இறுதி ஆசை- இரா. அழகர்

2024 சிறுகதை டிசம்பர் 16-30 2024

இங்க உயர்ஜாதிக்காரங்களுக்கு பிரச்சனைன்னா நம்மை
தமிழரா ஒன்னு சேத்து போராடக்
கூப்பிடுவாங்க.
அதுவே நமக்கு பிரச்சினைனா யாரும் தமிழரா இல்லாம ஜாதியா
பிரிஞ்சுடுவாங்க.

தனது தாத்தா வீட்டில் நுழைவதைக் கண்ட விக்னேஷ் துள்ளிக் குதித்து ஓடி வந்தான். விக்னேஷ்க்கு வீட்டில் அப்பா, அம்மா, தம்பியைவிட தாத்தாவை ரொம்பப் பிடிக்கும். காரணம், சிறு வயதில் இருந்தே தாத்தாவின் அரவணைப்பிலேயே வளர்ந்ததே காரணம்.
தன் பேரனின் உற்சாகத்தைக் கண்ட சுடலை என்கிற சுடலையாண்டி வாங்கி வந்த தின்பண்டக் கவரை பேரனிடம் நீட்டி, நீயும் தம்பியும் எடுத்துக் கொள்ளுங்கள்…’’ என்று சொல்லிவிட்டு குளிக்க நகர்ந்தார்.

தின்பண்டக் கவரை வாங்கித் திண்ணையில் வைத்துவிட்டு, எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் விக்னேஷ். குளித்து விட்டு வந்த சுடலை, தன் பேரன் முகம் வாடி இருப்பதைக் கண்டு திகைத்தார். எப்போதுமே தின்பண்டம் தந்ததுமே தனக்குப் பிடித்ததை எடுத்து தன் தம்பிக்குப் பாதியைத் தந்து விட்டு, மீதியைத் தின்று, வேறு தின்பண்டங்களை அடுத்த நேரத்திற்குப் பத்திரப்படுத்தும் தன் பேரன், இன்று எதையும் தொடாமல் அமைதியாக இருந்தது ஆச்சரியத்தைத் தந்தது சுடலைக்கு.

‘‘ஏன் என்னாச்சு கண்ணா…’’ பரிவுடன் வினவிய தாத்தாவிடம் பதில் ஏதும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான் விக்னேஷ்.
‘‘தம்பிக்கும் உனக்கும் சண்டையா…?’’
‘‘இல்ல…’’
‘‘உங்க வாத்தியார் அடிச்சுட்டாரா…?’’
‘‘இல்ல…’’
‘‘பின்ன எதுக்கு கண்ணா, கப்பல் கவுந்த மாதிரி கவலையா இருக்கீங்க’’
‘‘அப்பாவுக்கு மட்டும்தான் என் மேலே பாசம் இல்லைன்னு நினைச்சேன். ஆனா உங்களுக்கும் இல்ல…’’
‘‘ஏன்டா கண்ணா அப்படி சொல்ற…?’’
‘‘பின்ன என்ன தாத்தா! என்கூட படிக்கிற பிரண்டோட தாத்தா தினமும் தீனி வாங்கி வந்து கொடுத்துட்டு கொஞ்ச நேரம் அவனைத் தூக்கிக் கொஞ்சுவாராம். நைட்டானா சாப்பிட வைப்பாராம். ஆனா, நீங்க இது எதுவும் செய்யறதே இல்லை.’’
‘‘அட கண்ணா, இதுக்குத்தான் கோபமா…? தம்பி அவங்கெல்லாம் ஊருக்குள்ள வாழ்றவங்க. ஆபீஸ் வேலை, தோட்டத்து வேலைனு பார்த்துட்டு சுத்தமா இருப்பாங்க. ஆனா, தாத்தா நானோ சாக்கடை அள்ளுறது, மலத்தை அள்ளுறதுனு தினமும் துர்வாடையோட வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். என் மேலே வீசற வாடை எனக்கே சகிக்க முடியல. இதுல வந்த உடனே உன்ன எப்படித் தூக்கி கொஞ்ச மனம் வரும்? இந்த வாடையே உனக்குப் படக் கூடாதுனுதானே நீயாவது படிச்சு நல்ல நிலைமைக்கு வரனும்னு பள்ளிக்கூடம் அனுப்பறோம்.’’
‘‘சரி தாத்தா, ஏன் சாப்பிடக் கூட வைக்க மாட்டேங்கறீங்க.’’
‘‘கண்ணா நானே இதுவரை திருப்தியா ஒரு நாள் கூட சாப்பிட்டதில்லை. என்னதான் குளிச்சாலும் கையை சோப்புப் போட்டுக் கழுவினாலும் சாக்கடை மலத்தோட துகள் நகக் கண்ணியில் ஒட்டியிருக்குமோனு அருவருப்பாவே இருக்கும். சில சமயத்தில நான் பட்டினி கூட கிடந்திருக்கேன் – கையோட அருவருப்பு தாங்காம. அப்படிப்பட்ட என் கையாலே உனக்கெப்படிப்பா சோறு ஊட்ட முடியும்.’’
‘‘ஏன் தாத்தா… இந்த வேல வேண்டாமுனு வேற வேலைக்குப் போகலாமில்ல.’’
‘‘முடியாது கண்ணா, உங்க அப்பாவ இந்த இழிவான வேலைக்கு வர விடாமத் தடுக்குறதுக்கே இந்த ஊர்க்காரங்களோட போராட வேண்டி இருந்தது. இதுல நானும்
ஊரைச் சுத்தம் செய்ய முடியாதுனு சொன்னா
ராவோட ராவா வீட்ட கொளுத்திப்புடுவாங்கப்பா!’’
‘‘என்ன தாத்தா இப்படிச் சொல்றீங்க… நம்ம நாடு சுதந்திரம் அடைஞ்சிடுச்சுன்னு வாத்தியார் சொல்லியிருக்காரு.’’
‘‘உண்மைதாம்பா. சுதந்திரம் கிடைச்சது இந்த ஊரு மக்களுக்குத்தான். நம்மளப் போல சேரி மக்களுக்கு இல்ல’’
‘‘சுதந்திர நாட்டுல எல்லோரும் சரி சமம் தாத்தா’’
‘‘இல்லப்பா, இதுவரை அப்படி இல்லை. உன்னோட பாடப் புத்தகத்துல தீண்டாமை பாவச் செயல்னு போட்டுருக்கா! அதப் படிச்சவங்க தான் நமக்குனு கடையில தனியா டீ டம்ளர் வச்சிருக்காங்க. நீ செருப்புப் போடாமப் போறது, செருப்பு வாங்க முடியாம இல்லப்பா. இந்த ஊருக்குள்ள நாம செருப்புப் போட முடியாமத்தான்’’
‘‘எல்லோரும் சேர்ந்து போராடித்தானே தாத்தா சுதந்திரம் வாங்கினாங்க?’’
‘‘ஆமாய்யா. என்ன பண்றது? சிலருக்குத்
தேவைன்னா நாம தமிழராகவும், தேவையில்லாத போது சேரி மக்களாகவும் ஆக்கப்படுறோம்’’
‘‘புரியலையே தாத்தா…’’
‘‘இங்க உயர்ஜாதிக்காரங்களுக்கு பிரச்சனைன்னா நம்மை தமிழரா ஒன்னு சேத்து போராடக் கூப்பிடுவாங்க. அதுவே நமக்கு பிரச்சினைனா யாரும் தமிழரா இல்லாம ஜாதியா பிரிஞ்சுடுவாங்க.’’
‘‘இதுக்குத் தீர்வே இல்லையா தாத்தா?’’
‘‘இருக்கு! ரெண்டு தீர்வு இருக்கு. ஜாதிய மறந்துடுனு சொல்ற அயோக்கியக் கூட்டத்துக்குப் பின்னாடிப் போகாம, ஜாதிய ஒழித்துடுன்னு சொல்ற மனிதநேயக் கூட்டத்துக்குப் பின்னாடிப் போனா கொஞ்சம் மாற்றம் கிடைக்கும்.’’
‘‘இன்னொன்னு…?’’
‘‘நம்ம வாழ்க்கை முறையை மாத்திக்கிறது. நம்மளோட கல்வித் தரத்தை அதிகப்படுத்தி, சேரினாலே பரட்டைத் தலை, அழுக்குச் சட்டைங்கற தோற்றத்தை மாத்தி நம்ம வாழ்க்கை முறையை மேம்படுத்தினா கொஞ்சம் முன்னேற்றம் கிடைக்கும்.’’
‘‘அப்படி செஞ்சா தீண்டாமை ஒழிஞ்சிடுமா…?’’
‘‘தீண்டாமை ஒழிய ஒரே வழி ஜாதி ஒழிப்புத்தான். ஆனா, சுயமரியாதையோட வாழலாம்’’
‘‘இவ்வளவு விசயம் பேசுறீங்க. அப்புறம் ஏன் தாத்தா நீங்க மாற மாட்டேங்கறீங்க…?’’.
‘‘இது எல்லாமே உங்க அப்பா மூலமா இப்பத்தாம்பா தெரிஞ்சுக்கிட்டேன். அங்க அவங்க கூட்டத்துல பேசும் போது நாம எவ்வளவு வஞ்சிக்கப்படுறோம்னு தெரிஞ்சுக்க முடியுது. போன வாரம் ரெங்கசாமி பெரியப்பா செத்துப் போனாருல்ல…’’
‘‘ஆமா, குமார் அண்ணா அவங்க அப்பா’’
‘‘ம், அவருதான். அவரு சாக்கடையச் சுத்தப்படுத்தும் போது விஷவாயு தாக்கிச் செத்துட்டாரு. அதுக்குக் காரணம், தேவை
யான பாதுகாப்பு உபகரணங்கள் நமக்குத் தராததுதான். அதுவுமில்லாம, இந்தத் தொழி
லுக்கு இப்ப நிறைய புதுப்புது மிஷினெல்லாம் வந்திருக்காம். ஆனா, நம்மளதான் இன்னும் இதுக்குப் பயன்படுத்த நினைக்கிறாங்க.’’
நான் பெரியவனாகி எல்லாத்தையும் மாத்துவேன் தாத்தா. ஆனா, இந்த அப்பாவத்தான் புரிஞ்சுக்கவே முடியல.’’
‘‘ஏன்டா கண்ணா’’
‘‘நேத்து தம்பிக்கு புதுத் துணி எடுத்துட்டு வந்தாரு அப்பா. அதுக்கு நானும் புதுத் துணி கேட்டேன். தம்பி கூடவே எதுக்குடா பொறாமை புடிச்சு போட்டி போடுறேனு திட்டிட்டாரு. நான் கேட்டது தப்பா தாத்தா?’’
‘‘தப்பில்லடா கண்ணா; அப்பாவுக்குத்தான் புத்தி இல்ல. தம்பிக்கு ஏன் செஞ்ச அப்படின்னோ, ஏதும் செய்யக் கூடாதுனோ சொன்னாத்தான் பொறாமை. ஆனா, தம்பிக்குக் கிடைச்சது தனக்கும் வேணும்னு கேக்கறது உரிமை, ஆதங்கம். இதுல பொறாமைக்கும் ஆதங்கத்துக்கும் உங்க அப்பாவுக்கு வித்தியாசம் தெரியல. அதுக்குக் காரணம், அப்படி ஒரு சூழ்நிலையில அவரு வளராததும், குழந்தைகளோட மனச சரியாப் புரிஞ்சுக்காததும்தான்.’’
‘‘நீங்களாம் ஏதும் ஆசைப்பட மாட்டீங்களா தாத்தா…’’
‘‘எனக்கும் ஒரு ஆசை இருக்குப்பா’’
‘‘அது என்ன தாத்தா…?’’
‘‘எல்லோரும் வேலை செய்யும் போதே தன்னோட உயிர் போகனுமுனு ஆசைப்படுவாங்க. ஆனா, தாத்தாவுக்கு வேலை செய்யும் போது உயிர் போயிடக் கூடாதுனுதான் ஆசை. சாக்கடையிலும் மலத்திலும் புரண்டுக்கிட்டு இருக்கும் போது என்னோட இறுதி மூச்சு நின்னு போச்சுன்னா நம்ம சொந்தக்காரங்களே என்னோட பொணத்துக்கிட்ட வரத் தயங்குவாங்க. அப்படி ஒரு அவமானம் நான் பட்டுறக்கூடாது. அதுவுமில்லாம, என்னோட உடல் உறுப்புகளத் தானம் பண்ணலாம்னு இருக்கேன். இங்க ஒவ்வொன்னையும் ஜாதி பார்த்தே முடிவு செய்ற சமூகம் என்னோட உடல் உறுப்ப பொருத்திக்கும் போது ஜாதி பார்க்க முடியாம தோத்துப் போயிடணும்.’’
சொல்லச் சொல்ல சுடலை என்கிற சுடலையாண்டியின் கண்கள் நீர் கோர்த்துக் கொள்ள… பேரன் விக்னேஷ் – தாத்தாவின் ஆசையில் ஒளிந்துள்ள மனித நேயத்தையும் ஜாதிச் சாக்கடையின் துர்நாற்றத்தையும் ஒரே சமயத்தில் உணர்ந்தான்.