ஆற அமர்ந்து சிந்தித்துப் பார்த்தால் மேலோட்டமாகத் தெரியும் – பல செய்திகளுக்கு உள்ளே இருக்கும் மிகக் கடினங்கள். ஒருவர் போட்ட பாதையில் பின்வருபவர் பயணம் செய்வது எளிதானதுதானே என்று தெரிந்தாலும் முதலில் பயணம் தொடங்கியவருக்கு இருக்கும் சுதந்திரம் அடிச்சுவட்டில் பயணம் செய்பவருக்கு இருக்க வாய்ப்பில்லை. முதலில் பயணம் செய்பவருக்கான அனுபவங்களும் காலச்சூழலும் வேறாக இருக்கும். மாற்றமடைந்திருக்கும் காலச் சூழலிலும் வழுக்காமல் முன்னவரின் அடிச்சுவட்டில் முன்னேறுவது என்பது அத்துணை எளிதல்ல.
அய்யாவின் அடிச்சுவட்டில் தன் வாழ்நாள் முழுவதும் பயணம் செய்ய தமிழர் தலைவர் ஆசிரியர் தன்னை ஒப்புக் கொடுத்தால் மட்டுமே – தந்தை பெரியாரின் கருத்துகளே, தான் வாழும் காலத்திற்கும் அதைக் கடந்தும் மனித குலத்திற்குத் தேவை என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே – அத்துணிவைப் பெற முடியும். அதுவும் இளமைப் பருவத்திலேயே அத்தெளிவும் துணிவும் அத்துணை எளிதல்ல.
“உணர்ச்சி மிகுந்த சொற்பொழிவுகளை ஆற்றுவதும் போராட்டங்களை முன் நின்று வழி நடத்துவதும் மட்டுமல்ல தலைமைப் பண்பு என்பது. மற்றவரின் மனத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை உருவாக்குவதேயாகும். பொது நலனுக்காகத் தன் உணர்வுகளை இழக்கவும் விட்டுக் கொடுக்கவும் ஆற்றல் படைத்த தலைவர்களால் மட்டுமே அத்தகைய நம்பிக்கையை ஊட்ட முடியும்” என்று ‘தலைமைத்துவம்’ என்ற நூலின் அற்புதமான வரிகளை எடுத்துக்காட்டுகிற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய இளமைப் பருவத்தில், அவரின் மனத்தில் அத்தகைய ஓர் ஆழ்ந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் தலைவராகத் தந்தை பெரியார் இருந்தார் என்பதைத் ‘தோழன்’ இதழுக்காக அன்றைய திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளராக இருந்த 22 வயது நிரம்பாத இளைஞர் கடலூர் வீரமணி எழுதிய கட்டுரை நன்கு உணர்த்துகிறது. ஆந்துருமராய் என்ற புகழ்மிக்கப் பிரஞ்சு எழுத்தாளரின் ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ என்ற நூலின் ஒன்பது அத்தியாயங்களில் தலைமைப் பண்புக்கான இலக்கணத்தை எடுத்துக் காட்டி, அந்த இலக்கணத்திற்கு வாழும் இலக்கியமாக, தான் ஏற்றுக்கொண்ட தலைவர் திகழ்வதைக் கண்டு தந்தை பெரியாரின் தலைமைத்துவத்தின் பொருத்தப்பாட்டை வியந்து எழுதியுள்ளார்.
ஒரு தலைவனுக்கு நாட்டு நிலைமையை உணர்ந்து செயலாற்றக்கூடிய வினைத்திட்பம் இருக்க வேண்டும்; இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விட வேண்டிய அறிவுக் கூர்மை இருக்க வேண்டும்; வெட்டிப் பேச்சு பேசுவதை வெறுத்து ஒதுக்கித் தள்ள வேண்டும்; தான் ஆற்ற வேண்டிய மிக முக்கியச் செயல்களை முன்னாலேயே தெரிவித்து அதைச் செயலுருவில் செய்ய இயலாமல் அழித்துவிடக் கூடாது. தலைவர் என்பவர் மிகவும் எளிய முறையில் வாழ வேண்டும்;
அடுத்ததாகத் தலைவருக்குள்ள மிக முக்கியப் பண்புகளில் ஆந்துருமராய் வலியுறுத்துவது ஒழுக்கமாகும். இத்தகைய பண்புகள் ஒருங்கே சேர்ந்த ஓர் உருவம் தென்னாட்டில் பொது வாழ்வில் உலவுகிறது என்றால் அவர் நம் தலைவர் பெரியார் ஒருவரே என்று நிறுவுவதோடு தனக்கான தலைவராகவும் வரித்துக் கொள்கிறார். அதுவே இன்றுவரை அடிபிறழாத பயணத்திற்கு அடித்தளமாகிறது. எனக்கென்று தனிப் புத்தி கிடையாது, பெரியார் தந்த புத்தி தான் என்று சொல்வது பகுத்தறிவா? என்ற கேள்வியும் அவரைப் பார்த்து முன் வைக்கப்பட்டது.
இதோ ஆசிரியரே பதிலளிக்கிறார், சொந்தப்புத்திக்குக் கூடச் சில நேரங்களில் சபலம் வரலாம், தடுமாற்றங்கள் வரலாம், துணிவின்மை வரலாம்.
ஆனால், பெரியார் தந்த புத்திக்கு ஒரு போதும் அவை வராது” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் கூறுகிறார்.
நான் பொறுப்பேற்றவுடன் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி ஏட்டின் மூத்த செய்தியாளர் திரு ஏ.என்.கோபாலன் திருச்சியில் வாழ்த்துக் கூறும் போது, மற்றக் கட்சிகளில் பொறுப்புக்கு புதிதாக வந்த தலைவர்களைப் போல் உங்களுக்குத் தடுமாற்றமோ குழப்பமோ வர வாய்ப்பே இல்லை. உங்கள் இயக்கத்தில் கொள்கை, திட்டம் இவற்றை நன்கு தெரிவித்துவிட்டு போராட்ட வழிமுறைகள் உட்பட அனைத்தையும் பாடங்களாக கலங்கரை விளக்கின் வெளிச்சம் போல அய்யா விட்டுச் சென்றுள்ளார். எனவே, எது பற்றியும் நீங்கள்தெளிவுடன் செயல்பட்டு உங்கள் இயக்கத்தை நடத்த எல்லாமே ரெடிமேடாகச் சமைத்த உணவு போல உள்ளது. பரிமாற வேண்டியதுதானே உங்கள் பணி. அதற்கும் நல்ல பக்குவப்பட்ட சபலங்களுக்கு ஆளாகாத தொண்டர்களை உருவாக்கி விட்டுச் சென்றுள்ளார். அதன் கட்டுக்கோப்பு எனும் அஸ்திவாரம் மிகவும் வளமானது. எனவே துணிச்சலுடன் நீங்கள்செயல்பட்டு வெற்றி காண்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று ஊக்கப்படுத்தினார். அந்தச் சொற்கள் என்னைப் பெரிதும் ஈர்த்தன என்கிறார் ஆசிரியர் அவர்கள். உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?
‘‘பெரியார் சொல்கிறபடி நடப்பதே!’’
பெரியார் பற்றிய உங்கள் கருத்து என்ன?
‘‘பெரியார் என் தலைவர்! தமிழர்களின் பாதுகாவலர்! தன்னலம் என்பதை அறவே துறந்தவர்!
வரலாற்றில் அடிக்கடி காண முடியாமல் அபூர்வமாக எப்போதோ ஒரு முறை கிட்டக் கூடிய புரட்சி மேதை!’’
இது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 1968இல் சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ ஏட்டுக்காகப் பதிலளித்ததாகும்.
அன்றிலிருந்து இன்று வரை பெரியார் தந்த புத்தியால் செயல்படும் தலைவர் ஆசிரியர், “மக்கள் தம் நோய் தீர்க்கும் மாமருந்து தந்தை பெரியார். நானோ அந்த மருந்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மருந்தாளுநன்! மருந்தை மாற்ற மருந்தாளுநரால் முடியாது. மருந்தின் அடியொற்றித் தான் பயணிக்க வேண்டும்” என்று அடக்கத்துடன் குறிப்பிடுகிறார்.
பெரியார் தந்த புத்திதான் 69 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தமிழகத்துக்கு 31C பாதுகாப்பு ஏற்பாட்டுடன் தந்தது. பெரியார் தந்த புத்திதான் ஜாதியை ஒழிக்க இட ஒதுக்கீடு என்ற புரிதலைத் தந்தது. பொருளாதார அளவுகோல் தேவையில்லை என்று எம்.ஜி.ஆருக்குப் பாடம் எடுத்தது. இன்றும் அந்த அதிர்வுகள் தான் கண்களறியாமல் இந்தியா
முழுவதும் மெல்ல மெல்ல பரவி அரசியல்வாதிகளிடம் தெளிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
பெரியார் தந்த புத்திதான் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சிக்கல்களுக்கும் தெளிவான தீர்வுகள் நாடி ஆசிரியரின் அறிக்கைகளை அனைவரையும் தேட வைக்கிறது. பெரியார் தந்த புத்திதான் மகளிரை ஊக்கப்படுத்தி மதிப்புக் கூட்டிக் கொண்டிருக்கிறது.
பெரியார் தந்த புத்திதான் தொண்ணூற்று இரண்டிலும் ஊர் ஊராய்ச் சென்று பொதுக் கூட்டங்களில் முழங்க வைக்கிறது இயக்கம் சாராத கூட்டங்களில் இன்றும் கூட
நின்று கொண்டே உரையாற்றும் வலிமை தருகிறது.
இப்படியான தந்தை பெரியாரின் அடிச்சுவட்டு வெற்றிப் பயணத்தில் ஆசிரியர் வடித்த,
“என்னை நன்றாக என் தலைவன் செதுக்கினான்
தன்னைப் பின்பற்றிப் புத்துலகம் சமைப்பதற்கே!”
என்ற கல்வெட்டுச் சொற்கள் தான் வரலாற்றில் காணக் கிடைக்காத வைர வரிகளாம்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு 92ஆம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப் பதில் பெரும் உவகை கொள்கிறோம்!