தமிழ்நாட்டின் ‘சார்லி சாப்ளின்’ என்று அன்புடன் அழைக்கப்படும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நாகர்கோவிலை அடுத்துள்ள ஒரு சிறிய கிராமமான ஒழுகினசேரியில் சுடலைமுத்து – இசக்கியம்மாள் இணையருக்கு 1908ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் நாளில் பிறந்தார். வறுமையின் தாக்கத்தால் அய்ந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர முடியாத என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் திரைப்படங்கள் மூலம் மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் கருத்துகள் பரப்பல், சமூக சமத்துவம் உருவாக்கல் போன்றவற்றிற்குப் பாடுபட்டார்.
‘‘எவனொருவன் தன்னலமில்லாமல், பயமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பதோடு, ஒரு புரட்சி வீரனுமாவான் என்பதற்கு நமது கிருஷ்ணன் அவர்கள் எடுத்துக்காட்டாகும்’’ என்று தந்தை பெரியாராலும் ‘சமூக விஞ்ஞானி’ என்று அறிஞர் அண்ணாவாலும் பாராட்டப்பட்டவர். ‘‘அவரில்லாமல் படங்கள் வெற்றி பெறுவது இயலாத ஒன்றாயிருந்தது’’ என டாக்டர் கலைஞரால் புகழப்பட்டவர்.
திரை உலகின் தவிர்க்க இயலா அங்கமாகத் திகழ்ந்து நகைச்சுவையால் தன் வித்தகத் தன்மையை விரித்து பாமர மக்களிடத்தும் சிந்தனையைத் தூண்டி சீர்திருத்தக் கருத்து
களைப் பரப்பிய சீரிய பண்பாளர். தான் ஈட்டிய செல்வம் அனைத்தையும் வறியோர்க்கும் வீடு தேடி வந்து உதவி கோரியோர்க்கும் இல்லையென்று கூறாது வாரி வழங்கி வள்ளலாகத் திகழ்ந்தவர். காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும் வரலாற்று நாயகர் கலைவாணர்.