததால் 73 சதவிகிதமும், திருமணத்துக்கு வெளியே ஆன உறவில் ஒருவர் இருப்பது தெரிந்ததால் 55 சதவிகிதமும், மிக இளவயதில் திருமணம் செய்ததால் 46 சதவிகிதமும், மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகள் கொடுத்த ஏமாற்றத்தால் 45 சதவிகிதமும், திருமணத்தில் சமத்துவம் இல்லாததால் 44 சதவிகிதமும், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டதால் 25 சதவிகிதமும் என்று டாக்டர் சிவபாலன் அவர்கள் புள்ளிவிவரங்களைக் குறிப்பிடுகிறார்.
நமக்குள் திருமணமுறை
எப்படி வந்தது?
‘‘தமிழர்கள், காதலன், காதலியாக – தலைவன், தலைவியாக – நண்பர்களாக வாழ்ந்ததாகத்தான் பழைய இலக்கியங்களில் இருக்கிறது. இங்கு ஆரியர்கள் வந்தபோது அவர்கள் போதிய பெண்களுடன் வரவில்லை. இங்குள்ள பெண்களைச் சரி செய்து கொண்டு வாழ ஆரம்பித் தனர். இங்குள்ள பெண்கள் சுதந்திரத்தோடு வாழ்ந்து வந்தவர்கள் ஆனதால் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்காமல் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்ள ஆரம்பித்தனர். அதனால் ஆரியர்கள், பெண்களுக்கு சில கட்டுப்பாடு களை ஏற்படுத்தினர். பெண்கள் என்றாலே ஆண்களுக்குப் பிள்ளை பெற்றுக் கொடுக்க வேண்டியது , அதைக் காப்பாற்ற வேண்டியது, கணவன் செத்தால் விதவையாக இருந்து வாழ்நாள் முழுவதும் துன்பம் அனுபவிக்க வேண்டியது, சொத்துரிமை கிடையாது, படிக்கக்கூடாது, மறுமண உரிமை கிடையாது என்றெல்லாம் ஆக்கி அவர்களை வளர விடாமல் செய்துவிட்டனர்’’ என்று திருமணங்கள் எவ்வாறு தோன்றின என்பது குறித்து விளக்குகிறார் பெரியார்.
திருமணம் என்பது ஒப்பந்தமே!
கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூறப்படும் நிகழ்ச்சி என்பது ஆண், பெண் இவர்களுடைய வாழ்க்கை சவுகரியத்திற்காக ஏற்பட்ட ஒரு ஒப்பந்த விழாவே ஒழிய, அதில் எந்தத் தெய்வீகத் தன்மையும் கிடையாது. இன்னார்க்கு இன்னார் என்று கடவுள் முடிவு செய்தது, புனிதச் சடங்கு, சொர்க்கத்தில் நிச்சயிக் கப்பட்டது என்பதெல்லாம் சரியல்ல. திருமணம் செய்து கொண்டவர்களுடைய வாழ்க்கை வசதிக்கு, அந்த ஏற்பாடு சரிப்பட்டு வரவில்லை
யானால் ரத்து செய்யக்கூடிய ஒப்பந்தம்தான் அது என்றும் எளிமைப்படுத்தினார் பெரியார்.
தொடரும்…