திசை காட்டி, விசை ஏற்றும் திராவிடர் தலைவர்!- மஞ்சை வசந்தன்

2024 டிசம்பர் 1-15 2024 முகப்பு கட்டுரை

அயல்நாட்டிலிருந்து வந்து தமிழர் பகுதியில் ஆரியர் நுழைந்த காலம் முதலே ஆரிய திராவிடப் போர் தொடங்கியது. ஆனால், அப்போர் உடல்பலம் காட்டி வெல்வதாய் இல்லாமல், சூழ்ச்சிகளின் வடிவில் வந்தது. இதற்கு சாஸ்திரங்களும், புராணங்களும், கடவுள் நம்பிக்கையும் உதவின. அதனால், கல்வி பறிக்கப்பட்ட திராவிட இனம் விழிப்பின்றி வீழ்ந்து கிடந்தது.

வீழ்ந்த இனத்தை விழிப்படையச் செய்து, மானமும் அறிவும் உள்ளதாக மாற்ற தந்தை பெரியார் முயன்றார். எனவே, பெரியார் காலத்தில் ஆரிய திராவிடப் போர் என்பது கடவுள் மறுப்பு, சாஸ்திர, புராண எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, கல்வி உரிமை, அரசியல் உரிமை, வேலைவாய்ப்பு உரிமை பெறல் போன்ற போராட்டங்களாய் அமைந்தன. பெரியாருக்கு முன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்கள் அமைப்பு ரீதியான முயற்சிகளை மேற்கொள்ளாததால், அவர்கள் பெற முடியாத வெற்றிகளைப் பெரியார் பெற்றார்.

இனத்தின் காப்பரண் :

பெரியார் திராவிட இயக்கம் தொடங்கிய காலம் முதல் திராவிட இனத்தின் காப்பரணாக திராவிடர் கழகம் திகழ்கிறது. திராவிட இனத்தின் இழிவு நீக்கி, உரிமைகளை மீட்டு ஆட்சி அதிகாரம், வேலைவாய்ப்பு, கல்வி உரிமை, கடவுள் வழிபாட்டுரிமை என்று எல்லாவற்றையும் பெற்றது பெரியாரின் பெரும் போராட்டங்களாலும், அவர் உருவாக்கிய இயக்கத்தாலுமேயாகும்.

பெரியாரின் சரியான வாரிசு

வழக்கத்தில் வாரிசு என்பது பிறப்பின் வழி, இரத்த வழி வருகிறது. இதில் சிறப்பு ஏதும் இல்லை. அது இயற்கையாய் நிகழ்வது.

இப்படி பிறப்பால் வரும் வாரிசு உடலால், இரத்தத்தால், உயிர் அணுக்களால் ஒத்து வருவது மட்டுமே! ஒருவரைப் போலவே அவரது வாரிசு கொள்கையில் ஒத்து இருக்கும் என்று உறுதிகூற முடியாது. பெரும்பாலும் முரண்பட்டே போகின்றது. சில நேரங்களில் எதிராயும் இருப்பதுண்டு.
ஆக, பிறப்பு வழி வாரிசு என்பது சட்டப்படி கிடைக்கும் ஓர் உரிமையே ஆகும்.

ஆனால், கொள்கை வாரிசு என்பது அரிதினும் அரிதாய் அமையக் கூடியது. கொள்கை வழி வாரிசு என்பது நிறுவன ரீதியாய் வருவது. நிறுவன ரீதியாய் வருவதிலும் இரு வகையுண்டு. மடங்களின் வாரிசுகளாய் வருபவர்கள் மடாதிபதிகளின் சொந்த விருப்பத்தின் தேர்வாக வந்துவிடுகின்றனர். இதில் வாரிசுகள் நேர்எதிராய் அமைவது அதிகம்!
மறைந்த மூத்த சங்கராச்சாரியார் தன் வாரிசாகத் தேர்வு செய்த ஜெயேந்திரர் அவருக்கு நேர் எதிரான இயல்பு கொண்டவராய், பாலியல் புகார், கொலை வழக்கு, வன்முறைத் தாக்குதல் என்று பல்வேறு வகையில் குற்றம் சுமந்தவர்.

அதேபோல் அரசியலில் வாரிசுகள் பலர் உறவாலும் நெருக்கத்தாலும் தலைவர்களின் சபலங்களாலும் வந்து விடுவதுண்டு.

மாறாக, இயக்கம் என்று வருகின்றபோது வாரிசுகள் புடம்போட்டு புடம்போட்டுத் தகுதிப்படுத்தப்பட வேண்டியவர்கள்.

அதிலும் குறிப்பாக, பதவி எதிர்பாராமல், அதிகாரம் இல்லாமல், வருவாய் இல்லாமல், வசதி வாய்ப்புகள் இல்லாமல், பெரும்பாலான மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரான புரட்சிச் செயல்களை, ஆதிக்கச் சக்திகளுடன் பகைத்துக் கொண்டு, தன் சொந்தக் காசைச் செலவிட்டு, இழிவு, ஏச்சு, கேவலம் இவற்றை ஏற்று, தொண்டறப் பணியாற்ற வேண்டிய இயக்கத்தில் ஒரு வாரிசு சரியாக அமைவது என்பது அதிசயத்திலும் அதிசயமாகும். அதிலும் கண்டிப்பு உறுதி, சிக்கனம், நாணயம், துணிவு, தியாகம் இவற்றின் ஒட்டுமொத்த வடிவமான தந்தை பெரியாரின் வாரிசாய் வருவதென்றால் அது உலக மகா அதிசயமாகும். அப்படியொரு அரிய, அதிசய வாரிசாய் அமைந்தவர்தான் கி.வீரமணி அவர்கள். அதை முதுபெரும் எழுத்தாளர் சோலை அவர்கள், அண்ணா அய்யாவின் வாரிசா? இல்லை. மாணாக்கர்! பேராசிரியர், நாவலர் உள்பட திராவிட
இயக்கத்தின் சூறாவளியாகச் சுழன்ற முன்னோடிகள் அனைவருமே அய்யாவின் பாசறையில் பயின்ற லட்சிய வீரர்கள்தாம்; அவர்கள் ஈரோட்டுப் பள்ளியின் மாணவர்கள்தாம்!
அய்யாவின் வாரிசுதான் யார்? அவர்தான் வீரமணி. கடலூரில் கண்டெடுத்த அந்த முத்தை அய்யா அவர்கள் தமிழகத்தின் வித்தாகக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.
அய்யாவின் வாரிசு வீரமணிதான் என்பதனை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் ‘‘இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாட்டின் தலைவராக இருந்தாலும், இவரது அறிவுநுட்பம், ஆற்றல், வியூகம், எதிரிகளை வீழ்த்தும் திறமை, சட்ட அறிவு, போர்க்குணம் பெரியாரிடம் பெற்ற பயிற்சி இவற்றின் காரணமாக இந்தியாவிலுள்ள தலைவர்கள் பலரும் இவரைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் சகோதரர் வீரமணியவர்கள், சமூகநீதி உரிமையின் இரண்டாம் கட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறித்துச் சொன்னார். அதற்கான அமைப்பையும், இயக்கத்தையும், தலைமையேற்று நடத்த முன்வர அவரைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியிருப்பதன் மூலம் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்கிற கொள்கையை நீங்கள் அமல்படுத்தி இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறீர்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவருடைய வழிகாட்டலில், நாடு தழுவிய வகையில் நடத்தப்பெறும் சமூகநீதிக்கான இரண்டாம் கட்டப் போராட்டம் உறுதியாக வெற்றிபெறும் என்பதில் அய்யம் இல்லை.’’

(1.10.1994 சென்னை – திராவிடர் கழக சமூகநீதி மாநாட்டில், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆற்றிய உரையின் பகுதி – விடுதலை’’ 3.10.1994)

சமூகநீதிக்கு ஆதரவான அனைவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் அனைத்து சமூகநீதி ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த மதவெறிச் சக்திகளின் சவாலைச் சந்திக்க வேண்டும். மதவெறிச் சக்திகளின் முக்கிய கேந்திரமாக விளங்கும் உத்தரப்பிரதேசத்தில் அவர்களின் முதுகெலும்பை நாம் முறித்தாக வேண்டும். மரியாதைக்குரிய சந்திரஜித் அவர்கள், நான் முன்னின்று நடத்த வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால், இது தனிமனிதனால் செய்யக்கூடிய காரியமல்ல. நண்பர் வீரமணி அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி அழைத்துச் செல்லும் கொறடா ஆவார். அந்தத் தகுதி அவருக்குத்தான் உண்டு. எனவே, இனியும் காலம் தாழ்த்தாது நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

(டில்லி பெரியார் விழா – 19.9.1995)

திரு. மண்டல் அவர்கள் ‘‘இது பெரியாரின் மண்! இந்த மண்ணில் நான் ஏராளமாகத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன். வடநாட்டிலே பிற்படுத்தப்பட்டோருக்கு டாக்டர் லோகியா உழைத்தார். பிற்படுத்தப்பட்டவர்களை, சூத்திரர்கள் என்றுதான் அவர் அழைப்பார். சூத்திரர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். தலைமுறை தலைமுறையாக இந்தச் சமுதாயம் சுரண்டப்பட்டு, அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் உழைத்தார். அண்ணா பாடுபட்டார். ஆனாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இன்னும் முன்னேறாமல் இருந்து வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் ஆளும் மேற்கு வங்கத்திலும் சரி, இந்திய கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்திலும் சரி, இராஜஸ்தான் போன்ற ஜனசங்கத்தினர் ஆளும் மாநிலத்திலும் சரி, பிற்படுத்தப்பட்டோர் பற்றிச் சிந்திப்பதே இல்லை. அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே அவர்கள் கருதுவதில்லை.

காகா கலேல்கர் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டு விட்டார்கள். அதேபோல் நாங்கள் கொடுக்க இருக்கும் அறிக்கையையும் செயல்படுத்துவர் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. உயர் ஜாதி அதிகார வர்க்கம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

எனவே, இதற்கு ஆதரவாக மக்கள் சக்தியை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த அறிக்கையைச் செயல்படச் செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது’’ என்று உரையாற்றினார்.

எல்லாவற்றையும் கூர்ந்தறியும் இணையிலா ஆற்றலாளர் ஆசிரியர்!

அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கமுடைய இவர், அப்போதே படிக்கத் தொடங்கிவிடுவார். ஏடுகள், நூல்கள் என்று எல்லாவற்றையும் கூர்ந்து நோக்குவார்.
சமூக நலத்திற்குக் கேடுதருவது ஏதாவது உள்ளதா? ஒடுக்கப்பட்டோர், பெண்கள், சிறுபான்மையினர் நலத்திற்கு எதிராய் ஏதாவது உள்ளதா? என்று கூர்ந்து நோக்கி அறிவார். இருப்பின், அன்றே அதற்கான எதிர்ச் செயல்களில் இறங்கிவிடுவார். ‘விடுதலை’யில் அறிக்கையாக, பேட்டியாக, சொற்பொழிவாக எதிர்ப்பைக் காட்டி, எல்லோரிடமும்

எழுச்சியை ஊட்டி, அத்தகைய கேடு அகற்றப்படும் வரை அயராது பாடுபடுவார்.

அவரின் எதிர்வினை காலம்தாழ்த்தாது உடனுக்குடன் ஒவ்வொரு நாளும் இருக்கும். காலையில் நடைப்பயிற்சி செல்லும்போதே பலவற்றை நோக்குவார். அதிலிருந்து சமுதாயத்திற்குத் தேவையான பலவற்றைச் சொல்வார்.

காலையில் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வரும்போதே, யார் யாருக்கு என்னென்ன பணிகளைப் பிரித்துத் தரவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே வருவார். அலுவலகம் வந்தவுடன் தொடர்புடையவர்களை அழைத்து அனைவருக்கும் கூறுவார். பணிகளை முடுக்கி விடுவார். கடிதங்களைப் படிப்பார் – பதில் அளிப்பார். வாகனங்கள் சரியாக நிறுத்தப்பட்டுள்ளதா? திடல் தூய்மை பராமரிக்கப்படுகிறதா? போன்றவற்றை உன்னிப்பாய்க் கவனிப்பார். குறை காணின் உடனே உரியவர்கள் மூலம் சரிசெய்வார். தனது இருக்கையில் அமர்ந்ததும், ‘விடுதலை’ நாளேட்டில் வரவிருக்கும் செய்திகளைச் சரிபார்ப்பார். அச்சிடப்படவிருக்கும் நூல்களின் மெய்ப்புகள் பார்ப்பார். ‘உண்மை’, ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ இதழ்களில் என்ன வரவேண்டும்? எப்படி வரவேண்டும்? என்று கூறுவார். அச்சிடப்பட உள்ளவற்றை ஒருமுறை பார்ப்பார். சற்றேறக்குறைய 15 பேர்களுக்கு மேல் பார்த்து முடித்தவற்றை இவர் பார்க்கும்போது, பட்டென்று எங்கெங்கு தவறு இருக்கிறது, பிழை இருக்கிறதென்று துல்லியமாய்ச் சொல்லிவிடுவார்!
தலைப்பை இப்படிப் போடலாம், செய்தியை இப்படித் தரவேண்டும் என்று சடுதியில் சரிசெய்வார்.

பல நூல்களிலிருந்து பயனுள்ளவற்றை எடுத்துத் தருவார். செய்தித் தாள்கள், வார, மாத இதழ்களில் வரும் அரிய தகவல்களைத் திரட்டித் தருவார். இதற்கிடையே பார்வையாளர்
கள் ஒவ்வொருவராகச் சந்திக்க, அவரவர் தேவையை மனம் மகிழ நிறைவு செய்வார். நடுநடுவே பேட்டி காண்போருக்குப் பேட்டி அளிப்பார். துறைசார் ஆலோசனைக் கூட்டங்
களில் கலந்துகொண்டு அறிவுரை வழங்குவார்.

‘விடுதலை’, ‘உண்மை’ வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். அறிக்கை, தலையங்கம் எழுதுவார். இதற்கே பகல் 2:00 மணி ஆகிவிடும். மருத்துவரின் ஆலோசனை – குடும்பத்தாரின் வற்புறுத்தல் இவற்றைப் புறந்தள்ளி பல நாள்களில் பிற்பகல் 3:00 மணிக்குக்கூட மதிய உணவு உண்பார். அதன்பின் மாலை பொதுக்கூட்டம், கருத்தரங்கு என்று பலப்பல.

இப்படி எத்தனையோ பணிகளை இடைவிடாது மேற்கொண்டாலும் ஒவ்வொன் றையும் கூர்ந்து நோக்கிச் சரிசெய்வார். ஒருமுறை ‘நக்கீரன்’ இதழைப் படித்தவர். அதில் வந்துள்ள ஒரு செய்தியில் தவறாக இருந்ததைக் கண்டறிந்து உடனே ‘நக்கீரன்’ அலுவலகத்திற்கே கடிதம் எழுதினார்.

‘நக்கீரன்’ இதழில், மாவலி பதில்கள் பகுதியில் தில்லை வில்லாளன் அவர்களின் இயற்பெயர் அர்ச்சுனன் என இடம் பெற்றிருந்தது. அவர் பெயர் கோதண்டபாணி. கோதண்டம் என்பது வில். அதனால்தான் வில்லாளன் ஆனார்’’ என்று விளக்கம் அளித்தார். இது அடுத்த ‘‘நக்கீரன்’’ இதழில் வெளியிடப்பட்டது.

இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி! ஆம். இவ்வளவு தகுதியும், திறமையும், தன்னடக்கமும், தன்னலமின்மையும், தன்மான மிடுக்கும், இனமான வேட்கையும், ஆதிக்க எதிர்ப்பும், ஆரிய பார்ப்பன சனாதன பாசிசத்தை வீழ்த்தும் வல்லமையும் வியூகமும் கொண்டவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அதை அறிந்துதான் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘தமிழர் தலைவர் ஆணையை ஏற்று நடப்போம்’’ என்றார். இதை இந்தியாவின் மற்ற மாநிலத்தின் ஸனாதன எதிர்ப்பாளர்களும், சமூகநீதி காப்பாளர்கள் ஒவ்வொருவரின் உள்ளமும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது.

அதன் அடிப்படையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அரிய வழிகாட்டலில் இந்தியா எங்கும் காவிகளுக்கு எதிரான ஜனநாயக மீட்பு அணி உருவாகியுள்ளது. அது ஆரிய பார்ப்பன ஸனாதன ஆதிக்கத்தை வீழ்த்தும்; வெற்றி பெறும்.

மதிநுட்பத்தோடு சதியை
முறியடிப்பவர்!

ஆரிய பார்ப்பனர்களின் சூழ்ச்சியாக சதித் திட்டங்களைத் தீட்டி திராவிட மக்களுக்கு எதிராய்ச் செயல்படும்போதெல்லாம் அவற்றை மதிநுட்பத்தோடு வியூகம் அமைத்து முறியடிப்பதில் வல்லவர்.

பா.ஜ.க. திராவிடக் கட்சிகளின் தோளில் மாறி மாறி ஏறி, தன்னை வளர்த்துக் கொள்ள முனைந்தபோது அதற்கு எதிரான வியூகம் அமைத்து பா.ஜ.க.வையும் அதற்கு துணை நிற்போரையும் தோற்கடித்துக் காட்டினார்.

‘சோ’க்களையும் மணியன்களையும்
சோடை போகச் செய்தவர்!

நவீனகால மநுக்களாக மணியன், சோ, குருமூர்த்தி போன்றவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அ.தி.மு.க.வைப் பயன்படுத்தி திராவிட இயக்கக் கொள்கைகளை, நோக்கங் களை அழிக்க முற்பட்ட போதெல்லாம், அவர்களின் சூழ்ச்சிகளை மிக நுட்பத்தோடு முறியடித்து இனத்தின் கவசமாக நிற்பவர் இவர்.

எம்.ஜி.ஆர் காலத்தில் மணியன், ஜெயலலிதா காலத்தில் சோ, எடப்பாடி காலத்தில் குருமூர்த்தி ஆகியோர், திரைமறைவில் நின்று சமூக நீதிக்கும்,
கல்வி வளர்ச்சிக்கும் இடஒதுக்கீட்டிற்கும் எதிராய் திட்டங்களைக் கொண்டுவந்தபோதெல்லாம் அதை வெட்ட வெளிச்சமாக அம்பலப்படுத்தி முறியடித்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காத்து வருகிறார். நுழைவுத் தேர்வு, நீட் தேர்வு என்று அவர்கள் புதுப்புது ஆயுதங்கள் மூலம் சமூகநீதியைத் தகர்க்க முற்படும்போதெல்லாம், மக்களுக்கு விழிப்பூட்டி அச்சதிகளை முறியடிப்பவர் இவர். ‘நீட்’டையும் முறியடித்து எதிர்காலத்தில் மாணவர் நலம் காப்பார் என்பதும் உறுதி!
சமூகநீதியைப் பாதுகாத்து வருபவர்!

எப்பொழுதெல்லாம் சமூகநீதிக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் முதல் போராளியாய் நின்று அதைக் காத்துவருகிறார்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு வைத்து ஆணை வெளியிட்ட போது, இந்த முயற்சி இடஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்த்தெறிந்துவிடும். இடஒதுக்கீடு என்பது சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை. இதில் பொருளாதாரம் என்ற அளவுகோலுக்கு இடமே இல்லை. இடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை என்று எம்.ஜி.ஆரிடமே நேருக்கு நேர் வாதிட்டு, அவருக்குத் தெளிவை உண்டாக்கி, வருமான வரம்பு ஆணையைத் திரும்பப் பெறச் செய்தார்.

அதுமட்டுமல்ல தெளிவு பெற்ற எம்.ஜி.ஆர் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு அளவையும் உயர்த்தினார். இது இடஒதுக்கீட்டு வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.
அதேபோன்று 69 சதவிகிதம் இடஒதுக் கீட்டிற்கு ஆபத்து வந்தபோது, அப்போது முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் துணையோடு, அதைக் காப்பதற்கான சட்டமுன் வரைவுகளைச் செய்து, தந்து, அதை நிறைவேற்றச் செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, அரசியல் சட்டப் பாதுகாப்பையும் பெற பாடுபட்டார். 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டைப் பாதுகாத்துக் கொடுத்த செல்வி ஜெயலலிதாவிற்கு ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டத்தையும் அளித்துப் பெருமைப்படுத்தினார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அ.தி.மு.க.வைக் கைப்பற்றி, அந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பா.ஜ.க.வும் ஆரியப் பார்ப்பனர்களும் சூழ்ச்சியாக முயன்றபோது, அ.தி.மு.க. அழிந்தால் அந்த இடத்தில் பி.ஜே.பி. வளரும் என்பதை நுட்பமாகக் கணக்கிட்டு அ.தி.மு.க. சிதறாமல் காத்தார். அப்போது தி.மு.க. கூட இவரை தவறாக எண்ணும்நிலை ஏற்பட்டது. ஆனாலும், இனப் பாதுகாப்பை முதன்மையாகக் கருதிய இவரின் நல்ல நோக்கத்தை தி.மு.க. உடனடியாகப் புரிந்துகொண்டது, தங்களின் கசப்பை விலக்கியது.
அதேபோல் நுழைவுத் தேர்வை ஒழித்துக் கட்டியதிலும், தற்போது நடப்பிலுள்ள நீட் தேர்வை ஒழிப்பதற்கான போராட்டங்களிலும் இவரின் பங்கு தலையாயது. ஒவ்வொரு நாளும் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த சிக்கல்கள் எழும்போது எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தயங்காது சரியான கருத்துகளை எடுத்துகூறி ஆட்சியாளர்களை நெறிப்படுத்தும் பணியை கடந்து 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவருகிறார்.

இதனால்தான் கலைஞர் அவர்களே, ஒவ்வொரு நாளும் விடுதலையைப் பார்த்து, ‘எங்களைச் சீர்செய்து கொள்கிறோம், பெரியார் திடல்தான் எங்கள் திசைகாட்டி, எங்கள் மனப்புண்களுக்கு மருந்திடுவதும் பெரியார் திடலே’ என்று கூறியுள்ளார் என்றால் தமிழர் தலைவரின் சிறப்பிற்கு வேறு சான்று வேண்டுமா?
இன்றைய முதல்வர் மாண்புமிகு மு.கஸ்டாலின் அவர்கள் ஆசிரியரின் ஆலோசனை பெற்றே முக்கிய முடிவுகளை எடுக்கிறார். ‘‘தமிழர் தலைவர் என் வணக்கத்திற்குரியவர்; என்னைப் பாதுகாப்பவர்; பெரியார் திடல்தான் என் திசைகாட்டி’’ என்று உளப்பூர்வமாய்க் கூறியுள்ளார்.

பல்துறை ஆற்றலாளர்!

தமிழர் தலைவர் அவர்கள், சிறந்த கல்வியாளர், சட்டநுட்பங்கள் அறிந்த வழக்கறிஞர், தலைசிறந்த பத்திரிகையாளர், ‘விடுதலை’, ‘உண்மை’, The Modern Rationalist, ‘பெரியார் பிஞ்சு’ இதழ்களின் ஆசிரியர். ‘விடுதலை’ ஆசிரியராக 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவருவது உலக அளவில் சாதனையாகும்.
தலைசிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், ஆய்வாளர். 10 வயதில் தொடங்கிய அவரது மேடைப் பேச்சு 90ஆம் வயதிலும் அந்த ஆற்றல், ஓட்டம் குறையாமல் தொடர்கிறது.

அவரின் ‘கீதையின் மறுபக்கம்’ சிறந்த ஆய்வு நூல். அவரது வாழ்வியல் சிந்தனைகள் சிந்தனைக் கருவூலம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான நூல்களின் சாரம். தொடர் சொற்பொழிவுகள் பல செய்துள்ளார்.

அனைத்திலும் மேலாக ஆற்றல்மிகு நிருவாகி. பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளிகள், குழந்தைகள் காப்பகம், நிதிநிறுவனங்கள் என்று ஏராளமானவற்றை நிர்வகித்தும் வருகிறார்.

தொண்ணூற்று ஒன்று வயதிலும் தொய்வில்லாத தொண்டு தொண்ணூற்று ஒன்று வயதை நிறைவு செய்யும் இவர், இன்றைக்கும் ஓர் இளைஞரைப் போலவே சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார்.

பெரியாரை உலக மயமாக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடக்க வெற்றியைப் பெற்றுவிட்டார்.

திருச்சி சிறுகனூரில் உருப்பெற்றுவரும் பெரியார் உலகம் அவரின் ஈடுஇணையற்ற சாதனை! விரைவில் அது உலகோர் கவனம் ஈர்க்கும் என்பது உறுதி.

‘இந்தியா’ கூட்டணி சிதையாமல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அது மகத்தான வெற்றி பெறவும், மக்களாட்சியும், இந்திய அரசமைப்பும், சமூகநீதியும், சமத்துவமும், மதச்சார்பின்மையும் காப்பாற்றப்படவும் இவரது பணி முக்கியமானது. ராகுல் போன்ற இளைய தலைமுறையினரும் இவரை ஏற்று நடக்கக்கூடியவர்களே! இவரது முயற்சிகள் அனைத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் மூலம் சிறப்பாக இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு, இலக்கு வெற்றி பெறும். தமிழினம் காக்கும் தகைசால் தமிழர் இந்தியாவையும் காக்க இடைவிடாது உழைப்பார் என்பது உறுதி! உறுதி! 100 ஆண்டுகளுக்கு மேலும் நலமுடன் வாழ்ந்து சமுதாயத்திற்கு பயன்படுவார் – வழிகாட்டுவார்.

வாழ்க! திராவிட இனத்தின் திசைகாட்டி ஆசிரியர் அவர்கள்.