நான் எப்போதும் கொள்கைக்காரன்! – தந்தை பெரியார்

2024 டிசம்பர் 16-30 2024 பெரியார் பேசுகிறார்
நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துகளை மறைக்காமல் அப்படியே சொல்லு
கின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக் கூட இருக்கலாம்; சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம்; சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும், நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துகளே தவிர, பொய்யல்ல.
(‘விடுதலை’, 15.7.1968)
எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர, வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.
(‘விடுதலை’, 8.9.1939)
அரசர்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும், மக்களுடைய சுயமரியாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும், சொல்லியும், எழுதியும் வந்திருக்கின்றவன் நான்.
அரசர்கள் மாத்திரமல்லாமல் பணக்காரர்கள்,  குறுநில மன்னர்கள், வியாபாரிகள், முதலாளிகள்  என்கின்றதான கூட்டங்கள்கூட, மக்களை  அரித்துத் தின்னும் புழுக்களானதால், அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும்கூடச் சொல்லுகின்றவன் நான்.
(‘குடிஅரசு’ 6.10.1935)
மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும் மக்களைப் பகுத்தறிவு வாதிகளாக ஆக்கவேண்டுமென்பதிலும் எனக்கு
1925ஆம் ஆண்டு முதலே உறுதியான எண்ணமும் ஆசையும் உண்டு.
(‘விடுதலை’, 12.10.1967)
நான் மறைந்து நின்று சிலரைத் தூண்டிவிட்டு, எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒருசமயம் எனக்கு அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும், எனக்கு அந்தச் சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்தச் சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயேதான், நான் என் வாழ்நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீர வேண்டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தித் தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க வேண்டியவனாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.
(‘குடிஅரசு’ 24.11.1940)
என்னைப் பொறுத்தவரையிலும் நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன்.
(‘விடுதலை’, 1.6.1954)
எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்லாதார் ஆட்சி என்றால் வலியப் போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை.
(‘விடுதலை’, 2.10.1967)
நமது மக்களும், சமுதாயமும் மற்ற நாட்டு மக்களைப் போன்று முன்னேற்றமடைய வேண்டுமென்றுதான் நான் தொண்டாற்றுகிறேன். ஆனதாலே நம் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய வர்களையும், நம் சமுதாய முன்னேற்றத்திற்காகக் காரியங்கள் செய்யக்கூடிய ஆட்சியாளரையும் சமுதாயத்தின் நலனைக் கருதியே ஆதரிக்கிறேன்.
(‘விடுதலை’, 18.7.1968)
நான் அரசியல், மதத்துறையின் பேரால் யோக்கியமற்ற – மூட – சுயநல மக்களால் வெறுக்கப்பட்டவன்; துன்பப்பட்டவன்; நட்டப்பட்டவன்; மானத்தையும் பறி கொடுத்தவன்; மந்திரிப் பதவியை உதறித் தள்ளியவன்.
(‘விடுதலை’, 14.11.1967)
இன்றைய சுதந்திரத்திற்கு, “முதன்முதல் நானாகவே சிறைக்குப் போகிறேன்”  என்று இந்த நாட்டில், ஏன் இந்தியாவிலேயே சிறைக்குப் போனது நானும் என் குடும்பமும் தானே?
(‘விடுதலை’, 29.1.1968)
எனது சமுதாய மக்களுக்கு நன்மை செய்கிற கட்சி எதுவாக இருந்தாலும் அதனை ஆதரித்தும், என் சமுதாய மக்களுக்குக் கேடாகக் காரியம் செய்யும் கட்சிகளை எதிர்த்துமே வந்திருக் கின்றேன். ஆட்சியில் இருக்கிறது என்பதற்காக எந்தக் கட்சியையும் நான் ஆதரித்தது கிடையாது.
(‘விடுதலை’, 4.3.1968)
என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது. அதனாலேயே சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங்களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படுகிறேன்.
(‘குடிஅரசு’ 25.8.1940)
நான் நிரந்தரமாக ஒருத்தனை ஆதரித்து வயிறு வளர்க்க வேண்டுமென்கின்ற அவசிய
மில்லாதவன். எவன் நமக்கு நன்மை செய்கின்றானோ, நமது சமுதாய இழிவு நீங்கப் பாடுபடுகின்றானோ அவன் அயல்நாட்டுக்காரனாக இருந்தாலும் சரி, அவனை ஆதரிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை என்று கருதுபவன் நான்.
(‘விடுதலை’, 20.1.1969)
நரக வாழ்வு வாழ்வதாயிருந்தாலும், அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே இப்பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன்.
நரக வாழ்வு மட்டுமல்ல, அதைவிடப் பல கொடிய துன்பங்களை அனுபவிக்க நேரும் இடமானாலும் அவ்விடத்தில் நான் மனிதனாக மதிக்கப்படுவேன் என்றால் அவ்வாழ்வே இந்த இழிஜாதி வாழ்வைவிடச் சுகமான வாழ்வு என்று கருதுவேன்.
(‘குடிஅரசு’ 1.5.1948)
“தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோயில் கட்டிக் கொடு” என்றார் காந்தியார். அப்போது நான், “கிணற்றில் தண்ணீர்  எடுக்கக்கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப்  பரிகாரமில்லாவிட்டால், அவன் தண்ணீரில்லாம லேயே சாகட்டும். அவனுக்கு இழிவு நீங்க வேண்டுமென்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல” என்றேன்.
(‘விடுதலை’, 9.10.1957)
ஜாதியை ஒழிக்கிறேன் என்றால் அது மேல்ஜாதிக்காரன் மேல் துவேஷம் என்றும், வகுப்புவாதம் என்றும் சொல்கிறான். நாங்கள் ஏன் வகுப்புவாதி? எந்த ஒரு அக்கிரகாரத்துக்காவது தீ வைத்து, எந்த ஒரு பார்ப்பனருக்காவது தீங்கு விளைத்திருக்கிறோமா? ஜாதி இருக்கக்கூடாது என்று கூறினால் வகுப்புத் துவேஷமா?
(‘விடுதலை’, 25.10.1961)
இந்த நாட்டில் ஜாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள். மற்றவனுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல. நானோ மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கின்ற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு, கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன்.
(‘விடுதலை’, 4.11.1961)
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்குக் கண்வலியாய் இருப்பவர்கள், அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் எனது கண்ணோய்க்குப் பரிகாரம்.
(‘விடுதலை’, 15.10.1967)
எனது சீர்திருத்தம் என்பதெல்லாம்  பகுத்தறி
வைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்று பட்டபடி நடவுங்கள் என்பதேயாகும்.
(‘குடிஅரசு’ 24.11.1940